தொழில்நுட்பத்தின் மூலம் புவியியலை மாற்ற முடியும்: லிங்க்ஸ்ட்ரீட் சி.இ.ஓ. அருண் முத்துக்குமார் நேர்காணல்

புதிய தொழில்முனைவோர்களின் கூடாரமாக பெங்களூரு இருக்கிறது. இந்த வாரம் நாம் சந்திக்க இருப்பது லிங்க்ஸ்ட்ரீட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அருண் முத்துக்குமாரை. பிஸினஸுக்கான ஐடியா எங்கிருந்து, எப்போது வேண்டுமாலும் வரும் என்பதற்கு ஒரு உதாரணம்தான் லிங்க்ஸ்ட்ரீட்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியலும், அமெரிக்காவில் உள்ள கென்டகி பல்கலைக்கழகத் தில் எம்எஸ் பட்டமும் படித்தவர். ஏடி&டி, லூசென்ட் டெக்னாலஜி மற்றும் சிஸ்கோ ஆகிய நிறுவனங் களில் பணியாற்றியவர். 2011-ம் ஆண்டு தன்னுடைய நண்பர் விக்ரமுடன் சேர்ந்து லிங்க்ஸ்ட்ரீட் நிறுவனத்தைத் தொடங்கினார். லிங்க்ஸ்ட்ரீட் என்ன செய்கிறது என்பதற்கு முன்பு, நிறுவனம் உரு வான கதையை பார்த்துவிடலாம்.

இந்த ஐடியா உங்களுக்கு எப்படி தோன்றியது?

என் சொந்த ஊர் ஈரோடு பக்கத் தில் கள்ளிப்பட்டி (கோபி அருகில்). அமெரிக்காவில் பணியாற்றிய போதே எங்கள் ஊரில் இருந்த அரசுப்பள்ளிக்கு அவ்வப்போது எதாவது உதவி செய்துவருவோம். பள்ளிக்குத் தேவையான கட்டு மானப்பணிகளை செய்துவந் தோம். ஒரு கட்டத்தில் தேவையான அனைத்தையும் செய்துவிட்டோம். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தோம்.

ஈரோட்டில் உள்ள முக்கியமான பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோம். அதன்படியே செய்தோம். இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு வேறு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. அதேபோல ஈரோட்டில் உள்ள பள்ளிக்கு பெங்களூரு அல்லது முக்கியமான நகரங்களில் உள்ள ஐஐடி கோச்சிங் சென்டரில் உள்ள ஆசிரியர்கள் வகுப்பு எடுத்தார்கள். இதன் மூலம் ஈரோடு மாணவர்கள் தேசிய அளவில் போட்டியிட முடிந்தது. அதாவது தொழில்நுட்பத்தின் மூலம் புவியியலை மாற்ற முடியும் என்பது எனக்கு புரிந்தது. அதுதான் லிங்க்ஸ்ட்ரீட் நிறுவனத்துக்கான விதை. தொழில்நுட்பம் மூலம் நல்ல ஆசிரியரை கிராமப்புற மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. அதுவே இப்போது தொழிலாக மாறிவிட்டது.

தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்ததா. இல்லை இந்த ஐடியா கிடைத்தவுடன் ஏன் ஆரம்பிக்கக் கூடாது என்று தொடங்கி னீர்களா?

சில நண்பர்கள் தொழில் தொடங் கும் போது உதவி செய்திருக் கிறேன். அதனால் அவ்வப்போது எனக்கு தோன்றும். ஆனால் பிஸினஸ் செய்தே ஆக வேண்டும் என்றெல்லாம் கிடையாது. இந்த சோதனை முயற்சியில் நாங்கள் எதிர்பார்த்ததைவிட வெற்றி கிடைத்ததால்தான் தொடர்ந்தேன்.

எங்கள் ஊர் அரசுப்பள்ளி வகுப் பறையின் கடைசியில் உட்கார்ந் திருக்கிறேன். ஈரோட்டில் இருக் கும் பிரபலமான ஆசிரியர் வகுப்பு எடுத்துக்கொண்டிருகிறார். கிராமத்தைவிட்டு வெளியே செல் வதற்கே வாய்ப்பில்லாத மாணவர் கள், அந்த ஆசிரியரிடம் பாடம் படிக்க முடியும் என்றால், இது நிச்சயம் பெரிய விஷயம் என்று அப்போது தோன்றியது. அதுதான் திருப்புமுனையாக அமைந்தது.

நல்ல சம்பளத்தில் இருந்த வேலையை விடும் முடிவு எளிதாக இருந்ததா?

பெரிய முடிவு. இந்த முடிவு யாருக்கும் எளிதானது அல்ல. 18 வருடம் வேலை செய்தாகிவிட்டது. இனியும் செய்ய வேண்டுமா என்ற எண்ணம். அதிகபட்ச ரிஸ்க் தோல்வி. ஒரு வேளை புதிய நிறுவனம் தோல்வியடைந்தால் இன்னொரு வேலையை வாங்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஒரு முயற்சி எடுப்போம். இப்போது எடுக்காவிட்டால் எப்போதும் எடுக்க முடியாது. அதனால் வேலையை விட்டுவிட்டேன்.

இப்போது ஐஐஎம், ஐஎஸ்பி ஆகி யோர் உங்களது வாடிக்கையாளராக இருக்கிறார்கள். முதல் வாடிக்கையாளர்களை எப்படி பிடித்தீர்கள்?

பெங்களூருவில் இருக்கும் ஐஐடி கோச்சிங் சென்டர். எங்களது டெக்னாலஜியை (வெப்சைட்) பயன்படுத்தி நீங்கள் அதிக மாண வர்களை உங்களால் சென்றடைய முடியும். மேலும் ஒரே ஆசிரியர் மூலம் அதிகபட்ச சென்டர்களை சென்றடைய முடியும். மாணவர் களின் நேரம், ஆசிரியர் நேரம், ஆசிரியருக்கு செலவிடும் தொகை மீதமாகும் என்று சொல்லி விளக்கி னோம். ஆரம்பத்தில் கோச்சிங் சென்டர்களில் வீடியோகான் பிரன்ஸ் மூலம் வகுப்பு எடுக்கப் பட்டது. அதன் பிறகு மாணவர் கள் வீட்டில் இருந்து இணையம் மூலம் வகுப்புகளைப் பயன்படுத்தி கொள்ளுமாறு வடிவமைத்தோம். அதன் பிறகு நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தைக் கொடுக்க ஆரம்பித்தோம். நிறுவனம் சொல்ல வேண்டிய தகவலை வீடியோ மூலம் எடுத்து, பதிவேற்றிவிட்டால் பணியாளர் களுக்கு அறிவிப்பு சென்றுவிடும். அவர்கள் பார்த்துவிடுவார்கள்.

கல்வித்துறையில் இதற்கான தேவை இருக்கிறது. ஆனால் நிறுவனங்களுக்கு என்ன தேவை. அவர்கள் யூடியூப் மூலம் ஒரு சேனல் ஆரம்பித்து அதில் பதிவேற்றம் செய்துவிட்டால் போதுமே. ஏன் உங்களிடம் வரவேண் டும்? தவிர அவர்களுடைய இணைய தளத்திலே இதனை செய்துவிட முடியுமே?

எங்களுடைய ஐடியா என்பது தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியை கொண்டுசெல்வது. இங்கும் அதேதான். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து கற்க வேண்டியது என்பது அவசியம். நிறுவனங்கள் தங்களிடம் உள்ள அனைத்து பணியாளர்களையும் வரவழைத்து நிலைமையை விளக்கிகொண்டிருக்க முடியாது. அதனால் பணியாளர்களுக்குக் கற்றுக்கொள்ள வேண்டிய செய் தியை ஒரு வீடியோ மூலம் பதி வேற்றிவிட்டால் அவர்கள் லிங்க் ஸ்ட்ரீட் மூலம் அந்த வீடியோவை பார்ப்பார்கள். யூடியூபிலும் இதனை பார்க்க முடியும்.

ஆனால் லிங்க்ஸ்ட்ரீட்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு லாகின் ஐடி இருக்கிறது. எத்தனை நபர்கள் பார்த்தார்கள். அவர்கள் கருத்து கள், அவர்களுக்கு எவ்வளவு புரிந்திருக்கிறது என்பதைக் கணக் கிட முடியும். இதைதான் நாங்கள் செய்கிறோம்.

அவர்களுடைய இணையதளத்திலே இதனை செய்வது அவர்களுக்கு கூடுதல் வேலை. மேலும் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களும் இருக்கும் போது படிப்பது/கவனிப்பது குறையும். வேறு இடத்தில் இருக்கும் போது கவனிப்பார்கள், மேலும் அதனை மானிட்டர் செய்து மேம்படுத்த முடியும். அனைத்து வேலைகளையும் நிறுவனங்களே செய்ய முடியாதே.

கல்வி நிறுவனங்கள் பயன்படுத்த முடிகிறது. கார்பரேட் நிறுவனங்கள் நேரடியாக பயன்படுத்த முடிகிறது. உங்களிடம் பல வீடியோக்கள் இருக்கின்றன. ஆனால் நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத் தால் உங்களிடம் உள்ள வீடியோக் களை பார்க்க முடியவில்லையே?

இதுவரை எங்களிடம் இருக்கும் வீடியோ குறிப்பிட்ட நிறுவனங்களுக்கானது. அதில் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருந்தாலும் அதனை அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியிட முடியாது. இப்போது வரைக்கும் நாங்கள் பி டு பி நிறுவனம். ஒருவர் புது விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கான தகவல்கள் கொடுக்கும் நிறுவனமாக விரைவில் மாறுவோம். அதற்கான தேவை இருக்கிறது. அதை நோக்கி நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். இன்னும் சில மாதங்களில் அது குறித்து அறிவிப்போம்.

நன்றி : தி இந்து