கார் வாங்கும் எண்ணம் குறைந்து வருகிறது:
ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு இயக்குநர் ஆனந்த் சுப்ரமணியன் சிறப்பு பேட்டி

தொழில்நுட்பம் மூலம் வாடகைக் கார் சந்தையை பல நிறுவனங்கள் எளிதாக்கி உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு தேவையுள்ள வசதியான கார்களை அளிப்பது, புதிது புதிதான சேவைகளை அடிக்கடி அறிமுகப்படுத்துவது, அதிரடி கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளிப்பது என நிறுவனங்களின் தொழில் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வாடகைக் கார் பிரிவில் பெரும்பான்மையான சந்தையை வைத்திருக்கும் ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் மார்கெட்டிங் பிரிவு இயக்குநர் ஆனந்த் சுப்ரமணியன் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். அவருடன் நடத்திய விரிவான உரையாடலிருந்து…

முன்னணி வங்கியில் பார்த்த வேலையை விட்டு, தனியாக ஒரு நிறுவனம் ஆரம்பித்தீர்கள். அதன் பிறகு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தீர்கள். தொடர்ச்சியாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தேர்வு செய்கிறீர்களே?

வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கும்போது பல ரிஸ்க் எடுக்கலாம். வங்கியில் பத்து நாள் விடுமுறை எடுத்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. என் வேலையால் நிறுவனத்தில் என்ன மாற்றம் நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலை செய்யும்போது, நாம் செய்யும் வேலைக்கான விளைவுகள் உடனடியாக தெரிகிறது. நிறைய கற்றுக்கொள்ள முடியும், அதேபோல முடிவெடுப்பதற்கான வாய்ப்புகள் ஏராளம். நிறுவனத்தின் வளர்ச்சியை நாமே நேரிடையாக பார்க்க முடியும்.

ஸ்டார்ட் அப் நிறுவனம் தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது, சம்பளமும் குறைவாக இருக்குமே?

அது ஒவ்வொருடைய விருப்பம். சம்பளத்தைவிட, எதிர்கால வாய்ப்பு, வளர்ச்சி, புதிதாக கற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட விஷயங்கள்தான் எனக்கு முக்கியமாக இருந்தது.

மற்றவர்களைவிட எப்படி குறைவான வாடகையில் கார்களை கொடுக்க முடிகிறது?

வாடகை கார் சந்தையை தொழில்நுட்பம் மூலம் மேலும் திறனுடையதாக மாற்றி இருக்கிறோம். முன்பெல்லாம் கார் வாடகைக்கு எடுக்கும்போது பல விதிமுறைகள் இருந்தது. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு எடுக்க வேண்டும், எட்டு மணி நேரத்துக்கு எடுக்க வேண்டும் என்பதுபோல இருந்தது. அதற்கு ஒரு நிலையான வாடகையை நிர்ணயம் செய்திருந்தார்கள்.

நீங்கள் ஒரு கி.மீ. போகலாம். இல்லை 5 கி.மீ. போகலாம். எல்லாவற்றுக்கும் ஒரே கட்டணம்தான். இது வாடிக்கையாளர்களின் பிரச்சினை என்றால் டிரைவர்களுக்கும் வேறுவிதமான பிரச்சினை. அவர்களின் நேரம் முழுமையாக பயன்படுத்தபடாமல் இருக்கிறது. இந்த இரண்டு காரணங்களால் கார் என்பது அடிப்படை தேவை என்ற நிலைமையில் இருந்து சொகுசு வாகனமாக மாறிவிட்டது. இதனால் நடுத்தர மக்கள் அவசியம் இருந்தால் மட்டுமே காரை பயன்படுத்தினர்.

தொழில்நுட்பம் காரணமாக இந்த நிலைமை மாறிவிட்டது. முன்பெல்லாம் வாடிக்கையாளரை இறக்கிவிட ஒரு கார் விமான நிலையம் செல்கிறது என்றால், அங்கு அடுத்த வாடிக்கையாளர் உடனடியாக கிடைக்க மாட்டார். அதனால் டிரைவர்கள் அதிகம் சிரமப்பட்டனர். அதனால்தான் அதிக கட்டணம் வசூலித்தனர். இப்போது உடனடியாக வாடிக்கையாளர் கிடைப்பதால் குறைவான கட்டணம் வசூலிக்கின்றனர்.

அதிக மக்கள் பயணம் செய்வதால் கார் நிற்காமல் ஓடுகிறது. கார் உரிமையாளருக்கும் போதுமான பணம் கிடைக்கிறது. நாங்கள் (ஓலா) இந்த டெக்னாலஜி மூலம் வாடிக்கையாளரைக் கொடுக்கிறோம். பிஸினஸ் செய்ய வேண்டியது டிரைவர்களின் பொறுப்பு. இதற்கு 20% கமிஷன் நாங்கள் எடுத்துகொள்கிறோமே தவிர நாங்கள் டிரைவர்களுக்கு ஏதும் கொடுப்பதில்லை. ஆனால், டிரைவர்களின் செயல்பாட்டுக்கு ஏற்ப சமயங்களில் ஊக்கத்தொகை வழங்குகிறோம்.

இந்தியாவில் தற்போது கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதே, இது உங்களுக்கு ரிஸ்க் இல்லையா?

சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றபோது, புதிதாக வந்திருக்கும் கார்களில் எந்தக் கார் வாங்க விருப்பம் என்று கேட்டால் அவர்களிடம் பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் புதிதாக வந்திருக்கும் ஸ்மார்ட் போன் பற்றி கேட்டதற்கு அனைவரிடமும் ஆர்வம் இருந்தது.

கார் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் இல்லை. குறைந்த கட்டணத்தில் பயணம் செய்வதற்கு வழிகள் இருக்கும் போது எதற்கு கார் வாங்க வேண்டும்? என்னைக் கேட்டால் கார் வாங்குவது ஒரு தவறான முடிவு என்று சொல்வேன். பார்க்கிங், இன்ஷூரன்ஸ், இஎம்ஐ என கணக்குப் போட்டால் கார் வாங்கும் எண்ணம் வராது. அதைவிட இவ்வளவு பணம் போட்டு வாங்கும் காருக்கும் ஏற்ற பயன்பாடு இருக்கிறதா என்று யோசித்தால் கார் வாங்கும் எண்ணம் வராது.

கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் இந்தியா போன்ற சந்தையில் எங்களுக்கு பெரிய பாதிப்பு இருக்காது. இங்கு வாய்ப்புகள் ஏராளம்.

சென்னையில் விரைவில் மெட்ரோ ரயில் வரப்போகிறது. மற்ற ஊர்களிலும் மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மெட்ரோவுக்கு நீங்கள் எப்படி செல்வீர்கள். மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து அலுவலகம், வீட்டுக்கு எப்படி செல்வீர்கள். இது எங்களுக்கு சவால் அல்ல. மேலும் ஒரு வாய்ப்புதான். ஒரே போக்குவரத்து மட்டுமே நகரத்தின் அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. நாங்களே ஆட்டோ சேவையும் கொடுக்கிறோம், ஆட்டோவுக்கும் காருக்கும் போட்டியே கிடையாது. இரண்டும் வெவ்வேறு சந்தை.

தற்போது ஒரு நகரத்துக்குள் மட்டுமே சேவை அளித்து வருகிறீர்கள். இரு நகரங்களுக்கு இடையே சேவையை விரிவுபடுத்தும் திட்டம் இருக்கிறதா?

ஒரு நகரத்துக்குள் செல்பவர்கள்தான் அதிகம். இங்கிருந்து சேலத்துக்கு மாதத் துக்கு ஒரு நாள் மட்டுமே செல்வீர்கள். அதற்கு இப்போது பெரிய சந்தை இருப்பது போல தெரியவில்லை. தேவை இருக்கும் பட்சத்தில் அதையும் செய்வோம்.

உணவு சேவையையும் தொடங்கியுள்ளீர்களே, சென்னைக்கு எப்போது கொண்டுவரப் போகிறீர்கள்?

டெக்னாலஜியை வைத்து கார் சேவையை தொடங்கினோம். காரை வைத்து அடுத்து என்ன செய்ய முடியும் என்ற யோசனையில் பிறந்ததுதான் உணவு. ஒரு சோதனை அடிப்படையில் பெங்களூரு, மும்பை,ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் ஆரம்பித்தோம். முக்கிய உணவகங்களின் உணவுகளை 15 நிமிடங்களில் டெலிவரி செய்வதுதான் இந்த பிஸினஸ். விரைவில் சென்னைக்கும் கொண்டுவருவோம்.

ஆரம்பத்தில் குறைந்த கட்டணம் அறிவித்துவிட்டு, இப்போது பீக் ஹவர்களில் அதிக கட்டணம் வசூலிக்கிறீர்களே. எதிர்காலத்தில் உங்களுடைய சந்தை அதிகரிக்கும்போது கட்டணத்தை மேலும் உயர்த்த மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

தேவை அதிகமாக இருக்கும்போது, அதற்குரிய விலையை கொடுத்துதானே ஆக வேண்டும். கல்யாண சீசனில் பூ விலையைப் பற்றி யாரும் கேட்பதில்லை. அதுபோலதான். பீக் ஹவர்களில் சாதாரணமாக சாலைகளில் செல்லும்போதே கார்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அந்த நேரத்தில் கார் உரிமையாளர் ஓலாவில் (ஆப்/இணையதளத்தில்) இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கூடுதலாக கொடுத்துதானே ஆகவேண்டும்.

அந்த சிறிய கூடுதல் தொகையை கொடுக்க வாடிக்கையாளர்கள் தயாராக இருக்கிறார்கள். ஒருவேளை பெரிய ரக கார் வேண்டாம் என்றால் ஆட்டோ அல்லது மினி கார்களை எடுத்துக்கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் கொடுக்கிற பணத்துக்கு மதிப்பு உள்ளதா என்றுதான் பார்க்கிறார்கள். மதிப்பு இல்லை என்றால் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள்.

எப்போது லாப பாதைக்கு திரும்புவீர்கள்?

நாங்கள் நினைத்தால் உடனடியாக லாபத்தை அடைந்துவிடலாம். எங்கள் நோக்கம் இன்னும் நிறைய நகரங்களுக்கு விரிவடைய வேண்டும். லாபம் அடைய வேண்டும் என்று எந்த அவசரமும் எங்களுக்கு இல்லை. இன்னும் சில காலம் ஆகும்.

செயலி மூலமாகவே அனைத்து முன்பதிவுகளை கொண்டுவர திட்டம் வைத்திருக்கிறீர்களா?

சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் மிகச்சிறிய அளவுக்கு மட்டுமே கால் சென்டர் மூலமாக புக்கிங் நடக்கிறது. ஆனால் சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் 50 சதவீதம் வரை கால் சென்டர் புக்கிங் நடக்கிறது. அதனால், முழுவதும் செயலி என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை.

நன்றி ‘தி இந்து’