‘நாங்கள் வாடிக்கையாளரை நோக்கி செல்கின்றோம்’
வீடு வாங்கும் பெரும்பாலான வர்கள் கடன் வாங்காமல் வீடு வாங்க மாட்டார்கள். ஒரு காரணம் வீடு வாங்குவதற்கான மொத்த தொகையையும் யாரும் கையில் வைத்திருப்பதில்லை. தவிர வீட்டுக்கடனில் வரிச்சலுகை கிடைக்கிறது என்பதால் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. வீட்டுக்கடன் வழங்குவதில் ஆறாவது இடத்தில் இருக்கும் நிறுவனமான டாடா கேபிடல் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.வைத்திய நாதன் சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவருடனான உரையாடலில் இருந்து…
மதுரையில் பிறந்தவர். சி.ஏ முடித்தவர். ஆரம்ப காலங்களில் வேறு சில நிறுவனங்களில் சில வருடங்கள் பணிபுரிந்தவர் டாடா குழுமத்தில் 33 வருடங்களாக இருக்கிறார்.
வீட்டுக்கடன் துறை இப்போது எப்படி இருக்கிறது?
2013-ம் ஆண்டுக்கு முன்பு இந்த துறையில் 20-22 சதவீத வளர்ச்சி இருந்தது. ஆனால் கடந்த இரு வருடங்களாக 18 முதல் 20 சதவீதம் வளர்ச்சி இருக்கிறது. முன்பு முதலீட்டுக்காக வீடு வாங்குபவர்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் ரியல் எஸ்டேட்டில் பெரிய வளர்ச்சி இல்லை என்பதால் அவர்கள் கவனத்தை பங்குச்சந்தையில் செலுத்தினர். இப்போது பங்குச்சந்தை சரிவினால் அவர்களின் கவனம் இனி ரியல் எஸ்டேட்டில் இருக்கும் என்று நம்புகிறோம். நாங்கள் 30 சதவீத வளர்ச்சி அடைகிறோம்.
சந்தையில் முதலீட்டாளர்களே இல்லை என்னும் சூழ்நிலையில் வருங்காலத்தில் வளர்ச்சி எப்படி இருக்கும்?
இந்தியாவில் நடுத்தர மக்களுக்கு 3 கோடி வீடுகள் தேவை. இளம் வயதிலேயே நன்றாக சம்பாதிக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். ஆரம்பத்தில் ஒரு படுக்கை அறை உள்ள வீடுகளை வாங்குகின்றனர். சில வருடங்களுக்கு பிறகு சம்பளம் உயர்ந்தவுடன் ஒரு படுக்கை அறை வீட்டை விற்று இரு படுக்கை அறை உள்ள வீட்டினை வாங்குகின்றனர். ரூ.40 லட்சத்துக்கும் கீழான வீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் ரூ.70 லட்சத்துக்கு மேலான வீடுகளில்தான் கவனம் செலுத்துகின்றனர்.
தேவை இருந்தாலும் கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கின்றனவே?
கட்டி முடிக்கப்பட்டு விற்கப்படாமல் உள்ள வீடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. 8 முதல் 10 மாதங்களில் அந்த வீடுகள் விற்கப்பட்டு விடுகின்றன. ஆனால் சில நகரங்களில் 20-30 மாதங்களாக வீடுகள் விற்கப்படாமல் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் 50 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள வீடுகள். குறிப்பாக ரூ.2 கோடிக்கு மேல் உள்ள வீடுகளை இப்போது விற்பது கடினமாக இருக்கிறது.
ஒரு ரியல் எஸ்டேட் வீழ்ச்சி வருவதற்காக வாய்ப்பு இருக்கிறதா?
அமெரிக்கா மற்றும் சீனாவில் நிகழ்ந்ததைப் போல் இங்கு நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இங்கு ரிசர்வ் வங்கி மற்றும் நேஷனல் ஹவுசிங் வங்கி ஆகிய ஒழுங்கு முறை ஆணையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன. பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் வீழ்ச்சிக்கு வாய்ப்பில்லை. உதாரணத்துக்கு நிலம் வாங்குவதற்கு வங்கிகள் கடன் கொடுக்க முடியாது. எங்களை போல ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் மட்டுமே கொடுக்க முடியும். நாங்கள் கொடுத்தாலும் அந்த கடன் திரும்பி வருமா என்று பார்த்துதான் கொடுப்போம். ஒருவேளை அந்த கடன் திரும்பி வரவில்லை என்றால் நிலத்தை விற்று பணம் எடுப்பது மிகவும் சிரமம். வீடாக இருக்கும் பட்சத்தில் எளிதாக விற்க முடியும். இதனால் அதிகமான வீடுகளை கட்ட முடியாது. இதுபோல பல விதிமுறைகள் உள்ளது. மேலும் இப்போது ரியல் எஸ்டேட் மசோதா வரப்போகிறது. துறையில் சில பிரச்சினைகள் இருந்தாலும் பெரிய வீழ்ச்சி வருவதற்கு வாய்ப்பு இல்லை.
பட்ஜெட்டில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
நிதிச் சலுகை விஷயத்தில் பெரிய சலுகை இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரியல் எஸ்டேட் மசோதா உள்ளிட்ட விஷயங்களில் தெளிவு இருக்கும். இந்த துறையில் இருக்கும் அனுமதிகளை எளிதாக்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எதிர்பார்க்கிறோம். இதை எளிதாக்கும் போது வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டு கட்டணத்தில் நாங்கள் சலுகை வழங்க முடியும்.
பெரும்பாலும் அனைவரிடத்திலும் வங்கி கணக்கு இருக்கிறது. வங்கியில் வீட்டுக்கடன் வாங்குவதை தவிர்த்து ஏன் உங்களிடம் வாங்க வேண்டும்?
வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டும். ஆனால் நாங்கள் வாடிக்கையாளர் பின்னால் செல்கின்றோம். நாங்கள் ஆவணங்களை சரி பார்த்த பிறகுதான் கடன் வழங்குகிறோம். அதனால் வாடிக்கையாளர்கள் இன்னொரு வழக்கறிஞரிடம் செல்லத் தேவையில்லை. தவிர வாடிக்கையாளர்களுக்கு தேவையான நிதி ஆலோசனை கொடுக்கிறோம்.
உங்களது வாராக்கடன் எவ்வளவு இருக்கிறது?
இந்த துறையில் 1 சதவீதம் அளவுக்கு இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் வாராக்கடன் 0.7 சதவீதமாக இருக்கிறது. கடன் வாங்கியவருக்கு வேலை போய்விட்டது, அல்லது தொழில் நஷ்டம் என எதாவது காரணத்தால் கடன் கட்ட முடியவில்லை என்றால் அந்த வீட்டை விற்பதற்கு நாங்களே உதவி செய்கிறோம். அந்த வீட்டை வாங்குபவருக்கும் கடன் கொடுக்கிறோம். எங்கள் தொகையை எடுத்துக் கொண்டு கடன் வாங்கியவரிடம் கொடுக்கிறோம்.
ஆனால் வாடிக்கையாளர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்.
இந்த துறையில் நீங்கள் ஆறாவது பெரிய நிறுவனமாக இருந்தாலும் உங்களது கிளைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 6 கிளைகள் மட்டுமே உள்ளதே?
திருநெல்வேலி, புதுச்சேரி, காஞ்சிபுரம், அண்ணாநகர் (சென்னை) உள்ளிட்ட இடங்களில் புதிய கிளைகளை திறக்க இருக்கிறோம். நாங்கள் நகரங்களில் இருந்தாலும் எங்களது சராசரி கடன் வழங்கும் அளவு 27 லட்சம் ரூபாய்தான். நகரங்களில் இருந்தாலும் புற நகர்பகுதியில் இருக்கும் வீடுகளுக்குதான் கடன் வழங்குகிறோம். தவிர எங்களுக்கு நிறைய களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். அதனால் கிளை எங்கு இருக்கிறது என்பது குறித்த பிரச்சினை இல்லை.
பெரும்பாலான ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் ஏன் இன்னும் ஐபிஓ கொண்டு வரவில்லை?
ஐபிஓ கொண்டு வருவதற்கான முதல் நோக்கம் நிதிதான். எங்களிடம் போதுமான நிதி இருப்பதால் இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை. இன்னும் இரண்டு வருடங்களுக்கு பிறகு அதைப்பற்றி யோசிக்கலாம்.
முதலீட்டுக்காக இரண்டாவது வீடு வாங்குபவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?
இரண்டாவது வீடு வாங்குவது தவறில்லை. ஆனால் நீண்ட கால நோக்கில்தான் வாங்க வேண்டும். தரமான பில்டர், நல்ல இடத்தில் வீடு இருந்தால் அதை வாடகைக்கு விட முடியும். அதேபோல 60 வயதுக்கு மேல் இருப்பவர்கள் இன்னொரு வீடு குறித்து யோசிப்பதை விட வேறு முதலீடுகளில் கவனம் செலுத்தலாம்.
மேலும் நிலம் வாங்கும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீடாக இருந்தால் வாடகைக்கு விட முடியும். ஆனால் புற நகரில் இடம் வாங்கும் போது தினசரி பார்க்க முடியாது. மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
நன்றி : தி இந்து.
Recent Comments