கல் ராமன், தலைமைச் செயல் அதிகாரி – சொல்யூஷன் ஸ்டார்
இவரது வாழ்க்கையைக் கோர்வையாக எழுதினால் முழுமையான சுய முன்னேற்ற புத்தகம் தயாராகிவிடும். அந்த அளவுக்கு கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்தவர். அமெரிக்க நிறுவனமான சொல்யூஷன் ஸ்டாரின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் கல் ராமன் சில வாரங்களுக்கு முன் சென்னை வந்திருந்தார். அவருடனான விரிவான உரையாடலிலிருந்து…

ஆரம்பத்தில் டாடா குழுமத்தில் உள்ள நிறுவனத்தில் சேர்ந்தவர் அங்கிருந்து டிசிஎஸ் நிறுவனத்துக்குச் சென்றார். டிசிஎஸ் மூலமாக ஐரோப்பாவில் வேலை செய்தவர், அங்கிருந்து வால்மார்ட் நிறுவனத்துக்கு மாறினார். வால்மார்ட் நிறுவனத்தில் சாப்ட்வேர் பொறியாளராக சேர்ந்தார். 50 லட்சம் வரிகள் கோடிங் எழுதினார். 12 மாதங்களில் 18 முறை பதவி உயர்வு பெற்றார். இயக்குநர் குழுவிலும் சேர்ந்தார். ஆறு வருடங்களுக்கு பிறகு வால்மார்ட் நிறுவனத்தில் இருந்து விலகி பிளாக்பஸ்டர் நிறுவனத்தில் இணைந்தார். அதன் பிறகு டிரக்ஸ்டோர் டாட் காம் நிறுவனத்தில் சிஇஓவாக 31 வயதில் சேர்ந்தார்.

அமேசான் நிறுவனத்தில் இணைந்தார். சில காலத்துக்கு பிறகு குருப்பான் நிறுவனத்தில் இணைந்தவர் தற்போது சொல்யூஷன் ஸ்டார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கிறார்.

படித்தது எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங், ஆனால் ஐடியில் துறையில் பணிபுரிந்தீர்கள். அதேபோல நீங்கள் எம்பிஏ படிக்கவில்லை. ஆனால் 31 வயதிலேயே சிஇஓ ஆகி விட்டீர்கள்?

அப்போது ஐடி வளர்ந்து வரும் துறைதான் இருந்தாலும் ஆர்வம் காரணமாக அந்த துறையில் சேர்ந்தேன். மேலும் மென்பொருள் எழுதுவது என்பது ‘லாஜிக்கல் திங்கிங்’ சம்பந்தப்பட்ட விஷயம். அது ரீடெய்ல் துறையாக இருந்தாலும் சரி, இன்ஷூரன்ஸாக இருந்தாலும் சரி லாஜிக் தேவை.

இரண்டாவது சிஇஓ ஆவதற்கும் எம்பிஏவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பொறுத்தவரை எம்பிஏ என்பது நேரத்தை வீணடிக்கும் செயல். உங்களிடம் மட்டுமல்லாமல் இதை அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்களிலும் இதே கருத்தை சொல்லி இருக்கிறேன். கற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் அனைவரும் தலைவராக ஆகலாம். படித்துதான் ஆக வேண்டும் என்றால் பகவத் கீதையை படிக்கச் சொல்லுங்கள். அதுதான் எம்பிஏ.

புத்தகத்தை படிப்பதால் மட்டும் தலைவராக முடியாது. வாழ்க்கையில் இருந்தும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களுடைய வாழ்க்கையில் முடிவெடுக்கும் நேரங்களில் இருப்பதிலே ரிஸ்க்கான முடிவை எடுக்கிறீர்கள்? எப்படி உங்களால் எடுக்க முடிந்தது?

நாம் போகும் போது எதையும் எடுத்துக் கொண்டு போவதில்லை. மேலும் ஆரம்பகால வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் சந்தித்து விட்டதால் இழப்பதற்கு எதுவும் இல்லை. மேலும் இலக்கு என்று எதையும் முடிவு செய்துகொள்வதில்லை. பயணத்தை அனுபவிக்கிறேன்.

உங்கள் வாழ்க்கையில் நிறைய வேலைகள் மாறி இருக்கிறீர்கள். என்ன காரணம்?

ஒரு வேலையில் சவால் இல்லை என்றால் அதில் இருப்பதில் அர்த்தம் இல்லை. இருந்தாலும் நான் அடிக்கடி வேலை மாறவில்லை. ஆறு வருடங்கள் வால்மார்ட் நிறுவனத்தில் இருந்திருக்கிறேன். ஆறுவருடங்கள் டிரக்ஸ்டோர் நிறுவனத்தில் இருந்தேன். அந்த நிறுவனத்தை லாப பாதைக்கு திருப்பினேன். இது போல ஒவ்வொரு நிறுவனத்திலும் எதாவது ஒன்றை செய்துவிட்டுதான் வந்திருக்கிறேன். நான் நிறைய வேலை செய்ய தயாராக இருக்கிறேன். நிறைய கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். அதனால் வேலை மாறுகிறேன்.

நீங்கள் இங்கிருந்து சென்றீர்கள். பெயர், புகழ் சம்பாதித்தாகிவிட்டது. இந்தியாவுக்கு வந்து இங்கு எதாவது செய்ய வேண்டும் என்ற திட்டம் இல்லையா?

பல முறை யோசிப்பேன். ஆனால் இங்கு வர முடியவில்லை. ஆனால் அங்கிருந்தே இங்கு பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறேன். பல குழந்தைகள் படித்து வருகிறார்கள். பல இன்ஜினீயர்களையும் டாக்டர்களையும் உருவாக்கி வருகிறோம். இங்கு வரும் போது பெரிய தொகையுடனும் பெரிய திட்டத்துடனும் வர நினைக்கிறேன். 100 மில்லியன் டாலருடன் இங்கு வர திட்டமிட்டிருக்கிறேன். கல்வி துறையில் எதாவது செய்ய நினைக்கிறேன்.

ரியல் எஸ்டேட் துறையில் நுழையக் காரணம் என்ன?

தொழில்நுட்பம் பல துறைகளில் நுழைந்திருந்தாலும், ரியல் எஸ்டேட் துறையில் மட்டும் தொழில்நுட்பம் இன்னும் நுழையாமல் இருக்கிறது. இதற்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது.

பிளிப்கார்ட் நிறுவனர்கள் சச்சின் பன்சாலுக்கு நீங்கள்தான் ஐடியா கொடுத்தீர்களா?

அது ஒரு 30 விநாடி சந்திப்பு. என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு, புதிதாக எதையும் செய்ய வேண்டாம். அமேசான் மாடலை இந்தியாவில் செயல்படுத்துங்கள் என்று சொன்னேன். அவ்வளவுதான்.

அமெரிக்க சிஇஓ-க்கள் சிறு நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். உங்களுக்கு அந்த திட்டம் இருக்கிறதா?

ஏற்கெனவே சில நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறேன். இதை தவிர ஒரு ஸ்போர்ட்ஸ் டீமை வாங்க வேண்டும். அது கிரிக்கெட் அல்லது பேட்மிட்டனாக இருக்கலாம். அதேபோல தொழில்நுட்பம் அல்லாத துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறேன்.

கடைசி பெஞ்ச் வாழ்க்கை

`திருநெல்வேலியில் பிறந்தேன். அப்பா சிறு வயதில் இறந்துவிட, அவரது பென்ஷனை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை. வீட்டில் மின்சாரம் கிடையாது. தமிழ் வழி கல்வியில் படிப்பு. நன்றாக படிக்கவே திருநெல்வேலி மருத்துவ கல்லூரி சென்னை பொறியியல் கல்லூரி இரண்டிலும் இடம் கிடைத்தது.

மருத்துவம் படித்தால் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் இன்ஜினீயரிங் படித்தால் சென்னைக்கு செல்லலாம். வாழ்க்கை மாறலாம். வாழ்க்கை மாறாவிட்டாலும் பிரச்சினை இல்லை. அனைத்து துயரங்களையும் சந்தித்தாகி விட்டது என்பதால் சென்னைக்கு வந்தேன். முழுமையாக ஒரு வாக்கியம் கூட ஆங்கிலத்தில் பேச முடியாது. ஷூ கிடையாது. நல்ல ஆடைகள் கிடையாது. தாழ்வு மனப்பான்மையால் கடைசி பெஞ்ச் வாழ்க்கை.

மும்பை, பெங்களூரு, சென்னை மூன்று இடங்களில் வேலை கிடைத்தது. பாம்பே வேலைக்குதான் மிகவும் குறைந்த சம்பளம். நான் பாம்பே செல்வதையே விரும்பினேன். சென்னைக்கு வரும் போது எப்படி யாரையும் தெரியாதோ அதேபோலதான் பாம்பேயிலும். தவிர சென்னையில் இருந்தால் சொகுசாக இருந்துவிடுவேன் என்பதால் பாம்பேக்கு (டாடா குழுமம்) சென்றேன்.

பாம்பே மெயிலில் தாதரில் இறங்கினேன். எனக்கு யாரையும் தெரியாது. அதிர்ஷ்டவசமாக பிளாட்பாரத்தில் பழம் விற்பவர் ஒரு தமிழர். அவரிடத்தில் பெட்டியை வைத்து விட்டு, அங்கேயே குளித்து அலுவலகம் சென்றேன்.

என்னிடம் ஷூ இல்லை என்பதால் செப்பலில் அலுவலகம் சென்றேன். என்னுடைய பொதுமேலாளர் என்னை திமிர் பிடித்தவன் என்று நினைத்து நிறுவனத்தை பற்றி விரிவாக கூறினார். எதற்காக இதை சொல்கிறார் என்றே எனக்கு புரியவில்லை. ஒரு வழியாக என் நிலைமையை விளக்க, ஒரு மாத சம்பளத்தை முன்பணமாக கொடுத்தார். இதன்பிறகு எனக்கு பணப் பிரச்சினை இல்லை’.