பல வகையான மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு அதிகாரிகளை நாம் சந்தித்திருப்போம். ஆனால் ஐ.டி. துறையில் இருக்கும் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவின் உயரதிகாரிகளை சாதாரண மக்கள் சந்தித்திருக்க முடியாது. அவர்களின் அனுபவம் எப்படி இருக்கிறது, ஐ.டி. துறையின் தற்போதைய மற்றும் எதிர்கால வாய்ப்புகளைப் பற்றி ஐ.டி துறையில் 21 ஆண்டுகளாக பணியாற்றி வரும்

Virtusa நிறுவனத்தின் துணைத்தலைவர் பிரகாஷ் அருணாச்சலத்தை சந்தித்து பேசினோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து…

ஐ.டி. துறையின் தற்போதைய நிலை குறித்து பேசுவதற்கு முன்பு, உங்களின் ஆரம்ப கால பயணங்கள் குறித்து சொல்லலாமே?

காஞ்சிபுரம்தான் என்னுடைய சொந்த ஊர். பள்ளிப்படிப்பு முடித்த பிறகு பிர்லா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸில் (பிட்ஸ்) படித்தேன். சி.ஆர்.ஐ. இந்தியா நிறுவனத்தில் ஐந்து வருடம் வேலை செய்தேன். அதன் பிறகு இ.டி.எஸ். நிறுவனத்துக்கு சென்றேன். அங்கு எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இங்கிலாந்தில் ஐந்து வருடம் வேலை பார்த்தேன். அங்கு மில்லியன் டாலர்கள் பிஸினஸ் டீல்களை முடித்திருக்கிறேன். அதன்பிறகு இ.டி.எஸ். நிறுவனத்துக்காக, சீனாவில் ஒரு நிறுவனத்தை ஆரம்ப நிலையில் இருந்து உருவாக்கினேன்.

சீனாவில் நிறுவனத்தை அமைக்கும் பணி பிரச்சினையாக இருந்திருக்குமே?

பிரச்சினையாக இல்லை, சவாலாக இருந்தது என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். இருந்தாலும் ஆரம்ப நிலையில் இருந்து நிறுவனத்தை உருவாக்கியதால் சவாலை எதிர்கொள்ளும் நம்பிக்கை கிடைத்தது.

சீனாவில் முக்கிய பிரச்சினையே அவர்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாததுதானே? எப்படி சமாளித்தீர்கள்?

அவர்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாதுதான். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர்கள் நன்றாக ஆங்கிலம் கற்றுக்கொண்டு வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக அங்கிருக்கும் பள்ளிகளில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆங்கிலம் பேசும் விதம் (accent) சில சமயங்களில் மற்றவர்களுக்கு புரியாது. இருப்பினும் அவர்கள் வேகமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்லூரிகள் ஏதும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. என்றாலும் ஒரளவுக்கு சர்வதேச அளவில் போட்டி போட தயார்படுத்தப்படுகிறார்கள்.

மற்ற நாட்டினரும் இந்தியர்களுடன் போட்டி போடுகிறார்களே?

ஆனாலும், இந்தியாவில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்த்தால், அது ஒரு விஷயமே இல்லை.

இப்போது நீங்கள் துணைத்தலைவர் என்றாலும், சில வருடங்களுக்கு முன்பு ஐ.டி. துறையில் விற்பனைப் பிரிவில் இருந்தீர்கள்? அந்த அனுபவம் பற்றி?

முதலில் எங்கள் நிறுவனத்தின் பலம் என்ன என்று பார்ப்போம். பிறகு எங்களுடைய சேவை யாருக்கு தேவைப்படுகிறது என்பதைப் பொருத்து, அவர்களை சந்தித்து பேசுவோம். சமயங்களில் நேரடியாக உயர் அதிகாரிகளை சந்திக்க முடியாது. அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அதிகாரிகளை சந்தித்து பேசுவோம். அவர்கள் கூட சரியான ஆள்தானா என்று பார்த்த பிறகுதான் பேச வேண்டி இருக்கும்.

பல மணி நேரம் ஸ்டார் ஹோட்டல்களில் பேசிவிட்டு, அந்த மீட்டிங்குக்கான பலனே இல்லாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. மேலும், விஷயங்களில் நாம் என்னதான் தெளிவாக இருந்தாலும் அதுமட்டும் போதாது. நேரடியாக விஷயத்தை ஆரம்பிக்க முடியாது.

நாம் சந்திக்கப்போகும் அந்த நிறுவனத்தின் உயரதிகாரிக்கு என்ன விஷயம் பிடிக்கும், எது பிடிக்காது என்கிற வரை தெரிந்துகொண்டு போக வேண்டி இருக்கும். எனக்கு கிரிக்கெட் தெரியும் என்பதற்காக கிரிக்கெட் பற்றி பேசுவது பிரயோஜனம் இல்லை. அவருக்கு ஃபுட்பால் பிடித்திருந்தால் அதைப் பற்றியும் நான் தெரிந்திருக்க வேண்டும்.

நீங்கள் பெரிய நிறுவனங்களுடன், பெரிய பிராண்ட்களுடன் போட்டி போட வேண்டி இருக்குமே? விலைகளில் சமரசம் செய்ய வேண்டி இருக்குமே?

கட்டணங்களைக் குறைப்பது, கூட்டுவது என்பது பிஸினஸில் ஒரு பகுதிதான். மேலும் பெரிய பிராண்ட்களுடன் போட்டி போடுகிறோம் என்றாலும், ஒரு கட்டத்துக்கு மேல் பிராண்ட்களுக்கு வேலை இல்லை. பிராண்ட்கள் வாசல் வரைக்கும்தான் தேவைப்படும். அதன்பிறகு நாம் கொடுக்கும் சேவைகள், மதிப்புக் கூட்டு சேவைகள் மட்டும்தான் ஆர்டர்களைப் பிடிக்க உதவும்.

முக்கியமாக, நாம் அளிக்க விருக்கும் சேவை, நம்முடைய வாடிக்கையாளர்களின் வாடிக்கையாளர்களுக்கானது என்பதை தெளிவாகப் புரிந்துக்கொண்டாலே வெற்றி சுலபமாகும்.

இந்திய ஐ.டி. துறை வேகமாக வளர்ந்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் உலகின் ஓட்டுமொத்த ஐடி துறையில் இந்தியாவின் பங்களிப்பு 5% என்ற அளவில்தானே உள்ளது? மேலும் நாம் சேவைப் பிரிவில்தானே கவனம் செலுத்தி வருகிறோம். இது பற்றி?

உண்மைதான். இதற்குக் காரணம் நாம் இதுவரை ஆராய்ச்சிப் பிரிவில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இப்போது பல நிறுவனங்கள் ஆராய்ச்சிப் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதனால், வரும் காலங்களில் உலக அளவில் இந்திய ஐ.டி. துறையின் மதிப்பு இப்போது இருப்பதை விட இன்னொரு மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

ஐ.டி. என்றாலே வங்கி மற்றும் அது சார்ந்த நிதி சேவைகள் பிரிவில்தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள் இல்லையா?

நாட்டின் பொருளாதாரம் மற்றும் அனைத்து நிறுவனங்களுக்கும் வங்கிகள்தானே ஆதாரம். ஆனால் இப்போது நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஹெல்த்கேர் உள்ளிட்ட பிரிவுகளில் இப்போது வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் இப்போதைய இளைஞர்களுக்கான சேவை அளிக்கும் டெக்னாலஜி பிரிவுகள் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக SMAC (Social, Mobility Analytics and Cloud) பிரிவுகள் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

ஐ.டி.துறையில் தொழில் முனைவு எப்படி இருக்கிறது?

சமீப காலங்களில் நிறைய தொழில்முனைவோர்கள் வந்திருக்கிறார்கள். மேலும், வேலை செய்வதே தொழில் முனைவு அனுபவத்தைத்தான் கொடுக்கிறது. உதாரணத்துக்கு என்னை எடுத்துக்கொண்டால், இந்த நிறுவனத்தில் நான் துணைத்தலைவராக இருந்தால் கூட, என்னை சென்னை பிரிவின் சி.இ.ஒ. என்பது போல பொறுப்புகளை எனக்கு நிறுவனம் கொடுத்திருக்கிறது. இந்த வேலை கலாச்சாரம் என்னை உற்சாகப்படுத்துகிறது. இத்தகைய அங்கிகாரம் இத்துறையில் மேலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்கும்.

நன்றி ‘தி இந்து’