`இந்த நூற்றாண்டு இந்தியர்களுக்கானது’ – தோஹா வங்கி தலைமைச் செயல் அதிகாரி பேட்டி

ஆரம்ப கால வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும், உழைப்பின் மூலம் அடுத்தடுத்த எல்லைகளை தொட்டவர் ஆர்.சீதாராமன். பல முனைவர் பட்டங்கள், சர்வதேச பொருளாதார மாநாடுகள் என்று தனது எல்லையை மேலும் விரிவாக்கி கொண்டே செல்கிறார் இவர். தோஹா வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான இவர் சில வாரங்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அந்த உரையாடலிலிருந்து…

மயிலாடுதுறை டூ தோஹா பயணம் பற்றி?

மாயவரம் தேசிய உயர்நிலை பள்ளியில் பத்தாவது படித்தேன். அதன் பிறகு பட்டயக் கணக்காளர் முடித்தேன். நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள் முன்னுக்கு வர கல்வியை தவிர எதுவும் இருக்க முடியாது. அப்பா ஹிந்தி டீச்சர். அப்போதைய சூழ்நிலையில் அவருக்கு வேலை போனது. அப்பாவை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நான் சில வேலைகள் செய்துதான் படித்தேன்.

நான் ஏழாவது படிக்கும் போதே டாக்டர் ஆவேன் இல்லையெனில் ஆடிட்டர் ஆவேன் என்று சொல்லி இருக்கிறேன். இதயமும் மூளையும் ஒன்றாக இணைந்தால்தான் லட்சியங்கள் நிறைவேறும். பெற்ற வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

பிடபிள்யூசி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆடிட்டராக இருந்தாலும் தொழில்நுட்பத்தில் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்தேன். அடுத்து பேங்க் ஆப் ஓமானில் பஹ்ரைன் அண்ட் குவைத்தின் தொழில்நுட்ப பிரிவின் தலைவராக சேர்ந்தேன். அதன்பிறகு செயல்பாட்டு பிரிவு தலைவராக இருந்தேன். 35 வயதில் வங்கியை பொறுப்பேற்கும் அளவுக்கு மாறினேன்.

வங்கியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் நீங்கள் எப்படி இவ்வளவு முனைவர் பட்டங்களைப் பெற முடிந்தது?

ஏற்கெனவே சொன்னது போல கல்விச்செல்வம் கடைசி வரை நம்மிடம் இருக்கும் என்று நம்பினேன். அதனால் தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் வேலை, பணம் உள்ளிட்ட அனைத்தையும் நீக்கிவிட்டால் கூட, என்னிடம் இருக்கும் அறிவை யாராலும் நீக்க முடியாது. இதை புரிந்துகொண்டால் ஒவ்வொருவரும் கற்க ஆரம்பித்துவிடுவார்கள். உலகம் அறிவு சார்ந்த சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. நீங்களும் அதனை நோக்கி செல்லும் பட்சத்தில் பயமே கிடையாது. இதுதான் பாதுகாப்பு கூட. உடனே உங்களுக்கு படித்தவர்கள் அனைவரும் சாதித்துவிட்டார்களா என்று கேட்க தோன்றும். பயன்படுத்துவதில் அனைத்தும் இருக்கிறது.

வட்டிக்கு விடக்கூடாது என்பது கொள்கையாக இருக்கும் போது அரபு நாடுகளில் வங்கிகள் எப்படி செயல்படுகின்றன?

எங்களுடைய வங்கி இஸ்லாமிய தேசத்தில் இருந்தால் கூட நாங்கள் கமர்ஷியல் வங்கி. கமர்ஷியல் வங்கியில் வட்டி இருக்கும். ஆனால் ஷரியா வங்கியில் லாபத்தை பகிர்ந்தளிக்க வேண்டும். எவ்வளவு லாபம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்படும். ஷரியா வங்கியில் சொத்துகளை அடமானம் வைத்துதான் கடன் வாங்க வேண்டி இருக்கும். வட்டியை தவிர லாப நஷ்ட கணக்குதான் அங்கு முக்கியம்.

கச்சா எண்ணெயின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

கச்சா எண்ணெயின் தேவையில் பெரிய மாற்றம் இல்லை. உற்பத்தியில் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. அதற்காக இவ்வளவு சரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே. காரணம் என்றால் ’ஆயில் பியூச்சர்ஸ்’களே இல்லை என்னும் நிலைமை இருக்கிறது. தங்கத்திலும் இதே நிலைமைதான் இருக்கிறது. ஒருவேளை டாலர் மதிப்பு குறைந்தால் இவை மீண்டும் வர வாய்ப்பு இருக்கிறது.

ஷேல் கேஸ் உற்பத்தி இருந்தாலும் அது சுற்றுச்சூழலுக்கு உகந்தது இல்லை. எப்படி இருந்தாலும் உற்பத்தி செலவு 60 டாலர் அளவில் இருக்கிறது. என்னுடைய கணிப்பின் படி கச்சா எண்ணெய் விலை உயரும். அதற்காக ஒரு பேரல் 100 டாலர் என்ற விலையை தொடாது. இன்னும் ஆறு மாதங்களில் ஒரு பேரல் 65 டாலருக்கு செல்லலாம். ஒரு வருடத்துக்கு மேல் 75 டாலர் வரை செல்லலாம்.

அமெரிக்க மத்திய வங்கி டிசம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்தினால் என்ன பாதிப்பு இருக்கும்?

சர்வதேச பங்குச் சந்தைகள் சரிவடையும். இந்திய ரூபாய் உள்ளிட்ட வளரும் நாடுகளின் கரன்ஸி சரியக்கூடும். ஆனால் இந்திய சரிவு அவ்வளவு பெரிதாக இருக்காது. சமீபத்தில் சீனா யூவான் சரிவின் போது மற்ற நாடுகளின் கரன்ஸி மதிப்பு பலமாக சரிந்தது. ஆனால் இந்திய கரன்ஸி 4 சதவீத அளவில்தான் சரிந்தது. இந்திய பொருளாதாரம் மிகவும் பலமானது.

இந்த நூற்றாண்டு இந்தியர்களுக்கானது. இதற்கு பல காரணங்கள். இந்தியர்களின் சராசரி வயது, நுகர்வு தன்மை, ஜனநாயகம் என எந்த கணக்கினை போட்டுப்பார்த்தாலும் இந்த நூற்றாண்டு இந்தியர்களுக்கானதுதான். பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை குறைவாக இருப்பது, ரெமிட்டன்ஸ் உயர்வது உள்ளிட்ட பல விஷயங்கள் சாதகமாக இருக்கிறது. நாம் கவனிக்க வேண்டிய விஷயம் அந்நிய நேரடி முதலீடு மட்டும்தான்.

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 35 பில்லியன் டாலர்தான். ஆனால் சீனாவின் அந்நிய நேரடி முதலீடு 128 பில்லியன் டாலர். இந்த விஷயத்தில் முதல் பத்து இடங்களில் கூட இந்தியா இல்லை. இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க வேண்டும்.

நன்றி : தி இந்து