‘பேராசிரியர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்’

சந்தையிடுதல் துறை சம்பந்தமான மாநாடு கடந்த வாரம் சென்னை கிரேட் லேக்ஸ் இன்ஸ்ட்டிடியூட் கல்வி நிறுவனத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமெரிக்காவில் உள்ள மேஸ் நிர்வாக கல்லூரியின் (MAYS Business School) சந்தையிடுதல் பிரிவு பேராசிரியர் சுரேஷ் ராமநாதன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் இடையே அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த உரையாடலில் இருந்து…

பல ஊர்களில் பள்ளிப் படிப்பை படித்தவர். சென்னை டிஏவி பள்ளியில் சில காலம் படித்திருக்கிறார். அதன் பிறகு ஐஐடி டெல்லி (கெமிக்கல் இன்ஜினீயரிங்), ஐஐஎம் கல்கத்தாவில் நிர்வாகம் படித்தார். ஹிந்துஸ்தான் யுனிலீவர் (ஹெச்யுஎல்) நிறுவனத்தில் சில ஆண்டுகளும், அதனைத் தொடர்ந்து லிண்டாஸ், ஜே.வால்டர் தாம் சன் உள்ளிட்ட விளம்பர நிறுவனங்களில் பணி யாற்றினார். அத னைத் தொடர்ந்து பிஹெச்டி முடித்தவர். தற்போது பேராசிரியராக உள்ளார்.

பெரும்பாலான தலைமைச் செயல் அதிகாரிகள் ஐஐடி மற்றும் ஐஐஎம்-ல் படித்தவர்களாக இருப்பார்கள். தவிர இந்தியாவில் இருக்கும் பல முக்கியமான நிறுவனங்களின் சிஇஒ-க்கள்ஹெச்யுஎல் நிறுவனத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் நீங்கள் பேராசிரியராக வேண்டும் என முடிவெடுத்தது ஏன்?

எனக்கு யோசனை செய்வது பிடித்தமானது. பேராசிரியராக இருந் தால்தான் யோசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். தவிர ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டால் அதனுடைய வேர் வரை சென்று ஆராய வேண்டும் என்பது என்னுடைய இயல்பு. யோசனையை மனிதன் எப்போது நிறுத்துகிறானோ அப்போது அவன் இறக்கிறான் என்பது என்னுடைய நம்பிக்கை. வேலையில் இருந்தாலும் யோசிக்க முடியும். ஆனால் யோசனையை செயல்படுத்துவதற்கான நேரம் கிடைக்காது.

தவிர என்னுடைய சொந்த யோச னையை, ஆராய்ச்சியை என்னால் செயல்படுத்த முடியும். ஆனால் வேலையில் இருந்தால் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை யாராவது ஒருவர் தீர்மானிப்பார். இவற்றைவிட மன நிம்மதியாக இருக்கிறேன்.

ஒருவேளை நிறுவனங்களில் இருந்திருந்தால் இந்த நேரம் சிஇஓ ஆகி இருக்கலாம் என்று தோன்றியிருக்கிறதா?

நான் விளம்பர நிறுவனத்தில் துணைத் தலைவராக இருந்த பிறகுதான், இதுபோதும் என்று முடிவு எடுத்தேன். அவ்வப்போது இது போன்ற கேள்விகள் மனதில் வந்துகொண்டுதான் இருக்கும். நானும் மனைவியும் பேசிக்கொள்ளும் போது இதுபோன்ற விவாதங்கள் வரும். அது தவிர்க்க முடியாது.

ஒவ்வொரு வருடமும் நீங்கள் ஒரே பாடத்தைதான் நடத்தப்போகிறீர்கள். இது சவாலாக இருக்கிறதா?

பாடம் என்பது மாறாதுதான். ஆனால் நான் வகுப்பு எடுப்பது பாதி நேரம்தான். மீதம் இருக்கும் நேரம் மாணவர்களுடன் விவாதிப்பேன். அப்போதைக்கு பிஸினஸில் நடக்கும் விஷயங்களில் இருந்து ’கேஸ் ஸ்டடி’ வரை விவாதிப்போம். ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாணவர்கள் புதுப்புது சிந்தனைகள் வந்துகொண்டே இருக்கிறது.

பெரும்பாலான நிர்வாக புத்தகங்களை எழுதியவர்கள் அமெரிக்கர்கள். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அது தேவையா? தவிர அந்த உதாரணங்கள் இந்தியாவுக்கு பொருந்துமா?

சில விஷயங்கள் என்றைக்கும் மாறாது. உதாரணத்துக்கு இந்திய வாடிக்கையாளர்களின் சிரிப்புக்கும் அமெரிக்க வாடிக்கையாளர்களின் சிரிப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதுபோல சில அடிப்படை விஷயங்கள் பொதுவானவைதான். ஒவ் வொரு நாட்டுக்கும் தனித்தனி தேவைகள் இருக்கும். இந்தியா தொடர்பான உதார ணங்கள் புத்தகங்கள் எழுதுவதுதான் வரவேற்கத்தகுந்தது. அதற்காக இந்த புத்தகம் அமெரிக்காவில் எழுதப்பட்டது. அதனால் இங்கு தேவையில்லை என்னும் மேலோட்டமான முடிவும் தேவையில்லாதது.

இந்தியா தொடர்பான புத்தகங்கள் எழுதும் திட்டம் இருக்கிறதா?

புத்தகம் எழுதும் திட்டம் இல்லை. புத்தகம் எழுதி முடிப்பதற்கு இருவருடம் ஆகலாம். எழுதி, வெளிவருவதற்குள் உலகம் மாறிவிடுகிறது. ஆனால் இந்திய வாடிக்கையாளர்களின் மன நிலை (consumer behaviour) குறித்த ஆராய்ச்சி கட்டுரை எழுத வேண்டும். தவிர இந்தியாவில் செயல்படுத்தப்பட்ட ஒரு யோசனை மற்ற நாடுகளில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து எழுத வேண்டும் என்ற திட்டம் இருக்கிறது.

அமெரிக்கா நிர்வாக கல்லூரிகள் நிறைய ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. இந்த ஆராய்ச்சிகளின் பலன் என்ன?

ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு யோசனையை உருவாக்குகிறோம். நிறுவனங்களிடம் பேசுவதற்கு ஒரு யோசனை மட்டும் போதாது. சில யோசனைகளை ஒருங்கிணைத்து பேக்கேஜ் ஆக மாற்றி நிறுவனங்களிடம் பேசுவோம். சுமார் 15-20 சதவீத ஆராய்ச்சிகள் தொழில்துறைக்கு செல் லும். மீதமுள்ள அனைத்தும் அறிவு பகிர்தலுக்கானவை. அறிவுக்காக உருவாக்கப்படுபவைகளை பத்திரி கைகளுக்கு அளிக்கிறோம். அவை பிற்காலத்தில் பயன்படும்.

அமெரிக்காவில் எம்பிஏ படிப்பதற்கும் இந்தியாவில் எம்பிஏ படிப்பதற்கும் வித்தியாசம் என்ன?

மாணவர்களின் தரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. ஆர்வமும் தகுதியும் இருப்பதால்தான் அவர்கள் எம்பிஏ எடுக்கிறார்கள். அமெரிக்க மாணவர்கள் கொஞ்சம் சவால்களை விரும்புபவராக இருக்கிறார்கள். இந்திய மாணவர்களுடன் அதிகம் விவாதிக்கும் வாய்ப்பு இல்லை என்பதால் அவர்கள் குறித்து கூற முடியாது.

முக்கியமான வித்தியாசமாக எனக்கு தெரிவது பேராசிரியர்கள் விஷ யத்தில்தான். எங்களை போன்றவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் மட்டுமே வேலை நிச்சயம். இல்லை எனில் எங்களுக்கு வேலையில்லை. இப்போது தான் இந்திய பேராசிரி யர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு மாணவர்கள் வருகின்றனர். ஒவ்வொரு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு என்று எதாவது சிறப்பு இருக்கிறதா?

அப்படி அவர்களை சமப்படுத்த முடியாது. திறமை இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இந்தியாவில் இருந்து வரும் மாணவர்கள் வகுப்பில் நிறைய விவாதங்களில் ஆக்டிவாக இருப்பார்கள்.

அங்கு எம்பிஏ படிக்கும் மாணவர்களிடம் தொழில்முனைவு எண்ணம் எப்படி இருக்கிறது?

ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. தொழில்முனைவுதான் ஸ்டான்போர்டின் சிறப்பு. பூத் கல்லூரியில் நிதி தொடர்பான படிப்பு சிறப்பு. கெல்லாகில் மார்க்கெட்டிங் என ஒவ்வொரு கல்லூரிக்கும் சிறப்பு இருக்கிறது.

இருந்தாலும் தொழில்முனைவு அங்கு கொஞ்சம் அதிகம். அதற்கு அங்கு இருக்கும் சூழ்நிலை முக்கியம். வென்சர் கேபிடல் நிறுவனங்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வரு வார்கள். சிறப்பான ஐடியாவாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக நிதி வழங்குவார்கள். தொழில்முனைவுக்கு இதுவும் ஒரு காரணம்.

நன்றி தி இந்து