வங்கித் துறைக்கு சவால்கள் நல்லது: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நிர்வாக இயக்குநர் உபேந்திர காமத் பேட்டி

இந்தியாவில் பட்டியலிடப்படாத தனியார் வங்கிகள் நான்கு உள்ளன. இதில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியும் ஒன்று. பல சவால்களைக் கடந்து இந்த வங்கியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நிலையில் வங்கியின் நிர்வாக இயக்குநர் ஹெச்.எஸ்.உபேந்திர காமத்தை தூத்துக்குடியில் உள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்தோம். அவருடனான சந்திப்பில் இருந்து…

1973-ம் ஆண்டு யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பணியில் சேர்ந்தவர். 35 வருடங்கள் பணியாற்றிவர், கனரா வங்கியின் செயல் இயக்குநராகவும், விஜயா வங்கியின் தலைவராகவும் இருந் தவர். சுமார் 40 வருடம் வங்கித்துறை அனுபவம் பெற்றவர்.

நீங்கள் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை வங்கியின் நிர்வாக இயக்குநராக இருந்தவர். இந்த சிறிய வங்கியில் உங்களை எப்படி தகவமைத்துக்கொண்டீர்கள்.?

வங்கி பட்டியலிடப்படாததாக இருந்தாலும் சரி, தனியார் வங்கியாக இருந்தாலும் சரி, வேலைகளில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்து இடங்களிலும் ஒரே வேலை தான். ஒரே வித்தியாசம் என்ன வென்றால், இது சிறிய வங்கி என்பதால் குறிப்பிட்ட தொகைக்கு மேல் கடன் கொடுக்க முடியாது. அதிக ரிஸ்க் இருக்கும் துறைகளுக்கு கடன் கொடுக்க முடியாது. அடுத்து, இங்கு பணியாளர்களின் உற்சாகம் அதிகம் இருப்பதை பார்க்க முடிகிறது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கு வதில் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். அதே சமயம், பொதுத்துறை வங்கிகளின் பணியாளர்களுக்கு கிடைத்த பணி அனுபவம் வேறாக இருக்கும். அந்த அனுபவம் இங்கு இருப்பவர்களுக்கு கிடைப்பதற்கான பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருக்கிறோம்.

ஒரு சமூகத்தின் வங்கியாகதான் உங்கள் வங்கி கருதப்படுகிறதே! மாற்றும் எண்ணம் உள்ளதா?

அதற்கான தேவை இல்லை என்று நினைக்கிறேன். இது உண்மை தானே. அதே சமயத் தில் மற்ற சமூகத்தினரும் எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார்கள். வெளிமாநிலங்களில் 100 க்கும் மேற்பட்ட கிளைகளில் பல சமூ கத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

உங்களது பெரும்பாலான கிளைகள் தமிழ்நாட்டில் உள்ளன. மற்ற மாநிலங்களில் கவனம் செலுத்தும் திட்டம் இல்லையா?

452 கிளைகளில் 320 கிளை கள் தமிழ்நாட்டில் உள்ளன. மெல்ல மெல்லதான் இந்த நிலை மையை மாற்ற முடியும். இனி திறக்க இருக்கும் கிளை களில் அதிக கிளைகள் வெளி மாநிலத்தில் இருக்குமாறு முடி வெடுத்திருக்கிறோம். ஆனால் மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் கவனம் செலுத்த இருக்கிறோம். இன்னும் மூன்று நான்கு வரு டங்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் கிளைகள் திறக்கும் திட்டம் இல்லை.

சில வருடங்களுக்கு பிறகு உங்கள் வங்கியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஜனவரி 29 -ம் தேதி நடக்க இருக்கிறது. என்ன முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன?

நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் பல விஷயங்களைப் பேச இருக்கிறோம். ஆடிட்டர் (statutory auditor) நியமனம், ஐபிஓ வெளியிடுவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டும். பொதுக்குழு ஐபிஓவுக்கு அனுமதி கொடுக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம். அனுமதி கிடைத்த பிறகு ஐபிஓ வெளியிட 6 முதல் 9 மாதங்கள் ஆகலாம்.

உங்கள் வங்கியின் காசா விகிதம் மிகவும் குறைவாக உள்ளதே. உயர்த்தும் திட்டம் உள்ளதா?

கடந்த செப்டம்பர் மாதத்தில் வங்கித்துறையின் சராசரி காசா விகிதம் 32%. எங்கள் வங்கியின் காசா விகிதம் 19 சதவீதம். எங்களது பெரும்பாலான கிளை கள் தமிழ்நாட்டில் உள்ளன. தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட வங்கிகள் பல உள்ளன. அதேபோல பல பொதுத்துறை வங்கிகளின் கிளை கள் இங்கு உள்ளன. மொத்தமாக சொல்வதென்றால் இங்கு போட்டி அதிகம். இது ஒரு காரணம்.

பணத்தை குறுகிய கால டெபாசிட்டுகளுக்கு மாற்றும் வசதி இருக்கிறது. குறிப்பிட்ட தொகைக்கு மேல் நடப்பு கணக்கில் இருக்கும் தொகை தானாக குறுகியகால டெபாசிட்களுக்கு மாறிக் கொள்ளும்.

தவிர சேமிப்பு கணக்குக்கு கொடுக்கும் வட்டி விகிதம், டெபாசிட்டுகளுக்கு கொடுக்கப் படும் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் சேமிப்பு கணக்குகளில் அதிக பணத்தை வைத்துக்கொள்ள மக்கள் விரும்புவதில்லை. இந்த காரணங்களால் காசா விகிதம் குறைவாக உள்ளன. ஆனால் அதேசமயம் காசா தொகை வளர்ந்துகொண்டே இருக்கிறது.

ரிசர்வ் வங்கி 1.25 சதவீதம் அளவுக்கு ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தும் கூட உங்களது அடிப்படை வட்டி விகிதம் 10.4 சதவீதமாக இருக்கிறதே?

ரிசர்வ் வங்கி குறைத்த அளவுக்கு எந்த வங்கியும் குறைக்க வில்லை. முன்னதாக எங்களது அடிப்படை வட்டி விகிதம் 10.75 சத வீதமாக இருந்தது. இரு கட்டங் களாக குறைத்து இப்போது 10.4 சதவீதமாக இருக்கிறது. ரெபோ விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடம் இருந்து நாங்கள் வாங்கும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி. ஆனால் எங்கள் தேவையில் ரெபோ மூலமாக நாங்கள் வாங்குவது மிக மிக குறைவு. நாங்கள் கொடுக்கக் கூடிய கடன்களில் 98 சதவீதம் அளவுக்கு டெபாசிட்களை நம்பி இருக்கிறது.

இந்தியாவில் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் காலத்துக்கு ஏற்ப மாறக்கூடியது. ஆனால் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் நிலையானது. நாங்கள் டெபாசிட்களுக்கு ஏற்கெனவே அதிக வட்டி கொடுத்து வந்தோம். ஆனால் இன்று ரெபோ விகிதம் குறைக்கப்பட்டதால் உடனடியாக வட்டியை குறைக்க முடியாது. இந்த சவால் எங்களுக்கு மட்டு மல்லாமல் அனைத்து வங்கிக ளுக்கும் இருக்கிறது.

மேலும் ரெபோ விகிதம் குறைக்கப்படுமா?

நுகர்வோர் பணவீக்கம் மேலும் உயராத பட்சத்தில் நடப்பு காலாண்டில் ஒரு முறை வட்டி விகிதம் குறைக்கப்படலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் கடன் கொடுக்கவில்லையே?

இப்போது கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு கடன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறோம். நாங்கள் சிறிய வங்கியாக இருப்பதால் நிறுவனங்களுக்கு அதிக கடன் கொடுக்க முடியாது. சிறப்பான நிறுவனமாக இருக்கும்பட்சத்தில் அதிக பட்சம் 50 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க முடிவெடுத் திருக்கிறோம்.

ஹவுசிங் பைனான்ஸ் தொழில் எப்படி இருக்கிறது.?

இந்த துறையில் பிரமாதமான வளர்ச்சி இல்லை. அதேபோல ஆட்டொமொபைல் துறையிலும் பெரிய வளர்ச்சி இல்லை. சந்தையில் ஒப்பிடும் போது வட்டி விகிதம் அதிகம்.

இந்த வருடம் கடன் வளர்ச்சி விகிதம் எப்படி இருக்கும்?

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் கடன் வளர்ச்சி விகிதம் 12.5 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் 15 சதவீதம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த நிதி ஆண்டிலும் இதே அளவு வளர்ச்சி விகிதமே இருக்கும். இது பாதுகாப்பான வளர்ச்சி விகிதம்.

பேமெண்ட் வங்கி, சிறிய வங்கிகள் வர இருக்கின்றன. போட்டி எப்படி இருக்கும்?

7 லட்சம் கிராமங்களுக்கு வங்கி சேவை கிடைக்கவில்லை. அதனால் புதியவர்களை வர வேற்கிறேன். கடன், ஜிடிபி வளர்ச்சி விகிதம் இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் புதியவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. புதியவர்கள் வரும் போதுதான் சவால்கள் இருக்கும். இந்த துறைக்கு அது நல்லது.

நன்றி தி இந்து