போட்டிகள் சந்தையின் அளவை அதிகரிக்கின்றன: மேரிபிரவுன் இந்தியா இயக்குநர் அஜித் பேட்டி
மேரிபிரவுன் (marrybrown) நிறுவனம் தான் முதல் முதலில் பிரைட் சிக்கன் வகைகளை சென்னைக்கு 1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. மலேசியாவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் மேரிபிரவுன் உலகம் முழுவதிலும் 400க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம் வளர்ந்து வந்த பாதை மற்றும் இந்த துறையில் இருக்கும் சவால்கள் குறித்து மேரிபிரவுன் இந்தியா (மேரிபிரவுன் நிறுவனத்தின் இந்தியாவுக்கான மாஸ்டர் பிரான்ஸைசியை எடுத்திருப்பது சென்னையை சேர்ந்த எம்.ஜி.எம். குழுமம்) நிறுவனத்தின் இயக்குநர் அஜித்துடனான உரையாடலில் இருந்து…
மேரிபிரவுன் நிறுவனத்தின் மாஸ்டர் பிரான்ஸைசி எடுக்க என்ன காரணம்?
நாங்கள் 98-ம் ஆண்டு எடுத்தோம். சென்னை மக்களுக்கு புதுவகையான உணவுகளை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினோம். சென்னையில் இதுபோன்ற வகைகளை அறிமுகப்படுத்தியது நாங்கள்தான். கே.எப்.சி. இந்தியாவுக்கு வந்தாலும் அவர்கள் பெங்களூருவில்தான் ஆரம்பித்தார்கள்.
சென்னைக்கு நீங்கள்தான் முதலில் வந்தாலும், பெரிய அளவு சந்தையை பிடிக்க முடியவில்லையே? உங்களுக்கு பிறகு வந்தவர்கள் இதுபோன்ற உணவகங்கள் ஆரம்பித்தவர்கள் உங்களுக்கு சமமாக இருக்கிறார்களே?
ஒரு வகையில் உண்மைதான். ஆனால் மக்களின் மனநிலையை மாற்று வதற்கு, இந்த உணவினை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு கடின உழைப்பு தேவைப்பட்டது. அதற்கு சில காலம் எடுத்துக்கொண்டோம்.2007/08-ம் ஆண்டில்தான் மற்ற நிறுவனங்கள் வந்தன. சந்தை வளர்ந்துவிட்டதால் எங்களுக்கு பிறகு வந்தவர்கள் விரிவாக்கம் செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும் நாங்கள் பிரான்ஸைசி கொடுப்பதிலும் கவனமாக இருந்ததால் மெது வாகவே விரிவாக்கம் செய்தோம்.
இந்த துறையின் வாடிக்கையாளர்களின் brand loyalty மிகவும் குறைவு. குறிப்பிட்ட வயதுக்கு மேல் இந்த உணவுகளை சாப்பிடமாட்டார்கள். மேலும் உங்களை போலவே பல பன்னாட்டு உணவகங்களும் வந்துவிட்டன. புது வாடிக்கையாளர்களை எப்படி ஈர்க்கிறீர்கள்?
15 வருடங்களுக்கு குழந்தைகள் என்ன சாப்பிடவேண்டும் என்பதை பெற்றோர்கள் முடிவு செய்கிறார்கள். ஆனால் இப்போது குழந்தைகள்தான் சந்தையை தீர்மானிக்கிறார்கள். குழந்தைகளால் குடும்பமே வருகிறது. முன்பெல்லாம் வாரத்துக்கு ஒரு நாள் அல்லது மாதத்துக்கு ஒரு நாள் வெளியே சாப்பிட்டார்கள்.
ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் விற்பனையில் பெரிய மாற்றம் இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் 15 வருடங்களுக்கு முன்னால் 30 வயது நபர் சாப்பிடவந்தார் என்றால், அவர் மூலமாக அவரது குழந்தைகள் இன்று பெரியவர்களாகி இருப்பார்கள் அவர்கள் சாப்பிடுகிறார்கள்.
அடுத்தது, போட்டிகள் சந்தையின் அளவை அதிகரித்திருக்கின்றன. முன்பு இதுபோன்ற உணவுகளை 10 பேர் சாப்பிட்டனர் என்றால் இன்று 100 நபர்கள் சாப்பிடுகிறார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் பிரச்சினை இல்லை.
இரண்டாம் கட்ட நகரங்களில் இதற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது? மக்கள் வருகிறார்களா?
இரண்டாம் கட்ட நகரங்களில் இருப்ப வர்கள் செலவு செய்ய தயங்குகிறார்கள் என்பது தவறான கணிப்பு. சிறு நகரங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
மேரிபிரவுன் போன்றவற்றில் அசைவ உணவகம் மட்டுமே கிடைக்கும் என்ற எண்ணம் இருக்கிறதே?
தெரியும். ஆனால் இப்போது சைவத் துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். முன்பு ஐந்து வகையான அசைவ உணவுகள் இருந்தால் ஒரு சைவ உணவு இருக்கும். இப்போது சைவ உணவு வகைகளை அதிகரித்திருக்கிறோம். புரட்டாசி உள்ளிட்ட மாதங்களில் சைவத்துக்கு அதிக முக்கியத் துவம் கொடுக்கிறோம்.
ஆன்லைன் விற்பனை எப்படி இருக்கிறது?
சில மாதங்களுக்கு முன்புதான் ஆரம்பித்தோம். மொத்த விற்பனையில் 2 சதவீத அளவுக்குதான் ஆன்லைன் விற்பனை இருக்கிறது.
குளிர்பானம், மில்க்ஷேக் இருக்கும் போது ஏன் காபி விற்பனை செய்வதில்லை?
ஆரம்பிக்கும்போது காபி விற்றுவந்தோம். ஆனால், இந்த உணவுகளோடு காபி சாப்பிட பெரும்பாலான நபர்கள் விரும்புவதில்லை என்பதால் அதை நிறுத்திவிட்டோம்.
இது பிஸினஸ் என்பதை மறுக்கவில்லை. ஆனால் உங்களை போன்ற கடைகளில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீரைதான் கொடுக்கிறீர்கள்? வாடிக்கையாளர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூட கொடுக்க கூடாதா?
இந்திய சட்டப்படி வாடிக்கையாளர் களுக்கு இலவசமாக தண்ணீர் தர வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை எந்த உணவகங்களும் மறுக்க முடியாது. வாடிக்கையாளர்கள் கேட்டால் நிச்சயமாக தண்ணீர் கிடைக்கும். விற்பனையை அதிகரிப்பதற்காக சர்வர்கள் பாட்டில் தண்ணீர் வேண்டுமா என்று கேட்பார்கள். வேண்டாம் என்று சொல்லும் பட்சத்தில் சாதாரண தண்ணீர் கொடுப்பார்கள், கொடுக்க வேண்டும்.
இந்த துறையின் சவால்கள் என்ன?
போட்டி ஆரோக்கியமானதுதான். அது பிரச்சினையில்லை. அதைவிடவும் ரியல் எஸ்டேட் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சாதாரணமாக ஒரு கடையில் கிடைக்கும் வருமானத்தில் 8 சதவீதம் வரை வாடகைக்கு செலவு செய்யலாம்.
ஆனால் எங்களது சில கடைகளில் கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் வரை வாடகைக்கு செலவாகிறது. அதற்காக அந்த முக்கியமான இடத்தை விட்டு வெளியேற முடியாது. அடுத்து மூலப் பொருட்கள் விலையேற்றம். பொதுவாக ஒரு வருடத்தில் ஒரு முறைதான் விலையை நிர்ணயம் செய்வோம். இப்போது மூலப்பொருள் விலை ஏறினாலும், அடிக்கடி விலையை மாற்ற முடியாத சூழலில் இருக்கிறோம்.
Centralised kitchen மூலம் kiosk அடிப்படையில் விரிவாக்கம் செய்ய முடியாதா?
பிரெஷ்ஷாக சாப்பிடத்தான் இங்கு வருகிறார்கள். அதனால் centralised kitchen மூலம் விரிவாக்கம் செய்ய முடியாது. ஆனாலும் சமையல் அறையுடன் கூடிய சிறிய கடைகளுக்கான வாய்ப்பினை யோசித்துவருகிறோம்.
நீங்கள் கொடுக்கும் வாடகை என்பது மாதத்தின் 30 நாட்களுக்கும் சேர்த்துதான். ஆனால் மதியம் மற்றும் இரவு உணவுதான் நீங்கள் கொடுக்கிறீர்கள். காலை உணவு?
காலை அவசரத்தில் பிரைட் சிக்கன் போன்ற உணவுகளை விட தென் இந்திய உணவுகளைதான் மக்கள் விரும்புகிறார்கள். தென் இந்திய உணவுகளை கொடுக்க சமையலறையின் அமைப்பை மாற்ற வேண்டும். அப்படி மாற்றினாலும் உணவ கத்தின் தனித்தன்மை நீங்கிவிடும்.
இறுதியாக, இதுபோன்ற உணவுகள் உடல் பருமன் உள்ளிட்ட பல சிக்கல்கள் உண்டாக்குகிறதே?
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஒரு வடை சாப்பிடுவது பிரச்சினையில்லை. ஆனால் 5 வடையை தினமும் சாப்பிட்டால் பிரச்சினைதான். அதேபோல அன்றாடம் மூன்று வேளையும் பிரைட் சிக்கன் சாப்பிட்டால் சீர்கேடுதான். சந்தேகமில்லை.
நன்றி ‘தி இந்து’.
Recent Comments