‘உத்தி அடிப்படையில் தவறான முடிவுகள் எடுக்க கூடாது’

பெரிய தொழில் நிறுவனங் களுக்கு பலவிதமான தொழில் வர்த்தக அமைப் புகள் இருக்கின்றன. ஆனால் சிறு நகரங்களில் உள்ள வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் தங்களை அடுத்த கட்டத்துக்கு வளர்த்துக்கொள்ள உதவியாக உள்ள அமைப்பு Young Entrepreneur School. (யெஸ்). 2004 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்புக்கு இப்போது தமிழ்நாட்டின் பல இடங்களில் கிளைகள் உள்ளன. திண்டுக்கல், சேலம், ராமநாதபுரம், சென்னை, கரூர் உள்ளிட்ட பல நகரங்களில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் வி. நீதிமோகனை மதுரையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

தங்களுடைய குடும்ப நிறுவன மான வைகை குழும நிறுவனங் களின் தலைவராக இருக்கும் அதே வேலையில் `யெஸ்’ அமைப்பையும் நிர்வகித்து வருகிறார். `யெஸ்’ அமைப்பு குறித்து அறிவதற்கு முன்பு அவரது நிறுவன செயல்பாடுகள் குறித்து விவாதித்தோம்.

உங்கள் குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து?

ரைஸ்பிரான் (அரிசி தவிடு) கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறோம். இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்கிறது எங்களது நிறுவனம். இதனை உற்பத்தி செய்து, சுத்திகரிப்பு செய்யும் நிறுவனங்கள் மற்றும் பவுல்ட்ரிகளிடம் விற்றுவிடுவோம். அவர்கள் அதனை சுத்திகரித்து பிராண்ட் செய்து விற்பார்கள். தவிர நாங்கள் ஏற்றுமதியும் செய்கிறோம். தீப்பெட்டியின் மூலப்பொருளான பொட்டாஷியம் குளோரைட் உற்பத்தியிலும் இருக்கிறோம். டெக்ஸ்டைல் தொழிலில் முன்பு இருந்தோம். ஆனால் இப்போது விலகிவிட்டோம்.

ரைஸ்பிரான் எண்ணெய்க்கு சந்தையில் தேவை இருக்கிறது. ஏன் நீங்களே சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடவில்லை?

கடந்த 15 வருடங்களாக இதற்கு திட்டமிட்டிருக்கிறோம். ஜிஎஸ்டி வந்த பிறகு இந்த சந்தை சமநிலை அடையும். அப்போது எங்களது சொந்த பிராண்டில் களம் இறங்குவோம். ஏற்றுமதி மற்றும் பல நாடுகளில், பல பொருட்களில் விரிவாக்கம் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

யெஸ் அமைப்பு தொடங்குவதற்கு என்ன காரணம்?

இந்த அமைப்பை தொடங்கும் போது எனக்கு 46 வயது. தொழி லுக்கு வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனக்கு ஆலோ சனை சொல்ல நண்பர்கள் இருக்கி றார்கள். சரியான முடிவு எடுக்கும் பட்சத்தில்தான் வெற்றி அடைய முடியும். ஆனால் பல தவறான முடிவுகளை எடுத்தோம். உதாரணத் துக்கு டெக்ஸ்டைல் தொழிலில் பல தவறான முடிவுகள் எடுத்தோம். இப்போது அதில் இல்லை.

சரியான திசையில் ஓடிக்கொண்டிருக்கும்போது கீழே விழுந்துவிட்டால் எழுந்து ஓடலாம். ஆனால் தவறான திசையில் ஓடி அங்கே விழுந்தால் என்ன பயன்? அப்போதுதான் செயல்பாடுகளில் தவறு நடக்கலாம். ஆனால் உத்தி அடிப்படையில் தவறான முடிவுகள் எடுக்க கூடாது என்பது புரிந்தது.

ஒரு முறை தென் ஆப்பிரிக்கா சென்றபோது அங்கிருப்பவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்துவதை பார்த்தோம். அதற்கு காரணம் அறிவையும், திறமையையும் (knowledge and skill) சரியாக ஒருங் கிணைத்து கொண்டு செல்கின்றனர் என்பது புரிந்தது. அதனை இங்கு இருப்பவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காக யெஸ் அமைப்பை தொடங்கினோம்.

பல வருடங்களாகவே பல்வேறு தொழில் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நீங்கள் தனியாக ஒரு அமைப்பு தொடங்க என்ன காரணம்?

தொழிலைத் தொடங்கிய பிறகு கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. சிலர் எம்பிஏ கல்லூரிகளில் சென்று படிக்கின்றனர். ஆனால் அனைவருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. 10வது படித்தவர்கள்கூட எங்களிடம் உறுப்பினராக இருக்கின்றனர். சிறிய தொழில் செய்பவர்களுக்கு அவர்கள் தொழிலை எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது என்பது தெரிவதில்லை. அவர்களுக்கு வழிகாட்டுவதற்குதான் இந்த அமைப்பை தொடங்கினோம்.

இரண்டு வகையான நிர்வாக முறை உள்ளது. நிறுவனத்தை எப்படி நடத்துவது, எப்படி கணக்குகளை பராமரிப்பது என்பது ஒருமுறை. எந்த உத்தியை வகுப்பது என்பது ஒரு இன்னொரு நிர்வாக முறை. இதைதான் நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம். பலர் ஏதோ ஒரு சூழ்நிலையால் தொழில் தொடங்கி இருப்பார்கள். திட்டமே இல்லாமல் ஆரம்பித்திருப்பார்கள். தொழிலும் விரிவடைந்திருக்கும். ஆனாலும் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் எப்போதும் போல தொழில் நடந்துகொண்டிருக்கும். இதனை மாற்றுவதற்காகத்தான் இந்த அமைப்பைத் தொடங்கினோம். ஒவ்வொரு அமைப்புக்கும் ஒரு லட்சியம் இருக்கும். எங்களது இலக்கு அறிவை பகிர்ந்துகொள்வது.

எந்த வகையில் இந்த அமைப்பு செயல்படுகிறது?

இங்கு எதுவுமே இலவசம் கிடையாது. அதேபோல அநாவசிய செலவுகள் கிடையாது. ஐந்து பகுதிகளாக பிரித்துள்ளோம். நிதி, மனிதவளம், மார்க்கெட்டிங், செயல்பாடுகள் மற்றும் உத்தி என ஒவ்வொரு பிரிவுக்கும் ஆண்டுக்கு இரண்டு வகுப்புகள். இது அறிவுக்கு. உத்வேகத்துக்கு வெற்றியடைந்த தொழில்முனைவோர் ஒருவர் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இதுதவிர சிறப்பு கூட்டங்களும் நடத்துகிறோம்.

உங்கள் அமைப்பில் மாணவர்கள் இருக்கிறார்களா?

இல்லை. மாணவர்களை எங்கள் அமைப்பில் சேர்ப்பதில்லை. அவர்களை சேர்த்தால், என்ன தொழில் செய்ய வேண்டும் என்பது குறித்த கேள்வி வரும். செய்யும் தொழிலைதான் மேம்படுத்த முடியுமே தவிர, என்ன தொழில் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியாது. நாங்கள் சொல்லிக்கொடுப்பது, செய்யும் தொழிலை எப்படி சிறப்பாக செய்வது என்பதுதான். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பது எங்கள் நோக்கமல்ல, தொழில் நிறுவனங்களை பாது காப்பது மற்றும் அவர்களை மேம் படுத்துவதுதான். தொழில் தொடங்கி இருப்பவர்கள் மாணவராக இருந்தால் தாராளமாகச் சேரலாம்.

நன்றி : தி இந்து