காபி சந்தையை கிரீன் டீ கைப்பற்ற வாய்ப்பில்லை: லியோ காபி நிர்வாக இயக்குநர் பேட்டி


சென்னையில் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது லியோ காபி நிறுவனம். 1990-களில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த விளம்பரங்களில் முக்கியமானது லியோ காபி விளம்பரம். அதன்பிறகு டிவி விளம்பரங்களுக்கு பெரிய அளவில் அவர்கள் முக்கியத்துவம் தரவில்லை. தற்போது உடல்நலம் மீது மக்களுக்கு அதிக அக்கறை இருப்பதால் கிரீன் டீ குடிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் காபி சந்தை சரியுமா என்று கேட்டால் அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் லியோ காபி நிர்வாக இயக்குநர் வேணு ஸ்ரீனிவாசன். ஆன்லைன் வியாபாரம், வர்த்தக போட்டி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து…

காபியை பொறுத்தவரை அதிகபட்சம் அரை கிலோ, ஒரு கிலோ வரைக்கும் தான் வாங்குவார்கள். இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகம் கைகொடுக்கிறதா?

ஆன்லைன் விற்பனை என்பது ஒரு கூடுதல் சேவைதான். இப்போது மொத்த விற்பனையில் ஒரு சதவீதமே ஆன்லைனில் நடக்கிறது. ஆன்லைன் என்பது ஒரு விதைதான். இன்னும் சில காலத்துக்கு பிறகுதான் இதிலிருந்து பலனை எதிர்பார்க்க முடியும். விநியோகஸ்தருக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் என்பது ஆன்லைனில் இல்லை. அதனால் இப்போது இலவசமாக டெலிவரி செய்கிறோம். அதே நேரத்தில் அதிக தள்ளுபடி கொடுத்து விற்பனையை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.

இன்ஸ்டன்ட் காபி குடிப்பவர்கள் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களுக்கு பில்டர் காபி சுவையை எப்படி கொண்டு செல்வீர்கள்?

என் கணிப்பின்படி 40 சதவீதம்பேர் பில்டர் காபியைத்தான் குடிக்கிறார்கள். பில்டர் காபி குடித்து பழகியவர்கள் இன்ஸ்டன்ட் காபிக்கு மாற மாட்டார்கள். இன்றைய இளைஞர்கள் மெல்ல மெல்ல பழைய விஷயங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களை கவரவும், நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் புதுமையான பில்டர்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். இதனால் பில்டர் காபியின் விற்பனை குறையாது. வட இந்தியாவில் இப்போதுதான் காபி குடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த சந்தையில் நுழைய வேண்டும் என்றால் இன்ஸ்டன்ட் காபி தேவைப்படுகிறது. அதற்காக விரைவில் இன்ஸ்டன்ட் காபி அறிமுகப்படுத்த இருக்கிறோம்

எப்எம்சிஜி (ஹெச்யூஎல் நெஸ்லே) போன்ற நிறுவனங்களுடன் இப்போது காபி டே, ஸ்டார்பக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் சந்தையில் இறங்கிவிட்டன, போட்டி எப்படி இருக்கிறது?

காபி டே, ஸ்டார்பக்ஸ் போன்ற நிறுவனங்கள் எங்களுக்கு போட்டி அல்ல. மாறாக எங்களுக்கு உதவவே செய்கிறார்கள். வட இந்தியாவில் காபி பிரபலமாக இருப்பதற்கு காரணம் இந்த நிறுவனங்கள்தான். எல்லா நேரத்திலும் கடையிலேயே காபி குடிக்க முடியாது. வீடுகளில் காபி போட வேண்டும் என்றால் எங்களைப் போன்ற நிறுவனங்களுக்குதான் வரவேண்டும். ஆனால் எப்எம்சிஜி நிறுவனங்கள் நிச்சயம் போட்டியே. அவர்களைப் பொறுத்தவரை பல பிஸினஸ்களில் காபியும் ஒன்று. நாங்கள் அப்படி இல்லை. எங்களிடம் சிறப்புத் தன்மை இருப்பதால் அவர்களுடன் போட்டி போட முடியும்.

பாக்கெட் பழச்சாறு சந்தையில் புதிய புதிய நிறுவனங்கள் வருகிறார்கள். இந்நிலையில், வெயில் காலத்தில் காபி விற்பனை எப்படி இருக்கிறது?

வெயில் காலம் என்பதால் காபி குடிப்பதை யாரும் நிறுத்த மாட்டார்கள். காபி குடிப்பது கொஞ்சம் குறையும். அதனால் 10 முதல் 15 சதவீதம் வரை விற்பனை சரியக்கூடும். ஜூலையில் விற்பனை மீண்டும் வேகம் எடுக்கும். பாக்கெட் பழச்சாறுகளை பொறுத்தவரை மழைக் காலத்தில் விற்பனையே இருக்காது. அந்த அளவுக்கு காபி விற்பனை சரியாது. கோடை பிரச்சினையை சமாளிக்க மயிலாப்பூர் மோக்கா என்ற புதிய கடையை உருவாக்கி இருக்கிறோம். இதில் கோல்ட் காபி, ஐஸ் டீ, கோல்ட் சாக்லேட் உள்ளிட்ட பல பானங்களை விற்கிறோம்.

டிவி விளம்பரங்களை குறைத்துவிட்டீர்களே, சந்தையில் உங்களுடைய பிராண்டை மக்கள் மறந்துவிட மாட்டார்களா?

டிவி விளம்பரத்துக்கான பட்ஜெட்டை குறைத்திருக்கிறோம் என்பது உண்மைதான். அதே நேரத்தில் சூப்பர் மார்க்கெட்டில் நேரடி டெமோ, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்களில் கவனம் செலுத்துகிறோம்.

1990-களில் சென்னையில் 40 கடைகள் மட்டுமே இருந்தன. டிவியில் விளம்பரம் கொடுத்த பிறகு தமிழகம் முழுவதும் பிராண்ட் தெரிந்தது. ஆனால், சென்னையைத் தவிர எங்கும் விற்பனை இல்லை. இப்போது எங்களது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறோம். இன்னும் ஓராண்டுக்குப் பிறகு டிவி விளம்பரத்தில் மீண்டும் கவனம் செலுத்துவோம்.

சமீபகாலமாக உடல்நலம் மீதான கவனம் அதிகரித்து வருவதால், கிரீன் டீ விற்பனையும் அதிகரித்து வருகிறது. இது காபி விற்பனையை பாதிக்குமா?

கிரீன் டீ குடிக்க வேண்டிய கட்டாயம் வந்தால், அது நிச்சயம் சுவைக்காக இருக்காது. ஒரு நாளைக்கு ஐந்து முறை கிரீன் டீ குடிக்க முடியுமா? ஆனால், ஐந்து முறை காபி குடிக்க முடியும். எனவே, காபி சந்தையை கிரீன் டீ கைப்பற்றும் என்று நான் நம்பவில்லை.

ஏதேனும் பெரிய நிறுவனங்கள் உங்களை இணைத்துக்கொள்ள முன்வந்தார்களா?

1990களில் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது. சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு பெரிய நிறுவனம் வந்தது. மொத்தமாக வாங்குவது, சிறிய முதலீடு, சில சதவீத பங்குகளை விற்பது உள்ளிட்ட பல வகையான திட்டங்களுடன் வந்தார்கள். ஆனால், நிறுவனத்தை விற்கும் எண்ணத்தில் நாங்கள் இல்லை.

பெரிய முதலீடு கிடைக்கும் போது, வளர்ச்சி இன்னும் வேகமாக இருக்குமே?

உண்மைதான். முதலில் நாங்கள் எங்களது நெட்வொர்க் மற்றும் விற்பனை அளவை உயர்த்த வேண்டும். அதன்பிறகு, மற்ற முதலீடுகளைப் பற்றி யோசிக்கலாம்.

மற்ற ஊர்களில் இருக்கும் சிறிய காபி நிறுவனங்களை கையகப்படுத்தும் திட்டம் ஏதும் இருக்கிறதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு அப்படி ஒரு திட்டம் இருந்தது. ஆனால், அதை செயல்படுத்த முடியவில்லை. சிறிய நகரங்களில் இருக்கும் காபி நிறுவனங்களுக்கு தனிநபர்களை விட, ஹோட்டல்கள்தான் முக்கிய வாடிக்கையாளராக இருப்பார்கள். அதற்கு காரணம், இரு நபர்களுக்கு இடையே உள்ள தனிப்பட்ட நட்பாககூட இருக்கும். அந்த நிறுவனத்தை நாங்கள் வாங்கிய பிறகு தனிப்பட்ட நட்புக்கு இடமில்லை.

அதனால், ஹோட்டல்கள் எங்களிடம் காபி வாங்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் நல்ல நிறுவனமாக இருந்தால் பரிசீலனை செய்யலாம். இப்போதுகூட எங்கள் மொத்த விற்பனையில் ஹோட்டல் உள்ளிட்ட மொத்த விற்பனை 20 சதவீதத்துக்கு மேல் போகாமல் பார்த்துக்கொள்வோம். மொத்த விற்பனையை அதிகரிப்பது ரிஸ்க்.

காபி வளர்ச்சி குறித்த உங்களது எதிர்கால கணிப்பு என்ன?

சராசரியாக ஆண்டுக்கு 6 முதல் 8 சதவீத வளர்ச்சி இருக்கும். இப்போதைக்கு 3 லட்சம் டன் காபி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஒரு லட்சம் டன் மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் 10, 20 ஆண்டுகளில் 3 லட்சம் டன் உற்பத்தியும் நாமே பயன்படுத்தும் அளவுக்கு காபி சந்தை இருக்கும்.

நன்றி ‘தி இந்து’.