எதிர்காலத்தை ஓரளவுக்கு கணிக்க கூடியவர்களே தொழிலில் வெற்றியடை கிறார்கள். இந்த வகையில் யுடியூப் வளர்ச்சியை முன்கூட்டியே கணித்தவர் சூ சூ டிவியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வினோத் சந்தர். யுடியூப் என்பது கூகுள் தொடங்கிய நிறுவனம் அல்ல, வாங்கிய நிறுவனம். 2006-ம் ஆண்டு 165 கோடி டாலர் கொடுத்து யுடியூப் நிறுவனத்தை கூகுள் வாங்கியது. அப்போதே வரும் காலத்தில் யுடியூப் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் என நம்பினார் வினோத் சந்தர். சூ சூ டிவி என்பது குழந்தைகளுக்கான பாடல், கார்டூன்களை உருவாக்கும் சேனல்.

இந்த சேனல் உருவான மற்றும் வளர்ந்த விதம் குறித்து வினோத் சந்தர் கூறியதாவது:

ஆரம்பத்தில் பட்டீஸ் இன்போடெக் என்னும் நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து 2001-ம் ஆண்டு தொடங் கினோம். இதில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வெப் டிசைன் உள்ளிட்ட சில சேவைகளை செய்து வந்தோம். 2006-ம் ஆண்டு யுடியூப் நிறுவனத்தை கூகுள் வாங்கியதை தொடர்ந்து வரும் காலத்தில் யுடியூப் பெரிய வளர்ச்சி அடையும் என நம்பினோம். என்ன செய்வது என்னும் திட்டமெல்லாம் இல்லை. ஆனாலும் யுடியூபினை கவனித்து வந்தோம்.

என்னுடைய அப்பா சந்திரபோஸ் இசையமைத்த சில பாடல்களை 2006ம் ஆண்டே யுடியூபில் ஏற்றினோம். தொடர்ந்து கவனித்து வந்தாலும் எந்த யோசனையும் இல்லை. சில வீடியோக்கள் 10 கோடி நபர்கள் வரை பார்த்திருப்பதையும் நாங்கள் கவனித்தோம். ஆனால் ஏற்கெனவே தொடங்கிய நிறுவனத்தில் உள்ள வேலை பளு காரணமாக எதையும் யோசிக்க முடியவில்லை.

ஆனால் 2010-11-ம் ஆண்டில் நாங்கள் தொடங்கிய நிறுவனத்தில் பெரிய அளவிலான பிஸினஸ் இல்லை.

அதே சமயம் என்னுடைய குழந்தைக்கு யுடியூப் வீடியோ காண்பித்தேன். அதன் பிறகு என்னுடைய குழந்தையை வைத்தே சில வீடியோக்களை எடுத்து வெளியிட்டேன்.

ஏன் சிறிய குழந்தையை வைத்து வீடியோ எடுக்க வேண்டும் என நினைத்து, அனிமேஷன் மூலம் அவளுக்காக ஒரு வீடியோ தயாரித்து காண்பித்தேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. நிறைய முறை அந்த வீடியோவை பார்த்தார்.

என் குழந்தையை சூ சூ என்று கூப்பி டுதால் சூ சூ டிவி என பெயர் வைத்து அந்த அனிமேஷன் வீடியோவை யுடியூப்பில் ஏற்றினேன். 2 வாரத்தில் 3 லட்சம் நபர்கள் பார்த்திருந்தனர். இதனை தொடர்ந்து இன்னொரு வீடியோவை எடுத்து பதிவேற்றினேன். அந்த வீடியோ ஏற்கெனவே எடுத்திருந்த வீடியோவை விட அதிக நபர்கள் பார்த்தனர்.

அதனை தொடர்ந்து இனியும் சோதனை முயற்சியாக இருக்க வேண்டாம் என முடிவெடுத்து நாங்கள் ஐந்து நண்பர்கள் இணைந்து நிறுவனத்தை தொடங்கினோம். இதுவரை நர்சரி பாடல்கள் எல்லாம் அர்த்தமற்றவையாகவும், எதிர்மறை அர்த்தம் உடையவையாக இருப்பதாகவும் இதனை மாற்றி சாதகமாக இருக்கும்படி மாற்ற வேண்டும் என்னுடைய நண்பர் கிருஷ்ணா தெரிவித்தார்.

ஜேக் அண்ட் ஜில் பாடல் வரிகளை பாசிட்டிவாக மாற்றி வெளியிட்டோம். இதுவும் மிகப்பெரிய வெற்றி. இதுவரை நாங்கள் பகுதி நேரமாகவே இந்த நிறுவனத்தை இயக்கினோம். அதனை தொடர்ந்து முழு நேரமாக புதிய நேரத்தில் கவனம் செலுத்தினோம்.

ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் கவனம் செலுத்தினோம். இதை தவிர வேறு எந்த மொழியில் கவனம் செலுத்தலாம் என யோசித்த போது ஸ்பானிஷ் மொழியில் வீடியோ செய்யத்தொடங்கினோம். காரணம் அமெரிக்காவில் 50 சதவீதத்தினருக்கு ஸ்பானிஷ் தெரியும். போர்ச்சுகீஸ், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில் மாற்றம் செய்து வீடீயோ வெளியிட்டோம். சமீபத்தில் தமிழில் தொடங்கினோம். இந்த ஆண்டுக்குள் ஹிந்தி, தெலுங்கு, ரஷிய மொழிகளில் குழந்தைகளுக்கான வீடியோக்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

ஆரம்பத்தில் யுடியூப்பில் மட்டுமே வீடியோக்களை வெளியிட்டோம். இது மூலமாக கிடைக்கும் வருமானம் மட்டுமே எங்களுக்கு கிடைத்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு நிதி திரட்டுவது குறித்து யோசித்தோம். இதற்காக பல முதலீட்டாளர்களிடம் பேசினோம். அப்போது அவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் நீங்கள் யுடியூப் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறீர்கள் என்பதுதான். அதனை தொடர்ந்து அமேசான் பிரைம் உடன் ஒப்பந்தம் செய்தோம். தவிர எங்களுடைய சொந்த செயலியை கொண்டுவந்தோம்.

இப்போது கொரியாவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். சீனாவில் உள்ள ஒரு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். சர்வதேச அளவில் உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களும் எங்களுடன் பேசி வருகின்றன.

எங்களுடைய வாடிக்கையாளர் களை வகைப்படுத்த வேண்டும் என்றால் 5 வயது வரை உள்ள குழந்தைகள் என சொல்லலாம். ஐந்து வயதுக்கு மேலே உள்ள குழந்தைகளிடம் செல்ல `ஸ்கூல்போ’ என்னும் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறோம். கார்ட்டூன் என்னும் நிலையில் இருந்து அறிவு என்னும் அடுத்த கட்டத்துக்கு மாற திட்டமிட்டிருக்கிறோம்.

இப்போதைக்கு செயலியை அறிமுகம் செய்திருக்கிறோம். ஆனால் இந்த செயலியில் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. செயலியை முழுமையாக வடிவமைத்த பிறகு நிதி திரட்டுவது குறித்து திட்டமிடுவோம்.

எங்கள் நிறுவனத்தின் முதல் வீடியோ வெற்றியடையும் போதே டிஸ்னி போன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என யோசித்தோம். குழந்தைகளுக்கான பொருட்கள், திரைப்படங்கள், பொழுதுபோக்கு மையம் என பல விஷயங்களையும் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என கூறினார்.

தற்போது பலர் யுடியூப் சானல் கள் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களது ஆலோசனை கள் என்ன என்று கேட்டதற்கு, “நீங்கள் உண்மையாக இருங்கள். பலர் திரைக்காக ஒரு முகமும் உண்மையில் ஒரு முகமாகவும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நபர்கள் அதிகம் வென்றதாக நான் பார்த்தில்லை. இயல்பாக இருக்கும் மக்கள் வெறுப்பதில்லை.

ஒரு வீடியோ ஹிட்டாகவில்லை எனில் அதற்காக சோர்வடைய தேவையில்லை. ஒரே இரவில் பெரிய சானலாக மாற முடியாது. அனைத்து வீடியோக்களும் ஹிட்டாகாது. தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்திக்கொண்டே இருக்க வேண் டும். யுடியூப்பை பொறுத்தவரை எண்ணிக்கையைவிட, தரமே முக்கியம். தரமில்லாமல் அதிக எண்ணிக்கை யில் வீடியோவை அப்லோடு செய்தாலும் அவை வீண்தான்’’ என்றார்.