மியூச்சுவல் பண்ட் துறை கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. இதற்கேற்ப பண்ட் நிறுவனங்கள் கையாளும் தொகையும் அதிகரித்து வருகிறது. மியூச்சுவல் பண்ட் விழிப்புணர்வு பிரசாரங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி மூலமும் நேரடியாக முதலீடு செய்வதும் அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் ஆன்லைன் மூலமாக நேரடிய முதலீடு செய்வதற்கான வாய்ப்பை வழங்கும் ஸ்கிரிப் பாக்ஸ் டாட் காம் ( Scripbox.com) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இ.ஆர். அசோக்குமார் கடந்த வாரம் சென்னை வந்திருந்தார். அவருடனான உரையாடலில் இருந்து…

சமீப காலங்களில் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு உயர என்ன காரணம்?

ஒவ்வொரு நிறுவனமும் மியூச்சுவல் பண்ட் விழிப்புணர்வுக்கு அதிக கவனம் செலுத்தி வருகின்றன. இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கமான ஆம்பி தற்போது சாஹி ஹை (sahi hai) என்னும் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. இதைவிட முக்கியம் பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம் குறைந்திருப்பது. மேலும் ரியல் எஸ்டேட் பெரிய அளவில் லாபம் இல்லை என்பதால் அடுத்த முதலீட்டு வாய்ப்பினை மக்கள் தேடத் தொடங்கி இருக்கிறார்கள். அடுத்து இருக்கும் வாய்ப்பு மியூச்சுவல் பண்ட் என்பதால் இதில் கவனம் செலுத்துகின்றனர்.

அடுத்த காரணம் பணமதிப்பு நீக்கம். இது சரியா தவறா என்பது வேறு விவாதம். ஆனால் பணமதிப்பு நீக்கம் காரணமாக பணம் குறித்த விவாதம் வீடுகளில் உருவாகி இருக்கிறது. இதுவரை நாம் பணம் சம்பாதிப்போம். ஆனால் பணத்தை பற்றி பேச மாட்டோம். இப்போது பேசத் தொடங்கி இருக்கிறோம். முதலீடுகளில் எது சிறந்தது என்னும் விவாதம் தற்போது தொடங்கி இருக்கிறது.

முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனை இல்லாமல் நேரடியாக மியூச்சுவல் பண்ட்களை வாங்குவது சரியா?

முதலீடுகளில் தவறு என்பது ஆலோசகர்கள் மூலமாகவும் நடக்கிறது. நேரடி முதலீடுகளின் மூலமும் நடக்கிறது. மற்றவர்களை பற்றி கருத்து கூற முடியாது. எங்களிடம் ஒருவர் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வருகிறார் என்றால் நாங்கள் முதலில் கேட்பது எவ்வளவு காலத்துக்கு முதலீட்டை தொடர முடியும் என்பதுதான். உங்களின் முதலீட்டு காலத்தை முடிவு செய்துவிட்டாலே தவறுகள் குறையும். குறுகிய காலத்துக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக ரிஸ்க் இருக்கும் திட்டங்களை பரிந்துரை செய்ய மாட்டோம்.

பல முக்கிய பண்ட் மேனேஜர்களை சந்தித்திருக்கிறேன். அவர்கள் சொல்வது இதுதான். `தனிமனிதர்கள் தவறு செய்யலாம். ஆனால் ஒரு சரியான வழிமுறையை பின்பற்ற தொடங்கி விட்டால் தவறுகள் குறைவாகும்’ என்பதுதான். இதனை அடிப்படையாக வைத்துதான் எங்களுடைய இணையதளத்தை உருவாக்கி இருக்கிறோம். தெளிவான விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் சரியான பண்ட்களை தேர்வு செய்கிறோம். இதனுடன் முதலீட்டாளர்களின் தேவையை பொறுத்து பண்ட் வாய்ப்புகளை வழங்குகிறோம்.

ஆன்லைன் மட்டுமல்லாமல் நேரடியாக முதலீட்டாளர்களை சந்தித்திருக்கிறீர்களா?

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் முதலீட்டாளர்களை சந்திக்கிறோம். இருந்தாலும் முதலீடு குறித்த பலவிதமான கருத்துகளுடன் மக்கள் இருக்கிறார்கள். சிலர் மிகவும் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சிலருக்கு அடிப்படைகள் கூட தெரியவில்லை. சிலர் அடுத்தவர்களை நம்பியே தங்களுடைய முதலீட்டை தொடர்கிறார்கள். அடுத்தவர்கள் என்றால், அப்பா, அம்மா போன்ற குடும்ப உறுப்பினர்களை நம்பி இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள், ஆனால் முதலீடு என்னும் போது அவ்வளவு மெனக்கெடுவதில்லை. லட்சங்களில் சம்பளம் வாங்குபவர்கள் கூட அவசர தேவைக்கு கடன் வாங்குவதை பார்த்திருக்கிறேன்.

மியூச்சுவல் பண்ட்களை மட்டுமல்லாமல் இதர நிதி சேவைகளையும் வழங்கும் திட்டம் இருக்கிறதா?

மியூச்சுவல் பண்ட்களில் முதலில் தொடங்கி இருக்கிறோம். இதில் குறிப்பிட்ட எல்லையை அடைந்த பிறகுதான் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும். தற்போதே சில வாடிக்கையாளர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் வீட்டுக்கடன் திட்டங்கள் குறித்து கேட்க தொடங்கி இருக்கிறார்கள். இது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. நாங்கள் இலக்கு நிர்ணயம் செய்திருக்கும் வாடிக்கையாளர்களை அடைந்த பிறகு அடுத்த கட்டம் குறித்து யோசிப்போம்.

மியூச்சுவல் பண்ட்கள் 21 லட்சம் கோடி தொகையை கையாளுகின்றன. அடுத்த சில ஆண்டுகளில் மியூச்சுவல் பண்ட் கையாளும் தொகை எவ்வளவு இருக்கும்?

பெரும்பாலான கணிப்புகள் தவறாகவே இருப்பதாக நினைக்கிறேன். தற்போதைய நிலைமையை வைத்துதான் கணிப்புகள் இருக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் சிறு முதலீட்டாளர்களின் பங்கு 2 மடங்காக உயரும் என கணித்திருக்கிறார்கள். ஆனால் உயர்ந்து வரும் இளைஞர்களின் எண்ணிக்கை, அவர்களின் சேமிப்பை கணக்கில் எடுத்து கொள்ள தவறிவிடுகிறார்கள். என்னை பொறுத்தவரையில் சிறு முதலீட்டாளர்களின் பங்கு மூன்று மடங்காக உயரும். எண்ணிக்கையில் சொல்ல வேண்டும் என்றால் தற்போது ஒரு மாதத்துக்கு வரும் எஸ்பிஐ தொகை ரூ.5,000 கோடியாக இருக்கிறது. 2022-ம் ஆண்டு ஒரு மாதத்துக்கு வரும் எஸ்.ஐ.பி தொகை ரூ.15,000 கோடியாக இருக்கும் என நாங்கள் கணிக்கிறோம்.