ஐடியா முக்கியம்; சென்டிமென்ட் கூடாது- கே.ஏ.ஸ்ரீனிவாசன் சிறப்புப் பேட்டி
கே.ஏ.ஸ்ரீனிவாசன், தலைமை நிதி அதிகாரி- வென்ச்சர் ஈஸ்ட்
தொழில் தொடங்குவதற்கு ஐடியா மட்டுமே போதுமானது, பணம் ஒரு பிரச்சினையே இல்லை என்று இளம் தலைமுறை தொழில் முனைவோர்கள் சொல்வதை சமீப காலமாக நாம் கேட்க முடிகிறது. பல இளம் தொழில் முனைவோர்கள் வென்ச்சர் கேப்பிட்டல் மூலமாக வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். வென்ச்சர் கேப்பிடல் என்றால் என்ன, தொழில்முனைவோர்கள் அவர்களை எப்படி அணுகுவது, வென்ச்சர் கேப்பிடல் எவ்வாறு செயல்படுகிறது என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ள சென்னையில் இருக்கும் வென்ச்சர் கேப்பிடல் நிறுவனமான வென்ச்சர் ஈஸ்ட் (Ventureast) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கே.ஏ.ஸ்ரீனிவாசனை சந்தித்தோம்.
வென்ச்சர் கேப்பிடல் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…
சார்ட்டட் மற்றும் காஸ்ட் அக்கவுண்ட் முடித்து, ஹிந்துஜா குழுமத்தில் சில காலம் வேலை செய்தேன். அதன்பிறகு ஏ.வி.டி. தாமஸ் நிறுவனத்தில் எட்டு வருடங்களும், சதர்லாண்ட் நிறுவனத்தில் சில காலமும் வேலை செய்தேன். பிறகு சொந்தமாக எஃப்.ஏ.ஓ. (Finance and Accounting Outsourcing), ஆரம்பித்து சில வருடங்களில் ஆதித்யா பிர்லா நிறுவனத்திடம் விற்றுவிட்டேன். அதன் பிறகு வென்ச்சர் ஈஸ்ட் நிறுவனத்துக்கு வந்துவிட்டேன்.
வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பற்றி சொல்லுங்கள்…
மியூச்சுவல் ஃபண்ட்களில் சிறுமுதலீட்டாளர்கள் எப்படி முதலீடு செய்கிறார்களோ, அதேபோல இதில் பெரிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்கள். இந்தத் தொகையை நாங்கள் (வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள்) நிர்வாகம் செய்வோம். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். நாங்கள் வளரும் தொழில் முனைவோர்களின் ஐடியாக்களில் முதலீடு செய்வோம்.
ஒரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களில் பல ஃபண்ட்கள் இருக்கும். ஒவ்வொரு ஃபண்டுக்கும் வரைமுறை இருக்கும். அதாவது டெக்னாலஜி சார்ந்த தொழில் ஐடியாக்களில்தான் இந்த ஃபண்டின் தொகை முதலீடு செய்யப்படும் என்று எதாவது ஒரு திட்டம் இருக்கும். பொதுவாக ஒரு ஃபண்டின் காலம் என்பது 8 வருடங்கள்.
ஒரு ஃபண்ட் ஆரம்பித்து பணத்தை திரட்டிய பின்பு, முதல் நான்கு வருடங்களில் தொழில்களில் முதலீடு செய்வதற்கும், அடுத்த நான்கு வருடங்களில் அந்த திட்டங்களில் இருந்து வெளியேறுவதற்கும் எடுத்துக்கொள்வோம்.
ஐடியாக்களை மட்டும் நம்பி முதலீடு செய்வது ரிஸ்க் ஆயிற்றே?
இது ரிஸ்க் என்பது எங்களது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் தெரியும். மேலும் பல கட்ட வடிகட்டலுக்குப் பிறகுதான் எங்களது முதலீட்டை ஆரம்பிப்போம். ஆரம்ப கட்டத்திலே எளிதாக வடிகட்டி விடுவோம். மேலும் நாங்கள் மொத்த முதலீட்டையும் ஒரே தொழிலில்/ஐடியாவில் முதலீடு செய்வது கிடையாது. நாங்கள் திரட்டும் முதலீட்டை சுமார் 15 தொழில்களில் முதலீடு செய்வோம். சில முதலீடுகளில் 10 மடங்கு லாபம் கிடைக்கும். சில முதலீடுகளில் 5 மடங்கு லாபம் கிடைக்கும். சில முதலீடுகளில் முதலீடு செய்த தொகை மட்டும்தான் கிடைக்கும். மிகச் சில முதலீடுகளில் நஷ்டம் கூட வரும். இது எல்லாம் சேர்ந்ததுதான் வென்ச்சர் கேப்பிடல்.
இதுபோல ரிஸ்க் எடுக்கும் போதுதான் அதிகமான வருமானம், லாபம் கிடைக்கும். மேலும், பல மடங்கு வளரக்கூடிய தொழில்களாக பார்த்துதான் நாங்கள் முதலீடு செய்வோம். ஆண்டுக்கு 20 சதவீத நிலையான வளர்ச்சி என்னும் பட்சத்தில் அங்கு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களுக்கு வேலை இல்லை.
தொழில்களில் முதலீடு செய்வதோடு உங்கள் வேலை முடிகிறதா?
இல்லை. நாங்கள் முதலீடு செய்த நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் எங்கள் சார்பாக சில இயக்குநர்களும் இருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் புதிய நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவது, ஒரு சிஸ்டத்தை (மார்க்கெட்டிங், அக்கவுண்ட்ஸ் உள்ளிட்ட) உருவாக்கித் தருவது போன்ற பல ஆலோசனைகளையும் நாங்கள் தருவோம்.
தொழில் முனைவோர்களின் நிறுவனங்களில் உங்கள் சார்பாக இயக்குநர்கள் இருப்பது அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு இடையூறாகவோ அல்லது தொல்லையாகவோ இருக்காதா?
இதை தொழில் முனைவோர்கள் எப்படி எடுத்துக்கொள்கிறார் என்பதைப் பொறுத்தது. நாங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவவும் வழிகாட்டுவதற்கும் மட்டுமே இருக்கிறோம். சில விஷயங்களில் தொழில் முனைவோர்கள் கேள்விப்பட்ட, கிடைத்த தகவலை வைத்துக்கொண்டு முடிவுகளை எடுப்பார்கள். தகவல்களின் அடிப்படையில், ஆராய்ச்சியின் அடிப்படையில்தான் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று இயக்குநர் குழு சொல்லும்.
சமயங்களில் முதலில் ஆரம்பித்த தொழில் சிறப்பாக வளர்வதற்கு முன்பாகவே, சம்பந்தமே இல்லாமல் இன்னொரு தொழிலில் முதலீடு செய்ய நினைப்பார்கள். இதுபோன்ற சமயங்களில் இது வேண்டாம் என்று சொல்லுவோம். இயக்குநர் குழு தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுவதற்காக மட்டுமே இருக்கிறது.
சமயங்களில் எங்களுடைய முதலீட்டை வெளியே எடுத்த பின்பும் தொழில் முனைவோர்களின் வற்புறுத்தல் காரணமாக இயக்குநர் குழுவில் நீடிப்பதும் நடக்கும்.
உங்களுடைய முதலீட்டை எப்படி வெளியே எடுப்பீர்கள்? அது குறித்து விரிவாக சொல்லுங்களேன்…
ஒரு முதலீட்டை நாங்கள் செய்யும் போதே எந்தெந்த வழிகளில் அந்த முதலீட்டை வெளியே எடுக்க முடியும் என்ற வாய்ப்புகளை பார்த்த பிறகுதான் அந்த ஐடியா/தொழிலில் முதலீடு செய்வோம். ஐ.பி.ஓ. மூலம் எங்களது பங்குகளை விற்றுவிட்டு வெளியே வரலாம். இது ஒரு வாய்ப்பு. இப்போதைக்கு ஐ.பி.ஓ.வை பற்றி சொல்லத் தேவையில்லை. அது ஒரு வாய்ப்பு, அவ்வளவுதான்.
இரண்டாவது அந்தத் துறையில் இருக்கும் பெரிய நிறுவனத்தில் புதிய நிறுவனத்தை இணைக்கலாம் (merger and acquisition). சமயங்களில் அந்தத் தொழிலுக்கு சம்பந்தமே இல்லாமல் புதிய நிறுவனம் கூட இந்த பிஸினஸ் நன்றாக இருக்கிறது, என்று வாங்கிய சம்பவங்கள் கூட இருக்கிறது. மூன்றாவது strategic investors. அதாவது தனிநபரோ அல்லது நிறுவனங்களோ நாங்கள் முதலீடு செய்திருக்கும் நிறுவனத்தில் எங்களது பங்குகளை மட்டும் வாங்கிக்கொள்ளலாம்.
நாங்கள் முதலீட்டை வெளியே எடுக்கும் காலத்தில் இருப்போம். அதே சமயத்தில் இன்னொரு வென்ச்சர் கேப்பிடல் நிறுவனம் முதலீட்டு காலத்தில் இருப்பார்கள், அவர்கள் எங்களது பங்குகளை வாங்கிக்கொள்வார்கள்.
உங்கள் முதலீடுகள் தோல்வி அடைந்திருக்கின்றனவா?
ஏற்கெனவே சொன்னதுபோல சில முதலீடுகளை write off செய்ய வேண்டிய சூழ்நிலை கூட வரும். இருந்தாலும் இறுதிகட்ட வழிதான். வேறு நிறுவனத்துடன் இணைக்கப் பார்ப்பது உள்ளிட்ட பல வகையான முயற்சிகளையும் செய்த பிறகுதான் write off செய்யும் முடிவை எடுப்போம்.
முதலீடு செய்யும் போதே எதாவது பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்களா?
வங்கிகளில் பிணையம் கேட்கிறார்கள் என்றுதான் இங்கு வருகிறார்கள். நாங்கள் ஐடியாவை பொறுத்துதான் முதலீடு செய்கிறோம். ஆனால் முதலீடு செய்யும்போது சில விதிமுறைகள் இருக்கிறது. உதாரணத்துக்கு எங்கள் அனுமதி இல்லாமல், அவர்களின் பங்குகளை மட்டும் தனியாக விற்க முடியாது.
முக்கியமான அதிகாரிகளுக்கு / புரமோட்டர் களுக்கு போர்டு அனுமதி இல்லாமல் சம்பளத்தை உயர்த்திக்கொள்ள முடியாது. சமயங்களில் மொத்தமாக நிறுவனத்தையே கையகப்படுத்த மற்ற நிறுவனங்கள் நினைப்பார்கள். அப்போது புரமோட்டர்கள் பங்குகளை விற்க முடியாது என்று சொல்ல முடியாது என சில விதிமுறைகள் இருந்தாலும் இதையும் தாண்டி சில முயற்சிகள் தோல்வி அடையும்.
சிறுமுதலீட்டாளர் உங்களைப் போன்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாதா?
இப்போது சில நிறுவனங்கள் சிறு முதலீட்டாளர்களிடம் திரட்டி வருகிறார்கள். ஆனால் அந்தத் தொகை 1 கோடி ரூபாய்க்கும் மேல். மேலும், இந்த ஃபண்டில் முதலீட்டாளர்கள் நினைத்தவுடன் வெளியேற முடியாது. இது closed end fund. முதலீட்டு காலமும் அதிகம்.
எந்த மாதிரியான தொழில் முனைவோர்களின் ஐடியாக்களில் நீங்கள் முதலீடு செய்திருக்கிறீர்கள்?
முதலில் அவர் என்ன படித்திருக்கிறார் என்று பார்ப்போம். அதன் பிறகு அவர் என்ன மாதிரியான நபர் என்று விசாரிப்போம். இப்போது சில வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் தனியார் ஏஜென்சியிடம் கொடுத்து அவரது பின்னணியைப் பற்றி விசாரிக்கிறார்கள். சிலர் சைக்கோமெட்ரிக் தேர்வுகள் மூலம் வருபவரை ஆராய்ந்து முடிவுகளை எடுக்கிறார்கள். இறுதியாக அவரது ஐடியா முக்கியம். அதுதான் எல்லாம்.
மேலும் ஏற்கெனவே சொன்னது போல பல மடங்கு வளர வாய்ப்பு இருக்கும் தொழில்களில்தான் முதலீடு செய்வோம்.
இறுதியாக அவர் ஆரம்பித்த தொழிலை, வளர்ந்த பிறகு விற்கத் தயாராக இருக்கிறாரா என்பது முக்கியம். இது என்னுடைய பிஸினஸ், விற்க முடியாது என்ற சென்டிமெண்ட் இருக்கும் பட்சத்தில் நாங்கள் எப்படி வெளியேற முடியும்.
இறுதியாக பார்த்தால் எங்களுக்கு வரும் விண்ணப்பங்களில் 5 சதவீதம் வரைதான் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அப்படியானால் படிக்கவில்லை என்றால் நீங்கள் முதலீடு செய்ய மாட்டீர்களா?
அப்படி இல்லை. இதற்கு நேரடியாக அர்த்தம் எடுத்துக்கொள்ள கூடாது. நன்றாக படித்திருக்கும் பட்சத்தில் டெக்னாலஜி உள்ளிட்ட விஷயங்கள் தெரியும். பிஸினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.
ஏற்கெனவே சொன்னது போல ஐடியாதான் முக்கியம். பார்க்கிங் என்பது இதுவரை முறைப்படுத்தப்படாத தொழிலாக இருந்தது. இதை ஒரு சிஸ்டத்துக்குள் கொண்டுவந்து, திட்டத்தை வடிவமைத்து ஒருவர் கொண்டுவந்தார். அவர் பெரிதாக படிக்கவில்லை. இருந்தாலும் அந்த ஐடியா நன்றாக இருந்தது. அதில் முதலீடு செய்தோம்.
வென்ச்சர் கேப்பிடல் துறை எப்படி இருக்கிறது?
வென்ச்சர் கேப்பிடல் முதலீடுகள் கணிசமாக வெளிநாடுகளில் இருந்துதான் வருகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான அன்னிய நேரடி முதலீடு வரம்பு இருக்கிறது. இரண்டாவது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு. முதலீட்டை வாங்கும் போது ஒரு விலை, கொடுக்கும் போது ஒரு விலை. மேலும், இது நீண்ட கால ஃபண்ட் என்பதால் ஹெட்ஜிங் கூட செய்ய முடியாது.
மூன்றாவது, வரிவிதிப்பு முறைகளில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை. எதாவது ஒரு விதியை சரியாக கடைபிடிக்க வேண்டும். முன் தேதியிட்டு வரி வசூலிப்பது, ஜி.ஏ.ஏ.ஆர். (general anti avoidance rule) போன்றவை வென்ச்சர் கேப்பிடல் துறைக்கு சவால்தான்.
நன்றி ‘தி இந்து’.
Recent Comments