திருமணத்துக்காக முதன் முதலாக பார்க்கும் ஆண் அல்லது பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அதுபோலவே நிறுவனங்கள் இணைப்பும் தற்போது மாறி வருகிறது. இணைப்புக்காக பேச்சு வார்த்தை நடத்தும் நிறுவனங்கள் அனைத்தும் இணைவதில்லை.

இதற்கு சமீபத்திய உதாரணம் ஸ்ரீராம் குழுமம் மற்றும் ஐடிஎப்சி வங்கி. இந்த இரு நிறுவனங்களும் இணைவதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அக்டோபர் மாத இறுதியில் இரு நிறுவனங்கள் இணைப்பில் உள்ள சிக்கல்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஆனால் அடுத்த இரு மாதங்களிலேயே ஐடிஎப்சி வங்கி மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்குவதற்கு முடிவெடுத்திருக்கிறது. இந்த இணைப்பு ரிசர்வ் வங்கி உள்ளிட்ட ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதிக்கு பிறகுதான் முடிவடையும் என்றாலும், பெரிய சிக்கல் இருக்காது என்றே இந்த துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். வரும் அக்டோபர் மாதத்துக்குள் இந்த இணைப்பு முழுமையாக முடிவடையும் என ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லால் தெரிவித்திருக்கிறார்.

ஐடிஎப்சி வங்கியுடன் கேபிடல் பர்ஸ்ட் இணைந்து புதிய நிறுவனமாக மாறுகிறது. தற்போது ஐடிஎப்சி வங்கியின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ராஜீவ் லால் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக இருப்பார். புதிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக, கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வி.வைத்தியநாதன் இருப்பார். இரு நிறுவனங்களும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் என்பதால் 10 கேபிடல் பர்ஸ்ட் பங்கு வைத்திருப்பவர்களுக்கு 139 ஐடிஎப்சி வங்கி பங்குகள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மூன்று மாதத்தில் அடுத்த இணைப்பு எப்படி?

அக்டோபர் மாத இறுதியில் ஸ்ரீராம் குழுமத்துடனான இணைப்பு கைவிடப்படுகிறது. ஜனவரி 13-ம் தேதி கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்குவதற்கான அறிவிப்பு வெளியாகிறது. ஸ்ரீராம் குழுமத்தில் பல நிறுவனங்கள் இருப்பதால் முழுமையாக இணைப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் இங்கு ஒரே நிறுவனம்தான் அதனால் இணைப்பு எளிதாக முடிவடையும் என தெரிகிறது. அப்படியானால் ஏன் ஸ்ரீராம் குழுமத்துக்கு முன்பு கேபிடல் பர்ஸ்டை இணைக்கவில்லை என்னும் கேள்வி இயல்பானது.

எங்களுடைய இணைப்பு பட்டியலில் கேபிடல் பர்ஸ்ட் நிறுவனமும் இருந்தது. ஆனால் கேபிடல் பர்ஸ்ட் நிறுவனத்தில் பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் முதலீடு செய்திருக்கிறது. ஒருவேளை அப்போது எங்கள் வங்கியில் இணைந்திருக்கும் பட்சத்தில் ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பங்குகளை வார்பர்க் பின்கஸ் வைத்திருந்தது. அக்டோபரில் கணிசமான பங்குகளை அந்த நிறுவனம் விற்றது. அதே சமயத்தில் ஸ்ரீராம் குழுமத்துடனான இணைப்பு நடக்கவில்லை என்பதால் கேபிடல் பர்ஸ்ட் இணைப்பு என்பது மிக இயல்பானது. அதனால் இரு மாதங்களில் பேச்சு வார்த்தை முடிந்தது என ராஜீவ் லால் தெரிவித்திருக்கிறார்.

கேபிடல் பர்ஸ்ட் இணைய காரணம்?

கேபிடல் பர்ஸ்ட் ஏன் இணைய வேண்டும் என்னும் கேள்விக்கு முன்பு அந்த நிறுவனத்தின் தலைவர் வைத்தியநாதன் குறித்து புரிந்து கொள்வது இந்த இடத்தில் அவசியம். மிக சிறிய வயதிலேயே வங்கித்துறையில் வேகமாக வளர்ந்தவர். 32 வயதில் ஐசிஐசிஐ பர்சனல் பைனான்ஸியல் சர்வீசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றவர். ஐசிஐசிஐ லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர்.

38 வயதில் ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர் குழுவில் சேர்ந்தவர். இவர் வயதுக்கு ஐசிஐசிஐ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக வருவதற்கு காலம் ஆகும். அதே சமயத்தில் தொழில் முனைவு எண்ணமும் இருப்பதால் ஏற்கெனவே செயல்பட்டு வந்த வங்கி அல்லாத நிதி நிறுவனத்தை, பிரைவேட் ஈக்விட்டி நிறுவனமான வார்பர்க் பின்கஸ் முதலீட்டுடன் நடத்தி வந்தார்.

`பட்டியலிடப்படாத நிறுவனம் எனில் ஐபிஓ மூலம் முதலீட்டாளர்களுக்கு (வார்பர்க் பின்கஸ்) வெளியேறும் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் நீங்கள் பட்டியலிடப்பட்ட நிறுவனம். எப்படி வெளியேறும் வாய்ப்பு கொடுக்க போகிறீர்கள்’? என இரு ஆண்டுகளுக்கு கேட்டிருந்தேன். நிறுவனம் நஷ்டத்தில் இருக்கும் போதே முதலீட்டாளரை கண்டுபிடித்தோம். தற்போது நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.

தேவையான சமயத்தில் முடிவெடுப்போம் என வைத்தியநாதன் அப்போது நம்மிடம் தெரிவித்தார். அந்த தேவையான முடிவு இணைப்பு என்பது தற்போதுதான் நமக்கு புரிகிறது. வார்பர்க் பின்கஸுக்கு வங்கி பங்குகள் கிடைப்பது என்பது அந்த நிறுவனத்துக்கும் தேவையான ஒன்று.

தவிர இணைக்கப்படும் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக வைத்தியநாதன் இருப்பார் என்று வழங்கப்பட்ட உத்தரவாதமும் இந்த இணைப்பை பரிசீலனை செய்வதற்கு ஒரு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியநாதனுக்கு இருக்கும் அனுபவமும், வேகமும் இந்த உத்தரவாதத்தை கொடுப்பதற்கு காரணமாக இருக்கும்.

ஐடிஎப்சி வங்கிக்கு என்ன அவசரம்?

ஒவ்வொரு வங்கிக்கும் காசா விகிதம் மிகவும் முக்கியம். அதாவது வங்கிகளில் இருக்கும் மொத்த டெபாசிட்களில் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கில் உள்ள தொகை காசா எனப்படும். சேமிப்பு கணக்குக்கு 3.5 சதவீதம் கொடுத்தால் போதும், நடப்பு கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி வழங்கத் தேவையில்லை. என்பதால் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிக வட்டிக்கு கடன் வழங்கலாம்.

ஆனால் ஐடிஎப்சி வங்கியின் மொத்த டெபாசிட்டில் காசா விகிதம் 8.2 சதவீதம் அளவிலே இருக்கிறது.பொதுவாக வங்கிகளில் உள்ள டெபாசிட்களில் காசா விகிதம் 30 சதவீதம் அளவுக்கு இருக்கும். இதை உயர்த்துவதற்கு சிறு முதலீட்டாளர்கள் அவசியம்.

ஆனால் ஐடிஎப்சி(Infrastructure Development Finance Company) நிறுவனத்தில் இருந்து பிரிந்து, 2015-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் ஐடிஎப்சி வங்கி. புதிதாக தொடங்கப்பட்ட வங்கி என்பதால் சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. சிறுமுதலீட்டாளர்களின் பங்களிப்பை இயல்பாக உயர்த்துவது என்பது அதிக காலம் எடுத்துக்கொள்ளும். அதனால் சிறுமுதலீட்டாளர்கள் அதிகம் இருக்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்தது.

நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சி வெற்றிபெற்றாலும் காசா விகிதத்தையும், ரீடெய்ல் கடன் விகிதத்தையும் உயர்த்த வேண்டும். அடுத்த சவால் இங்குதான் இருக்கிறது.

வைத்தியநாதன் ரீடெல் துறையின் அனுபவம் மிக்கவர் என்றாலும், கடந்த இரு ஆண்டுகளில் வங்கித்துறையின் போக்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக, ரீடெய்ல் பிரிவினை உயர்த்துவது சவாலாக இருக்கும் என்றே மெக்காரி கேபிடல் நிறுவனத்தின் சுரேஷ் கணபதி கூறியிருக்கிறார்.

உத்தி ரீதியாக பார்க்கும் பட்சத்தில் இரு நிறுவனங்களுக்கும் இந்த இணைப்பு என்பது சரியானது மட்டுமல்ல, தேவையானதும் கூட. ஆனால் திருமணமோ, புதிய நிறுவனமோ அதன் வெற்றியை 1,000 நாட்கள் பிறகுதான் சொல்ல முடியும் என்று சொல்லுவார்கள். எனவே 3 ஆண்டுகளுக்கு பிறகு பார்ப்போம்.