முதலீட்டில் 10%-க்கு மேல் தங்கம் வேண்டாம்: மணப்புரம் பைனான்ஸ் சிஇஓ பேட்டி
தங்க நகை மீது கடன் கொடுப்பதில் முக்கிய நிறுவனங்களுள் மணப்புரம் பைனான்ஸும் ஒன்று. சமீப காலத்தில் தங்கத்தின் விலை சரிந்து வரும் நிலையில் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வி.பி.நந்தகுமாரை வலப்பாடில் இருக்கும் அவரது தலைமை அலுவலகத்தில் சந்தித்தோம். அந்த விரிவான பேட்டியிலிருந்து…
ஒரு அவுன்ஸ் தங்கம் 1700 டாலரிலிருந்து 1200 டாலருக்கு சரிந்துவிட்டது. தங்கத்தின் விலை இறக்கம் உங்கள் பிஸினஸை எப்படி பாதிக்கும்? தங்கத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இந்த நிலையிலேயே தங்கம் தொடர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு அவுன்ஸ் தங்கத்தை வெட்டி எடுக்க ஆகும் செலவு 1200 டாலர் என்ற அளவில் இருக்கிறது. ஒருவேளை இதற்கு கீழே குறைந்தால் கூட உற்பத்தி நிறுத்தப்படும். அதனால் தேவை அதிகரித்து மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அதனால் தற்போதைய நிலைமையிலேயே தங்கத்தின் விலை நிலவரம் இருக்கும்.
தங்க நகை மீது நாங்கள் கடன் கொடுக்கும் விகிதம் குறைவு. அதாவது நீண்ட கால கடன் (ஒரு வருடம்) என்றால் தங்கத்தின் மதிப்பில் 60 சதவீதம் வரைக்கும், குறுகிய கால கடன் என்றால் (மூன்று மாதம்) தங்கத்தின் மதிப்பில் 75 வரைக்கும் கடன் கொடுக்கின்றோம். ஒருவேளை 15 சதவீதம் சரிந்தால் கூட எங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. ஆனால் 15 சதவீதம் சரிவதற்கு வாய்ப்புகள் மிக மிக குறைவு.
மேலும் இந்திய குடும்பங்களுக்கு நாங்கள் கடன் கொடுக்கிறோம். அதில் சென்டிமென்ட் இருப்பதால் அடமானம் வைத்த நகையை எப்படியும் மீட்பார்கள்.
சமீப காலங்களில் அமெரிக்க பொருளாதாரம் மற்றும் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. மாறாக தங்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. உங்களது பிஸினஸின் பெரும் பகுதி தங்கத்தை மையப்படுத்திதான் இருக்கிறது. இது உங்களுக்கு ரிஸ்க் இல்லையா?
டாலர் பலமடைகிறது என்றால் ரூபாய் மதிப்பு குறைகிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை என்பது சர்வதேச தங்கத்தின் விலை மற்றும் டாலர் மதிப்பை பொறுத்து இருக்கிறது என்பதால் இங்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் இருக்கிறது. எனவே தங்கத்தை எடுப்பதற்கான கட்டணத்தை விட அதன் விலை குறையப்போவதிலை. அதனால் கவலைப்பட ஒன்றும் இல்லை.
மேலும் ரிஸ்க்கினை தவிர்ப்பதற்காக தங்க கடன் தவிர, சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். டெல்லியில் இருக்கும் வீட்டு கடன் நிறுவனம் ஒன்றினை வாங்கி இருக்கிறோம். மேலும் மைக்ரோ பைனான்ஸ் துறையில் இருக்கும் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்சியிலும் இருக்கிறோம்.
உங்களது நிறுவனத்தின் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எப்.ஐ.ஐ.) 42.40% இருக்கிறார்கள். எப்படி?
பிஸினஸ் வாய்ப்புகள் நீண்ட காலத்துக்கு இருப்பது, லாப வரம்பு ஆகியவை நன்றாக இருப்பது ஆகியவைதான் முதலீட்டாளர்களுக்கு தேவை. இதனால் எப்.ஐ.ஐ.களின் முதலீடு அதிகமாக இருக்கிறது.
பேமண்ட் பேங்க் மற்றும் ஸ்மால் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது? உங்களுக்கு திட்டம் இருக்கிறதா?
ஆமாம். நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஆனால் நாங்கள் பெரிய நிறுவனம் என்பதால் ஸ்மால் பற்றி யோசிக்கவில்லை. பேமண்ட் பேங்க் குறித்த விதிமுறைகளுக்காக காத்திருக்கிறோம். அதேபோல வங்கி ஆரம்பிப்பதற்கான விதிமுறைகளும் விரைவில் வர இருக்கின்றன. அதை ஆரம்பிக்கவும் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.
உங்களது தங்க நகைக்கடன் பிஸினஸில் நிகர வட்டி வரம்பு (என்.ஐ.எம்) பத்து சதவீதத்துக்கு மேலே இருக்கிறது. ஆனால் வங்கிகளில் நிகர வட்டி வரம்பு 3 சதவீதம்தான். வங்கி ஆரம்பிப்பது உங்களுக்கு சாதகமாக இருக்குமா?
தங்க நகை கடன் என்பது குறுகிய காலத்துக்கு வழங்கப்படும் கடன். அதனால் செயல்பாட்டு செலவுகள் இங்கு மிக அதிகம். 7 சதவீதம் வரைக்கும் இருக்கும். எங்களுக்கு கிடைப்பதும் 3 சதவீதம்தான். இதேபோலதான் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களுக்கும். அவர்களுக்கும் 10 சதவீத நிகர வட்டி வரம்பு. அவர்களுக்கும் 7% வரை செலவுகள் இருக்கும்.
மேலும் வங்கிகள் கொடுப்பது நீண்ட கால கடன்கள். அவர்கள் சேவை கட்டணம் வசூலிப்பார்கள். அவர்களது செலவுகள் 0.5 சதவீதம்தான் இருக்கும்.
தங்க நகை கடனுக்கு வங்கிகளில் 13-14 சதவீத வட்டி என்றால், உங்களிடத்தில் 21 சதவீதம் ஏன்? வட்டியை குறைக்கும் போது இன்னும் அதிக மக்கள் வருவார்களே?
வட்டியை எப்படி குறைக்க முடியும்? நாங்கள் வாங்கும் கடனுக்கு சராசரியாக 12.5 சதவீத வட்டி செலுத்த வேண்டும். ஆனால் வங்கிகளுக்கு டெபாசிட் உள்ளிட்டவை மூலமாக சராசரியாக 5 சதவீத அளவில் தொகை கிடைக்கிறது. வங்கிகளில் நடப்பு கணக்கு இருக்கிறது. அதற்கு வட்டி கொடுக்க தேவையில்லை. சேமிப்பு கணக்குகளில் 4 சதவீத வட்டி கொடுத்தால் போதும். வங்கிகள் டெபாசிட் வாங்கலாம். அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு செலவுகளும் குறைவு. மொத்தமாக எங்களுக்கு கிடைக்கும் லாபமும் அவர்களுக்கு கிடைக்கும் லாபமும் ஒன்றுதான்.
ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு விளம்பரத் தூதர் என்பது அதிகம் செலவு இல்லையா? ஒரே விளம்பரத் தூதர் அல்லது கான்செப்ட் அடிப்படையில் விளம்பரங்கள் உருவாக்கலாமே?
இன்னும் அதிக மக்களை சென்றடைய விளம்பரங்களும் விளம்பரத் தூதர்களும் அவசியமாகிறார்கள். மேலும், இவை அனைத்துமே திட்டமிட்ட செலவுகள்தான்.
நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க வேண்டும். அதனால் தங்க இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று ஒவ்வொரு நிதி அமைச்சர்களும் சொல்கிறார்களே?
தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தினால், கடத்தல் அதிகமாகும். இதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். இதற்கு கலாச்சார ரீதியில் மாற்றம் தேவை. நாம் நகைக்காகவும், முதலீட்டுக்காகவும் தங்கத்தை அதிகமாக நுகர்கிறோம். இந்திய வீடுகளில் 25,000 டன் தங்கம் இருக்கிறது. உள்நாட்டில் இருக்கும் தங்கத்தை மறு சுழற்சி செய்வதற்கு கோல்ட் பாண்ட் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதில் தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றுவதால் மக்கள் அந்த திட்டத்தை விரும்புவதில்லை.
இந்த சூழ்நிலையில் தங்க அடமான நிறுவனங்கள் financial inclusion-க்கு முக்கிய பங்காற்றுகின்றன.
‘Gold is an unproductive asset’ என்பது சில நிபுணர்களின் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஆனால் இந்த unproductive asset தான் உலகின் பெரும்பாலான வங்கிகளுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. தங்கம் பெரிய வருமானத்தை கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் அசாதாரண சூழலில் தங்கம் உதவும். தங்கத்தில் முதலீடு செய்வதில் தவறில்லை. ஆனால் மொத்த முதலீட்டில் 10 சதவீதத்துக்கு மேல் தேவையில்லை.
நன்றி ‘தி இந்து
Recent Comments