‘லாபத்தைவிட சந்தை மதிப்பு முக்கியம்’

பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்ட தங்க நகை விற்பனை நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் குறிப் பிடத்தக்கது மதுரையை சேர்ந்த தங்கமயில் ஜூவல்லரி.

100 சதுர அடியில் தொடங்கப்பட்டு இன்று பல கிளைகளைக் கொண்டு இந்த நிறுவனம் வளர்ந்திருக்கிறது. நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட்டதற்கான காரணம், தங்க நிலவரம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அந்த நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பா.ரமேஷை மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து…

முறைப்படுத்தப்படாமல் இருக்கும் இந்த துறையில், உங்கள் நிறுவனத்தை முறைப்படுத்தப்பட்ட நிறுவனமாக எப்படி மாற்றினீர்கள்?

என் அப்பா சிறிய நகை கடை வைத்திருந்தார். திடீரென அவருக்கு உடல் நிலை சரியில் லாமல் போகவே, கடை நிர் வாகத்தை எங்களிடம் (மூன்று சகோதரர்கள்) கொடுத்தார். 12 கிலோ தங்கத்தை கொடுத்தவர், எந்த சூழ்நிலையிலும் இதற்கும் கீழே தங்கம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது ஆலோசனை தேவைப் பட்டால் கேளுங்கள், சொல்கிறேன். அவசியத்தைப்பொறுத்து அந்த ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அப்போதே இந்த தொழிலை முறை யாக நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். அதற்கு பிறகு மதுரையில் பிரபலமாக இருந்த ஆடிட்டரிடம் சென்றோம். கணக்குகளை ஒழுங்கு செய்தோம்.

1980-களின் இறுதியில் ஏற்றுமதி செய்யத்தொடங்கி இருந் தோம். அதற்காக ஒரு முறை துபாய் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றோம். அந்த கண்காட்சியில் விற்பவர்களும் இந்தியர்கள், வாங்குபவர்களும் இந்தியர்கள். ஆனால் இடம் துபாயில். ஏன் என்ற போதுதான் ஹால்மார்க் முத் திரை குறித்து தெரிந்தது. அதன் பிறகு ஹால்மார்க் முத்திரையுடன் நகைகளை விற்க ஆரம்பித்தோம். பார்கோட் முறையை அறிமுகப் படுத்தி விற்பனை செய்ய தொடங் கினோம். ஒரு கிலோ தங்கம் 4 லட்ச ரூபாய் இருக்கும்போதே (2001-ம் ஆண்டு) 17 லட்ச ரூபாய்க்கு காரட் மீட்டர் வாங்கி மக்கள் தரத்தை பற்றி அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தினோம். காலத்துக்கு ஏற்ப புதுமைகளை புகுத்தி வந்தோம். இருந்தாலும் பெரிய வளர்ச்சி அடைய முடிய வில்லை. அதற்கு காரணம் அனைத்து விஷயங்களையும் நாங் களே செய்து வந்தோம். அப்போதி லிருந்து நான் வியாபாரி என்ற நிலையில் இருந்து நிர்வாகியாக மாறினேன்.

ஐபிஓ கொண்டு வர எப்போது முடிவு செய்தீர்கள்? என்ன காரணம்?

நான் நிர்வாகியாக மாறிய பிறகு, நிறுவனத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தோம். அனைத்து விஷயங்களையும் பிரித்தோம். பிரைவேட் லிமிடெட் நிறுவனமாக மாற்றினோம். டிவிடெண்ட் வழங் கும் நிறுவனமாக மாற்றினோம். 2007-ம் ஆண்டு ஐபிஓ கொண்டு வர முடிவு செய்து பிரைவேட் ஈக்விட்டி / மெர்சன்ட் பேங்கர்/மியூச்சுவல் பண்ட்களை நாடினோம். ஆனால் 2008-ம் ஆண்டு சந்தை கடுமையாக சரிந்ததால் முதலீட்டாளர்கள் கிடைக்கவில்லை. தவிரவும் நகைக் கடை என்பது 2-ம் நம்பர் வியா பாரம் என்பது அவர்களின் கருத் தாக இருந்தது. இங்கு அனைத்துமே ரொக்கமாக நடக்கும். எங்கேயும் கணக்கு வைத்துக்கொள்வதில்லை என்று கூறினார்கள். நாங்கள் அப்படி இல்லை என்று சொன் னாலும் நம்ப தயாராக இல்லை. இருக்கும் தொகையை வைத்து விரிவாக்க பணிகளில் ஈடுபட்டோம். ஒரு வழியாக 2010-ல் ஐபிஓ வெளியிட்டோம்.

பல வியாபாரிகள் லாபம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். லாபம் முக்கியம்தான் ஆனால் லாபத்தைவிட சந்தை மதிப்பு (valuation) முக்கியம் என்பது என் கருத்து.

நகைக் கடைகளுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. எதுவும் நிலையானதாக இல்லை. செய்கூலி, சேதாரம் போன்ற விஷயங்கள் இப்போதும் சாதாரண மக்களுக்கு புரியாதது போலவே இருக்கிறதே?

நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையிலேயே இருக் கிறீர்கள் என்று நினைக்கிறேன். முன்பெல்லாம் விற்பவர்களின் சந்தையாக இருந்தது. அது இப்போது வாங்குபவர்களின் சந்தையாக இருக்கிறது. மக்கள் பல கடைகளில் ஒப்பீடு செய்கிறார்கள். அதன் பிறகுதான் வாங்கவே ஆரம்பிக்கிறார்கள். அதிகபட்சம் ஒரிரு சதவீதத்துக்கு மேல் விலை வித்தியாசம் இருந்தால் சந்தை யில் விற்க முடியாது. இனி வாடிக்கையாளர் மூலமாக பெரிய அளவில் சம்பாதிக்க முடியாது. வாடிக்கையாளர்களுக்கு தரம், வாய்ப்பு, சேவை இருக்க வேண் டும். இத்தனைக்கு பிறகும் விலை சரியாக இருக்க வேண் டும். இத்தனை இருந்தால்தான் வியாபாரம் செய்ய முடியும். இல்லையெனில் வாடிக்கையாளர் கள் வரமாட்டார்கள். ஒருவர் மூல மாக மேலும் பலர் வர மாட்டார்கள் என நிறுவனங்களுக்கு தெரியும். தங்கத்தை வாங்கும்போதுதான் சம்பாதிக்க முடியும்.

இ-காமர்ஸ் விற்பனை எப்படி இருக்கிறது?

தற்போதுதான் இணையதள விற்பனையை தொடங்கி இருக்கி றோம். இன்னும் பெரிய அளவில் வருமானம் வரவில்லை. தினசரி 400க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இணைய தளத்தை பார்க்கிறார்கள். தினமும் 50 கிராம் அளவுக்கு விற்பனை நடக்கிறது. இதற்காக புதிய குழுவை அமைத்திருக்கிறோம். ஆலோ சகர்களை நியமித்திருக்கிறோம். உடனடி வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இதில் முதலீடு செய்யவில்லை. இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு இ-காமர்ஸ் மூலம் அதிகமாக விற் பனையாகும். அதற்கு இப்போதே தயாராகி வருகிறோம். தவிர இணையதளத்தை பார்த்து எங்கள் கடைகளில் வந்து வாங்கும் வாடிக் கையாளர்களும் இருக்கிறார்கள்.

நகைக்கடையும், துணிக்கடையும் வைத்திருக்கும் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. துணிக்கடை ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறதா?

இல்லை. எங்களுக்குத் தெரிந்த தொழிலை செய்வதுதான் திட்டம். இந்தியாவில் 2015-ம் ஆண்டு 3.50 லட்சம் கோடி ரூபாய்க்கு தங்க நகை வியாபாரம் நடந்திருக்கிறது. 2020-ம் ஆண்டு 8 லட்சம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இதில் 20 சதவீதம் தமிழ்நாட்டில் என்ற கணிப்பும் இருக்கிறது. அதாவது 1.60 லட்சம் கோடி ரூபாய்க்கு இருக்கக்கூடும். இவ்வளவு பெரிய வாய்ப்பு என் கண்ணுக்கு தெரியும் போது இதை விட்டுவிட்டு நான் ஏன் வேறு தொழிலுக்கு போக வேண்டும்.

பணியாளர்கள் வெளியேறும் விகிதம் எப்படி இருக்கிறது?

எங்களிடம் இருந்தும் பணியாளர்கள் வெளியேறுகிறார்கள். ஆனால் பெரிய அளவில் இல்லை. நாங்கள் வேலை கொடுக்கவில்லை. அதிகாரம் கொடுக்கிறோம். தவிர நாம் வளர வேண்டும் என்றால் மற்றவர்களை வளர்க்க வேண்டும். பணியாளர்கள் உயரும் போது நாமும் உயருவோம்.

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நிலையானதாக இல்லை. இந்த ஆண்டு எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

ஒரு அவுன்ஸ் தங்கம் குறைந்த பட்சம் 990 டாலர்கள் வரைக்கும், அதிகபட்சம் 1350 டாலர்கள் வரை செல்லலாம் என்று கணிக்கப் பட்டிருக்கிறது.

நன்றி தி இந்து