இணையதள சேவையின் வளர்ச்சி ஆண்டுக்கு 40 சதவீதம் அதிகரிக்கும்: சங்கர நாராயணன் நேர்காணல்

சங்கர நாராயணன், வர்த்தக வியூக பிரிவு – ஏர்செல்.

டெக்னாலஜி மாறிக்கொண்டே வருவது, வாடிக்கையாளர்களின் தேவை அதிகரிப்பது, போட்டி என பல சவால்களை சந்தித்துக்கொண்டிருப்பது டெலிகாம் துறை. இந்த நிலைமையில் தமிழகத்தை சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் வர்த்தக வியூக பிரிவின் தலைவர் சங்கர நாராயணனை சந்தித்தோம். பல விஷயங்கள் குறித்து பேசினார். அந்த நீண்ட விரிவான பேட்டியின் சுருக்கமான வடிவம் இதோ..

உங்களின் ஆரம்பகாலம் குறித்து?

சென்னை குருநானக் கல்லூரியில் பி.காம் படித்தேன். வேலைக்கு முயற்சி செய்தேன். கிடைக்கவில்லை, அதனால் சிஏ படித்தேன். வேலை கிடைத்திருந்தால் சிஏ படித்திருப்பேனா என்று தெரியாது. ரான்பாக்ஸி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ரான்பாக்ஸிக்காக நைஜீரீயா சென்றேன். அதன் பிறகு ஆப்பிரிக்க நாடுகளில் சில இடங்களில் நிறுவனத்தின் செயல்பாடுகளை உருவாக்குவதற்காக சென்றேன். இதே போல சீனாவுக்கும் சென்றேன். அதன் பிறகு ஹட்ச் நிறுவனத்தில் கேரளா சி.இ.ஓ. உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இருந்தேன். அதன் பிறகு ஏர்செல் வந்தேன்.

இவ்வளவு வேலைகளுக்கு இடையே எப்படி மான்செஸ்டர் பிஸினஸ் ஸ்கூலில் நிர்வாக படிப்பு படித்தீர்கள்?

நிறைய பேர் எம்.பி.ஏ பற்றி சொல்கிறார்கள். அதனால் 2001ம் ஆண்டு எம்.பி.ஏ சேர்ந்தேன். ஆறு மாதத்துக்கு ஒரு முறை வகுப்புக்கு சென்றால் போதும். வருடத்தில் கிடைக்கும் 30 நாள் விடுமுறையை அங்குதான் கழிப்பேன்.

நான் படிக்க போகும்போது எனக்கு 40 வயது. நான்தான் வயதானவன் என்று நினைத்தேன். ஆனால் என்னைவிட வயதானவர்கள் பலர் படித்தார்கள். 62 வயது நபர் கூட என்னுடன் சேர்ந்து படித்தார். நாம் படிப்பை அணுகும் விதமும் அவர்கள் அணுகும் விதமும் வேறு. என்னைக் கேட்டால் மாணவர்கள் சில வருடங்கள் வேலை செய்த பிறகு எம்பிஏ படிப்பது நல்லது. நிறைய அனுபவம் கிடைக்கும். ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதும் நம்மை அப்டேட் செய்துகொள்ளவும் முடியும்.

பல நாடுகளில் பல கலாச்சாரத்தில் வேலை செய்திருக்கிறீர்கள்? வியாபாரத்துக்கு கலாச்சாரம் எப்படி தடையாக இருந்தது அல்லது உதவியாக இருந்தது?

நாம் சில விஷயங்களை பின்பற்றுவோம். ஆனால் நமக்கு பிடிக்காத விஷயங்கள் அங்கு நடக்கும். அதற்காக அவர்களையோ அவர்களது கலாச்சாரத்தையோ நீங்கள் மதிக்காமல் இருந்தால் உங்களுக்கு பிஸினஸ் கிடைக்காது. இறுதியாக பிஸினஸ் நண்பர்களுக்கு இடையேதான் நடக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

இப்போது பெரும்பாலான இந்தியர்களிடம் செல்போன் இருக்கிறது. இதற்கு மேலும் சிம்கார்டுகள் விற்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

முதலில் அனைவரிடம் செல்போன் இருப்பதாலே விற்க முடியாது என்று நினைப்பது தவறு. கடிகாரத்தை எடுத்துக்கொள்வோம். ஆரம்பத்தில் சூரியனை வைத்து மணி பார்த்தோம், ஊரில் ஒரு சங்கு இருக்கும். அதன் பிறகு பள்ளி, தொழிற்சாலை, கோயில் உள்ளிட்ட இடங்களில் கடிகாரம் வந்தது. அப்புறம் வீடுகளில், குடும்பத்தலைவர் மட்டும், அப்புறம் வீடுகளில் இருக்கும் அனைவருக்கும். இப்போது நேரத்துக்கு, விழாவுக்கு ஏற்ப வாட்ச் கட்டுகிறோம். செல்போனும் இப்படித்தான். என்னிடமே ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் இருக்கிறது.

அதைவிட 20 வயதுக்கு கீழே இருப்பவர்களில் 4-ல் ஒருவருக்குத்தான் செல்போன் இருக்கிறது. 20 வயதுக்கு கீழே 20 கோடிக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் வளரும்போது செல்போன் தேவை அதிகரிக்கும்.

வாட்ஸ் ஆப், பேஸ்புக், வைபர் உள்ளிட்ட டெக்னாலஜியால் உங்களது வருமானம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது?

வருமானம் பாதிக்கப்படவில்லை. ஆனால் (வாய்ஸ்) 8-9 சதவீத அளவில்தான் வளர்ச்சி இருக்கிறது. இருப்பினும் புதிதாக இண்டர்நெட் சேவை மூலமான வருமானம் ஆண்டுக்கு 40% வளர்ச்சி இருக்கிறது. மொத்த வருமானத்தில் இது 8-9 சதவீதம்தான் இருக்கிறது.

இன்னும் சில ஆண்டுகளில் வாய்ஸ் மூலம் கிடைக்கும் வருமானம் 50 சதவீதமும் டேட்டா வருமானம் 50 சதவீதமும் வளர்வதால் மொத்த வருமானத்தில் வளர்ச்சி இருந்துகொண்டுதான் இருக்கும்.

டாடா டொகோமோ ஒரு வினாடிக்கு ஒரு பைசா கொடுத்தபோது இந்த துறையின் ரியாக்‌ஷன் என்னவாக இருந்தது?

புதிதாக ஒரு நிறுவனம் சந்தையில் நுழையும்போது இதுபோன்ற அதிரடி யுக்திகளை கையாளுவது வழக்கம். மேலும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பலம் இருக்கும் அதை மேலும் பலமாக்க யோசித்தார்கள். இப்போது அவர்களே பிரச்சினையில் இருக்கிறார்கள். பிஸினஸில் போட்டி என்பது சாதாரணம்தான். ஆனால் போட்டியை ஒழிக்க வாங்கிய விலையை விட குறைத்து விற்க ஆரம்பித்தால் தொழிலில் நீண்ட நாளைக்கு நிற்க முடியாது. வளர்ச்சி என்பதை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

டெலிகாம் துறையில் ஏகப்பட்ட டேட்டாக்கள் இருக்கும். இந்த டேட்டாக்களை எப்படி பிஸினஸாக மாற்றுகிறீர்கள்?

டேட்டாக்களை வைத்து பல விஷயங்களை செய்ய முடியும். உதாரணத்துக்கு சிலருக்கு வெளிநாடுகளில் இருந்து மட்டும் கால்கள் வந்துகொண்டிருக்கும். சமீபத்தில் இதை கண்டறிந்து அவர்களுக்காக ஒரு திட்டம் உருவாக்கி, அவர்களுக்கு மட்டும் இந்த திட்டத்தை அனுப்பினோம். இப்போது இங்கிருப்பவர்களும் குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு போன் செய்யலாம். டேட்டாவை எப்படி பயன்படுத்தினோம் என்பதற்கு இது ஒரு உதாரணம். இதுபோல பல வகை டேட்டாக்களை பயன்படுத்த முடியும்.

டெலிகாம் துறை கன்சாலிடேட் ஆகப்போகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறதே? ஏர்செல் திட்டம் என்ன?

டெலிகாம் துறையில் கன்சாலிடேட் என்பது தவிர்க்க முடியாது. சிறிய நிறுவனங்கள் பிஸினஸ் செய்வது கஷ்டம். ஆனால் ஏர்செல் முடிவு இயக்குநர் குழு எடுக்கும் முடிவு. அதைப்பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

மொபைல் நம்பர் போர்டெபிலிட்டி இந்த துறையில் என்ன மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது?

ஏர்செல்லில் இருந்து இரண்டு பேர் வெளியேறினால், 2 பேர் உள்ளே வருகிறார்கள். இதில் பெரிய மாற்றம் இல்லை. இருந்தாலும் மக்கள் குறிப்பிட்ட எண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல தெரியவில்லை. இப்போது மெயில், பேஸ்புக் உள்ளிட்ட பல விஷயங்கள் வந்துவிட்டாதால் எளிதாக வேறு எண்ணுக்கு மாறிக்கொள்கிறார்கள்.

விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் பிரபலத்தின் அவ்வப்போதைய வெற்றி தோல்வி விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்துமா?

அப்படி நடக்காது. ஆனால் அந்த பிராண்டுக்கும் பிரபலத்துக்கும், நெருக்கம் இருக்க வேண்டும்.

செல்போன் கோபுரங்களால்தான் குருவிகள் அழிந்துவிட்டதாக பேசப்படுகிறதே?

ஆதாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை. செல்போன் மட்டுமல்லாமல் நீண்டகாலமாக தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவையும் வெவ்வேறு அலைவரிசைகளில் செயல்பட்டுதானே வருகிறது.

நன்றி ‘தி இந்து