`தொழில் முனைவுக்கு சாதகமான சூழல் இங்கு இல்லை’

ஆர்.நாராயணன். இவருக்கு பல முகங்கள் உண்டு. நெஸ்லே, கோகோ கோலா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் பணி யாற்றியவர். “கம் இந்தியா’’, “தோசா கிங்’’ என இரண்டு நிறு வனங்களை உருவாக்கியவர். தற் போது ரீல்பாக்ஸ், டிக்கெட் கூஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார், இப் போது டை-சென்னையின் (TiE – Chennai)தலைவராக இருக்கிறார்.

ஐஐஎம் கொல்கத்தாவில் நிர்வாக படிப்பு படித்தவர். ஐஐஎம் வாழ்க்கை, தொழில்முனைவு, வென்ச்சர் கேபிடல் உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்தோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து…

1967-ல் ஐஐஎம் செல்ல எப்படி திட்டமிட்டீர்கள்?

பெரிய திட்டம் இல்லை. பாம்பேயில் இளங்கலை படித்தேன். அப்போது என்னுடைய சீனியர்கள் ஐஐஎம்-ல் படித்தார்கள். அதனால் ஐஐஎம் பற்றி தெரிந்தது.

இன்னொரு விஷயம், அப்போது எம்பிஏ-வுக்குப் பெரிய தேவை இல்லை. ஒரு சில எம்.என்.சி. நிறுவனங்கள் மட்டுமே எம்பிஏ மாணவர்களை வேலைக்கு எடுத்தார்கள். அப்போது அகம தாபாத், கொல்கத்தாவில் மட்டுமே ஐஐஎம் இருந்தது. கொல்கத்தா ஐஐஎம்-மில் நான் நான்காவது பேட்ச் மாணவன். இந்தியாவின் மிக சிறந்த மாணவர்கள் அங்கு வருவார்கள் என்பதால் ஐஐஎம்-ல் படித்தது மிக நல்ல அனுபவமாக இருந்தது.

அப்போது கேம்பஸ் இருந்ததா?

ஆமாம். நான் இரண்டு விஷ யங்களில் தீர்மானமாக இருந்தேன். மார்க்கெட்டிங் அதுவும் எப்.எம்.சி.ஜி துறையில் வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் வங்கியின் நேர்காணலுக்குக் கூட செல்லவில்லை. டிசிஎம் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த நிறுவனத்தில் எனக்கு மார்கெட்டிங் பிரிவில் வேலை கொடுக்க முடியாததால் அங்கிருந்து கோகோ கோலாவுக்கு சென்றேன். அங்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு நெஸ்லேவில் ஐந்து வருடம்.

இரண்டு எப்.எம்.சி.ஜி நிறுவனத்தில் பணிபுரிந்த பிறகு ஏன் விளம்பர நிறுவனத்துக்கு (Rediffusion) சென்றீர்கள்?

ஏற்கெனவே சொன்னது போல மார்க்கெட்டிங் பிரிவில் எனக்கு ஆர்வம். அது பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றினேன். தவிர அப்போதுதான் டிவி வருகை இருந்தது. டிவி வந்த பிறகு பெண்களும் குழந்தைகளும் வாங்கும் சக்தியாக இருப்பார்கள் என்று இந்தத் துறைக்கு வந்தேன்.

தற்போதைய விளம்பரத்துறைக்கு முன்பு இருந்த விளம்பர துறைக்கும் என்ன வித்தியாசம்?

அப்போது மார்கெட்டிங், பொசிஷனிங் உள்ளிட்ட விஷ யங்களுக்கு அதிகம் கவனம் செலுத்தப்படும். கடைசியாக விளம்பரத்துக்கு வருவோம். இப்போது விளம்பரம் முன்னதாக முதலிடத்தில் இருக்கிறது. இதில் எது சரி, தவறு என்பது குறித்து சொல்ல முடியாது.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்த பிறகும் எப்படி “கம் இந்தியா’’ நிறுவனம் தொடங்க முடிந்தது? பபுள் கம் நிறுவனம் தொடங்க என்ன காரணம்?

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க போகிறேன் என்று சொன்னால் பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் அந்த தொழில் மீது பைத்தியமாக இருந்தால் தொடங்கவே முடியும். கடினமான முடிவு. அதனால்தான் 10 பேர் யோசித்தால் 2 நபர்கள்தான் வருவார்கள். ஒருவர் நான் என்றால் போட்டி இன்னொவர் என்பதால் போட்டி குறைவாக இருக்கும் என்பதால் தொழில் தொடங்கினேன்.

நான் தொடங்கப்போகும் துறை சிறியதாக இருக்க வேண்டும். அதில் எந்த பன்னாட்டு நிறுவனங்களும் இருக்க கூடாது. சிறிய அளவில் தொடங்க முடிவதாக இருக்க முடியும் என பல வாய்ப்புகள் இருந்ததால் “பபுள் கம்’’ நிறுவனத்தைத் தொடங்கினேன். நான் இந்தத் துறைக்கு வரும் போது இந்தத் துறையின் சந்தை மதிப்பு 5 கோடி ரூபாய்தான். பெங்களூருவில் இருக்கும் ஒரு நிறுவனம் 75 சதவீத சந்தையை வைத்திருந்தது. அதனால் இப்போது நிறுவனம் தொடங்கினால் விரைவில் இரண்டாம் இடத்தை பிடிக்க முடியும் என்று நினைத்தேன்.

இந்தியாவில் இப்போது தொழில்முனைவு எப்படி இருக்கிறது?

அதற்கான சூழல் இல்லை. மல்லையாவை எடுத்துக்கொள்ளுங்கள். மல்லையா செய்யும் சில செயல்கள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அவர் கடனை திருப்பித்தர வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வாங்கிய கடனுக்காக அவரை கைது செய்வோம், கைது செய்ய வேண்டும் என்று சொல்வதெல்லாம் என்ன நியாயம் என்றே தெரியவில்லை. அவர் தொழில் செய்வதற்காக கடன் வாங்கி இருக்கிறார். தொழிலில் ஜெயிக்க முடியவில்லை.

வங்கிகள் ஏன் இவ்வளவு கடன் கொடுத்தன. அதிக தொகைக்கு அதிக வட்டி கிடைக்கும் என்ற காரணத்தால் கடன் கொடுத்தன. இப்போது மல்லையா மட்டும் எப்படி குற்றவாளி ஆவார். ஒருவேளை இந்த சூழ்நிலையில் கிங்பிஷர் செயல்பட்டிருந்தால், கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக அந்த நிறுவனம் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். அப்போது வங்கிகள் நாங்கள் சரியான செயலை செய்தோம் என்று சொல்லும். ஆனால் இப்போது மல்லையா செய்தது தவறா! இதுபோன்ற நடவடிக்கையால் இந்தியாவில் தொழில்முனைவு பற்றி யாரும் நினைக்க வேண்டாம் என்று சொல்வதுபோலவே இருக்கிறது.

வங்கிகள் கடன் கொடுக்கவில்லை என்றாலும் கடன் கொடுக்கவில்லை என்று சொல்கிறீர்கள் கொடுத்தாலும் தவறு என்று சொல்கிறீர்களா?

உங்களுக்கு ஏன் சம்பளம் கொடுக்கப்படுகிறது? உங்கள் வேலையை சரியாக செய்வதற்கு. அதைப்போல வங்கிகளும் சரியாக வேலை செய்ய வேண்டும்.

இந்தியாவில் தொழில்முனைவுக்கு சாதகமான சூழல் இல்லை என்கிறீர்களா?

ஆம். அனைத்து இடத்திலும் அரசின் தலையீடு இருக்கிறது. சினிமா டிக்கெட் உள்பட பெரும்பாலான விலைகளை அரசு தீர்மானிக்கிறது. சர்க்கரை விலையை அரசு தீர்மானிக்கிறது. கரும்பின் விலையும் அரசு தீர்மானிக்கிறது. இந்த சூழ்நிலையில் எப்படி தொழில் தொடங்க முடியும். ஏன் `மேக் இன் இந்தியா’ திட்டம் வெற்றி பெறவில்லை. தொழிற்சாலை தொடங்கப்பட்டாலே பல சிக்கல்கள் உருவாகின்றன.

சமீபத்தில் பெங்களூருவில் டூவீலர் டாக்ஸி கொண்டுவந் தார்கள். விதிமுறைக்கு எதிரானது என்று சொல்லி நிறுத்திவிட்டார்கள். எப்போதோ கொண்டு வந்த விதிமுறைகளை மாற்ற மாட்டார்கள். ஆனால் அவர்கள் நினைத்தால் எதையும் தடுக்க முடியும்.

தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பது?

பெரும்பாலான தொழில்முனை வோர்கள் சந்தையைப் புரிந்து கொள்வது கிடையாது. ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் ஏதாவது பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஆனால் பல தொழில் முனைவோர்கள் தாங்கள் எந்த பிரச்சினைக்குத் தீர்வு சொல்கி றோம் என்று அவர்களுக்கு தெரிவ தில்லை. சமீபத்தில் பல லாண்டரி நிறுவனங்கள் உருவாகின்றன. துணி துவைப்பது இங்கு பிரச்சினை. என்னை பொருத்தவரை வாஷிங் மெஷின் கண்டுபிடித்தவுடனே இந்த பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
நன்றி தி இந்து