ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றியடைவதே மிகப்பெரும் சவாலாக இருக்கும் போது, நஷ்டத்தில் இருக்கும் குடும்பத்தொழிலை லாப பாதைக்கு கொண்டு வருவது அவ்வளவு எளிதானது அல்ல. 1970களில் டிடிகே குழுமம் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது. நெருக்கடி நிலையில் இருந்து மீண்டு, குழுமத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியவர் டிடிகே குழுமத்தின் தலைவர் டிடி.ஜெகன்நாதன். அந்த குழுமத்தின் சிக்கல் என்ன, அதில் இருந்து எப்படி மீட்டு வந்தோம் என்பதை Disrupt and Conquer என்னும் புத்தகத்தில் டிடி. ஜெகன்நாதன் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதற்காக சென்னை வந்திருந்தவரிடம் சில நிமிடங்கள் உரையாட முடிந்தது. உரையாடலுக்கு முன்பு புத்தகத்தை பற்றிய சிறு குறிப்பினைப் பார்க்கலாம்…

1972-ம் ஆண்டு ஜெகன்நாதன் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டிருந்தார். திடீரென அவரது அப்பாவும் அம்மாவும் அமெரிக்கா சென்றனர். குடும்பத் தொழில் மிகவும் சிக்கலாக இருக்கிறது. நீதான் வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என அப்பாவும் அம்மாவும் அழைக்கின்றனர். வழக்கமாக குடும்பத் தொழிலை மூத்த மகன் கவனித்து கொள்வது வழக்கம் என்பதால் அமெரிக்காவிலே செட்டில் ஆக நினைத்தார். ஆனால் மூத்த மகனால் முடியவில்லை என்பதால்தான் இங்கு வந்திருக்கிறோம் என பெற்றோர் கூறுகின்றனர். வேறு வழி இல்லாமல் 24-வயதில் இந்தியா திரும்புகிறார்.

இந்தியாவுக்கு வருவோம், பிரச்சினைகளை தீர்த்துவிட்டு மீண்டும் அமெரிக்கா திரும்பலாம் என்பதுதான் அவரது எண்ணம். இதற்கேற்ப, அவருடைய உடைமைகளை அங்கே வைத்து விடுகிறார். ஆனால் இந்தியாவுக்கு வந்து பார்த்தால் பிரச்சினை மிகப்பெரியதாக இருக்கிறது.

1928 டிடி கிருஷ்ணமாச்சாரி என்பவரால் டிடிகே அண்ட் கோ என்னும் நிறுவனம் தொடங்கப்பட்டது. வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் விற்கும் நிறுவனம் இது. பல எப்எம்சிஜி பொருட்கள் இந்த நிறுவனம் மூலமாக விநியோகம் செய்யப்பட்டன. கிருஷ்ணமாச்சாரிக்கு அரசியல் ஆர்வம் உருவாகிறது. சுயேச்சையாக சென்னை மாகாண உறுப்பினராக தேர்வாகிறார். அதனைத் தொடர்ந்து ராஜாஜியுடன் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு நேருவிடம் கொண்டு சேர்க்கிறது. இதனால் நிறுவனத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு கிருஷ்ணமாச்சாரியின் மூத்த மகன் டிடி நரசிம்மனுக்கு (டிடி ஜெகன்நாதனின் அப்பா) வருகிறது.

வெளிநாட்டு நிறுவனம் நேரடியாக விநியோகம் செய்ய முடிவெடுத்ததால் நிறுவனத்துக்கு பிரச்சினை ஏற்படுகிறது. கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலைமையில் இந்தியாவின் வர்த்தக அமைச்சராக டிடி.கிருஷ்ணமாச்சாரி நியமனம் செய்யப்படுகிறார். அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டதால் எப்எம்சிஜி பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்கிறார். இதனால் டிடிகே குழுமம் மேலும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் எப்எம்சிஜி பொருட்களை ஏன் இறக்குமதி செய்ய வேண்டும், சொந்தமாக தயாரிக்கலாமே என்னும் திட்டத்தில் பல ஆலைகள் தொடங்கப்படுகின்றன.

வுட்வோர்ட்ஸ் கிரைப் வாட்டர், பாண்ட்ஸ், பிரஸ்டீஜ் குக்கர், வாட்டர் மேன் இங்க் ஆகியவை முதலில் தயாரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஆணுறை, மேப்ஸ், அட்லஸ், டெக்ஸ்டைல் ஆகிய பல தொழில்கள் தொடங்கப்பட்டன. இவற்றை வழி நடத்த சரியான நிர்வாகிகள் இல்லாததால் நிறுவனத்தின் கடன் ரூ.10 கோடியாக அதிகரித்தது. இதனையடுத்து 1972-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த ஜெகன்நாதன் இந்த கடன்களை எப்படி அடைத்து, பில்லியன் டாலர் நிறுவனமாக மாற்றினார் என்பதே இந்த புத்தகம்.

இனி அவருடனான உரையாடல்…

அமெரிக்காவுக்கு திரும்பி செல்ல வேண்டும் என்னும் எண்ணத்தில்தான் இந்தியா வந்தீர்களா?

நிச்சயம் அந்த எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். நான் இன்ஜினீயர் எனக்குத் தொழில் தெரியாது. முடிந்தவரை இங்கு எதாவது செய்வோம். இல்லை எனில் அமெரிக்கா போய்விடலாம் என்னும் எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். காரணம் அமெரிக்காவில் வேலை இருந்தது.

நீங்கள் வரும் போது சூழல் எப்படி இருந்தது?

ஒரு நிறுவனத்தை தவிர மற்ற நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்தன. ஒவ்வொரு நிறுவனமாக மாற்றுவதற்கு முயற்சி செய்தேன். இப்போது போல நிறுவனங்களை வாங்குவதற்கு யாரும் இல்லை. வென்ச்சர் கேபிடல், பிரைவேட் ஈக்விட்டி போன்ற முதலீடுகளும் இல்லை. நிறுவனத்தை மூடலாம். ஆனால் கடனை யார் அடைப்பது. கடனை அடைப்பதற்காகவாவது நிறுவனத்தை லாபமீட்ட வைக்க வேண்டும்.

இவ்வளவு கடனுக்கு காரணம் என்ன?

நாங்களே ஆலை தொடங்க முயற்சி செய்தோம். வங்கியில் கடன் வாங்கிதான் நிறுவனத்தை நடத்தினோம். சொந்தமாக முதலீடு இருந்தாலே முதல் ஐந்தாண்டுகளில் எந்த நிறுவனமும் லாபம் ஈட்டாது. நாங்கள் கடன் வாங்கி நடத்தினோம். இதனால் அதிக கடன் உருவானது.

நான் இங்கு வரும் போது ஒரு நிறுவனம் மட்டுமே லாபத்தில் இயங்கியது. அதை வைத்து மற்ற கடனை அடைத்தோம். சில நிறுவனங்களை மூடினோம். சிலவற்றை விற்றோம். இப்போது நினைத்தால் எப்படி மீண்டு வந்தோம் என நினைக்க தோன்றுகிறது. எங்கள் வருமானம் ரூ.2,000 கோடி இருக்கும் என கனவில் கூட நினைக்க வில்லை.

அமெரிக்காவில் இருந்து ஏன் வந்தோம் என நினைத்தது உண்டா?

முதல் பத்து ஆண்டுகள் தினமும் இந்த எண்ணம் தோன்றும். 72-ல் இந்தியா வந்தாலும் 1985 ஆண்டுதான் லாபம் ஈட்ட தொடங்கினோம். 2001-ம் ஆண்டு வரைக்கும் கடனை அடைத்தோம். சொந்த முதலீடு இருந்தால் 5 ஆண்டுகளில் லாபம் ஈட்டியிருக்கலாம். கடன் என்பதால் அதிக காலம் தேவைப்பட்டது.

Gasket Release System. இதனை நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள். ஏன் காப்புரிமை வாங்கவில்லை.?

குக்கர் சந்தையில் நாங்கள் முக்கிய இடத்தில் இருந்தோம். நாங்க கண்டுபிடிக்கும் முன்பு குக்கர் வெடிக்கும் நிலை இருந்தது. நாங்கள் கண்டுபிடித்த பிறகு யாருடைய குக்கர் வெடிக்க தொடங்கினாலும் குக்கர் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும். அதனால் அதற்கு காப்புரிமை வாங்கவில்லை.

தற்போதைய தொழில்முனைவோர்களுக்கு சொல்ல விரும்புவது?

உங்களை நம்புங்கள், பிரச்சினைகளை சந்தியுங்கள், common sense-யை பயன்படுத்துங்கள்

டிடிகே குழுமத்தின் இலக்கு என்ன?

தற்போது ரூ.2,000 கோடி வருமானம் இருந்தாலும் இதில் ஏற்றுமதி ரூ.100 கோடி மட்டுமே. சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். 2022-ம் ஆண்டு ரூ.5,000 கோடிக்கு வருமான இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறோம். இதில் ரூ.1,000 கோடி ஏற்றுமதியாக இருக்க வேண்டும் என திட்டமிட்டி ருக்கிறோம்.