‘2020 வரை புதிதாக மால்கள் வர வாய்ப்பு இல்லை’- ஆர்.ஆர்.அருண்குமார் மிரிக்ஸ் நேர்காணல்

சமீபகாலமாக ஷாப்பிங் மால் கலாச்சாரம் அதிகரித்து வருவதாக கூறப்பட்டாலும் இன்னொரு புறம் மால்களின் வீழ்ச்சியும் தொடங்கி விட்டதாகவே தெரிகிறது. இந்தியாவில் பல மால்கள் செயல்படாமலும் வெற்றியடையாமலும் இருப்பதைக் காண முடிகிறது. தற்போதுள்ள சூழலில் 2020-ம் ஆண்டு வரை புதிய மால்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார் எக்ஸ்பிரஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆர்.ஆர்.அருண்குமார் மிரிக்ஸ்.

சென்னையில் பிறந்த இவர், சி.ஏ. முடித்துவிட்டு சில நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஒருங்கிணைந்த ரிலையன்ஸ் குழுமத்தில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். பிறகு பிவிபி வென்ச்சர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார். 2009-ம் ஆண்டில் இருந்து எக்ஸ்பிரஸ் அவென்யூவில் இருந்து வரும் அருண்குமார் மிரிக்ஸை சந்தித்தபோது, இனியும் மால்களுக்கு எதிர்காலம் இருக்குமா என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசினோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து…

மால்களுக்கு இப்போது மக்கள் அதிக அளவில் வருகிறார்களா?

மால்களுக்கு மக்கள் வருவ தில்லை என்று சொல்லப்படுவதில் உண்மையில்லை. மால்களைப் பொறுத்து கூட்டம் வந்துகொண்டு தான் இருக்கிறது. அங்கிருக்கும் விஷயங்கள்தான் மக்களை மீண்டும் மீண்டும் ஈர்ப்பதை தீர்மானிக்கிறது. வட இந்தியாவில் மால்களின் எண்ணிக்கை மிக அதிகம். தேவைக்கு அதிகமாக இருப்பதால் அங்கு சில பிரச்சினைகள் வந்திருக்கலாம். பொதுவாக பாதுகாப்பு, வசதிகள், அனுபவம் ஆகிய மூன்றுதான் மால்களின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.

மளிகை, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பொருட் களையும் இப்போது ஆன்லைன் மூலமாகவே மக்கள் வாங்கத் தொடங்கி விட்டார்கள். இந்நிலை யில், வருங்காலத்தில் மால்களின் நிலை எப்படி இருக்கும்?

இந்தியாவில் இணையத்தை பயன்படுத்துபவர்கள் 5 சதவீதத் துக்கு குறைவானவர்கள்தான். அமெரிக்காவில் 50 சதவீதம் பேர் இணையத்தைப் பயன்படுத்து கின்றனர். ஆனால், அங்கு மால்கள் இன்னமும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. டிவிடி வந்தபோது இனி தியேட்டர்களின் கதி அவ்வளவுதான் என்ற பேச்சு வந்தது. ஆனால், இன்றைக்கும் முதல் நாளில் படம் பார்க்க போட்டி இருக்கிறது. காரணம் தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவத்துக்காக வருபவர்கள் பலர். அதுபோலத்தான் மால்களில் கிடைக்கும் அனுபவத்துக்காகவே திரும்பத் திரும்ப வருவார்கள். சாதாரணமான டிரஸ்களை வேண்டு மானால் ஆன்லைனில் வாங்குவார் கள். ஆனால் கல்யாணத்துக்கு யாராவது ஆன்லைனில் வாங்கு வார்களா? தேவை, அனுபவம், வசதிக்காக மால்களுக்கு மக்கள் வந்துகொண்டுதான் இருப்பார்கள். ஆன்லைன் வணிகத்தால் மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத்தின் போக்கை மாற்ற முடியாது.

அனுபவத்துக்காக மால்களுக்கு வரு பவர்கள் அதிகம் என்று சொல்கிறீர் கள். ஆனால் 2, 3 முறை வந்துவிட் டால் கடைகளும் பொருட்களும் மக்களுக்கு பழையனவாகிவிடு கிறது. அவர்களைக் கவர புதிதாக என்ன செய்வீர்கள்?

மால்களில் புதுப்புது விஷயங் களை செய்துகொண்டுதான் இருக்கிறோம். 2 வருடங்களுக்கு ஒருமுறை கடையின் அமைப்பு, அலங்காரம் எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதனால், மக்களுக்கும் புதுப்புது அனுபவம் கிடைக்கும்.

மாதக் கடைசியில் கூட்டம் வருகிறதா?

மாதக் கடைசி என்ற வார்த்தைக்கு இப்போது மதிப்பில்லை. 80 சதவீதத்துக்கும் மேலான வர்த்தகம், கிரெடிட் கார்டு மூலமே நடக்கிறது. அதே நேரத்தில் சில சீசனில் மக்கள் கூட்டம் குறையத்தான் செய்யும். உதாரணத்துக்கு தேர்வு நேரங்களிலும், மழை பெய்யும்போதும் மக்களின் வருகை குறைவாகவே இருக்கும்.

ஷாப்பிங் மால்களுக்கு வர, மக்கள் அதிகம் பயப்படுவதற்கு முக்கிய காரணம் பார்க்கிங் கட்டணம்தான். இதை குறைத்தால் கூட்டம் இன்னும் அதிகரிக்குமே?

பார்க்கிங் இடத்துக்கு செய்யும் முதலீடு மிகவும் அதிகமாக இருக்கிறது. அதனால் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டி இருக்கிறது. பாதுகாப்பு வசதி இருக்கிறது. மேலும் குறைவாக கட்டணம் நிர்ணயிக்கும்போது வாடிக்கையாளர்களைத் தவிர மற்றவர்களும் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல வாய்ப்பு ஏற்படும். இரவு காட்சிக்கு வருபவர்களுக்கு பார்க்கிங் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் ஷாப்பிங் செய்ய அனுமதிக்கு அனுமதித்தால் தனிமை விரும்பிகள், ஷாப்பிங் செய்ய விரும்புவோர் மட்டுமே வருவதற்கு வாய்ப்பு ஏற்படுமே?

இப்போதைக்கு அதற்கான சூழ்நிலை இல்லை. விழாக்காலங்களில் இரவு 12 மணி வரை திறந்து வைப்பதற்கே பல அனுமதிகள் வாங்க வேண்டி இருக்கிறது. இரவில் கூட்டமும் அவ்வளவாக வராது. ஏசி, மின் கட்டணம் உள்ளிட்ட செலவுகளைக் கணக்கிட்டால், அதற்கேற்ற வருவாய் கிடைப்பது சந்தேகம்தான்.

வேறு மால்களை இணைப்பது அல்லது புது மால் உருவாக்குவது குறித்து திட்டம் இருக்கிறதா?

இது மிகவும் ரிஸ்க்கான பிஸினஸ். மால் அமைப்பதற்கு சில வருடங்கள் ஆகும். அது செயல்படத் தொடங்குவதற்கு மேலும் சில காலம் ஆகும். இதனால், புது மால் தொடங்கும் திட்டம் எதுவும் இல்லை. நாங்கள் மட்டுமின்றி, 2020 வரை புதிதாக எந்த மால்கள் வருவதற்கும் வாய்ப்பு இருப்பதுபோல எனக்குத் தெரியவில்லை.

வட இந்தியாவில் நிறைய மால்கள் மூடப்பட்டுவிட்டன. இதற்கு காரணம் எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

சில மால்களில் உணவகம் இல்லை. இன்னும் சில மால்களில் தியேட்டர் இல்லை. சிலர், மக்கள் கூடும் இடத்தில் மால்களை அமைக்கவில்லை.

டெல்லியில் இருப்பதுபோல சென்னையிலும் ஆடம்பரமான சொகுசு மால்கள் அமைய வாய்ப்பு இருக்கிறதா?

டெல்லி தனிநபர் வருமானத்துடன் சென்னை தனி நபர் வருமானத்தை ஒப்பிடவே முடியாது. அங்கு பல நாடுகளின் தூதரக அலுவலகங்கள் உள்ளன. வெளிநாடுகளில் இருந்து டெல்லிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதனால் அங்கு ஆடம்பர மால்கள் என்பது சாத்தியம். சென்னையில் அதற்கு வாய்ப்பு இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ஆடம்பர பிராண்ட்களுக்கான தேவை இருக்கிறது. அது தனி கடையாக அமைய வாய்ப்புகள் இருக்கிறதே தவிர மால்களுக்கான தேவை இப்போது இல்லை.
நன்றி ‘தி இந்து