மியூச்சுவல் பண்ட் துறை வளர்ச்சி அடைந்து வருவதால் இந்த துறை குறித்து ஏதாவது ஒரு செய்தி தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றது. வளர்ச்சியை நெறிமுறைப்படுத்த செபியும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வளர்ச்சியை பங்கிட்டுகொள்ள ஒவ்வொரு நிறுவனங்களும் கடும் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில் எடில்வைஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ராதிகா குப்தா கடந்த வாரம் சென்னை வந்திருந்தார்.

இவரது தந்தை ஐஎப்எஸ் அதிகாரி என்பதால் பல நாடுகளில் கல்வி பயின்றிருக்கிறார். வார்டனில் கணிப்பொறி அறிவியல் படித்தவர். அதனைத் தொடர்ந்து மெக்கென்சி நிறுவனத்தில் பணியாற்றினார். 2009-ம் ஆண்டு தொழில் தொடங்குவதற்காக இந்தியாவுக்கு வந்தார். மாற்று முதலீட்டு பிரிவில் (alternative investment funds) `போர்பிரன்ட் கேபிடல்; என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். 2014-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை எடில்வைஸ் வாங்கியது. அதனைத் தொடர்ந்து எடில்வைஸ் குழுமத்தில் பணியாற்றினார். கடந்த பிப்ரவரியில் எடில்வைஸ் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். மியூச்சுவல் பண்ட் துறை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து…

மியூச்சுவல் பண்ட் துறையில் அதிக அனுபவம் இல்லை. நிறுவனத்தை எப்படி நடத்துகிறீர்கள்?

இந்த துறையில் எனக்கு அனுபவம் இல்லை என்பது உண்மைதான். இருந்தாலும் மாற்று முதலீட்டுப் பிரிவில் நிறுவனத்தை நடத்திய அனுபவம் கை கொடுக்கிறது. முதலீடுகளை சரியாகக் கையாளுவது, வாடிக்கையாளர்களை புரிந்து கொள்வது ஆகியவை மியூச்சுவல் பண்ட் மற்றும் மாற்று முதலீட்டு திட்டத்துக்கு பொருந்தும். தவிர இந்த துறைக்கு எனக்கு பழக்கம் இல்லாததால் ஏற்கெனவே மற்ற நிறுவனங்கள் செய்வதில் இருந்து மாற்றி செயல்படமுடியும். புதுமையான திட்டங்களை கொண்டு வர முடியும்.

உங்களிடம் ஏற்கெனவே பல திட்டங்கள் இருக்கின்றன. இந்த நிலையில் ஒரு பிரிவில் ஒரு பண்ட் மட்டுமே இருக்க வேண்டும் என செபி உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் திட்டங்களில் என்ன புதுமையை உங்களால் புகுத்த முடியும்?

செபி விதிமுறைகளை உருவாக்கி இருக்கிறது என்பது உண்மைதான். ஏற்கெனவே ஒரு பிரிவில் பண்ட் இருக்கும் பட்சத்தில் அதே பிரிவில் இன்னொரு பண்ட் இருக்கக் கூடாது என்பதுதான் விதி. ஆனால் செபி புதிய திட்டங்களைக் கொண்டு வரக்கூடாது என்றோ புதுமைகளைக் கொண்டு வரக்கூடாது என்றோ தடைவிதிக்கவில்லை. புதுமையான திட்டமாக இருக்கும்போது அதனை செபி அனுமதிக்கும். எங்கள் நிறுவனம் சந்தையை நன்றாக புரிந்து வைத்திருக்கிறது. அடுத்த 6 மாதம் முதல் 12 மாதங்களில் புதுமையான திட்டங்களை எங்களிடம் இருந்து நீங்கள் எதிர்பார்க்க முடியும். அப்போது திட்டங்கள் குறித்து நாம் பேசலாம். தவிர கட்டணங்கள் குறித்த புதுமையும் இருக்கும்.

கிட்டத்தட்ட நிறுவனம் தொடங்கி 10 ஆண்டு ஆகிறது. ஆனால் நீங்கள் கையாளும் சொத்து மதிப்பு ரூ.10,000 கோடிக்கு அருகில் இருக்கிறது. தவிர இந்தத் தொகையில் ஜேபி மார்கன் நிறுவனத்தை கையகப்படுத்திய தொகையும் அடங்கும். உங்களது இலக்கு என்ன?

எங்களுக்கு மிகப்பெரிய இலக்குகள் உள்ளன. அதிக சிறு முதலீட்டாளர்களை சென்றடைவதற்கான திட்டத்தை வைத்திருக்கிறோம். வரும் 2025-ம் ஆண்டில் நாங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடியாக இருக்கும். இதை நோக்கியே எங்களது பயணத்தை அமைத்து வருகிறோம்.

ரூ.10,000 கோடியில் இருந்து 3 லட்சம் கோடி என்பது சாத்தியமான இலக்கா? இல்லை சாகச இலக்கா?

கடந்த ஆண்டு வரைக்கும் எங்களுடைய குழுமத்தில் உள்ள வெல்த் மேனேஜ்மெண்ட், offshore asset management உள்ளிட்ட பிரிவுகளில் அதிகம் கவனம் செலுத்தினோம். ஆனால் கடந்த ஆண்டு ஜேபி மார்கன் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து மியூச்சுவல் பண்ட் பிரிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். பணியாளர்கள், நேரம் என இந்த பிரிவுக்கு கூடுதல் கவனத்தை எடில்வைஸ் குழுமம் செலுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக விரிவாக்க நடவடிக்கையை தொடர்ந்து செய்து வருகிறோம். அதனால் நிர்ணயம் செய்த இலக்கை விட கூடுதலான தொகையை கூட அடையலாம் என நிறுவனம் கணித்திருக்கிறது.

இது தவிர ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் இலக்கு நிர்ணயம் செய்து அதை நோக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டு முடிவில் ரூ. 14,000 கோடி என்னும் இலக்கை எட்டுவோம். தற்போது மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் ரூ.21 லட்சம் கோடிக்கு மேல் கையாளுகின்றன. ஆனால் ஐந்தாண்டுகளுக்கு முன்பே ரூ.21 லட்சம் கோடி என யாராவது கணித்திருக்க முடியுமா? அதுபோல 2025-ம் ஆண்டில் மியூச்சுவல் பண்ட்கள் ரூ.100 லட்சம் கோடியை கையாளும், அதில் 3 சதவீதத்தை (ரூ.3 லட்சம் கோடி) எங்கள் வசம் இருக்கும்.

நிறுவனத்தின் வளர்ச்சி என்பது சொந்த வளர்ச்சியில் இருக்குமா அல்லது நிறுவனங்களை கையகப்படுத்துவதன் மூலம் நடக்குமா?

நிறுவனம் சொந்தமாக வளர்வதுதான் முக்கியமானது. அதற்கான நிறுவனங்களை கையகப்படுத்த மாட்டோம் என்று சொல்லவில்லை. தற்போது எந்த நிறுவனத்துடனும் பேச்சு வார்த்தை இல்லை. அதேபோல நிறுவனத்தின் சொத்து மதிப்புக்காக மட்டுமே நிறுவனங்களை கையகப்படுத்தமாட்டோம். சரியான காரணங்களுக்காக மட்டுமே கையகப்படுத்துவோம்.

பண்ட்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

பண்ட்களின் செயல்பாடுதான் சிறுமுதலீட்டாளர்களை ஈர்க்கும் என்பதை உணர்ந்திருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட வரம்புக்குள், எங்களுக்கு நாங்களே வரையரை செய்து கொண்ட விதிமுறைகளுக்குள் செயல்பட்டு, முதல் சில இடங்களுக்குள் தொடர்ந்து இருக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். தற்போதும் எங்களுடைய சில பண்ட்கள் முதல் சில இடங்களில் உள்ளன.

2018-ம் ஆண்டு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சந்தை எதிர்பார்ப்பு வழங்குவதை நாங்கள் நிறுத்திவிட்டோம். ஆனால் நீண்டகால அடிப்படையில் நல்ல வளர்ச்சி இருக்கும். நிலையான அரசியல் சூழல், கட்டுக்குள் இருக்கும் பணவீக்கம், அரசு செய்து வரும் சீர்திருத்தம் உள்ளிட்ட சில காரணங்களால் அடுத்த சில ஆண்டுகளுக்கு 12 முதல் 14 சதவீத லாபத்தை பங்குசந்தை மூலம் எதிர்பார்க்கலாம். சிறு முதலீட்டாளர்களை பொறுத்தவரை மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் இல்லாமல் பிரித்து முதலீடு செய்யவேண்டும்.