‘எந்தத் துறை என்பதை விட எந்தப் பங்கு என்பது முக்கியம்’

பங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் மியூச்சுவல் பண்ட் துறையின் முக்கியமான பண்ட் மேனேஜரான வெற்றி சுப்ரமணியத்தை மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.

ஐஐஎம் பெங்களூருவில் எம்பிஏ படித்தவர் கோடக் குழுமத்தில் முதல் பணி. அதனை தொடர்ந்து ஷேர்கான் புரோக்கிங் நிறுவனம், மீண்டும் கோடக் மியூச்சுவல் பண்டில் சில காலம், அதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு ரெலிகர் இன்வெஸ்கோ மியூச்சுவல் பண்டில் இணைந்தார். இப்போது ரெலிகர் நிறுவனம் வெளியேறிவிட்டது. இன்வெஸ்கோ மியூச்சுவல் பண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரியாக இருக்கிறார்.

ஐஐஎம்-ல் படித்த பெரும்பாலானவர்கள் மார்க்கெட்டிங் சார்ந்த பணிகளையே விரும்புவார்கள். நிதித்துறை மீது ஏற்கெனவே உங்களுக்கு ஆர்வம் இருந்ததா?

கல்லூரி (பிகாம் படிக்கும்) காலத்தில் இருந்தே நிதி, எண்கள் மீது ஆர்வம் இருந்தது. பிகாம் முடித்த பிறகு சிஏ படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் ஐஐஎம்-ல் படிக்க வாய்ப்பு கிடைத்த சமயத்தில், என் ஆலோசகரிடம் கேட்டபோது, ஐஐஎம்- வாய்ப்பு சிலருக்குதான் கிடைக்கும். சிஏ எப்போது வேண்டுமானலும் படிக்க முடியும் என்றார். பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் படிக்க இடம் கிடைத்தது. பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தேன். என் அப்பா பங்குச் சந்தையில் முதலீடு செய்வார். ஆனாலும் நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் முதலீடு பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.

கோடக் குழுமத்தில் இருந்து, ஏன் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இணைந்தீர்கள்?

இப்போதைய கோடக் நிறுவனத்துடன் ஒப்பிடமுடியாது. நான் கோடக்கில் 1992-ம் ஆண்டு சேர்ந்தேன். அப்போது அது சிறிய நிறுவனம். வங்கி அல்லாத நிதி நிறுவனமாகத்தான் செயல்பட்டு வந்தது. 1996-ம் ஆண்டு வெளியேறினேன். அதனால் புதிய நிறுவனத்தில் சேர்ந்தது ஒன்றும் பெரிய முடிவு கிடையாது.

ரெலிகர் நிறுவனம் வெளியேறி நிர்வாகம் முழுமையாக இன்வெஸ்கோ வசம் இருக்கிறது. இந்த மாற்றம் எப்படி இருக்கிறது?

இன்வெஸ்கோ நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டே 49 சதவீத பங்குகளை வாங்கியது. அப்போதிலிருந்தே அவர்களின் முதலீட்டு முறைகளை பின்பற்றி வருகிறோம். பண்ட் ஆப் பண்ட் மூலம் வெளிநாட்டில் உள்ள அவர்களது பண்ட்களில் இங்குள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் வாய்ப்பை உருவாக்கினோம். கடந்த ஏப்ரலில் நிறுவனம் முழுமையாக இன்வெஸ்கோ வசம் வந்துள்ளது. ஆனால் நிர்வாகத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதே குழுதான் பணியாற்றி வருகிறது.

1992, 2000, 2008 ஆகிய ஆண்டுகளில் பங்குச்சந்தை சரிந்தது. அதேபோல 2016லும் கடும் சரிவு வர இருக்கும் பல கணிப்புகள் இருக்கிறது. இந்த ஆண்டு முடிய 4 மாதங்கள் இருக்கிறது. சரிவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?

மூன்று சமயங்களில் சரிவு வந்திருக்கிறது என்பதால் இப்போதும் சரிவு வர வேண்டிய அவசியம் இல்லை. பலவீனமான கணிப்பு இது. இவை தற்செயல் நிகழ்வுதான். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் நம்புவது இல்லை. மழை வரும், வராது என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கிறது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரிவு வரும் என்பதற்கு காரணம் இல்லை. இப்போது பங்குச் சந்தையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்பது சரிதான். முதலீடு செய்யும் அளவுக்கு கவர்ச்சிகரமான மதிப்பில் இல்லைதான். ஆனால் மூன்று முறை நடந்திருக்கிறது என்பதால் நான்காம் முறையும் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இப்போது முதலீடு செய்வதற்காக பங்குகளை தேர்வு செய்வது சவாலாக இருக்கிறது. இப்போது முதலீடு செய்தால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளாக லாபம் பெரிய அளவில் இருக்காது.

பெரும்பாலான பண்ட் மேனேஜர்கள், நிறுவனர்களின் (புரமோட்டர்) தரம் முக்கியம் என்று சொல்லுகிறீர்கள். எதன் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்?

நிறுவனர்கள் குறித்து நேரடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. நிறுவனத்தின் செயல்பாடுகளை வைத்தே முடிவெடுக்க முடியும். தொழிலின் தரம், ரிட்டன் ஆன் கேபிடல், ரிட்டன் ஆன் ஈக்விட்டி ஆகிய குறியீடுகள் நீண்ட கால அடிப்படையில் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே முடிவுக்கு வர முடியும்.

இப்போதைக்கு எந்த துறை பங்குகளை முதலீடு செய்ய மற்றும் தவிர்க்க விரும்புகிறீர்கள்?

இந்த கேள்விக்கு வேறு மாதிரி பதில் அளிக்க விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக ஒரு துறை பங்குகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஒரே துறையில் ஒரு பங்கு சிறப்பாகவும் மற்ற பங்கு மோசமாகவும் செயல்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதனால் இந்த துறை பங்குகளில் முதலீடு செய்யலாம் அல்லது வேண்டாம் என்று முடிவெடுப்பதில்லை. அதனால் எந்த துறை என்பதை விட எந்த பங்கு என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.

ஆனால் பொருளாதாரம் மீண்டு வரும் போது, ஆட்டோமொபைல், வொய்ட் கூட்ஸ், மீடியா, பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட துறையில் வளர்ச்சி இருக்கும் என்று நம்புகிறோம். இப்போதைக்கு அந்த துறை பங்குகளின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

உங்களுடைய கான்ட்ரா பண்டில் உள்ள பங்குகளுக்கும், டைனமிக் பண்டில் உள்ள பங்குகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதே? முதலீட்டாளர்கள் இதனை எப்படி புரிந்துகொள்வது?

இப்போதைக்கு இரண்டு பண்டிலும் உள்ள பங்குகளில் ஒற்றுமை இருக்கலாம். இவை எப்போதும் இருக்கும். ஆனால் வாங்கப்பட்ட காலம் வேறு. கான்ட்ரா பண்டில் முதலீடு செய்வதற்கான முறைகளும் வேறு. முதலீடு செய்வதற்கு யாரும் விரும்பாத சமயத்தில் முதலீடு செய்வோம். ஆரம்ப கட்டத்தில் ஒரு பங்கில் ரிஸ்க் எடுப்போம். ஆனால் டைனமிக் பண்டில் பங்கின் விலை உயரத்தொடங்கும் போது வாங்கி இருப்போம். அதேபோல இந்த இரு பண்ட்களின் வருமானத்தை (3,5 வருடம்) பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் புரியும்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்து சமையல்களிலும் உப்பு, புளி, காரம் என ஒரே விஷயம்தான். ஆனால் எங்கு, எவ்வளவு, எப்போது சேர்க்கப்படுகிறது என்பது முக்கியம்.

முதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

இப்போதுதான் முதலீடு செய்ய வருகிறீர்கள் என்றால் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய தொடங்குங்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அஸெட் அலோகேஷனிலும் கவனம் செலுத்தவும். பங்குச் சந்தை சரியும் போது (மதிப்பீடு குறைவாக இருக்கும்) அதிக தொகையை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டிலும், மதிப்பீடு அதிகமாக இருக்கும்போது கடன் சார்ந்த பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இதனை தனியாக செய்ய முடியாது. ஒரு ஆலோசகர் உதவியுடன் தொடங்குங்கள்.

நன்றி தி இந்து