ஐடியா மீது தீவிர நம்பிக்கை வேண்டும்: குரோத் ஸ்டோரி நிறுவனர் கே.கணேஷ் நேர்காணல்

ஒரு தொழிலைத் தொடங்குவதற்கே பல தியாகங்களை செய்ய வேண்டி இருக்கிறது; இந்த நிலையில் தொழிலைத் தொடங்கி விற்று, மீண்டும் முதலில் இருந்து இன்னொரு தொழிலை தொடங்குவதற்கு அசாத்திய நம்பிக்கையும் உழைப்பும் வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தொடர் தொழில் முனைவோர்தான் கே.கணேஷ். இப்போது குரோத்ஸ்டோரி என்னும் வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவர் முதலீடு செய்திருந்த பல நிறுவனங்களில் ஒன்று புளூஸ்டோன். பெங்களூருவில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் அவரை சந்தித்து உரையாடியதிலிருந்து..

திருநெல்வேலி சொந்த ஊர். வளர்ந்தது டெல்லியில். டெல்லி பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கும், கொல்கத்தா ஐஐஎம்-ல் நிர்வாக படிப்பும் படித்தவர். டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல். பிரிட்டிஷ் டெலிகாம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். 1990-ம் ஆண்டு கணிப்பொறி துறையில் முதல் நிறு வனத்தை தொடங்கினார் 2003-ம் ஆண்டு ஐகேட் நிறுவனத்திடம் விற்றுவிட்டார். இதற்கிடையில் 2000ம் ஆண்டு கஸ்டமர் அஸெட் என்னும் நிறுவனத்தை தொடங்கி அதனை ஐசிஐசிஐ நிறுவனத்திடம் விற்றார். 2006-ம் ஆண்டு டியூடர் விஸ்டா நிறுவனத்தைத் தொடங்கி அதனை அமெரிக்க நிறுவனமான பியர்சனிடம் விற்றார். இப்போது குரோத்ஸ்டோரி என்னும் வென்ச்சர் கேபிடல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். சில நிறுவனங்கள் குரோத்ஸ்டோரி மூலம் உருவாக்கப் பட்டிருக்கிறது. சில நிறுவனங்களில் குரோத் ஸ்டோரி முதலீடு செய்திருக்கிறது.

ஐஐஎம்-ல் படித்த பிறகு நல்ல வேலை கிடைத்திருக்கும். அந்த வேலையை விட்டுவிட்டு முதல் நிறுவனத்தை தொடங்க காரணம் என்ன?

ஐஐஎம் முடித்த பிறகு சிட்டி பேங்க், ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களில் வாய்ப்பு வந்தது. ஆனால் சிறிய நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதால் ஹெச்சிஎல் நிறுவனத்தில் சேர்ந்தேன். பெரிய நிறுவனத்தில் உங்களால் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்த முடியாது. ஏற்கெனவே அங்கு ஒரு சிஸ்டம் இருக்கும் அதன்படி நீங்கள் வேலை செய்ய வேண்டும்.

அதனால் அப்போது சிறிய நிறுவனமான ஹெச்சிஎல் நிறுவனத்தில் வேலை செய்த அனுபவத்தால்தான் தொழில் முனைவோராக உருவாக முடிந்தது. ஹெச்சிஎல் நிறுவனத்தில் முடிவெடுக்கும் உரிமை இருந்தது. முடிவெடுப்பதினால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதைக் கண்கூடாக பார்க்க முடிந்தது. என் முடிவுகளுக்கு என்ன பலன் கிடைக்கிறது என்பதை தெரிந்த பிறகு ஏன் சொந்தமாக ஆரம்பிக்க கூடாது என்ற யோசித்ததன் முடிவாகத்தான் நிறுவனம் தொடங்கினேன்.

புதிதாக 10 தொழில்முனைவோர்கள் உருவானால் அதில் அதிகபட்சம் 5 பேர் வெற்றிபெறுவதே கடினம். ஆனால் நீங்கள் நான்கு நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக வெளியேறி இருக்கிறீர்கள். இதனை அதிர்ஷ்டம் என்று சொல்லிவிட முடியாதே?

ஒரு தொழிலில் வெற்றிபெற்று விட்டால் அடுத்த தொழிலிலும் வெற்றி பெற முடியும் என்ற எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது. குறைந்தபட்சம் தொழிலில் ஜெயிப்பதற்காக ஒரு அஸ்திரமாவது இருக்க வேண்டும். ஒரு அஸ்திரம் கூட இல்லை என்றால் அதில் இறங்கக் கூடாது. எங்களுடைய பலம் தெரிந்து அதனை தொழிலாக எடுத்துக்கொண்டோம்.

கட்டுமானம், மரபுசார எரிசக்தி துறையில் அடுத்த பத்துவருடங்களுக்கு பெரிய வாய்ப்பு கொட்டிக் கிடக்கின்றது. ஆனால் அந்த துறையில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை. அதாவது (1) வாய்ப்பு இருக்கும் தொழிலை விட உங்களுக்கு தெரிந்ததை செய்வது உத்தமம். (2) பெரிய நிறுவனங்களின் போட்டி இல்லாத புதிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

புதிய துறையை தேர்ந்தெடுக்கும் போது அது ரிஸ்க் இல்லையா?

ரிஸ்க் இருப்பதனால்தான் அதிக வருமானம் கிடைக்கிறது. லார்ஜ் கேப் பங்குகள் வாங்கும்போது அந்த பங்குகள் இரு மடங்கு வருமானம் கொடுக்காது. அதேபோல பாதியாகவும் ஆகாது. ஆனால் மிட்கேப் பங்குகள் இரட்டிப்பும் ஆகும், பாதியும் ஆகும். ரிஸ்க் இருந்தால்தான் ரிவார்டு.

நான்கு நிறுவனங்களை தொடங்கி விற்றிருக்கிறீர்கள். ஒரு வேளை விற்காமல் இருந்திருந்தால், அவை இப்போது சந்தையின் முக்கிய நிறுவனங்களாக உயர்ந்திருக்குமே. அந்த வருத்தம் இல்லையா?

ஒரு நிறுவனத்தை சிறியதாக தொடங்கி, நடுத்தர நிறுவனமாக மாற்றி, தொடங்கப்பட்ட நாட்டில் முக்கிய நிறுவனமான மாற்றி, அதனை சர்வதேச நிறுவனமாக மாற்றிய தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள். பில்கேட்ஸ், நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் இருக்கிறார்கள். சிறிய நிறுவனத்தை நடத்துவதற்கு ஒரு திறன் வேண்டும். பெரிய நிறுவனத்தை நடத்துவதற்கு வேறு திறன் வேண்டும். சில விதிவிலக்குகள் இருக்கலாம். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த நிறுவனத்தை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்தேன்.

ஒரு நிறுவனத்தை அப்போது விற்றிருக்கவேண்டுமா, இல்லை தொடர்ந்திருக்கலாம் என்பது போல சஞ்சலங்கள் வருத்தங்கள் எப்போதாவது ஏற்படும். அதை மறுக்க முடியாது. கடந்த வாரம் டியூடர்விஸ்டா அலுவலகத்துக்கு சென்றேன். அலுவலகத்துக்காக பல இடங்களை பார்த்து இறுதியாக அந்த இடத்தைத் தேர்வு செய்து, நான் பார்த்து உருவாக்கிய இடம். ஆனால் நான் சென்றவுடன் நீங்கள் யார், கையெழுத்து போடுங்கள் என்றார் செக்யூரிட்டி. ஒரு நிமிஷம் எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் 213 மில்லியன் டாலருக்கு விற்றுவிட்டோம் என்ற நினைப்பு வந்த பிறகு ஒரு மாதிரியாக சமாதானம் ஆனேன்.

பிஸினஸ் என்பது பழம் போல. ஒரு பூ பூக்கும், அது காயாக மாறும், மெல்ல பழுக்க ஆரம்பிக்கும், பிறகு மொத்தமாக நன்றாக பழுக்கும். அதன் பிறகு மேலும் பழுக்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதனைச் சாப்பிட வேண்டும். அல்லது பதப்படுத்தி, ஜாம் செய்ய வேண்டும். இவை அனைத்தும் தெரிந்தால் தொடரலாம். இல்லையெனில் சரியான சமயத்தில் விற்றுவிடலாம்.

30 வயதில் ஒரு கம்பெனி தொடங்கி இருக்கிறீர்கள், 50 வயதிலும் தொழில் தொடங்கி இருக்கிறீர்கள். என்ன வித்தியாசம்?

அனுபவத்தின் காரணமாக இப்போது கொஞ்சம் முதிர்ந்த மனநிலையில் இருக்கிறேன். இது சில இடங்களில் நல்லது. முடிவெடுக்கும் போதும், மனிதர்களை கையாளும் போதும் பயன்படும். ஆனால் தொழில்நுட்ப யுகத்தில் பிஸினஸ் செய்யும் போது இளைஞர்களுடன் போட்டி போடவேண்டியுள்ளது. யோசனையே புதிதாக செய்ய வேண்டி இருக்கிறது. டெக்னாலஜி என்பதே புதிதாக வருவதினால் இங்கு அனுபவத்துக்கு வேலை இல்லை.

உங்களுடைய மிகப்பெரிய தவறு என்ன?

90களில் கணிப்பொறி நிறு வனம் தொடங்கினோம். ஆனால் அப்போது ஹார்டுவேரில் மட்டும் கவனம் செலுத்தினோம். சாப்ட்வேர் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்க ளுடைய உழைப்பில் 10 சதவீத மாவது சாப்ட்வேரில் முதலீடு/கவனம் செய்திருந்தால் இப் போதைய நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். 1000 மடங்கு வளர்ந் திருப்போம். விப்ரோ, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹார்டு வேர் துறையில் ஆரம்பிக்கப்பட்டு சாப்ட்வேருக்கு மாறினார்கள். நாங்கள் அதனைச் செய்யவில்லை.

புதிய தொழில்முனைவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

உங்கள் ஐடியா மீது பேரார்வம் இருக்க வேண்டும். அந்த ஐடியா வேலை செய்யும் என்று முட்டாள்/குருட்டு தனமாக நம்ப வேண்டும். 10ல் இரண்டு பேர்தான் ஜெயிக்கிறார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தால் வெற்றி கிடைக்காது. மேலும் தொழில்முனைவு என்பது மாரத்தான் போல். நீண்டகாலம் ஓட வேண்டும். அதற்கு விடா முயற்சி வேண்டும்.

நன்றி : தி இந்து