‘தொழில்முனைவோர் உருவாக முன்மாதிரிகள் அவசியம்’ – ஸ்மார்ட் கேபிடல் நிர்வாக இயக்குநர் ராஜன் ஸ்ரீகாந்த் நேர்காணல்.

வென்ச்சர் கேபிடல் முதலீடுகளைப் பற்றி இப்போதுதான் தொழில்முனைவோர்கள் சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் Keiretsu Forum என்னும் சர்வதேச முதலீட்டாளர் அமைப்பு சென்னையில் தனது பிரிவை தொடங்கி இருக்கிறது. புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் சர்வதேச வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்களை ஒருங்கிணைக்கும் சங்கம் இது என்று சொல்லலாம்.

இந்த அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் டாக்டர் ராஜன் ஸ்ரீகாந்த், தொடக்க விழாவுக்காக வந்திருந்தார். அவருடைய வாழ்க்கை, வென்ச்சர் கேபிடல் துறை, தொழில்முனைவு உள்ளிட்ட பல விஷயங்களை பேசினோம். அந்த விரிவான உரையாடலிலிருந்து…

மதுரையில் பிறந்தவர். ஐஐடி சென்னை யில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். என்பீல்டு மற்றும் இந்த் சுசூகியில் சில காலம் பணிபுரிந்தவர். ஸ்டெர்ன் ஸ்கூல் ஆப் பிஸினஸில் பிஹெச்டி. முடித்தவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருந்தவர். கேபிஎம்ஜி., பெயின் அண்ட் கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்களில் ஆலோசகராக இருந்தவர். மெர்சர் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தவர். சிறிய நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்மார்ட் கேபிடல் என்னும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்.

எம்பிஏ படிக்காமல் எப்படி நேரடியாக பிஹெச்டி படித்தீர்கள்?
இன்ஜினீயரிங் வேண்டாம் என்று முதலில் முடிவெடுத்துவிட்டேன். எம்பிஏ படிக்க பணம் இல்லை. பிஹெச்டி-க்கு ஸ்காலர்ஷிப் கிடைக்கும் என்பதால் artificial intelligence பிரிவில் பிஹெச்டி முடித்தேன்.

நீங்கள் பன்னாட்டு (எம்.என்.சி). நிறுவனங் களில் பணிபுரிந்திருக்கிறீர்கள். சிறிய நிறு வனங்களுக்கு ஆலோசகராக இருக்கிறீர் கள்? பெரிய நிறுவனங்களிடம் இருக்கும் பிரச்சினை மற்றும் சாதகமான விஷயங்கள் என்ன?

பெரிய நிறுவனங்கள் ஏதோ ஒன்றைச் சரியாக செய்துவருகிறார்கள். தங்களின் சாதகம் எது என்று அவர்களுக்குத் தெரிந் திருக்கிறது. அதனால்தான் அவர்கள் பெரிய நிறுவனங்களாக இருக்கிறார்கள். ஆனால் பெரிய நிறுவனங்களில் புதுமைகளை ஏற்றுக்கொள்ள தயங்குகிறார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு அவர்களை மாற்ற முடியவில்லை. பழக்கத்தை மாற்ற பெரிய நிறுவனங்களால் முடியவில்லை.

அமெரிக்காவில் வென்ச்சர்/ ஏஞ்சல் கேபிடல் உதவியுடன் ஒரு வருடத்துக்கு 70,000 புதிய நிறுவனங்கள் வரை ஆரம்பிக்கிறார்கள். இந்தியாவில் ஆரம்பிக்கப்படும் நிறுவனங் களுடன் இதை ஒப்பிட கூட முடியாது. இந்திய கலாசாரம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறதா?

கலாசாரத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் சில காலத்துக்கு பிறகு இந்த நிலைமை மாறும். அமெரிக்காவில் 1960 களிலேயே வென்ச்சர் கேபிடல் முதலீடு வந்துவிட்டது. ஆனால் டாட்காம்/ஐடி நிறுவனங்கள் வர ஆரம்பித்த பிறகுதான், வென்ச்சர் கேபிடல் பற்றி அவர்களுக்கு பரவலாகத் தெரிந்தது. அதன் பிறகு நிறைய நிறுவனங்கள் வந்துவிட்டன.

இப்போது இந்தியாவில் அந்த நிலைமை இருக்கிறது. இப்போதுதான் பிளிப்கார்ட், ஸ்நாப் டீல் உள்ளிட்ட பல இ-காமர்ஸ் நிறுவனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்போதுதான் தொழில்முனைவோர் களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. முன் மாதிரிகள் இருக்கும் போதுதான் தொழில்முனைவு அதிகரிக்கும்.

சென்னை ஐஐடி மாணவர்களிடம் அடிக்கடி நான் பேசுவேன். முதல் வருட, இரண்டாம் வருட மாணவர்களிடம் பேசினால் புதிதாக கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஆனால் அவர்களை நான்காம் வருடத்தில் சந்திக்கும் போது எதாவது ஒரு நிறுவனத்தில் சேருவதற்கான கடிதத்தை கையில் வைத்திருப்பார்கள். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு ரோல் மாடல் இல்லை என்று சொல்கிறார்கள்.

இப்போது முன்மாதிரிகள் இருக்கிறார் கள். வருங்காலத்தில் இந்த நிலை மாறும்.

புதிதாக ஆரம்பிக்கப்படும் எவ்வளவு நிறுவனங்கள் வெற்றி அடைகின்றன?

பொதுவாக உலகம் முழுவதும் 10-ல் ஒரு நிறுவனம்தான் வெற்றி அடைகின்றது. ஆனால் இதனை 2, 3 என்று நம்மால் அதிகரிக்க முடியும்.

உங்கள் பார்வையில் நிறுவனங்கள் தோற்க என்ன காரணம்?

துணிச்சலாக இருப்பவர்கள் மட்டும் தான் தொழில் தொடங்குகிறார்கள். ஆனால் இந்த துணிச்சல், நம்பிக்கை சில நேரங்களில் தவறாகப் போய்விடு கிறது. இந்த நம்பிக்கை காரணமாக யாரிடமும் எந்த உதவியும் கேட்பதில்லை. அவர்களாக எதாவது செய்கிறார்கள். தனக்கு என்ன தெரியாது என்பது தொழில் முனைவோர்களுக்கு தெரியவில்லை. அது தெரியும் போது வெற்றி விகிதம் தேவைப்படும். தனக்கு தெரியாததை தெரிந்துகொள்ள ஆலோசகர்களை நாடுவது நல்லது.

தவிர நிறுவனங்களை விரிவாக்கம் செய்வது பற்றியும் பலர் யோசிப்பதில்லை. சென்னையில் இருக்கும் நிறுவனத்தை பெங்களூரில் விரிவாக்கம் செய்ய வேண் டும் என்றால் அங்கிருக்கும் சூழ்நிலை வாய்ப்புகளை மற்றவர்கள் உதவியுடன் தான் செய்ய முடியும். ஆனால் ஆலோ சனை கேட்க தயங்கும்போது விரிவாக்கம் சாத்தியம் இல்லாமல் போகிறது.

வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களுடன் தொழில்முனைவோர்கள் பணிபுரிவது கடினம் என்று சொல்லுகிறார்களே?

இதற்கு கொஞ்சம் வேறுவிதமாக பதில் சொல்லுகிறேன். இதுவரை இந்தியாவில் தொழில் தொடங்கிய பெரும்பாலானவர்கள், நான் சொந்தமாக நிற்க வேண்டும். யாருக்குக் கீழேயும் வேலை செய்யக் கூடாது என்ற எண்ணத் தில் ஆரம்பித்தவர்கள்தான். இப்படிப்பட்ட மனநிலை இன்னும் இருக்கிறது. அதனால் ஆலோசனை கேட்கவே நம்மவர்கள் தயங்குகிறார்கள். மற்றவர்களின் ஆலோ சனையை கேட்கும் மனநிலை வரும் போது வென்ச்சர் கேபிடல் முதலீட்டாளர்கள் உங்கள் கண்களுக்கு ஆலோசகர்களாக தெரிவார்கள். அப்போது அவர்களுடன் பணிபுரிவதில் சிரமம் இருக்காது.

அதே சமயத்தில் ஆலோசனை சொல் பவர்களின் மனநிலையும் மாறவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

நீங்கள் பல நிறுவனங்களுக்கு ஆலோ சகராக இருந்திருக்கிறீர்கள்? உங்களின் ஆலோசனை எந்த இடத்தில் அவர்களுக்கு தேவைப்படும்?

தொழில்முனைவோர்கள், தங்க ளுடைய யூகங்கள் மற்றும் கணிப்பின் அடிப்படையில்தான் தொழில் தொடங்கு கின்றனர். இந்த யூகம் சரியா என்பதில் எங்களின் பங்கு இருக்கும். இது ஆரம்ப கட்டத்தில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கட்டத்தில் முக்கியமான முடிவெடுக்கும் போது அந்த யூகங்களில் விவாதம் நடக்கும். இதுதவிர விற்பனை, நிதி திரட்டுவது உள்ளிட்ட பல விஷயங்களிலும் ஆலோசனை கொடுத்திருக்கிறேன்.

தொழில்முனைவு படிப்புகள் இப்போது நிறைய நிர்வாக கல்லூரிகளில் வர ஆரம் பித்திருக்கின்றன. படிப்பு மட்டுமே தொழில் முனைவு எண்ணத்தை உருவாக்க முடியுமா?

நீச்சல் பற்றி எவ்வளவு படித்தாலும், தண்ணீரில் குதிக்காமல் நீச்சல் கற்றுக் கொள்ள முடியாது. அது போல வகுப் பறையில் மட்டுமே தொழில்முனைவை கற்றுக்கொள்ள முடியாது.

ஆனாலும் எந்த விதமான பயிற்சி யும் இல்லாமல் நீச்சல் கற்றுக்கொண் டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டிருக்கிறார்கள்?

தொழில் முனைவு பற்றிய எண்ணம், ஆலோசனை மற்றும் பயிற்சி இருக்கும் போதுமட்டும்தான் அடுத்த கட்டத்துக்கு பிஸினஸை எடுத்துச்செல்ல முடியும்.

இங்கு தோற்பவர்களுக்கு மதிப்பில்லை, மற்ற நாடுகளில் எப்படி எடுத்துக்கொள்கிறார்கள்?

தோல்வியை நாங்கள் ஊக்குவிக்கிறோம். அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ள முடியும் என்று வெளிநாடுகளில் சொல்லுவார்கள். எங்கிருந்தாலும் தோல்விக்கு மரியாதை கிடையாது. ஆனால் தோல்வியை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள், அதன் பிறகு என்ன செய்தீர்கள் என்பதுதான் முக்கியம். அடுத்த கட்டத்தை நோக்கி நீங்கள் ஓடுகிறீர்களா இல்லை அப்படியே தேங்கி விடுகிறீர்களா என்பதில்தான் தொழில் முனைவோருக்கான மதிப்பு இருக்கிறது.

நன்றி ‘தி இந்து’.