அடுத்த ஜீரோதான் இலக்கு!

கடந்த ஏப்ரலில் வெளியானது தைரோகேர் டெக்னாலஜி நிறுவனத்தின் ஐபிஓ. இந்த நிறுவன பங்குகளுக்கு 73 மடங்கு அளவுக்கு விண்ணப்பங்கள் பரிந்துரையானது. முதல் நாள் வர்த்தகத்தில் இந்த பங்கு 39 சதவீதம் உயர்ந்தது. இந்த நிறுவனத்தின் நிறுவனர் வேலுமணி, கோவை அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் மின்சாரம், பஸ் வசதி இல்லாத காலத்தில் பிறந்தவர். இப்போது தைரோகேர் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,900 கோடிக்கு மேல்.

தமிழ்வழியில் படித்தவர். பல நேர்காணல்களுக்கு சென்ற பிறகும் வேலை கிடைக்கவில்லை. ஆங்கிலம் மற்றும் அனுபவம் ஆகியவை இல்லாததால் வேலை கிடைக்கவில்லை. இறுதியாக மாத்திரை தயாரிக்கும் நிறுவனத்தில் மாதம் 150 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தவர். அந்த நிறுவனம் மூடப்படவே மும்பை சென்றார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்தார். 1995-ம் ஆண்டு தைராய்டு பயோகெமிஸ்ட்ரியில் முனைவர் பட்டம் பெற்றார். 1996-ம் ஆண்டு தைரோகேர் நிறுவனத்தைத் தொடங்கினார். நிறுவனம் தொடங்கும்போது 37 வயது.

அவரது தொழில்முனைவு வாழ்க்கை உள்ளிட்டவை குறித்து மும்பையில் சந்தித்து உரையாடினோம். அந்த விரிவான உரையாடலில் இருந்து…

தொழில்முனைவு குறித்து உங்களது ஆரம்ப காலத்தில் சிந்தித்திருக்கிறீர்களா? ஏதேனும் திட்டம் இருந்ததா?

தொழில் தொடங்கலாம், தொடங்க வேண்டாம் என்ற எந்த எண்ணமும் இல்லை. வேலை கிடைத்தால் போதும், குடும்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் இருந்தது.

தொழில்முனைவு குறித்த சிந்தனையில்லாத போது, 37 வயதில் எப்படி ரிஸ்க் எடுக்க தோன்றியது?

படிக்கும்போது ரிஸ்க் எடுப்பதற்கு தைரியம் இல்லை. எனக்கு அரசாங்க பணி, என் மனைவி (புற்றுநோய் காரணமாக கடந்த பிப்ரவரியில் இறந்துவிட்டார்) ஸ்டேட் பேங்கில் பணிபுரிந்தார். இருவரும் அந்த காலத்திலேயே மொத்தம் ரூ.10,000 சம்பாதித்தோம். குடும்ப செலவு ரூ.3,000 மட்டுமே. சிக்கனமாக இருந்தோம். சிக்கனமாக இருந்தால் மட்டுமே கையில் பணம் இருக்கும். பணம் இருந்தால்தான் யோசிக்க முடியும். அப்போது என்னிடம் ரூ.2 லட்சம் சேமிப்பு இருந்தது. அதாவது 40 மாத சம்பளம் வங்கியில் இருந்தது. வீடு வாங்கலாம் இல்லை தொழில் தொடங்கலாம். நான் தொழிலில் இறங்கினேன். சேமிப்பு இருந்ததால் தொழில் தொடங்க முடிந்தது. இது ரிஸ்க் இல்லை.

தவிர பலர் தங்களுடைய சொகுசு வாழ்க்கையில் மாட்டிக்கொள்கின்றனர். சிலர் அதிக செலவு செய்கிறார்கள். வருங்காலத்தில் கிடைக்க கூடிய தொகையை இப்போது செலவு செய்துவிடுகிறார்கள். இல்லையெனில் வீட்டுக்கடன் வாங்கிவிடுகிறார்கள். மொத்த வாழ்க்கையும் அடமானம் வைத்துவிட்டால் அதன் பிறகு எப்படி ரிஸ்க் எடுக்க முடியும். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவர் என்னிடம் தொழில் தொடங்குவது குறித்து ஆலோசனை கேட்டார். உங்களது சம்பளம் என்ன என்று கேட்டேன். ஆண்டுக்கு ரூ.40 லட்சம் என்றார். எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ரூ.40 லட்சம் என்றார். அப்படியென்றால் தொழில் தொடங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். சேமிப்பும், சிக்கனமான வாழ்க்கை முறையும் இல்லை என்றால் தொழில் தொடங்க முடியாது.

37 வயதில் வேலையை விடும்போது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா?

நான் வேலையை விட்டபிறகுதான் என் மனைவிக்கே தெரிவித்தேன். நீங்கள் விவாதிக்கலாம் இல்லை முடிவெடுக் கலாம். இரண்டையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது. வேலையை விடுவது குறித்து ஆலோசனை செய்யலாம். இல்லை வேலையை விடலாம். இரண்டையும் ஒன்றாக செய்ய முடியாது. நான் வேலையை விட்டவுடன் மனைவியும் வங்கிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்கு பிறகு ராஜினாமா செய்தார்.

உங்களுக்கு ஆரம்பத்தில் அனுபவம் இல்லை என்பதால் வேலை கிடைக்கவில்லை, அதற்காக உங்கள் நிறுவனத்தில் 98 சதவீத பணியாளர்களையும் அனுபவம் இல்லாதவர்களாக பணியமர்த்துவது சரியா?

இரண்டு விதமான பணியாளர்கள் தேவை. ஒருவர் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துபவர். மற்றவர் புதிதாக உருவாக்குபவர். என்னுடைய விஷயத்தில் தொழிலை நடத்துவதற்கு அதிக பணியாளர்கள் தேவை என்பதால் அனுபவம் இல்லாதவர்களை எடுத்து பயிற்சி கொடுப்பது எளிதானது.

தைராய்டு என்பது அவ்வளவு பெரிய வியாதியா? அதன் பெயரில் ஏன் நிறுவனம் தொடங்க வேண்டும்? அவ்வளவு பெரிய சந்தை இருக்கிறதா?

நான் வேலை செய்தது மருத்துவமனையில். அங்கு என்னுடைய பணி தைராய்டு சோதனை செய்வது. அதில் எனக்கு அறிவும் திறமையும் வளர்ந்தது. தைராய்டு பற்றி சோதனை செய்யும் போது வேலுமணி என்று பெயர் வைப்பது அர்த்தமற்றது. அதனால் தைரோகேர் என்று வைத்தேன். மற்ற சோதனைகளும் நாங்கள் செய்கிறோம் என்றாலும் தைராய்டு எங்களுடைய முக்கியமான சந்தை. இந்தியாவில் 125 கோடி மக்கள் இருக்கின்றனர். தைராய்டு சார்ந்த குறைபாடு 1.5 சதவீதம் பேருக்கு மட்டுமே. இதுவே பெரிய சந்தை. தொழிலில் நீங்கள் அகல உழலாம் இல்லை எனில் ஆழ உழலாம். இரண்டையும் செய்ய முடியாது.

உங்களுடைய ஆய்வகம் மும்பையில் உள்ளது. மற்ற நகரங்களில் உங்களது ஆய்வகத்தை வைக்கும் போது செலவு குறையுமே?

விமானத்தில் மாதிரிகளை எடுத்து வருவது அதிக செலவு பிடிக்கும் விஷயம் என நினைக்கிறார்கள். விமானத்தில் 10 கிலோ பார்சலுக்கு ரூ.3,000 கட்டணம் வசூலிக்கிறார்கள். இதில் 2,000 மாதிரிகள் எடுத்துச்செல்ல முடியும். அப்படியானால் ஒரு மாதிரியை எனக்கு மும்பை கொண்டுவர ரூ.1.50 மட்டுமே செலவாகிறது. இந்தியாவில் 40 விமான நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு விமான நிலையத்தில் இருந்து 300 கிலோமீட்டர் சுற்றளவு எடுத்துக்கொண்டால் 90 சதவீத இந்தியா வந்துவிடும். தவிர இந்த ஆய்வக இயந்திரத்தின் விலை ஒரு கோடி ரூபாய். சிறு நகரங்களில் ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பது சிரமம்.

நீங்கள் நிர்வாகப் படிப்பு முடிக்கவில்லை. ஆரம்ப கட்டத்தில் நிறுவனத்தை உருவாக்குவது பெரிய விஷயம் இல்லை. வளர்ந்தபிறகு நிறுவனத்தை எப்படி நடத்தினீர்கள்?

தொழில் தொடங்கும் போது எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் தொடங்கிய பிறகு தினமும் படித்தேன். அதன்பிறகுதான் டிவிடெண்ட், ஆண்டு பொதுக்குழு கூட்டம், ஐபிஓ என பல விஷயங்கள் தெரிந்தது.

நீங்கள் கடனே வாங்கியதில்லை என்று பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பிறகு ஏன் பிரைவேட் ஈக்விட்டி நிதி வாங்கினீர்கள்?

எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்ய பிரைவேட் ஈக்விட்டி நிறுவனம் ஒன்று வந்தது. எனக்கு விருப்பம் இல்லை. சந்தை மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் என நினைத்து ரூ.400 கோடி என அவர்களிடம் தெரிவித்தேன். அவர்களுக்கு விருப்பம் இல்லை. ஆறு மாதத்துக்கு பிறகு வந்தார்கள். இப்போது ரூ. 500 கோடி என்று கூறினேன். கிளம்பிவிட்டார்கள். அடுத்த முறை வந்தபோது ரூ. 600 கோடி என்று என்று கூறினேன். விவாதம் பெரிதாக நடக்கவில்லை. 25 சதவீத பங்குகளை வாங்கிக்கொண்டனர்.

பணம் வேண்டும் என்பதற்காக பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டை பெற வில்லை. ஏதாவது ஒரு பரிவர்த்தனை நடந்தால்தான் நிறுவனத்தின் மதிப்பு தெரியும். அதற்காக பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டை பெற்றேன். இதேபோல இன் னொரு பிரைவேட் ஈக்விட்டி நிறுவனத் துக்கு 10 சதவீத பங்குகளை விற்றேன்.

தொழில்முனைவோர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

ஏற்கெனவே சில விஷயங்களை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும் பெரிய இலக்குகளை நிர்ணயம் செய்ய வேண்டாம். என்னிடம் யாராவது உங்கள் அடுத்த இலக்கு என்னவென் றால் கேட்டால் அடுத்த ஜீரோ என்று சொல் வேன். ஒரு கோடி வருமானம் என்றால் அடுத்து 10 கோடி வருமானத்துக்கு இலக்கு, அதுபோல அடுத்த ஜீரோவை நோக்கி செல்ல வேண்டும். இப்போது சந்தை மதிப்பு ரூ.3,000 கோடி. தொழில் தொடங்கும் போது ரூ.3,000 கோடி என்று இலக்கு நிர்ணயம் செய்யவில்லை.

நன்றி தி இந்து