டிஜிட்டல் மயமாகி வரும் இந்த காலத்தில் வாசிப்பும் டிஜிட்டலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு கணித்த நிறுவனம் மேக்ஸ்டர் (magzter). சர்வதேச அளவில் உள்ள 10,000 பத்திரிகைகளை இந்த நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளம் மூலம் படிக்கலாம். ஆரம்பத்தில் சென்னையில் தொடங்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் நிர்வாக வசதிக்காக நியூயார்க் நகரில் இருந்து இந்த நிறுவனம் செயல்படுகிறது. நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான விஜய்குமார் ராதாகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். நிறுவனத்தின் தொடக்க காலம், ஆரம்ப கால சவால்கள், அடுத்த கட்டம் என பல்வேறு விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து..
மதுரையில் படித்தேன். வழக்கம்போல கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர்ந்தேன். சில சிறிய நிறுவனங்களில் வேலை செய்தாலும் தொழில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் உள்ளுக்குள் இருந்தது. அதனால் வேலையைவிட்டு தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு நிறுவனம் தொடங்கினோம். நாங்கள் எதற்காக தொடங்கினோமோ அந்த பணியை எங்களால் செய்ய முடியவில்லை. ஆனால் வேறு புராஜக்ட்கள் வந்தன. சிறிய நிறுவனம் என்பதால் அதனை எடுத்துகொண்டோம். சில ஆண்டுகளில் எங்களுடைய குழுவும் பெரிய அளவில் உயர்ந்தது. இந்த நிலையில் மேக்ஸ்டர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான கிரிஷை சந்தித்தேன். அவரும் எங்களைபோல ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். எங்களுக்குள் நல்ல புரிந்துணர்வு இருந்தது. அதனால் எங்கள் இரு நிறுவனங்களையும் நாங்கள் இணைத்து அடுத்த கட்டம் குறித்து யோசிக்க தொடங்கினோம்.
ஆரம்பத்தில் 35 பத்திரிகைகளை வைத்து மட்டுமே இணையதளத்தை தயார் செய்துவிட்டோம். இதில் பல சிக்கல்கள், வாடிக்கையாளர்கள் விரும்பும் பத்திரிகை எங்களிடத்தில் இருக்காது. மாறாக பத்திரிகை நிறுவனங்களும் உங்களிடத்தில் எத்தனை வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் என்னும் கேள்வியை கேட்டார்கள். அதனால் நிதி திரட்டுவதன் அவசியத்தை உணர்ந்தோம். கலாரி கேபிடல் நிறுவனம் ஆரம்பத்தில் முதலீடு செய்தது. இதனை தொடர்ந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நேரடியாக சென்று பல பத்திரிகைகளை எங்களுடன் இணைத்தோம். நிறுவனம் தொடங்கிய முதல் மூன்று ஆண்டுகளில், ஆண்டுக்கு 250 நாள் அளவுக்கு நாங்கள் பயணம் செய்தோம். ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு பத்திரிகையாக பணம் கட்டி படிக்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தோம். அதனை தொடர்ந்து மொத்தமாக குறிப்பிட்ட தொகையை செலுத்தும் பட்சத்தில் எங்கள் வசம் இருக்கும் அத்தனை பத்திரிகைகளையும் படிக்கும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறோம். இப்போது டெக்னாலஜி துறையில் லாபம் ஈட்டும் மிகச் சில நிறுவனங்களில் நாங்களும் இருக்கிறோம் என்றார்.
இப்போதுதான் டேட்டா விலை குறைவாக இருக்கிறது. அப்போது டேட்டாவின் விலையும் அதிகம். தவிர பத்திரிகை படிக்கும் பழக்கம் இருப்பவர்கள் குறித்து ஆராய்ச்சி எதாவது செய்தீர்களா?
முன்பை விட டேட்டா விலை குறைவுதான். ஆனால் டேட்டாவின் விலை குறைந்துகொண்டு வரும் என்பது எங்களின் கணிப்பாக இருந்தது. தவிர ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு டேட்டாவை வாங்குவதில் பெரிய பிரச்சினை இருக்காது. தவிர அலுவலகத்தில் இணையம் மற்றும் வைபை வசதி இருப்பதால் டேட்டா குறித்து பெரிய அளவில் கவலைப்படவில்லை. மேலும் சர்வதேச அளவில் டேட்டா விலை குறைவு. அதனால் இங்கும் குறையும் என்று நம்பி ரிஸ்க் எடுத்தோம். அதற்கு பலன் கிடைத்தது.
இந்தியாவில் பத்திரிகை படிக்கும் பழக்கம் இருப்பவர் 2 முதல் 4 பத்திரிகை வரை படிக்கிறார்கள். அமெரிக்காவில் 6 பத்திரிகைகளுக்கு மேல் படிக்கிறார்கள் என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. இப்போது எங்கள் செயலிக்கு வரும் வாசகர்கள் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை வாசிக்கிறார்கள். இதுவரை பருவ இதழ்கள் மட்டும் இருந்தது. இனி நாளிதழ்களையும் கொண்டு வர இருக்கிறோம், அதனால் வாசிக்கும் நேரம் உயர வாய்ப்பு இருக்கிறது.
உங்களிடத்தில் 10,000 பத்திரிகைகள் இருந்தாலும், வாசகரால் 10 புத்தகங்களை கூட படிக்க முடியாதே? திகட்டிவிடாதா?
அனைத்து புத்தகங்களையும் படிக்க முடியாது என்பது உண்மை. சூப்பர் மார்க்கெட்டில் பல விதமான சோப்புகள் இருக்கும். வாடிக்கையாளர்கள் தேவையானதை எடுத்துக்கொள்ளலாம். அதுபோலதான் இங்கும். நாங்கள் வாய்ப்புகள் வழங்குகிறோம். மேலும் வாசகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கட்டுரைகளை நாங்கள் வகைப்படுத்தி வழங்குகிறோம். மேலும் ஒரு வார்த்தை தேடினால் சர்வதேச அளவில் உள்ள பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகள் உங்களுக்கு காண்பிக்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது வசதியாக இருக்கிறது. டிஜிட்டலால் வாசிக்கும் பழக்கம் முன்பைவிட மேம்பட்டுள்ளது. அதேபோல எங்களுடைய மொத்த வாடிக்கையாளர்களில் சுமார் 20 சதவீதம் நபர்கள் குறிப்பிட்ட சில பத்திரிகைகளை தவிர மற்றவற்றை படிப்பதில்லை என்பதனையும் ஒப்புக்கொள்கிறேன்.
உங்கள் நிறுவனத்தில் இணைவதற்கு ஏதாவது விதி இருக்கிறதா?
அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளை நாங்கள் ஏற்கிறோம். மாடல் பத்திரிகைகள் எங்களிடத்தில் இருந்தாலும் ஆபாச பத்திரிகைகளுக்கு நாங்கள் இடம் கொடுப்பதில்லை.
உங்களின் பிஸினஸ் மாடல் என்ன?
வாடிக்கையாளர்களிடம் நாங்கள் மொத்தமாக பணம் வாங்கிக்கொள்கிறோம். வாசகர்கள் எந்த புத்தகத்தை எவ்வளவு நேரம் படிக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் கொடுக்கிறோம். எங்களுடைய மொத்த வருமானத்தில் இந்தியாவில் இருந்து 35 சதவீதம் அமெரிக்காவில் இருந்து 35 சதவீதம் கிடைக்கிறது. மற்ற நாடுகளில் இருந்து மீதமுள்ள வருமானம் வருகிறது.
மேக்ஸ்டரின் அடுத்தகட்டம் என்ன?
நாங்கள் பத்திரிகை சப்ஸ்கிரிப்ஷன் நிறுவனத்தில் இருந்து டெக்னாலஜி நிறுவனமாக மாறி வருகிறோம். அதிக பத்திரிகைகள் இருப்பதால், வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பது முக்கியமானதாகிறது. ஒருவருக்குத் தேவையானதை வழங்குவது குறித்து புரிந்துகொள்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். பருவ இதழ்களிலிருந்து நாளிதழ்களில் கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த சில மாதங்களாக நூலகம் மற்றும் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களில் படிக்கும் பழக்கத்தை உருவாக்கும் முயற்சியை எடுத்து வருகிறோம்.
Recent Comments