Interview with D J Pandian, Chief Secretary – Gujarat Govt.
ஏழாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக குஜராத் அரசு நடத்தி முடித்திருக்கிறது. குஜராத் அரசின் தலைமைச் செயலாளர் டி.ஜே.பாண்டியன் இந்த மாநாட்டை நடத்தி முடித்தார். முதலீட்டாளர் மாநாடு நடந்து கொண்டிருந்த பரபரப்பான நேரத்திலும் ‘தி இந்து’வுக்காக 30 நிமிடங்கள் ஒதுக்கினார். அந்த விரிவான பேட்டியிலிருந்து..
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே இருக்கும் கன்னிராஜபுரத்தில் பிறந்தவர். அரசு பள்ளியில் படித்தவர். சிவகாசி கல்லூரியில் பிபிஏ-வும். கோவை பிஎஸ்ஜியில் எம்பிஏவும் படித்தவர். 1981 ஐ.ஏ.எஸ் முடித்தவர். சூரத் மாவட்ட ஆட்சியர், உள்துறை துணைச் செயலாளர், மத்திய அரசின் நிதிதுறையில் துணைச் செயலாளர், உலக வங்கியில் சில ஆண்டுகள், மின் துறைத் செயலாளர், தொழில் துறைச் செயலாளர் என முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
குஜராத் மாடல் வளர்ச்சி பற்றி விரிவாக கூறுங்களேன்?
2001-ம் ஆண்டு கட்ச் பகுதியில் பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டது. அந்த பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. அந்த பகுதிகள் மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என்றால் அரசு மட்டுமே செய்ய முடியாது. அது போதுமானதாகவும் இருக்க முடியாது. அதனால் தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும். தனியார் துறை வளர வேண்டும் என்றால் அதற்கு தேவையான அடிப்படை கட்டுமான வசதிகள் இருக்க வேண்டும். அதனால் ஒவ்வொரு துறை வாரியாக கொள்கை முடிவுகளை உருவாக்கினோம்.
குறிப்பாக மின்சாரம் தேவை. அப்போதைக்கு (2003-ம் ஆண்டு) எங்களது மின் உற்பத்தி 4000 மெகா வாட் மட்டுமே. தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தோம். டாடா மற்றும் அதானி 4000 மெகாவாட் மின்சார உற்பத்தி நிலையங்களும், எஸ்ஸார் 2000 மெகாவாட் உற்பத்தி திறனுடைய மின் உற்பத்தி நிலையங்களையும் அமைத்தது. அடுத்த ஐந்து வருடங்களில் உற்பத்தி திறன் 14000 மெகா வாட் ஆக அதிகரித்தது. இந்த நிறுவனங்களில் இருந்து யூனிட்டுக்கு 3 ரூபாய்க்கு குறைவான விலையில் மின்சாரத்தை குஜராத் அரசு வாங்குகிறது. தற்போது 18000 மெகா வாட் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் குஜாராத்தின் தேவை 13000 மெகா வாட்தான்.
மின்சாரம் இருந்ததால் தொழில்துறை நிறுவனங்கள் இங்கு வர ஆரம்பித்தார்கள். மின் உற்பத்தியில் மாநில அரசு எந்த முதலீடும் செய்யவில்லை. ஆனால் மாநில அரசு மின் பகிர்மான மற்றும் விநியோக வழித்தடத்தை அதிகப்படுத்த முதலீடு செய்தது. இதனால் மின்சாரத்தை அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்ல முடிந்தது.
தொழில்துறைக்கு என்ன சலுகைகள் கொடுக்கிறீர்கள்?
தண்ணீர், மின்சாரம், சாலை வசதி, தொழில் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்குகிறோம்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் நீங்கள் கொடுக்கவில்லை. விவசாயிகள் இதை எப்படி எடுத்துக்கொண்டார்கள்?
விவசாயிகளுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு யூனிட்டுக்கு 56 பைசா வசூலித்து வந்தோம். அதை உயர்த்தவும் இல்லை. அதேபோல குறைக்கவும் இல்லை. உபரி மின்சாரத்தை வெளியே அதிக விலைக்கு விற்றுதான், இதை மின்வாரியம் சரி செய்கிறது.
விவசாயம் லாபகரமான தொழிலாக இருக்கிறதா?
மின்கட்டணத்தால் அவர்களது லாப வரம்பு குறையும் என்று சொல்ல முடியாது. மேலும் இங்கு 24 மணி நேரமும் மின் வசதி இருக்கிறது. தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி இருக்கிறோம். மேலும் ஆறு களை இணைத்திருக்கிறோம். நீர்மட்டம் அதிகமாக இருப்பதால் மின் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டி இருக்காது. தவிர கடந்த பத்தாண்டுகளாக பருவமழை பொய்க்க வில்லை.
தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருப்பது போல தகுதி வாய்ந்த பணியாளர்கள் இங்கு இருக்கிறார்களா?
குஜராத்தியர்கள் இயல்பிலே தொழில் முனைவோர்கள், முதலீடு செய்பவர்கள். அதனால் வேலை செய்ய பணியாளர்கள் கிடைக்க மாட்டார்கள். அதனால் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை இங்கு கொண்டு வருகிறார்கள்.
இங்கு மின்சாரம் இருக்கிறது, ஜவுளித் தொழிலில் முன்னணியில் இருக்கிறது. ஆனால் ஐடி துறையில் குஜராத் பெரிய அளவில் வளரவில்லையே?
இதை ஒப்புக்கொள்கிறோம். மற்ற மாநிலங்களில் இருப்பது போல ஐடியில் நாங்கள் முன்னணியில் இல்லை. இதில் சில வருடங்கள் பின் தங்கி இருக்கிறோம். இப்போதுதான் ஐஐடி ஆரம்பித்திருக்கிறோம். நான்கு வருடங்களாக தான் பொறியியல் கல்லூரிகள் வந்து கொண்டிருக்கின்றன.
மேலும் மக்கள் இங்கு குஜராத்திதான் எப்போதும் பேசுவார்கள். உதாரணத்துக்கு ஒரு டெபுடி கலெக்டர் கூட விடுமுறை கடிதத்தை குஜராத்தியில்தான் எழுதுவார். ஐடி துறை மொழி என்பது ஆங்கிலம். இப்போதுதான் ஆங்கிலம் கற்றுவருகிறார்கள்.
குஜராத் மாடல் வளர்ச்சி என்பது மாயை என்று விமர்சகர்களும் கல்வியாளர்களும் சொல்கிறார்கள். உங்கள் பதில் என்ன?
குஜாரத்தின் வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்பது ஒரு விமர்சனம். குஜராத் அரசு இலவசம் கொடுப்பதை விரும்புவதில்லை. நாங்கள் மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கிறோம். அதனால் இந்த வளர்ச்சி சென்றடைய இன்னும் சில காலம் பிடிக்கும். ‘கரீப் கல்யாண் மேளா’ அதாவது ஏழைகளுக்கு உதவி வழங்கும் திருவிழா நடத்துகிறோம். இதில் அவர்கள் தொழிலுக்கு தேவையான பொருட்களை கடனுக்கு வழங்குகிறோம்.
மேலும் குஜராத் மக்கள் அசைவமோ, முட்டையோ சாப்பிட மாட்டார்கள். அதனால் குழந்தைகளிடையே புரதச்சத்து குறைவாக இருக்கும் என்று குற்றம் சாட்டுவார்கள். அதனால் இப்போது மாற்று உணவினைக் கொடுத்து வருகிறோம்.
இங்கு தொழில் முனைவு எப்படி இருக்கிறது?
படிக்கும் போது பிஸினஸ் செய்பவர்கள் அதிகம். மேலும் பங்குச்சந்தை வர்த்த கத்தில் ஈடுபடுபவர்கள் அதிகம்.
ஏழாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் வந்திருக்கும் முதலீடுகள் எவ்வளவு?
எவ்வளவு முதலீடு என்பதை அறிவிக்க வில்லை. ஆனால் 22,000 முதலீட்டு விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. இதில் 4,000 விண்ணப்பங்கள் பெரிய நிறுவனங் களிடமிருந்து வந்திருக்கிறது. 18,000 சிறிய நிறுவனங்களில் இருந்து வந்திருக்கிறது. இதில் 30 சதவீதம் நிறைவேறினாலே பெரிய அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இவ்வளவு பேரை எப்படி ஒரே நாளில் திரட்ட முடிந்தது?
இது ஒரு நாளில் நடக்கும் விஷயமல்ல. இந்த நிகழ்ச்சிக்காக கடந்த இரு வருடங்களாக பல குழுக்கள் வேலை செய்தன. மேலும் இங்கு அரசு அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் உண்டு. இங்கு பணி இட மாற்றம் என்பது மிக அரிதாக நடக்கும். அதனால் திட்டமிட முடிந்தது. இன்று மாலையில் இருந்தே அடுத்த மாநாட்டுக்கு (2017) தயராக வேண்டும் என்று நம்மிடம் விடைபெற்றார்.
நன்றி ‘தி இந்து
Recent Comments