‘சொல்லிக் கொடுத்து வருவதில்லை தொழில்முனைவு’

பேராசிரியர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டின் நிறுவனர், எழுத்தாளர், மத்திய மாநில அரசுகளுக்கு மட்டுமல்லாமல் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசகர் என பல முகங்களைக் கொண்டவர் பாலா வி பாலச்சந்திரன்.

வருடத்தின் பாதி நாட்கள் இந்தியாவிலும், மீதி நாட்கள் அமெரிக்காவில் வசிக்கும் பேராசிரியரை அவரது கல்லூரி அலுவலகத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…

இப்போது அமெரிக்காவுக்கு படிக்கச் செல்வதே கடினமாக இருக்கும் போது, 1960களில் எப்படி முடிந்தது. உங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் யார்?

அறிவு மற்றும் அதனை செயல் படுத்தும் முறையில்தான் வெற்றி பெற முடியும் என நம்பினேன். இன்றைக்கும் இன்ஜினீயரிங் என்றால் ஜெர்மனிதான் முதல் இடத்தில் இருக்கிறது. அதேபோல நிர்வாகம், மேலாண்மை என்றால் அமெரிக்காதான். படிப்பது மட்டு மல்லாமல் அங்கே ஒரு பெரிய நெட்வொர்க்கை உருவாக்க முடி யும். சர்வதேச அளவில் விரிவடைய முடியும் என்றால் அங்கே படித் தால்தான் முடியும் என்று நினைத் தேன். சாதாரண குடும்பத்தில் பிறந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்து, அங்கேயே பணிபுரிந்தேன். ஐந்து வருடம் அங்கே இருந்தேன். அடுத்து எப்படியாவது அமெரிக்கா செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அமெரிக்காவில் பேராசிரியர் கள் முடிவு செய்தால் நினைத்ததை செய்ய முடியும். அவர்களுக்கு உதவி மாணவராக செல்வதுதான் அமெரிக்காவுக்குச் செல்ல சரியான வழி என்பதை கண்டறிந்தேன். அப்போது அமெரிக்காவின் டேடன் பல்கலைக்கழக (Dayton university) பேராசிரியர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு வந்தார். அவருக்கு உதவி மாணவராக மாதம் 300 டாலர் உதவி தொகை யில் அமெரிக்காவுக்கு சென்றேன். பொறியியலில் முதுகலை பட்ட மும், கார்னிகி மெலன் பல்கலை கழகத்தில் எம்பிஏ மற்றும் முனைவர் பட்டத்தையும் பெற்றேன்.

அமெரிக்காவில் எம்பிஏ பட்டம் பெற்ற பிறகு பெரிய நிறுவனங்களில் நல்ல வேலை கிடைத்திருக் கும். நீங்கள் ஒரு சிஇஓ ஆகி இருக்கலாம். ஏன் பேராசிரியராக முடிவெடுத்தீர்கள்?

அமெரிக்காவில் எந்த ஒரு சிஇஓ-வும் அதிகபட்சம் ஐந்து வருடத்துக்கு மேல் நிலைக்க முடியாது. பேராசிரியராக இருப்பதில் கிடைக்கும் ஆனந்தம் சிஇஓ-வாக இருக்கும் போது கிடைக்காது. இதற்கு ஓய்வுகாலமே கிடையாது. என்னால் முடியும் வரை வேலை செய்யமுடியும். சிஇஓ-வாக இருந் தால் கூட நிறுவனத்தின் தலைவர் இயக்குநர் குழு போன்றவற்றுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்.

இன்னும் ஒரு உதாரணம் சொல் கிறேன். மார்கெட்டிங் துறையின் முக்கியமான பேராசியர் பிலிப் காட்லர். தியரிபடி பார்த்தால் அவர் பணிபுரியும் நிறுவனத்தின் சிஇஓ – தீபக் ஜெயின். ஆனால் சர்வதேச புகழ்பெற்றவர் பிலிப் காட்லர். சான்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

இந்திய நிர்வாக கல்லூரிகள் சர்வதேச கல்லூரிகள் பட்டியலில் வரவில்லையே ஏன்?

பேராசிரியர்கள்தான் காரணம். சிறப்பான பேராசிரியர்கள் இருக்கும் போதுதான் சர்வதேச எல்லையை தொட முடியும். சர்வதேச அளவில் சிறப்பான மூளை களாக இந்தியர்கள் இருக்கிறார் கள், ஆனால் அவர்கள் இந்தியா வில் இல்லை. வெளிநாட்டில் பணி புரிந்து இந்தியாவில் பேராசிரியராக இருக்கும் போது அவர்களின் அறிவைதாண்டி, அனுபவம், நெட்வொர்க் ஆகியவையும் கைகொடுக்கிறது.

நிர்வாக கல்லூரிகளை வரிசைப்படுத்துவது சரியா?

நிர்வாக கல்லூரிகளை ஒன்று, இரண்டு என்று வரிசைப்படுத்து வதை விட முதல் 10 இடங்கள் என்று வரிசைப்படுத்தலாம். தவிர ஒரு கல்லூரி அனைத்து சிறப்புகளை யும் பெற்றிருக்க முடியாது. மார்க் கெட்டிங் பிரிவில் கெல்லாக்ஸ் முதல் இடத்தில் இருக்கிறது. நிதிப் பிரிவில் சிகாகோ பல்கலை முதலிடத்திலும், ஸ்ட்ராட்ரஜி பிரிவில் ஸ்டான்போர்டு முதல் இடத்தில் உள்ளது. அனைத்து பிரிவிலும் ஒரே கல்லூரியில் முதலிடத்தில் இருக்க முடியாது.

திருபாய் அம்பானி, ஜம்ஷெட்ஜி டாடா ஆகியோர் எம்பிஏ படிக்க வில்லை. படிக்காமல்தான் பெரிய நிறுவனங்களை உருவாக்கி இருக் கிறார்கள். இப்போது நிர்வாக கல்லூரிகளில் தொழில்முனைவு வகுப்பு இருக்கிறதே. சொல்லிக் கொடுத்தால் தொழில்முனைவு வந்துவிடுமா?

நிச்சயம் வராது. சம்பந்தபட் டவரின் டிஎன்ஏவில் இருக்க வேண்டும். தொழில் செய்ய வேண்டும் என்ற வெறி இருக்க வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும். சிலருக்கு அந்த ஆற்றல் இருப்பது அவருக்கே தெரியாமல் முடங்கி இருக்கலாம். உதாரணத்துக்கு நான் பல வருடங்கள் பேராசிரிய ராக இருந்தாலும், கல்லூரி தொடங்குவது பற்றிய எண்ணமே இல்லை. நண்பர் மகேந்திரன் ஏன் சென்னையில் தொடங்கக் கூடாது என்று யோசனை கூறவே அதன் பிறகு நான் வேலையை ஆரம்பித் தேன். 65 வயதுக்கு பிறகு ரிஸ்க் எடுத்து சென்னையில் இருக்கும் என்னுடைய வீட்டை விற்று இந்த கல்லூரியை தொடங்கினேன்.

டிஎன்ஏ உடம்பில் இருந்தாலும் முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் எம்பிஏ படித்திருக்கிறார்கள். நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல எம்பிஏ தேவை. இசையை கற்றுக்கொண்டால் வாசிக்கலாம். ஆனால் இசையை உருவாக்குவது என்பது டிஎன்ஏவில் இருக்க வேண்டும். அடுத்த வருடம் நாங்கள் technoentrepreneurship கொண்டு வரப்போகிறோம். தொழில்நுட் பத்தை பயன்படுத்தி தொழில் முனைவு செய்வது குறித்தபடிப்பு இது. வழக்கமான நுழைவு தேர்வு மூலமாக அல்லாமல் பிரத்யேகமாக இந்த படிப்புக்கான மாணவர்களை தேர்வு செய்யபோகிறோம்.

உங்கள் கல்லூரியில் படித்து தொழில் தொடங்கியவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

மிகவும் குறைவுதான். கடந்த பத்து வருடங்களில் 20 நபர்கள் தொழில் தொடங்கி இருக்கலாம்.

சிஇஓ.களின் சம்பளம் அதிகமாக இருப்பது பற்றி சமீபத்தில் பல சர்ச்சைகள் உருவானதே?

சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சம்பளம் இருக்க வேண்டும். தகுதியும் திறமையும்தான் முடிவு செய்யவேண்டும். எங்கள் கல்லூரியில் அனைவருக்கும் ஒரே சம்பளம் கிடையாது.

இ-காமர்ஸ் நிறுவனங்களின் எதிர் காலம் குறித்து?

இப்போது எந்த தொழில்நுட்பத் துக்கும் நீண்ட காலம் கிடையாது. இன்று சிறப்பாக செயல்படுவது நாளை சிறப்பாக செயல்படும் என்று நம்ப முடியாது. ஒரு கட்டிடத்தின் கடைசி மாடி லிப்டில் ஒரு கீழே செல்வதற்கான பட்டன் மட்டுமே இருக்கும். முக்கிய நிறுவனங்கள் மட்டுமே கடைசி மாடிக்கு செல்லும். ஆனால் அந்த இடத்தை தக்க வைக்க போராட வேண்டி இருக்கும்.

தமிழ்நாட்டில் வேறு எங்கேயாவது கிரேட் லேக்ஸ் தொடங்க திட்டம் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் ஐஐஎம் இருந்தால் நான் கிரேட் லேக்ஸ் தொடங்கி இருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் மற்ற இடங்கள் ஆரம்பிக்கும் பட்சத் தில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாது. வேலையை ஈர்க்கும் திறமை சென்னைக்குதான் இருக்கிறது.

கிரேட் லேக்ஸ் கல்லூரியில் மாண்டரின் கற்றுக்கொடுக்க என்ன காரணம்?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டி இருக்கும் போது நம்முடைய மேலாளர்கள் மாண்டரின் கற்றுக்கொள்வது அவசியம் என கருதினேன். சீன மொழி மட்டுமல்லாமல் அவர்களின் கலாசாரத்தையும் கற்றுக்கொடுக்கிறோம். இது தொழில்ரீதியாக நமக்கு பயன்படும். இது ஒருபடி முன்னேற பயன்படும்.

நன்றி தி இந்து