‘தனித்தன்மையுடன் இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும்’ – ஸ்டேஸில்லா டாட் காம் நிறுவனர் யோகேந்திர வசுபால் நேர்காணல்
தொழில்நுட்ப துறையைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் காலம் இது. ஆனால் அவர்கள் யாரும் இப்போது தொழில் தொடங்கியவர்கள் அல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பே இணையதளம் சார்ந்த தொழில்தான் சிறப்பாக இருக்கும் என்று முன்கூட்டியே கணித்தவர்கள். அப்படி கணித்தவர்கள்தான் இன்று வெற்றிகரமான தொழில் முனைவோராக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்த ஸ்டேஸில்லா டாட் காம் (www.stayzilla.com) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான யோகேந்திர வசுபால். அவரது வாழ்க்கை, தொழில் பயணம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் உரையாடினோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து…
இன்ஜினீயரியங் முடிக்காமல் எப்படி இந்த தொழில் தொடங்க முடிந்தது?
1999-ம் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். நிறுவனங்களுக்கான இணையதளத்தை வடிவமைத்து கொடுத்தேன். கல்லூரியில் இருந்து என்னால் எதுவும் கற்றுக் கொள்ள முடியாது என்பதை அப்போது புரிந்து கொண்டேன். வெளிநாடுகளில் இருக்கும் முக்கியமான கல்லூரிகளின் வகுப்புகளை இணையதளத்தின் மூலமாக கற்றேன். ஹெச்டிஎம்எல் புத்தகத்தை வாங்கி நானாக படித்தேன். மேலும் தொழில்நுட்பம் சார்ந்த விஷயத்தில் முழுமையாக எதையும் கற்றுக்கொள்ளத் தேவை இல்லை.
அடிப்படையைத் தெரிந்து கொண்ட பிறகு, கிடைக்கும் புராஜக்ட்களில் கற்றுக்கொள்ள முடியும். உண்மையை சொல்லப் போனால் ஏதாவது வேலை கிடைத்தால்தான் புதிது புதிதாக கற்றுக் கொள்ள முடியும். இதில் வருமானம் கிடைத்ததால் முதல் ஆண்டு முடிந்தவுடனே படிப்பை நிறுத்திக்கொண்டேன். ஆனால் வீட்டில் இருந்தால் மளிகை வாங்க, பேங்க் செல்வது உள்ளிட்ட வேலை இருந்ததால் கல்லூரியில் இணைந்தேன். கல்லூரிக்கு தேவையானத்தை படிக்காமல் எனக்கு தேவையானதை தேர்வு செய்தேன்.
அதன் பிறகு எனக்கான சில இணையதளங்களை தொடங்கினேன். இதன் மூலம் அமேசான் நிறுவனத்துக்கு affiliate-ஆக மாறினேன். இறுதி ஆண்டில் கூகுள் adwords அக்கவுண்ட் திறந்தேன். இதன் மூலம் டிராபிக் அதிகமாக இருந்தது. இவை அனைத்தின் மூலமாகவும் வருடம் 1 லட்ச ரூபாய் சம்பாதித்தேன். ஆனால் இதில் எனக்கு திருப்தி இல்லை. பெயர் உருவாக்கவில்லை. பிராண்ட் உருவாக்கவில்லை. எதுவுமே நிலையில்லை என்று தெரிந்தது, அதனால் நிறுவனம் தொடங்க முடிவெடுத்தேன்.
அமேசானில் 2003-ம் ஆண்டில் இருந்து இருக்கிறீர்கள். அப்போது பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் கூட இந்தியாவில் இல்லை. அமேசான் மாடலை மறுபிரதி எடுக்காமல் ஏன் ஸ்டேஸில்லா தொடங்கினீர்கள்?
நான் டேட்டாவை அடிப்படையாகக் கொண்டு முடிவு எடுப்பவன். ஆரம்பத்தில் புத்தகங்களை ஆன்லைனில் விற்பதுதான் எங்கள் திட்டமாக இருந்தது. ஆனால் எவ்வளவு பேர் படிப்பார்கள் என்பதற்கு போதுமான தகவல் இல்லை. அதனால் அந்த ஐடியாவை விட்டுவிட்டோம். அதற்கடுத்து ஆன்லைன் மூலம் டயப்பர் விற்கலாம் என்று யோசித்தோம். ஆனால் இதை பெரிதாக கொண்டு வரமுடியுமா என்று தெரியவில்லை. அடுத்து ரியல் எஸ்டேட் பற்றி யோசித்தோம். உதாரணத்துக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய வாடகையை உங்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்து, வீட்டு உரிமையாளர் வங்கி கணக்கில் சேர்ப்போம். வீடு மாற வேண்டும் என்றால் எங்களது நெட்வொர்க்கில் இருக்கும் வீடுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்தோம். ஆனால் இந்த ஐடியா இன்னும் சில வருடங்களுக்கு பிறகுதான் சக்சஸ் ஆகும் என்பதால் விட்டுவிட்டோம்.
ரியல் எஸ்டேட் என்பது நீண்ட கால விஷயம். குறுகிய காலத்தில் ரியல் எஸ்டேட்டில் எதையாவது செய்ய வேண்டும் என்று யோசித்தோம். இது 30,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்டது என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இதற்கான சப்ளையர்களுக்கு எல்லை கிடையாது. இந்தியா முழுவதும் இருக்கிறார்கள். சந்தை பெரிய சந்தை என்பதால் ஸ்டேஸில்லா ஆரம்பித்தேன்.
2005-ம் ஆண்டு நிறுவனம் தொங்கினீர்கள், ஆனால் 2007-ம் ஆண்டுதான் இணையதளம் செயல்பட தொடங்கியது?
இந்த இரு வருடங்களில் நிறுவனர்கள் மூவரும் 200 நகரங்களில் இருக்கும் ஓட்டல் நிறுவனங்களை சந்தித்தோம். 300 நகரங்களில் இருக்கும் ஓட்டல்களை இணைத்தோம். எனக்கு தமிழ், கன்னடம், ஆங்கிலம், கொஞ்சம் ஹிந்தி தெரியும். என்னுடைய மனைவியும் நிறுவனருமான ரூபலுக்கு ஹிந்தி, குஜாராத்தி, ஆங்கிலம், தமிழ் தெரியும். இன்னொரு நிறுவனரான சசித்க்கு தெலுங்கு, தமிழ், மார்வாடி, ஹிந்தி ஆகிய மொழிகள் தெரியும் என்பதால் 8,9 மாநிலங்களில் எங்களால் ஓட்டல் நிறுவனங்களை எங்கள் நிறுவனத்துடன் இணைக்க முடிந்தது.
ஆரம்ப காலங்களில் என்ன மாதிரியான சவால் இருந்தது?
பல சவால்களை சந்தித்தோம். முதலாவது பஸ், ரயில், விமானம் போன்றவை ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டால்தான் ஓட்டல் அறைகள் ஆன்லைன் மூலம் நடக்கும். நாங்கள் முன் கூட்டியே நிறுவனம் ஆரம்பித்துவிட்டோம் என்பது புரிந்தது. சந்தை முதிர்வடையும் வரை நாம் பொறுத்திருக்கவேண்டும் என்பது ஆரம்பத்திலேயே எங்களுக்குப் புரிந்தது. எங்களது பிஸினஸ் சீராக இருந்தாலும், விரிவாக்க பணிகளில் கவனம் செலுத்தினோம்.
எங்களது பிஸினஸும், டெலிகாம் பிஸினஸும் ஒன்றுதான். இரண்டிலும் நெட்வொர்க் அதிகமாக இருந்தால் மட்டுமே வருங்காலத்தில் இருக்க முடியும். ஒரே ஊரில் அதிக ஓட்டலை இணைப்பதை விட, அதிக ஊர்களை எங்களது நெட்வொர்க்கில் இணைக்க முடிவு செய்தோம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்தோம்.
ஒவ்வொரு வருடமும் எங்களது நெட்வொர்க் இரு மடங்காக உயரும், ஆனால் எங்களது வருமானம் 20 சதவீதம்தான் உயரும். வெற்றி மிக தொலைவில் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரிந்தது. தெரிந்தே அந்த கடினமாக வேலையைச் செய்தோம்.
வென்ச்சர் கேபிடல் முதலீடு எப்போது கிடைத்தது?
2009-ம் ஆண்டே சில நிறுவனங்களை நாங்கள் அணுகினோம். ஆனால் அவர்கள், விமான டிக்கெட் முன்பதிவினை இணைத்தால் நாங்கள் முதலீடு செய்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால் அது மிகச்சிறிய சந்தை. சிறிய சந்தையில் களம் இறங்க முடியாது என்பதால் முதலீடு கிடைக்கவில்லை.
2012-ம் ஆண்டு சந்தை விரிவடைய ஆரம்பித்தது. இதுவரை நேரம் செலவழித்து விட்டோம். இனி பணம் கிடைத்தால் வேகமான வளர்ச்சி சாத்தியம் என இந்தியன் ஏஞ்சல் நெட் வொர்க்கை அணுகி முதலீட்டை பெற்றோம்.
ஏற்கெனவே நீங்கள் லாபமீட்டும் நிறுவனம், நேரடியாக வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களை அணுகி இருக்கலாமே?
2010 முதல் 2012 வரை சந்தையில் எந்தவிதமான முதலீடு இல்லை. மேலும் முதல் முறையாக நிதி திரட்டும் போது அதிக முதலீடு பெற்றால், எங்கள் நிறுவனத்தின் அதிக பங்குகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். நிறுவனத்தின் அதிக பங்குகளை நான் விற்க விரும்பவில்லை என்பதால் ஏஞ்சல் கேபிடலை நாடினோம்.
பங்குகளைக் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்தால் வங்கிகளை நாடி கடன் பெற்றிருக்கலாமே?
இண்டர்நெட் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கவில்லை. நாங்கள் பல வங்கிகளை நாடினோம். எங்களிடம் எந்த சொத்துகளும் இல்லை என்பதால் வங்கிகள் எங்களுக்குக் கடன் கொடுக்கவில்லை.
பிஸினஸுக்கான பயணம் செய்பவர்கள் அடிக்கடி ஒரே ஊருக்கு செல்வார்கள். ஒரு முறை உங்களது இணையத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்துவிட்டால், அடுத்த முறை நேரடியாக அந்த ஓட்டலுக்கு போன் செய்து ஓட்டல் புக் செய்ய வாய்ப்பு இருக்கிறதே?
இருக்கிறது. ஆனால் பயணங்களில் 25 சதவீதம் மட்டும்தான் பிஸினஸுக்காக செல்கிறார்கள். மீதம் 75 சதவீதம் சுற்றுலா உள்ளிட்ட இதர சேவைகள்தான். இரண்டாவது எங்கள் வருமானத்தில் 10-15 சதவீதம் வரைதான் முக்கியமான 10 பிஸினஸ் நகரங்களில் இருந்து வருகிறது என்பதால் எங்களுக்கு பிரச்சினை இல்லை.
உங்களது இணையத்தில் 100 ரூபாய்க்கு கூட அறைகள் இருக்கிறது. 10,000 ரூபாய்க்கு அறைகள் இருக்கிறது? எகானாமி, பிரீமியம்,சொகுசு என பிரிக்காமல் அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் உங்களது சேவை தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறதே?
சரிதான். ஆனால் இது நேரடியாக சேவையை பெரும் போதுதான் இந்த பிரச்சினை வரும். இடம், பணிபுரியும் நபர்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்தாக வேண்டும். ஆனால், ஆன்லைனில் எதையும் விற்க முடியும். 1000 ரூபாய் போனையும், 10,000 ரூபாய் ஸ்மார்ட்போனையும் ஒரே இணையதளத்தில் விற்க முடியும். இது எங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. இருந்தாலும் சேவை கொடுப்பதற்காக சாட் வசதி இருக்கிறது. வாடிக்கையாளர்கள் தங்களது சந்தேகங்களை எளிதில் தீர்த்துக் கொள்ளலாம்.
முதலில் சாட் வசதி வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டுமா? சாட் வசதி கொடுப்பதால் உங்களது பணியாளர் எண்ணிக்கை அதிகரிக்காதா?
பயணம் செய்வதற்கு என ஒவ்வொருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கிறது. தனியாக செல்கிறீர்களா, குடும்பத்துடன் செல்பவர்களா, அறை எப்படி வேண்டும் என்பது உள்ளிட்ட பல சந்தேகங்கள் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும். அதை தீர்ப்பதற்கு சாட் வசதி தேவை.
நாங்கள் ஒரு நாளைக்கு 4,000 வாடிக்கையாளர்களுடன் உரையாடுகிறோம். ஆனால் இதற்காக 30 நபர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு சமயத்தில் ஒருவர் 4 நபர்களுடன் சாட் செய்ய முடியும். ஒருவேளை கால் சென்டர் வைத்தால் 300 நபர்கள் எங்களுக்கு தேவைப்படும்.
Backward integration மூலம் ரயில், பஸ் அல்லது விமான போக்குவரத்தை ஆன்லைன் மூலம் விற்கும் திட்டம் இருக்கிறதா?
இல்லை. என்னை கேட்டால் backward integration நிறுவனத்தின் திறமையை குறைக்கும். என்னுடைய இன்னொரு நிறுவனம் மூலம் நானே வாங்கும் போது தரம் குறையும். முன்பு லைசன்ஸ் ராஜ் இருந்தது. அதனால் போட்டி இல்லை. இப்போதைய போட்டி உலகத்தில் தனித்தன்மையுடன் இருந்தால் மட்டுமே நீடித்து நிலைக்க முடியும். மேலும் நான் அகல உழ நினைக்கவில்லை, ஆழ உழுவதற்கே நினைக்கிறேன். மேலும் இந்த துறையிலே சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் forward integration நல்லது. இதில் புதிய சந்தையை நாம் உருவாக்குகிறோம்.
அடுத்த இலக்கு?
இப்போதைக்கு ஒரு நாளைக்கு 4,000 அறைகள் எங்கள் மூலமாக பதிவு செய்யப்படுகிறது. இதை 20,000 ஆக உயர்த்தவேண்டும். அடுத்த சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அதன் பிறகு ஐபிஓ..
நன்றி ‘தி இந்து
Recent Comments