கடந்த வாரம் ஐடி துறையில் மேனேஜர் நிலையில் இருக்கும் ஒருவரை பொது இடத்தில் சந்திக்க நேர்ந்தது. ஊரே ஐடி துறையை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அலுவலகம் போகவில்லையா என்னும் கேள்விக்கு, ‘மனசு சரியில்லை அதனால் போகவில்லை’ என்றார். சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருந்தோம். பிறகு அவரே தொடர்ந்தார்.

எனக்கு கீழ் 50 நபர்கள் பணி புரிகிறார்கள். வழக்கமாக ஓரிரு நபர்கள் சிறப்பாக செயல்படாமல் இருப்பார்கள். அவர்களை மட்டுமே பணியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்வேன். அதில் எனக்கு எந்த வருத்தமும் இருந்ததில்லை. ஆனால் இந்த முறை 5 பேரை பரிந்துரை செய்ய சொல்லி இருக்கிறார்கள். நான் பரிந்துரை செய்த ஒருவர் மிகச்சிறப்பான பணியாளர் இல்லை என்றாலும், வேலையை விட்டு நீக்கும் அளவுக்கு மோசம் இல்லை. கொடுத்த பணியை செய்வார். 50 பேரை வரிசையில் வைக்கும் போது கடைசி ஐந்து இடத்தில் அவரையும் சேர்க்கவேண்டியதாக போயிற்று. இன்னும் சில நாட்களில் வேலையை விட்டு போக வேண்டும் என்பதை சொல்ல வேண்டும். அதைச் சொல்வதற்கு மனதில்லை. அதனால் இன்று அலுவலகம் போகவில்லை என்றார்.

தற்போது ஐடி துறையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள இந்த உதாரணம் போதுமானது. அதே சமயத்தில் ஒவ்வொரு வருடம் நடப்பதற்கும் இப்போது நடப்பதற்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முன்பு வேலையை விட்டு போகச் சொல்வார்கள். ஆனால் இப்போது அணுகுமுறை மாறியிருக்கிறது. நாளை உங்களுக்கு கடைசி வேலை நாள், 4 மாத சம்பளம் வாங்கிக்கொண்டு போகலாம். இல்லை இரு மாதங்கள் வேலையில் இருக்கலாம். சம்பளம் இருக்கும் ஆனால் எந்த வேலையும் இருக்காது. இங்கிருந்தே வேலை தேடிக்கொள்ளலாம் என இரு வாய்ப்பு களை வழங்குகிறார்கள். ஆனால் அனைத்து நிறுவனங்களிலும் இதே நிலை என்பதால் வேறு வேலை எப்படி கிடைக்கும் என தெரியவில்லை என அந்த மேலாளர் நம்மிடம் புலம்பினார்.

என்ன நடக்கிறது ஐடி நிறுவனங்களில் ?

அவர் கூறியது போல எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து நிறுவனங்களிலும் இதே நிலைமை தான். காக்னிசென்ட் நிறுவனத்தில் உயரதிகாரிகளுக்கு விருப்ப வெளியேறும் திட்டம் அறிவிக் கப்பட்டிருக்கிறது. துணைத்தலைவர் பதவியில் இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான இந்த திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 6 9 மாதங்களுக்கான சம்பளம் வழங்கப்படும். ஆண்டுக்கு ரூ.40 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவர்களைக் குறைப்பதுதான் அவர்களின் இலக்கு. இந்த திட்டத்தின் மூலம் 1,000 நபர்களை வெளியேற்ற நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருந்தாலும் இந்தத் திட்டத்தில் யார் வெளியேற வேண்டும் என்பதும் நிறுவனத்தின் முடிவுதான்.

வேறு நிறுவனத்தில் நல்ல வேலைக் கான ஆர்டரைப்பெற்று, இங்கேயும் 9 மாத சம்பளம் வாங்கிக்கொள்ளும் திறமையான பணியாளர்கள் இந்த திட்டத்தின் கீழ் வெளியே செல்ல நினைத்தால் அது நடக்காது. நிறுவனம் சிலரை குறி வைத்திருக்கிறது. அவர்களாக வெளியேறுவார்கள் என நிறுவனம் காத்திருக்கிறது என காக்னிசென்ட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

இதுதவிர சிறப்பாக பணியாற்ற வில்லை என்கிற காரணத்தால் காக்னிசென்ட் நிறுவனத்தில் 6,000 பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, கேப்ஜெமினி உள்ளிட்ட நிறுவனங்களில் தோராயமாக 50,000-க் கும் மேற்பட்ட பணியாளர்கள் நீக்கப்படுவார்கள் என்னும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

விப்ரோ நிறுவனத்தின் மனிதவள பிரிவு அதிகாரி, 15 ஆண்டு அனுபவ மிக்கவர்களால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாது. இரு ஆண்டு களில் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றால் அந்த பணியாளர் சரியில்லை என நேரடியாக குற்றம் சாட்டியிருக்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இன்னும் ஊதிய உயர்வு அறிவிக்கவில்லை. பொதுவாக ஏப்ரலில் இருந்து ஊதிய உயர்வு அமல்படுத்தப்படும். ஆனால் ஜூலை வரை ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் `லே ஆப்’ கிடையாது என ஊடகங்களில் கருத்து தெரிவித்தாலும் இன்னும் ஊதிய உயர்வு வழங்கப்படாதது சர்ச்சையாக இருக்கிறது. அதிகபட்சமாக டெக் மஹிந்திரா 8,000 பணியாளர்கள் வரை நீக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

ஒரு லட்சம் பணியாளர்கள்?

பெங்களூருவை சேர்ந்த ஹெட் ஹண்டர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஸ் லஷ்மிகாந்த் நம்மிடம் கூறும்போது, மார்ச் 2018-க்குள் ஒரு லட்சம் ஐடி பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் இருக்கிறது. 1,000-க் கும் மேற்பட்ட துணைத்தலைவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். புதிய தொழில்நுட்பங்களின் வருகை, அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்களின் செலவு குறைப்பு ஆகிய காரணங்களால் வேலை இழப்புகள் இருக்கக்கூடும். ஒருபுறம் வேலை இழப்புகள் நடந்துகொண்டிருந்தாலும், புதிய பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கும்.

தற்போது பிரான்ஸ் நாட்டில் வாரத்துக்கு 30 மணி நேரம் வேலை மட்டுமே வழங்கப்படுகிறது. அதுபோல வருங்காலத்தில் அனைவருக்கும் வேலை வழங்க பணி நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கை அரசு எடுக்கலாம். ஐரோப்பிய நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போல, இந்தியாவிலும் விரைவில் அதிகரிக்கும். அவர்களுக் கான பொழுதுபோக்கு, மருத்துவம் உள்ளிட்ட சேவை சார்ந்து வேலை வாய்ப்புகள் உயரும் என கிரிஸ் லஷ்மிகாந்த் கூறினார்.

இவரை விட மெக்கென்சி அறிக்கை இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் 37 லட்சம் நபர்கள் நேரடியாக பணிபுரிகின்றனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் அடுத்த சில ஆண்டுகளில் பயனற்றவர்களாக மாறுவர்கள் என மெக்கென்சி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

காக்னிசென்ட் மறுப்பு

இது குறித்து முக்கியமான ஐடி நிறுவனமான காக்னிசென்ட் நிறுவனத் துக்கு மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்பினோம். எழுத்து பூர்வமான பதில் மட்டுமல்லாமல் தொலைபேசியிலும் அவர்களுடன் பேச முடிந்தது. `லே ஆப்’ என்னும் வார்த்தையை அவர்கள் மறுக்கிறார் கள். ஒவ்வொரு ஆண்டும் பணியாளர் களின் செயல்பாடுகளுக்கு ஏற்ப ஒரு சதவீதத்தினரை வீட்டுக்கு அனுப்ப வேண்டியிருக்கும். வழக்கமான அனைத்து ஐடி நிறுவனங்களும் பின்பற்றும் நடைமுறை தான் இது.

இந்த முறை இந்த எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்திருக்கிறது. இதுபோல ஏற்கெனவே சில முறையும் நடந்திருக்கிறது. ஆனால் அப்போதெல் லாம் இந்த துறை வளரும் துறையாக இருந்ததால், வெளியே செல்பவர் களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் இப்போது இந்த துறையின் வளர்ச்சி குறைவாக இருப்பதினால் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. அதனால் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.

தவிர எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகள் மாறி இருக்கின்றன. முன்பு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்வது எங்களது பணியாக இருந்தது. இப்போது எது பிரச்சினை என்பதை கண்டறிவது பணியாக இருக்கிறது. தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களின் திறனை உயர்த்துவதற்கான பயிற்சி களை வழங்குகிறோம். டிஜிட்டல் உள் ளிட்ட பிரிவுகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் நபர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டிருக்கிறோம். இதைத் தாண்டி யும் சிறப்பாக செயல்படாத பணி யாளர்களை மட்டுமே நீக்குகிறோம். தவிர ஆயிரக்கணக்கான பணியாளர்களை கேம்பஸ் மூலம் தேர்வு செய்து வருகிறோம் என்று நம்மிடம் கூறினார்.

தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

நிறுவனங்கள் இதனை வழக்கமான நடைமுறைதான் என்று கூறினாலும் தொழிற்சங்கங்கள் இதனை லே-ஆப் என்றே தெரிவிக்கின்றன. புஜதொமு (ஐடி பிரிவு) சேர்ந்த கற்பகவிநாயகம் கூறும்போது, 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட உடன் ஐடி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள், செலவுகளை குறைக்கத் தொடங்கிவிட்டனர். அதன் காரணமாக இந்திய நிறுவனங்களும் செலவுகளைக் குறைக்கின்றன. தவிர முதலீட்டாளர்களின் நெருக்கடி காரண மாக லாப வரம்பை உயர்த்துவதற்காக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என்றார்.

விப்ரோ நிறுவனத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத பணியாளர் ஒருவரிடம் பேசினோம். 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பணியாளர்களை நீக்கியதில் லாஜிக் இருந்தது. ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடி என்னும் சூழல் இல்லாதபோது செலவை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 15 ஆண்டு காலமாக நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவரின் இத்தனை ஆண்டு கால ரேட்டிங் நன்றாக இருந்த சூழலில் ஒரே ஒரு ரேட்டிங் குறைவு என்பதால் எப்படி வேலையை விட்டு நீக்க முடியும். இந்த அவலம் ஐடி துறையை தவிர வேறு எங்கும் நடக்காது.

வேலையை விட்டு நீக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், நல்ல வெளியேறும் தொகை வழங்கி, நல்ல பெயருடன் வெளியே சிறப்பாக அனுப்பலாமே? நிறுவனம் அமைப் பதற்காக மத்திய மாநில அரசுகள் பல சலுகைகளை கொடுக்கும் நிலை யில் பணியாளர்களுக்கு இந்த வகையி லாவது நிறுவனங்கள் பிரதிபலன் காண்பிக்கலாம். 40வயதுக்கு மேல் ஐடி துறையில் பணிபுரியும் பணியாளர் களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கும் என கவலையுடன் நம்மிடம் தெரிவித்தார்.

கல்வித்திட்டம் மாற்றம்?

நடுத்தர பணியாளர்களை நீக்கு கிறார்கள் என்று மொத்தமாக குறிப்பிட முடியாது. குழுத்தலைவர்கள் இல் லாமல் புராஜெக்ட் நடக்காது. அவர்கள் இல்லாமல் அடுத்த புராஜெக்ட்டும் வாங்க முடியாது என நாஸ்காம் புருஷோத்தமன் கூறினார். தவிர இது அறிவுசார்ந்த துறை, பணியாளர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களை வைத்து என்ன செய்ய முடியும். மொத்தமாக வேலை இழப்பு என்று பொதுமைப் படுத்த முடியாது. சைபர் செக்யூரிட்டி, அனல்டிக்ஸ், ஆட்டோமேஷன் உள்ளிட்ட சில குறிப்பிட்ட பிரிவுகளில் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.

ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஐடி துறையின் தேவைக்கேற்ப கல்வித்திட்டத்தில் தொடர்ந்து மாற்றம் செய்துவரும் பட்சத்தில்தான் தற்போது படிக்கும் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றார்.

மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தகுதியை வளர்க்காவிட்டால் வேலையை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பதே நிதர்சனம். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஐடி பங்குகள் வாங்கலாம்!

இந்த துறை பங்குகள் நிலைமை எப்படி என பங்குச்சந்தை ஆலோசகர் ஏ.கே பிரபாகரிடம் கேட்டோம். வேலை இழப்பு என்பது இந்த துறைக்கு புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. தற்போதைய பங்குச்சந்தை ஏற்றத்தில் ஐடி பங்குகள் பங்கு பெறவில்லை. அதனால் இந்த துறை பங்குகளின் மதிப்பீடுகள் முதலீட்டுக்கு ஏற்றவையாக இருக்கிறது. குறிப்பாக மைண்ட்ட்ரீ, டாடா எலெக்ஸி, பெர்சிஸ்டென்ட் சிஸ்டம், சயன்ட் (Cyient) ஆகிய மிட்கேப் பங்குகள் முதலீட்டுக்கு ஏற்றவையாக இருக்கின்றன என்றார்.

சேமிக்காதது ஏன்?

வேலை இழப்பு என்பது நிச்சயம் கடினமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அடுத்த வேலை கிடைக்கும் வரைக்கும் சமாளிப்பதற்கு கூட சில ஐடி பணியாளர்கள் சேமிப்பதில்லை என முதலீட்டு ஆலோசகர் விவேக் கார்வா கூறினார். எனக்கு தெரிந்த ஐடி பணியாளர் ஒருவர் 3,000 ரூபாய்க்கு டிபன் பாக்ஸ் வாங்கினார். சிலர் கேட்ஜெட் வாங்குகிறார்கள். இதுபோல சம்பாதிக்கும் மொத்த தொகையை யும் செலவு செய்வதால், சிறிய நெருக்கடியைக் கூட அவர்களால் தாங்க முடியவில்லை. சேமிப்பின் அவசியத்தை புரிந்துகொள்ள வேண்டும் என கார்வா கூறினார்.
நன்றி : தி இந்து