நிறுவனம் வளரும்போது நாமும் வளர்வோம்- காக்னிசென்ட் நிறுவன நிர்வாக துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகரன் சிறப்புப் பேட்டி
காக்னிசென்ட் நிர்வாக துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகரன்
சில வருடங்களுக்கு முன்பு ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி அபரி மிதமாக இருந்தது. ஆனால் இப்போது இரட்டை இலக்க வளர்ச்சியை அடைவதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் கடந்த சில காலாண்டுகளாகவே காக்னி சென்ட் நிறுவனம் 20 சதவீத அளவுக்கு வளர்ச்சியைச் சாதித்துள்ளது. கடந்த 2010 டிசம்பர் மாதம் இந்த நிறுவனத்தில் 1 லட்சம் பணியாளர்கள் இருந்தார்கள். தற்போதைய நிலைமையில் 1.71 லட்சம் பணியாளர்கள் இருக்கிறார்கள். மற்ற நிறுவனங்கள் தடுமாறும் போது இந்த நிறுவனம் பணியாளர்களுக்கு கணிச மாக போனஸ் வழங்கி இருக்கிறது. இந்தியாவின் முக்கியமான ஐ.டி. நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத்தில் 20 வருடங்களாக பணிபுரிந்து வரும் அந்த நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஆர்.சந்திரசேகரனை சென்னையில் இருக்கும் அவரது அலுவலகத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவருடைய வாழ்க்கை, காக்னி சென்ட் மற்றும் ஐ.டி. துறை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நிறைய பேசி னோம். அந்த பேட்டியிலிருந்து…
உங்களுடைய ஆரம்பகால வாழ்க்கை குறித்து முதலில் பேசலாமே?
நான் சீர்காழியில் பிறந்தவன். அங்கே படித்தேன். எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும் தமிழ் வழி கல்விதான் படித்தேன். அதன் பிறகு லயோலா கல்லூரியில் பிரி யுனிவர்சிட்டி படித்தேன். அதன்பிறகு ஆர்.இ.சி. திருச்சியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து, அசோக் லேலாண்டில் நான்கு வருடம் வேலை செய்தேன். அதன் பிறகு மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்த தால் ஐ.ஐ.எம். பெங்களூருவில் நிர்வாகப்படிப்பு படித்தேன். படித்து முடித்தவுடன் டி.சி.எஸ். நிறுவனத்தில் 9 வருடங்களுக்கு மேலாக வேலை செய்தேன். அங்குதான் எனக்கு நிறைய கற்றுக்கொள்ளவும், வெளிநாடுகளுக்கும் செல்ல வாய்ப்பும் கிடைத்தது. 94-ம் ஆண்டு காக்னிசென்ட் நிறுவனத்தில் சேர்ந்தேன். கிட்டத்தட்ட 20 வருடங்கள்.
நான்கு வருடங்கள் வேலை செய்த பிறகு மீண்டும் படிப்பதற்கு உங்களுடைய குடும்ப சூழ்நிலை அனுமதித்தா?
எங்களுடையது பெரிய குடும்பம். மேலும், பெரிய பொறுப்புகள் இல்லை. அடுத்தடுத்து படிக்கும் போது, இன்னும் மேலே செல்லலாம். படிக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அதைவிட ஐ.ஐ.எம்-ல் படிக்க அனுமதியும் கிடைத் தது. அதனால் படித்தேன். அங்கு படித்த இரண்டு வருடங்களில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்தது. அங்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மட்டுமின்றி உடன் படிக்கும் மாணவர்கள் பல துறைகளிலிருந்து வந்திருப்பார்கள்.
இதுமட்டுமல்லாமல் நான் நான்கு வருடம் வேலை செய்த பிறகு படித்ததால், நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அதனால் எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் சில காலம் வேலை செய்த பிறகு எம்.பி.ஏ. படிப்பது நல்லது.
ஐ.ஐ.எம். அனுபவங்கள், சுவையான அனுபவங்கள் எதாவது சொல்ல முடியுமா?
(சிரித்துக்கொண்டே) 30 வருடங்கள் முடிந்து விட்டது. கேட்டவுடன் எனக்கு நினைவில்லை.
மீண்டும் காக்னிசென்ட்க்கு வருவோம். இப்போது காக்னிசென்ட் பெரிய நிறுவனம். ஆனால் 20 வருடங்களுக்கு முன்பு காக்னிசென்ட் சிறிய நிறுவனம். டி.சி.எஸ். போன்ற பெரிய நிறுவனத்திலிருந்து எதற்காக வரவேண்டும் என்று நினைத்தீர்கள்?
புதிய நிறுவனத்தில் வாய்ப்புகள் அதிகம். நிறுவனம் வளரும் போது நாமும் வேகமாக வளர்வோம். அந்த நம்பிக்கையில்தான் இந்த நிறுவனத்தில் இணைந்தேன். அதேபோல நடந்தது.
இதுபோல வளர்வோம் என்று நினைத்தீர்களா?
அப்போது நிறைய நிறுவனங்கள் வர ஆரம்பித்தது. வளர ஆரம்பித்தது. ஆனாலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் கொஞ்சம் ரிஸ்க் எடுத்துதான் ஆகவேண்டும். ரொம்பவும் ‘கம்பர்ட்’ எதிர்பார்த்தால் எதுவுமே முடியாது. இது ரிஸ்க்கான முடிவாக இருந்தாலும், வாய்ப்புகள் இருக்கிற பட்சத்தில் அந்த ரிஸ்க் எடுத்தேன்.
என் கூட இருக்கும் நிறைய பேர் எனக்கு ஆலோசனை சொன்னார்கள். இருந்தாலும் முடிவு நாம்தான் எடுக்க வேண்டும்.
ஐ.டி. துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்தியாவின் பங்கு மிக சிறியதாக இருக்கிறதே. இதைப் பற்றி?
இது நல்லதுதான். இந்தியாவின் பங்கு சிறியதாக இருக்கும் பட்சத்தில் நாம் வளர்வதற்காக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இந்தியாவின் வளர்ச்சியில் ஐ.டி.யின் பங்கு முக்கியமானது. இந்தியாவில் இருக்கும் அனைத்து துறைகளையும் ஒப்பிடும்போது ஐ.டி துறைதான் நல்ல வளர்ச்சி அடைந்துவருகிறது. அடுத்தவருடம் கூட 13-15 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய ஜிடிபியில் 8.1 சதவீதம் ஐ.டி.துறையின் பங்கு இருக்கிறது. பேலன்ஸ் ஆஃப் பேமெண்டை குறைப்பதில் ஐ.டி.யின் பங்கு முக்கியமானது. இந்த துறையில் 35-40 சதவீதமான பெண்கள் வேலை செய்கிறார்கள். இது வேறு எந்த துறைகளைவிடவும் அதிகம்.
சீனா எப்படி உற்பத்திதுறையில் முக்கியமான நாடாக இருக்கிறதோ, அப்படி இந்தியா ஐ.டி. சேவை நாடாக அறியப்படுகிறது. இப்போது SMAC (social, mobile, analytics, cloud) என்ற புதிய பிரிவு வளர்ந்து வருகிறது. இந்த பிரிவுகளில் நிறைய வாய்ப்புகள் உருவாகிவருகிறது. இதை செய்வதற்கு வெளிநாடுகளில் எக்ஸ்பர்ட்கள் கிடையாது. இதில் மட்டும் 10 பில்லியன் டாலர்களுக்கு மேலே வருமான வாய்ப்பு இருக்கிறது.
இப்போது ஐ.டி. துறையில் டாப் மேனேஜ்மெண்டில் நிறைய மாற்றங்கள் நடந்து வருகிறது. சில நிறுவனங்கள் மொத்தமாக பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறார்கள். மேலும் ஐ.டி. துறையில் வெளியேறும் விகிதமும் அதிகரித்து வருகிறதே?
இது சம்பந்தபட்ட நிறுவனங்களை பொறுத்தது. ஐ.டி.யில் வாய்ப்புகள் இருக்கிறது என்றும் எடுத்துக்கொள்ளலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 1.6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது. இந்த வருடத்தில் இதைவிட அதிகம், அதாவது வரும் நிதி ஆண்டில் (2014-15) 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் ஐ.டி. துறைக்கு எதிராக ஒரு மசோதா தாக்கல் செய்யப்போவதாக தெரிகிறதே. என்ன நடக்கிறது என்று அனைவருக்கும் புரியும்படி சொல்லுங்களேன்?
அமெரிக்காவில் வேலை செய்வதற்கு வொர்க் பர்மிட் தேவை. ஆனால் சில நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக அங்கு பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். மேலும், வெளி நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்வதால் அங்கு இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கருத்தும் அங்கு நிலவுகிறது. இதனால் comprehensive immigration reform bill கொண்டுவரப்போகிறார்கள்.
இங்கிருப்பதுபோலவே அங்கு செனட், காங்கிரஸ் என்று இரண்டு அவைகள் இருக்கிறது. செனட் கொண்டுவரப்பட்ட மசோதாவின் படி பார்த்தால் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் கொஞ்சம் பாதிக்கப் படும். அந்த மசோதாவில் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு நிறைய தடைகள் இருக்கிறது. ஆனால் காங்கிரஸில் இருக்கும் மசோதா அப்படி ஒன்றும் மோசமாக இல்லை. இதில் எந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தெரியவில்லை. எப்போது செய்யப்படும் என்றும் தெரியவில்லை. நாஸ்காம் உள்ளிட்ட அமைப்புகள் சேர்ந்து அரசாங்கத்திடம் கேட்டு வருகிறோம். பாதிப்பு இருக்காது என்ற நம்பிக்கை இருகிறது.
மோசமாக நடக்கும் பட்சத்தில் என்ன நடக்கும்.?
எங்களுடைய பிஸினஸ் மாடலை மாற்றி அமைக்கவேண்டி இருக்கும். இங்கிருந்து ஆட்களை எடுப்பதற்கு பதில் அங்கே ஆட்களை எடுக்க வேண்டி இருக்கும்.
அப்படியே எடுப்பதாக இருந்தாலும் அங்கு ஆட்கள் இல்லை. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான் என்ன நடக்கும் என்று தெரியும். இருந்தாலும் மோசமாக எதுவும் நடக்காது என்று நம்புகிறோம்.
நாஸ்காமிற்கு போட்டியாக ஒரு ஐ.டி. அமைப்பு உருவாக்கப்பட்டதே?
இப்போது நாங்களே சிறிய கம்பெனிகளின் product forum என்று உருவாக்கி இருக்கிறோம். மேலும் 10,000 ஸ்டார் அப் என்று புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். முதல் 5 மாதங்களுக்கு 4,000 விண்ணப்பங்கள் வந்தன. 1,000 நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவர்களுக்கு incubation centre உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது நாஸ்காமிலேயே சிறிய நிறுவனங்களின் பிரச்சினைகளைக் கையாளுகிறோம்.
நாஸ்காம் 10,000 ஸ்டார்ட் அப் இலக்கு என்ன?
அடுத்த மூன்று நான்காண்டுகளில் 10,000 தொழில்முனை வோர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் திட்டம். அந்த இலக்கு நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்.
மைக்ரோசாஃப்ட், கூகுள் உள்ளிட்ட டெக்னாலஜி நிறுவனங்கள், நிறுவனங்களுக்கு (business to business) மட்டுமல்லாமல், நேரடியாக வாடிக்கையாளர்களுக்கும்(business to consumer) சேவை கொடுக்கிறார்கள். ஆனால் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அப்படி இல்லையே?
இந்திய ஐ.டி. நிறுவனங்கள் சேவையை வழங்கும் நிறுவனங்கள். ஆனாலும், இப்போது நிறைய நிறுவனங்கள் வந்துக்கொண்டுதான் இருக்கி றார்கள். அமேசான் மாதிரி நிறைய இந்திய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவையை வழங்குகிறார்கள்.
சி.இ.ஓ.களின் சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வைக்க வேண்டும் என்பது போல சமீபத்தில் சில பேச்சுகள் எழுந்ததே?
சம்பளத்தை கட்டுப்படுத்தும் போது சரியான நபர்கள் கிடைக்காமல் போவார்கள். இதை ஒழுங்குபடுத்து வதைவிட கம்பெனியிடம் விட்டு விடுவதே நல்லது. ஆனால் செயல் பாடுகளின் அடிப்படையில் சம்பளம் கொடுக்கலாம் என்பது போல மாற்றலாம். இவ்வளவுதான் சம்பளம் என்றால் எப்படி தகுதியான நபர்கள் கிடைப்பார்கள்?
அமெரிக்கா ஐரோப்பா தவிர உலகின் மற்ற பகுதிகளில் உங்களின் பங்கு 3 சதவீதம்தான். அந்த நாடுகளில் வாய்ப்புகள் இருக்கிறதே?
கடந்த சில வருடங்களாக அந்த பிரிவில் கவனம் செலுத்தி வேகமாக வளர்ந்து வருகிறோம். இன்னும் சில வருடங்களில் இந்த வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
நன்றி ‘தி இந்து’.
Recent Comments