`பஸ் டிக்கெட் கட்டணத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியாது’

பஸ் டிக்கெட் விற்பனையை முறைப்படுத்தியதில் டிக்கெட்கூஸ் நிறுவனத்துக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தற்போது விரிவாக்க நடவடிக்கை மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கார்த்தி ஈஸ்வரமூர்த்தி கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். தற்போதைய சந்தை, எதிர்கால திட்டம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அவரிடம் விவாதித்தோம். அந்த உரையாடலில் இருந்து…

2007-ம் ஆண்டு நிறுவனம் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் முதல் டிக்கெட்டை விற்க இரு ஆண்டுகள் ஆனது. முதல் ஆண்டு 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான டிக்கெட்கள் மட்டுமே இந்த நிறுவனம் விற்றது. ஆனால் இப்போது ஆண்டுக்கு ரூ.100 கோடி அளவுக்கு டிக்கெட்களை இந்த நிறுவனம் விற்கிறது.

உங்கள் பிஸினஸ் மாடல் என்ன?

நாங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த வருமானத்தையும் பெறுவதில்லை. எங்களிடம் டிக்கெட் வாங்கினாலும், எங்கள் போட்டி நிறுவனத்திடம் வாங்கினாலும் அல்லது ஏஜென்ட்களிடம் வாங்கினாலும் டிக்கெட் விற்பனையில் பெரிய மாற்றம் இல்லை. பஸ் நிறுவனங்கள் எங்களுக்கு கமிஷன் கொடுக்கின்றன. சுமார் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இந்த கமிஷன் இருக்கும். வாடிக்கையாளர்கள் எங்களிடம் பணம் செலுத்துகிறார்கள். நாங்கள் எங்கள் தொகையை எடுத்துக் கொண்டு பஸ் நிறுவனங்களிடம் கொடுத்துவிடுவோம். சராசரியாக 12 சதவீதம் கமிஷன் கிடைக்கும். இது ஒரு மாடல்.

என்னதான் படித்தவர்கள், தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் ஆனாலும் ஆன்லைனில் முன்பதிவு செய்வதை சிலர் விரும்பமாட்டார்கள். அவர்கள் யாராவது ஒரு ஏஜெண்ட் மூலம் முன்பதிவு செய்யவே விரும்புவார்கள். எங்கள் இணையதளத்தின் மூலமாக ஏஜென்ட்கள் விற்கும்போது எங்கள் கமிஷன் பாதியாக குறையும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என நாங்கள் செயல்படும் இடங்களில் சுமார் 7,000 ஏஜென்ட்கள் இருக்கிறார்கள். 6 சதவீதம் இழப்பு என்றாலும் 90 சதவீத டிக்கெட்கள் ஏஜென்ட்கள் மூலமாகவே விற்கிறோம். இன்னும் 10 முதல் 20 வருடங்களுக்கு ஏஜென்ட்கள் மூலம் டிக்கெட்கள் விற்பது குறையாது என நம்புகிறோம்.

தற்போது ஒவ்வொரு பஸ் நிறுவனமும் பிரத்யேக இணையதளத்தை வைத்திருக்கின்றன. வாடிக்கையாளர்களுக்கு பிடிமானம் வந்த பிறகு நேரடியாக பஸ் நிறுவனங்களிலே முன் பதிவு செய்யமாட்டார்களா?

எங்களை போன்ற நிறுவனங்களுக்கு வரும் போது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான வாய்ப்புகள் இருக்கும். குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையதளத்துக்கு செல்கிறீர்கள் அங்கு டிக்கெட் இல்லை என்றால் மீண்டும் வேறு நிறுவனத்துக்கு செல்ல வேண்டும். ஆனால் எங்களிடம் அனைத்து விதமான வாய்ப்புகளும் இருக்கிறது. புதிதாக ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் எங்களைப் போன்ற நிறுவனங்களிடம்தான் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

தவிர எங்களிடம் 24 மணிநேர வாடிக் கையாளர் சேவை மையம் இருக்கிறது. ஒரு பஸ் ரத்து செய்யப்பட்டால், எங்களுக்கு இருக்கும் நெட்வொர்க்கை பயன்படுத்தி வேறு ஒரு டிக்கெட் வாங்கிக்கொடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இது பொங்கல் காலம். வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்குக்கு கட்டணம் அதிகப்படுத்தி விற்கப்படுகிறது. இது சரியா? இதை ஒழுங்குபடுத்த முடியாதா?

இது சரியா தவறா என்பதை விட, கட்டண நிர்ணயம் எங்கள் கையில் இல்லை. பஸ் நிறுவனங்கள் மட்டுமே விலையை தீர்மானிக்கிறார்கள். அவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தை நாங்கள் செயல்படுத்துகிறோம். தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை அரசு எப்படி ஒழுங்குபடுத்தியதோ அதுபோல அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை நிர்ணயம் செய்யலாம்.

இது ஒரு புறம் இருக்கட்டும். தேவை அதிகமாக இருப்பதால் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். சில சமயங்களில் கூட்டமே இல்லை என்றால் வழக்கமான விலையை விட பாதி விலையில் டிக்கெட் விற்கப்படுகிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

முன்பு அதிக தள்ளுபடி கொடுத்துவந்தீர்கள். ஆனால் இப்போது தள்ளுபடியை குறைத்துக்கொண்டது போல் தெரிகிறதே?

நாங்கள் தொடக்க காலத்தில் கொஞ்சம் தள்ளுபடி வழங்கி இருக்கிறோம். ஆனால் அதன்பிறகு தள்ளுபடி விலையில் டிக்கெட் விற்பனை செய்யவில்லை. தள்ளுபடி மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைக்க முடியாது. உதாரணத்துக்கு புதிதாக ஒரு வாடிக்கையாளர்களை கவர்வதற்கு 300 ரூபாய் செலவாகும். ஒரு வாடிக்கையாளர்கள் 6 முறை எங்களிடத்தில் டிக்கெட் பதிவு செய்தால் மட்டுமே நாங்கள் முதலீடு செய்த 300 ரூபாயை எடுக்க முடியும். எங்களுடைய கணக்குப்படி சராசரியாக ஒருவர் 100 நாளைக்கு ஒருமுறைதான் பயணம் செய்கிறார். ஏற்கெனவே முதலீடு செய்த 300 ரூபாயை எடுக்கவே 600 நாள்கள் (கிட்டத்தட்ட 2 ஆண்டு) ஆகும். அதுவும் அனைத்து முறையும் அதே வாடிக்கையாளர் எங்களிடத்தில் வந்தால் மட்டுமே சாத்தியமாகும். இந்த நிலையில் தள்ளுபடி கொடுத்தால் முதலீடு செய்த பணத்தை திரும்ப எடுக்க முடியாது.

தவிர முன்பு தள்ளுபடி கொடுத்திருக்கிறோம். ஆனால் 90 சதவீத மக்கள் அந்த தள்ளுபடி கூப்பனை பயன்படுத்தவே இல்லை. தரமான வாடிக்கையாளர் சேவை கொடுக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.

புதுமையாக என்ன விதமான சேவை வழங்குகிறீர்கள்?

ஸ்மார்ட் பாக்ஸ் என்பதை அறிமுகம் செய்து பஸ்களில் வைத்து வருகிறோம். இதில் வை-பை, ஜிபிஎஸ் கருவி, பொழுதுபோக்குக்கு படங்கள் ஆகியவற்றை வைத்திருக்கிறோம். தேவைப்படும் வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். அதன் மூலம் பயணம் செய்யும் சில மணிநேரங்களில் வாடிக்கையாளர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரம்பத்தில் இலவசமாக கொடுத்தாலும், நாட்கள் செல்ல செல்ல பணம் கட்டினால் மட்டும் கிடைக்கும் சேவையாக இருக்கும். இதே சேவையை கார்ப்பரேட், கல்லூரி வாகனங்களிலும் வைப்பதற்கான திட்டமும் இருக்கிறது.

ஜிஎன்ஜி (Get Together and Getaway) என்னும் சேவையை சோதனை முறையில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை சுற்றுலா அழைத்து செல்வது என்பது இப்போது அதிகமாகி இருக்கிறது. இந்த பிரிவில் இப்போது இறங்கியிருக்கிறோம். இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

நீங்கள் ஒரு டிக்கெட்டிங் நிறுவனம். ஆனால் இது சுற்றுலா தொழில் போல தெரிகிறதே? இயக்குநர் குழு ஒப்புக் கொண்டார்களா?

நீங்கள் எதிர்பார்ப்பது போல மற்ற டிக்கெட்களை எங்கள் போட்டி நிறுவனங்கள் விற்றுவருகிறார்கள். ஆனால் இதுபோல ஒரு தேவை இருக்கிறது என்பதை உணர்ந்தோம். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் வழக்கமான பொது போக்குவரத்து சுற்றுலாவாகவும் மாற்றும் திட்டமும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் பெரும்பாலான பஸ்கள் உங்களது நெட்வொர்க்கில் இருக்கின்றன. இருக்கைகளின் எண்ணிக்கை என்பது கூடப்போவதில்லை. போட்டி நிறுவனங்கள் வேறு இருக்கின்றன. இந்த நிலையில் வளர்ச்சி எப்படி வரும்?

அனைத்து பஸ்களும் நெட்வொர்கில் இருக்கிறது என்பது சரிதான். ஆனால் பஸ் துறையே ஆண்டுக்கு 30 சதவீதம் வளர்ந்து வருகிறது. அதனால் வளர்ச்சி இருந்துகொண்டுதான் இருக்கும்.

இந்த துறை வளர என்ன தேவை என நினைக்கிறீர்கள்?

சில விஷயங்களை பஸ் தயாரிப்பு நிறுவனங்கள் செய்யலாம். சிலவற்றை நாங்கள் செய்ய முடியும். பஸ் இன்னும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படாதற்கு காரணம் கழிவறை. அதை அமைக்கும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது நடக்கும் பட்சத்தில் இந்த துறை இன்னும் வேகமாக வளரும்.

தொழில்நுட்ப ரீதியில் சில விஷயங்களை மேம்படுத்த முடியும். இரவில் தூங்கிக்கொண்டிருப்போம். ஆனால் இறங்க வேண்டிய இடத்துக்கு முன்பே எழுந்திருக்க வேண்டும். எங்கு இறங்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பதிவு செய்துவிட்டால் ஜிபிஎஸ் மூலமாக 10 நிமிடத்துக்கு முன்பாக போன் அடிப்பது போல வைத்தால் அது பயனுள்ளதாக இருக் கும். அலாரம் வைத்து தூங்கினாலும், பஸ் எப்போது எடுப்பார்கள் என தெரியாது, போக்குவரத்து நெரிசலில் எப்போது சென்று சேரும் என்று தெரியாது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மேலும் பயனுள்ள சேவைகளை வழங்க முடியும்.

நன்றி தி இந்து