தரத்தைக் குறைப்பது எளிதல்ல…

கிரண்ட்போஸ் பம்ப்ஸ் (grundfos pumps) சென்னையில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனம். டென்மார்க்கில் உள்ள கிரண்ட்போஸ் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம் இது. நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து நிர்வாக இயக்குநராக இருப்பவர் என்.கே. ரங்கநாத். 1950-களில் இவரது குடும்பம் சென்னை வில்லிவாக்கத்தில் பம்ப் தொழிற்சாலை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த துறை குறித்து பல விஷயங்களை விவாதித்தோம். அந்த உரையாடலில் இருந்து…

சென்னை டான் போஸ்கோவில் பள்ளிப் படிப்பும், கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் பட்டமும் பெற்றவர். அதன் பிறகு எக்ஸ்எல்ஆர்ஐ நிர்வாகக் கல்லூரியில் எம்பிஏ முடித்துள்ளார். ஐஷர் டிராக்டர் நிறுவனத்தில் ஒரு வருடம் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்தவர். தேவைக்காக எம்பிஏ படித்தாலும் சிந்தனை இன்ஜினீயரிங்கில் இருந்ததால், சவுதி அரேபியாவில் இன்ஜினீயரிங் நிறுவனத்தில் ஐந்து வருடம் பணிபுரிந்தார். அதன் பிறகு குடும்ப தொழிலுக்கு வந்தார்.

ஏன் குடும்ப தொழிலுக்கு வந்தீர்கள்?

எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருந்த நேரத்தில், குடும்ப தொழிலிலும் சில சிக்கல்கள் இருந்தன. அந்த பிரச்சினைகளை சரி செய்து, சில சொத்துகளை மறுசீரமைப்பு செய்யும் வேலைகள் இருந்தன. அதனால் குடும்ப தொழிலில் சில மாதங்கள் ஈடுபட வேண்டி இருந்தது. குடும்பத்தில் நிறைய நபர்கள் இருந்தனர், அத்தனை நபர்களுக்கும் வேலை இல்லை என்பதால் மீண்டும் வெளியேறி கிரண்ட்போஸ் பம்ப்ஸ் நிறுவனத்திலேயே இணைந்தேன்.

ஒரு வேளை குடும்ப தொழிலில் இருந்திருந்தால், அந்த நிறுவனத்தை பெரிய நிறுவனமாக மாற்றி இருக்க முடியும் என நினைக்கிறீர்களா? எப்படி கிரண்ட்போஸ் பம்ப்ஸ் வாய்ப்பு கிடைத்தது?

இல்லை. குடும்ப நிறுவனத்தில் சிக்கல்கள் இருந்ததால் ஒரு கட்டத்துக்கு மேல் அதை வளர்த்திருக்க முடியாது. அப்போது பம்பில் இருந்து பாய்லர் தயாரிக்க தொடங்கி இருந்தோம். அந்த துறை அப்போது சரியாகவும் இல்லை.

அந்த நேரத்தில் ஒரு பத்திரிகையில் சர்வதேச அனுபவம், இன்ஜினீயரிங் மற்றும் எம்பிஏ அனுபவம் உள்ளவர்கள் தேவை என்று கிரண்ட்போஸ் விளம்பரம் வந்தது. அந்த தகுதிகள் எனக்கு பொருந்தியதால் விண்ணப்பித்தேன்.

இந்தியாவில் பம்ப் துறை எப்படி இருக்கிறது?

சிறு தொழிற்சாலைகள் மட்டுமே பம்ப் தயாரிக்க முடியும் என விதி இருந்தது. பலத்த எதிர்ப்புக்கு இடையே அது 2005-ம் ஆண்டில்தான் நீக்கப்பட்டது. பம்ப் என்பது இதயம் மாதிரி. தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். தண்ணீர் இருந்தாலும் பம்ப் தேவைப்படும், இல்லை என்றாலும் பம்ப் தேவைப்படும். வெள்ளம் வந்தால் தண்ணீரை அகற்ற வேண்டும் என எப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் பம்பிற்கான தேவை இருக்கிறது. இப்போதைக்கு 6 முதல் 7 சதவீத வளர்ச்சி இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு முன்பு 15 சதவீத வளர்ச்சி இருந்தது. 2009க்கு பிறகு வளர்ச்சி குறைந்தது.

உங்களுடைய சந்தை எவ்வளவு?

நாங்கள் சர்வதேச அளவில் மிகப் பெரிய நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை எங்களுடைய சந்தை மதிப்பு 5 சதவீதம் மட்டுமே. எங்களுக்கு நிறைய எல்லைகள் இருக்கிறது. அனைத்து விதமான பம்புகளையும் நாங்கள் உற்பத்தி செய்யவில்லை. உதாரணத்துக்கு விவசாய துறையில் நாங்கள் இல்லை. தவிர எங்கெல்லாம் நேரடியாக போட்டி இல்லாமல், வேறு சில காரணங்களால் ஆர்டர் கிடைக்கும் என்றால் அந்த இடங்களுக்கு நாங்கள் செல்வதில்லை.

விவசாய துறை பெரிய வாய்ப்புள்ள சந்தை. ஏன் விவசாயத்துக்கு ஏற்ற பம்புகளை நீங்கள் தயார் செய்வதில்லை?

உலகம் முழுவதும் விவசாய துறைக்கு தேவையான பம்புகளை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இந்தியாவில் நாங்கள் இல்லாததற்கு காரணம் இருக்கிறது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம், அல்லது மானிய விலையில் மின்சாரம் கிடைக்கிறது. எங்களது பம்புகள் உருக்கினால் செய்யப்படுபவை. தவிர நாங்கள் உற்பத்தி செய்பவை குறைவான மின்சாரம் தேவைப்படும் பம்புகள் என்பதால் எங்களது பம்ப் மற்ற பம்புகளை விட இரு மடங்கு அளவுக்கு விலை அதிகம். இதனால் விவசாயிகளுக்கு எங்களுடைய பம்ப் விலை அதிகமாக தெரியும்.

விவசாயம் பெரிய சந்தை. அவர்களுக்கு என பிரத்யேக பம்ப் தயாரிக்க முடியாதா?

தரத்தை உயர்த்துவது என்பது எளிது. ஆனால் தரத்தை குறைப்பது என்பது கடினம். அதற்கென பிரத்யேக நபர்களை வேலைக்கு எடுப்பதில் ஆரம்பித்து மொத்தமும் புதிதாக இருக்க வேண்டும். இதற்கு கூடுதல் முயற்சி தேவை.

உங்களது தயாரிப்பு ஏன் விலை அதிகமாக இருக்கிறது. இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?

விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை. எங்களது நிறுவனம் தனியார் நிறுவனமாக இருந்தாலும் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. அதிக லாபம் இருந்தாலும் நாங்கள் மூன்று விஷயங்கள் மட்டுமே செய்ய முடியும். மறுமுதலீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மற்றும் சமூக மேம்பாட்டுக்கான செலவுகள் இவை மட்டுமே செய்ய முடியும். வரிக்கு முந்தைய லாபம் 6 முதல் 10 சதவீதம் இருந்தால் போதும். அதற்கு மேல் தேவை இல்லை. இருந்தாலும் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் எங்களது தரம்.

தரம் இருந்தாலும், அதிக விலை இருப்பதால் வீடுகளுக்கு உங்களால் செல்ல முடிகிறதா? இல்லை பிரீமியம் வாடிக்கையாளர்கள் பிரிவில் மட்டும் கவனம் செலுத்துகிறீர்களா?

இப்போது தரத்தின் மீது மக்கள் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்கள். மின்சார கட்டணம் குறைவு என்பதை இப்போது மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் மொத்தமாக கொடுத்து வாங்க மக்கள் தயங்குகிறார்கள். பம்ப் வாங்குவதற்கு கடன் கிடைக்கும் பட்சத்தில் எங்களது பம்பினை எளிதாக மக்கள் வாங்குவார்கள். இது குறித்து பைனான்ஸ் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம்.

ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்கும் ஷோரூம்களில் விற்க முடியுமா, அதற்கு இதெற்கென இருக்கும் கடைகளில் பைனான்ஸை விரிவுபடுத்த முடியுமா என பல விஷயங்களை குறித்து யோசித்து வருகிறோம். அடுத்த கட்டமாக இப்போது இ-காமர்ஸ் இணைய தளங்களிலும் பம்ப் விற்பனை நடக்கிறது. இவற்றை குறித்தும் பரிசீலனை செய்து வருகிறோம்.

நன்றி: தி இந்து.