தொழில்முனைவு என்பது ஒருவழிப்பாதை: ஹோம்லேன் டாட் காம் நிறுவனர் பேட்டி
அனைத்து விதமான பொருட்களையும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் விற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக குறிப்பிட்ட பிரிவுகளுக்கான இ-காமர்ஸ் நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள், பர்னிச்சர் என ஒவ்வொரு பிரிவுக்குமான நிறுவனங்கள் வளர்ந்து வருகின்றன. பர்னிச்சர் பிரிவில் வளர்ந்து வரும் நிறுவனமான ஹோம்லேன் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீகாந்த் ஐயரை பெங்களூருவில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடியதிலிருந்து…
பூர்வீகம் சேலம். ஆனால் பெங்களூரூவில் நீண்ட காலமாக வசிப்பவர். ஆர்விசி கல்லூரியில் கணிப்பொறி அறிவியலும், ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தில் மென்பொருள் அறிவியலில் டிப்ளமோ முடித்தவர். விப்ரோ நிறுவனத்தில் கிடைத்த வேலையை மூன்று மாதங்களில் விட்டவர்.
விப்ரோ வேலையை ஏன் விட்டீர்கள்?
கொஞ்சம் அதிகமாக வேலை இருந்தது. இவ்வளவு வேலையை செய்வதற்கு சொந்தமாக எதாவது செய்யலாமே என்று நினைத்து வேலையை விட்டேன். அதேசமயம் இன்னொரு பயமும் இருந்தது. என்னுடைய அப்பா ஒரு சிறிய கம்பெனியை தொடங்கி நடத்தி வந்தார். 1970களில் ஆரம்பித்து 2000 வரைக்கும் தொழில் நடத்தினார். ஆரம்பிக்கும் போது ஏழு வாடிக்கையாளர்கள். கம்பெனியை மூடும்போது அதே ஏழு வாடிக்கையாளர்கள்தான். எட்டாவது வாடிக்கையாளரை பிடிக்க முடியவில்லை. இந்த பயமும் இருந்தது.
இது ஒரு வழிப்பாதை திரும்ப முடியாது என்று என்னுடைய நண்பர் கூறினார். நான் திரும்ப வரவில்லை என்று கூறி ஐடி துறையில் ஒரு நிறுவனம் ஆரம்பித்தேன். 2000-ம் ஆண்டு கல்வித்துறையில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தேன். அந்த நிறுவனத்தை டியூடர்விஸ்டா நிறுவனம் வாங்கியது. டியூடர் விஸ்டா நிறுவனத்தை சர்வதேச நிறுவனமான பியர்சன் வாங்கியது. அந்த நிறுவனத்தின் சிஒஓ-வாக ஒரு வருடம் இருந்தேன். 20 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு போக கூடாது என்று எடுத்த முடிவு சரி என்பதை மீண்டும் உணர்ந் தேன். அதனால் அந்த வேலையை மீண்டும் விட்டு விட்டேன்.
1993-ல் வேலையை விடுவதற்கும் இப்போது வேலையை விடுவதற்கு மான வித்தியாசம் என்ன?
93-ல் வேலையை விடும் போது உணர்ச்சிவசப்பட்டு, குறுகியகால நோக்கத்துடன் எடுத்திருக்கலாம். ஆனால் இப்போது வேலையை விடும் போது அனுபவத்துடன் எடுத்த முடிவு. பணத்துக்காக வேலையை விடவில்லை. வேலை செய்யும் போது திருப்தி, உற்சாகம் தரவேண்டும். இன்று ஆபிஸ் போக வேண்டுமா என்று யோசிக்கும் தருணமே வேலையை விடுவதற்கான சிறந்த தருணம்.
நிறுவனங்களில் பணிபுரியும் போது என்ன சிரமம் இருக்கிறது?
கார்ப்பரேட் நிறுவனங்களில் உள்ள பிரச்சினையே கருத்தொற்று மையை ஏற்படுத்துவதுதான். ஒரு முடிவெடுக்கும் போது சிலர் சரி என்று கூறுவார்கள், சிலர் தவறு என்று கூறுவார்கள். இதை சொல்வதற்கு அவர்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். இதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்தி வேலையை செய்வது என்பது மிகப்பெரிய சவால். இதிலேயே நேரம் வீணாகிறது. தவிர அனைவருடைய இலக்கும் ஒன்றாக இருப்பது இல்லை. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஒருவருக்கு ஓட்டுரிமை இருக்கிறதோ இல்லையோ ரத்து செய்யும் அதிகாரம் உள்ள நபர்கள் இருப்பார்கள். வேலை செய்வதை தவிர, பல வேலைகள் இருக்கின்றன.
இதே பிரச்சினைதானே உங்கள் நிறுவனத்திலும் இருக்கும்?
இங்கு அனைவருடைய இலக்கும் நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதுதான். ஆனால் பெரிய நிறுவனங்களில் ஒரே இலக்கு இருக்க முடியாது. தவிர ஒரு விஷயத்தை செய்வதற்கு அனுமதி மட்டுமே வாங்கவேண்டுமே தவிர, யாரிடம் செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ற கேள்வியே இங்கு கிடையாது. ஏன் செய்ய வேண்டும் என்பதற்கான விளக்கம் கொடுத்தால் போதுமானது.
ஹோம்லேன் டாட் காம் ஐடியா எப்படி உருவானது?
கல்வித்துறையை தவிர்த்து வேறு எதாவது துறையில் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்தோம். மேலும், பிளாட் வாங்கிய போது இன்டீரியர் டெகரேஷன் எப்படி செய்வது என்பது தெரியாமல் மாட்டியதன் விளைவுதான் நிறுவனம். இப்போதும் 90 சதவீத சந்தை முறைப்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. சிறியதாக இருக்கும் ஒரு பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்வதை விட ஏன் இந்த பெரிய பிரச்சினையை தீர்க்கலாமே என்று யோசித்தோம், நிறுவனம் தொடங்கினோம்.
உங்களுடைய பிஸினஸ் மாடல் என்ன?
இரண்டு விதமான பர்னிச்சர்கள் உள்ளன. டேபிள், சேர் போன்ற அசையும் பர்னிச்சர்கள். கபோர்ட், டிரஸ்ஸிங் டேபிள், லாப்ட் உள்ளிட்ட அசையா பர்னிச்சர்கள். நாங்கள் இருப்பது அசையா பர்னிச்சர்கள் பிரிவில். எங்களுடைய நபர்கள் உங்களது வீட்டுக்கு வருவார் கள். அளவெடுப்பார்கள். எங்களது தொழிற்சாலையில் செய்து ஒரே வாரத்தில் உங்கள் வீடுகளில் பொறுத்திவிடுவார்கள். மாதக் கணக்கில் உங்களது வீட்டை சேதப் படுத்தாமல் எளிதாக செய்துகொடுப் பதுதான் எங்களது பணி.
அசையா பர்னிச்சர் பிரிவுகள் என்பது புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு தானே தேவைப்படும். அசையும் பர்னிச்சர்கள் என்றால் இன்னும் பெரிய சந்தையை பிடிக்கலாமே?
இந்த வருடம் மட்டும் இந்தியா வில் 10 லட்சம் வீடுகள் கட்டப்படு கின்றன. ஒரு வீட்டுக்கு 5 லட்ச ரூபாய் செலவு செய்கிறார்கள். ஒரு வருடத்துக்கு அசையா பர்னிச்சர்கள் சந்தை சுமார் 50,000 கோடி ரூபாய். தவிர ஒவ்வொரு வருடமும் 10 சதவீத வளர்ச்சி இருக்கும். மொத்த சந்தையையும் பிடிக்க வேண்டும் என்று இல்லையே. இன்னும் சில வருடங்களுக்குள் 1,000 கோடி சந்தையை பிடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
இ-காமர்ஸ் பிஸினஸ் என்றாலே தள்ளுபடி என்றாகிவிட்டதே. நீங்கள் தள்ளுபடி கொடுக்கிறீர்களா?
ஆன்லைன் டூ ஆஃப் லைன் என்பதுதான் எங்களுடைய மாடல். வாடிக்கையாளர்களை வரவைப் பதற்கு மட்டும்தான் ஆன்லைன். அதற்கு பிறகு அனைத்துமே நேரடியான தொடர்பில்தான் நடக்கிறது. சொல்லப்போனால் நாங்கள் கொஞ்சம் காஸ்ட்லிதான்.
நன்றி : தி இந்து
Recent Comments