இந்தியர்கள் கோழியின் கால் பகுதியை (லெக் பீஸ்) விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அமெரிக்கர்கள் கோழியின் கால் பகுதி கொழுப்பு என்பதால் தவிர்த்து விடுவார்கள். அதனால் அமெரிக்காவில் பல வருடங்களுக்கும் மேலான கோழிக் கால்கள் பதப்படுத்தி வைக்கப்பட் டுள்ளன. அதனை இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. இப்போதைக்கு தடை இருக்கிறது. ஆனால் எவ்வளவு நாட்களுக்குத் தடை இருக்கும் என்று சொல்ல முடியாது என கடந்த ஆண்டு `தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சுகுணா புட்ஸ் நிர்வாக இயக்குநர் ஜி.பி. சுந்தரராஜன் தெரிவித்தார்.
இப்போது அந்த தடை நீக்கப்பட் டிருக்கிறது. தடை நீக்கம் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாக வில்லை. இதன் காரணமாக அமெரிக்கா விலிருந்து கோழி கால்கள், கோழி இறைச்சி இந்தியாவுக்கு விரைவில் வரலாம். இதனால் இந்தியாவில் உள்ள 4 லட்சம் கோழிப் பண்ணை கள் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
பின்னணி என்ன?
கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்க கோழி இறைச்சிகளுக்கு இந்தியா தடைவிதித்தது. பறவைக் காய்ச்சல் (avian influenza) பாதிப்பு இருப்பதால் தடைவிதிக்கப்பட்டது. தவிர அந்த கோழிகள் ஆறு மாதத்துக்கு முன் பதப்படுத்தப்பட்டவை, தவிர மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளை அந்தக் கோழிகள் உண்கிறது. இதுவும் இந்த தடைவிதிக்க முக்கிய காரணம் என இந்தியா அப்போது தெரிவித்தது. இந்தியா மட்டுமல்லாமல் ஐரோப்பிய யூனியன், தென் கொரியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க கோழி இறைச்சிகளுக்கு தடை விதித்திருந்தது.
இந்த தடையை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் (டபிள்யூடிஓ) அமெரிக்கா வழக்கு தொடர்ந்தது.
உலக வர்த்தக அமைப்பில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அமெரிக்க கோழி இறைச்சிகளுக்கு இந்தியா தடை விதிக்க முடியாது என்று டபிள்யூடிஓ தெரிவித்தது. அதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா மேல் முறையீடு செய்தது. 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் மீண்டும் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. இந்தியா வின் தடை விதிப்புக்கான காரணம் அறிவியல் பூர்வமாக இல்லை. பறவைக் காய்ச்சல் குறித்த அச்சம் தேவையற்றது என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
அமெரிக்காவில் கடந்த 2004-ம் ஆண் டில் இருந்து இதுவரை ஒரு முறை கூட பறவைக் காய்ச்சல் இருந்ததாக கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் இந்தியா வில் 90 முறை கண்டுபிடிக்கப்பட் டிருப்பதாக அமெரிக்கா வாதாடியது.
கடந்த வருடம் தீர்ப்பு வழங்கப் பட்டிருந்தாலும், இதனை அமல்படுத்த ஒரு வருட கால அவகாசத்தை உலக வர்த்தக மையம் வழங்கி இருந்தது. இப்போது உலக வர்த்தக மையம் மூலமாக வர்த்தக தடை விதிப்பதற்கான நடவடிக்கையை தொடங்க அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானவுடன் விதிகளை இந்தியா மாற்றி அமைத்திருக்கிறது.
அமெரிக்காவுக்கு ஆர்வம் ஏன்?
உலகளவில் அதிக கோழிகளை உற்பத்தி செய்யும் நான்காவது பெரிய நாடு இந்தியா. அமெரிக்கா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா அதிக உற்பத்தி செய் கிறது. அமெரிக்கர்கள் பெரும்பாலும் கோழியின் நெஞ்சு பகுதியை சாப்பிடு வார்கள். அதற்காக கால்களை குப்பை யில் கொட்ட முடியாது என்பதால் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்று மதி செய்ய நினைக்கிறது. அதனால் இந்த தடையை நீக்க பல கட்ட நடவடிக் கைகளையும் அமெரிக்கா எடுத்தது.
இறைச்சி இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்க முடியாது என்பதாலும், டபிள்யூடிஓ-வை பகைத்துக் கொள்ள முடியாது என்பதாலும் அமெரிக்காவி லிருந்து இறக்குமதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் எந் தெந்த இறைச்சி, எவ்வளவு அளவுக்கு இறக்குமதி செய்யலாம் என்ற விதிமுறைகள் இன்னமும் தெளிவாக வெளியிடப்படவில்லை. புதிய உத்தரவு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
பாதிப்பு என்ன?
இந்திய கோழிப்பண்ணை தொழில் சுமார் ரூ. 50,000 கோடி சந்தை மதிப்பு உடையது. இந்தியாவில் உற்பத்தி செய்வதைவிடவும் அமெரிக்க கோழி இறைச்சி இறக்குமதிக்கான செலவு குறைவாக இருப்பதால் 15 முதல் 20 சதவீத சந்தையை இழக்கக் கூடும் என்று இந்திய கோழிப்பண்ணைத் துறையைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். தற்போது இந்தியாவில் ஒரு கிலோ கோழி இறைச்சி 200 ரூபாய் என்ற அளவில் விற்கப்படுகிறது. இந் நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகும் கோழி இறைச்சி ஒரு கிலோ 70 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலுள்ள கோழிப் பண்ணைகள் ஒரு ஆண்டுக்கு 4.2 கோடி டன் கோழி இறைச்சியை உற்பத்தி செய்கின்றன. இதில் கோழிக் கால்களின் சந்தை மதிப்பு 2.2 சதவீதமாகும், அதாவது சுமார் ரூ.1,100 கோடி. இந்த பகுதி பெரும் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுபவை பதப்படுத்தப்பட் டவை. ஆனால் இந்தியாவில் நேரடியாக சந்தைக்கு வருபவைதானே, இதனால் உங்களுக்கு என்ன பாதிப்பு என அனைந்திந்திய கோழிப்பண்ணை ஏற்றுமதி சங்கத்தலைவர் சிங்கராஜிடம் கேட்ட போது, பெரு நகரங்களில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி சந்தை வளர்ந்து வருகிறது. ஓட்டல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சந்தையை இழக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்.
இப்போதைக்கு இந்த சந்தை குறைவாக இருந்தாலும், நீண்ட காலத்தில் இந்த சந்தை வளர்ந்து வரும். அப்போது இந்த சந்தைக்கு நெருக்கடி இருக்கும் என்றார்.
அதிகரிக்கும் எதிர்ப்பு
இந்த சந்தையில் அனைவருக்கும் ஒரே விதிமுறைகள் கிடையாது. கோழி உற்பத்திக்கு ஆகும் செலவில் 30% உணவுக்கு செலவாகிறது. அமெரிக்கா கோழிகளுக்கு மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம், சோயா ஆகியவற்றை உணவாக கொடுக்க முடியும். இவற்றின் விலை மிகவும் குறைவு. ஆனால் இந்தியாவில் அந்த உணவை வழங்க முடியாது. அதனால் மத்திய அரசு அமெரிக்க கோழி இறக்குமதியை தடை செய்ய வேண்டும் இல்லையெனில் அமெரிக்காவில் கோழிகளுக்கு அளிக்கப்படும் மரபணு மாற்றப்பட்ட உணவை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்திருக்கிறது.
தவிர அமெரிக்க கோழிகளுக்கு பன்றி மற்றும் மாட்டிறைச்சியும் உணவாக வழங்கப்படுகிறது. இவற்றை இந்தியாவில் கோழிகளுக்காக உணவாகக் கொடுக்க முடியாது. மத்திய அரசு இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுந்திருக்கிறது.
அதே சமயத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவை இங்கு செல்லுபடி ஆகாது என்ற கருத்தும் நிலவுகிறது. அங்கிருந்து வருபவை, பதப்படுத்தப்பட்டவை, தவிர அந்த கோழி அதிக நார்ச்சத்து கொண்டவை, சுவை இல்லாதவை. அதனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த சுவை பிடிக்காது. தவிர இறக்குமதி செய்யப்படுபவை பதப்படுத்தப்பட்டவை என்பதால் நேரடியாக வீடுகளுக்கு செல்லும் சந்தையை அமெரிக்காவால் கைப்பற்ற முடியாது என்ற கருத்தும் இருக்கிறது.
எப்போது இறக்குமதியாகும் என்று தெரியவில்லை என்றாலும், இறக்குமதி செய்யப்படுபடுவை பெரும்பாலும் கடை களுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதால் கடைகளில் சாப்பிடுபவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இதுவரை நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்தா என்ற விவாதம் இருந்தது. இனி பிராய்லர் கோழியா, பதப்படுத்தப்பட்ட அமெரிக்க கோழியா என்ற விவாதம் தொடங்க இருக்கிறது.
நன்றி தி இந்து
Recent Comments