‘நீண்ட காலத்துக்கு தனியார் வங்கி பங்குகள் ஏற்றவை’
ஒரு புறம் ஏற்கெனவே சந்தையில் இருக்கும் மியூச்சுவல் பண்ட்கள் மற்ற நிறுவனத்துடன் இணைத்து விட்டு வெளியேறுகிற அதே சமயத்தில், இந்த துறையில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. போர்ட்போலியோ மேனேஜ்மென்ட் சர்வீசஸ் (பிஎம்எஸ்) பிரிவில் செயல்பட்டு வந்த பராக் பரீக் நிறுவனம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மியூச்சுவல் பண்டாக (பிபிஎப்ஏஎஸ் மியூச்சுவல் பண்ட்) மாறியது. அந்த நிறுவனத்தின் தலைவர் நீல் பராக் பரீக், மற்றும் முதன்மை முதலீட்டு அதிகாரி ராஜிவ் தாக்கர் சென்னை வந்திருந்தனர். அவர்களுடன் நடத்திய உரையாடலில் இருந்து…
ராஜிவ் தாக்கர், முதன்மை முதலீட்டு அதிகாரி
வாரன் பபெட் நடத்தும் ஆண்டு பொது கூட்டத்துக்கு நீங்கள் 4 முறை சென்றிருக்கிறீர்கள். அவரை பின் தொடரும் நீங்கள் அவருடைய பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தில் முதலீடு செய்யவில்லையே. ஏன்?
வாரன் பபெட் மற்றும் சார்லி முங்கர் (Charlie Munger) சிறந்த முதலீட்டாளர்கள் என்பது சந்தேகம் இல்லை. அவர்களுடைய ஆரம்பகாலத்தில் அதிக வருமானம் இருந்தது. இப்போது நிறுவனம் வளர்ந்துவிட்டது. தவிர அவர்கள் அதிக முதலீடு தேவைப்படும் தொழில்களான ரயில்வே, கேஸ் பைப்லைன் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்கிறார்கள். இந்த தொழில்களின் லாபம் குறைவு. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தவறு அல்ல. ஆனால் எங்களை போன்ற வளர்ந்து வரும் பண்டுக்கு வேறு வாய்ப்புகள் அதிகம் இருப்பதினால் அதில் முதலீடு செய்யவில்லை.
இந்தியாவிலேயே தகவல் கிடைக்கும் போது இதற்காக ஏன் அமெரிக்கா செல்ல வேண்டும்?
இந்த முறைதான் இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதனால் 2016-ம் ஆண்டு நாங்கள் செல்லவில்லை. ஆனால் முந்தைய வருடங்களில் அந்த தகவல்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. தவிர 40,000 முதலீட்டாளர்கள் உலகம் முழுவதிலும் இருந்து வருகிறார்கள். அவர்களுடன் பழக வாய்ப்பு கிடைக்கும்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம் வாரனிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொண்டது என்ன?
வாரன் பபெட் இருக்கும் நகரம் ஒமாஹா. அவர் வீடு, அலுவலகம் என அனைத்துமே 2 கிலோமீட்டர் சுற்றளவுக்குள்தான் இருக்கும். ஆனால் நாம் பெரு நகரங்கள் வசதி என அங்கு இருந்து பயணத்துக்காக அதிக நேரம் செலவு செய்கிறோம். அவரது எளிமை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்த 86 வயதிலும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார். தவிர அவர் கற்றுக்கொண்டதை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்க தவறுவதே இல்லை.
முதலீட்டு முறைகளை பொருத்த வரை, அவர் இந்த கூட்டத்தில் புதிதாக எதுவும் சொல்லவில்லை. பல விஷயங்களை பல வருடங்களாக கூறிவருகிறார்.
வாரன் பபெட் முதலீட்டு முறைகளுக்கு அமெரிக்காவில் பலன் கிடைக்கலாம் இந்தியாவில் எப்படி நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?
அவருடைய ஆரம்ப காலத்தில் மதிப்பு குறைவான பங்குகளை தேடி அதில் முதலீடு செய்து வந்தார். அதன் பிறகு தரமான பங்குகளில் முதலீடு செய்தார். இந்த இரண்டு முறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
மதிப்பு குறைவான பங்குகளில் நிறுவனங்கள் தவறான முடிவு எடுக்கும்பட்சத்தில் அமெரிக்கா முதலீட்டாளர்கள் ஒன்று சேர்ந்து நிர்வாகத்தை மாற்ற முடியும். ஆனால் இந்தியாவில் அப்படி எதுவும் செய்ய முடியாது. பெரும்பாலும் நிறுவனங்கள் நிறுவனர்கள் வசம் இருக்கிறது. அதனால் இந்தியாவை பொறுத்தவரை, தரமான நிறுவனப் பங்குகளை வாங்குவதன் மூலமே வெற்றி அடைய முடியும்.
தற்போதைய சூழலில் இந்திய சந்தை எப்படி இருக்கிறது? சந்தை மதிப்பு அதிகமாக இருக்கிறதா?
குறுகிய காலத்துக்கு எந்த கருத்தையும் சொல்ல முடியாது. ஆனால் மதிப்பு சராசரியை விட அதிகமாக இருக்கிறது. ஆனால் சர்வதேச அளவில் குறைந்த வட்டி இருக்கும் சூழலுடன் இதனை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய வாய்ப்புகள் இல்லை. அதனால் சந்தை தற்போதைய நிலையை தக்கவைத்துக்கொள்ளும்.
பொதுத்துறை வங்கிகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
வருங்காலத்தில் வாராக்கடன் குறைவாக இருக்கலாம். அதற்காக ஒதுக்கீடு செய்யும் தொகை குறைவாக இருக்கலாம். இதனால் குறுகிய காலத்தில் இந்த பங்குகளில் ஏற்றம் இருக்கலாம். ஆனால் நீண்ட காலத்துக்கு என்று எடுத்துக்கொண்டால் தனியார் வங்கிகளில் முதலீடு செய்வது நல்லது.
பொதுத்துறை வங்கிகளில் இணைப்புகள் வரக்கூடும். அப்போது எந்த வங்கி எந்த வங்கியுடன் இணையும் என்று கூறுவது கடினம். அதனால் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்து நல்ல உத்தி அல்ல.
உங்களுடைய போர்ட்போலியோவில் 25 பங்குகள் மட்டுமே இருக்கிறது. concentration risk அதிகமாகாதா?
பங்குகள் வாங்கும் போது பலவித மான ஆராய்ச்சிக்கு பிறகுதான் வாங்கு கிறோம். அதிக எண்ணிக்கையிலான பங்குகள் இருக்கும் போது, பெரிய பலன் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. 25 பங்குகள் இருக்கும் என்பது சரியான எண்ணிக்கை என்று நினைக்கிறோம். இதனால் ரிஸ்கும் குறையும்,நல்ல லாபமும் கிடைக்கும்.
உங்களுடைய போர்ட்போலியோவில் ஆல்பபெட் (கூகுள்) பங்கு 11.31 சதவீதம் இருக்கிறது. ஒரு போர்ட்போலியோவில் 10 சதவீதத்துக்கு மேல் ஒரு பங்கு இருப்பது சரியா?
அந்த பங்கு விலை உயர்ந்ததால் அதிக சதவீதம் போல தெரிகிறது. நாங்கள் வாங்கும்போது அவ்வளவு சதவீதம் வாங்கவில்லை. அந்த பங்கின் விலை உயரும் போது குறைந்த அளவு பங்குகளை (சுமார் 7 கோடி ரூபாய் அளவுக்கு) விற்று சரி செய்தோம். இருந்தாலும் இப்போது 11 சதவீதம் இருக்கிறது. அந்த நிறுவனத்தில் யூடியூப், சர்ச் என்ஜின், ஜிமெயில் என பல பிரிவுகள் இருக்கிறது. தொழில் நன்றாக இருப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பிரிவிலும் அந்த நிறுவனம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனால் 11 சதவீதம் ஒரு பிரச்சினையாக எங்களுக்கு தெரியவில்லை.
நீல் பராக் பரீக், தலைவர்
1996-ம் ஆண்டு முதல் பிஎம்எஸ் நடத்தி வந்தீர்கள். அந்த நிறுவனத்தை ஏன் மியூச்சுவல் பண்டாக மாற்றினீர்கள்?
இதற்கு பல காரணங்கள் உள்ளன. பிஎம்எஸ் முறையில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் குறைந்த பட்ச முதலீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த எல்லை உயர்த்தப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். தவிர நாங்கள் வெளிநாட்டில் உள்ள சில பங்குகளில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தோம். பிஎம்எஸ் மட்டும் நடத்தினால் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முடியாது. ஆனால் மியூச்சுவல் பண்ட்களில் அதற்கான வாய்ப்பு இருந்தது. தவிர மியூச்சுவல் பண்ட்களில் வரி சலுகைகள் இருக்கிறது.
ஆனால் உங்களிடம் ஒரு பண்ட் மட்டுமே இருக்கிறது. முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் இல்லையே?
நாங்கள் பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றிருக் கிறோம். கடன் சார்ந்த பண்ட்களை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை. ஆனால் இன்னும் சில காலத்துக்கு பிறகு லிக்விட் பண்ட்களை தொடங்க இருக்கிறோம். இதுவும் கூட பணத்தை முதலீடு செய்து மாற்றுவதற்கான வசதியை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடங்குகிறோம். அதேபோல இஎல்எஸ்எஸ் (வரிச்சலுகை) பண்ட் ஒன்றையும் தொடங்க இருக்கிறோம். ஆனால் உடனடியான திட்டம் இல்லை. ஒரு ஈக்விட்டி பண்ட் போதும்.
நன்றி தி இந்து
Recent Comments