கார்ப்பரேட் உலகில் அவ்வப்போது சில முக்கியச் செய்திகள் இருக்கும். நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் அதிகரிப்பது, கடனை செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வது, வாங்கிய கடனில் முறைகேடு செய்வது, சட்டத்துக்கு எதிரான வேலைகள் அல்லது பரிவர்த்தனைகளை செய்வது அவ்வப்போது நடக்கும், வேண்டப்பட்டவர்களுக்கு சலுகைகளை வழங்குவது உள்ளிட்டவை முக்கிய செய்திகளாக இருக்கும்.
ஆனால் கடந்த ஒரு மாதமாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஆடிட்டர்கள் திடீரென வெளியேறுவது முக்கிய செய்தியாக இருக்கிறது. ஆடிட்டர்கள் வெளியேறுவது என்பது மிகவும் அபூர்வமாக நடக்கும் நிகழ்வு, ஆனால் தற்போது இந்தப் போக்கு அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது. 2018-ம் ஆண்டு மட்டும் பட்டியலிடப்பட்ட 32 நிறுவனங்களின் ஆடிட்டர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.
வக்ராங்கி நிறுவனத்தை ஆடிட் செய்து வந்த பிரைஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவனம் ஏப்ரல் 28-ம் தேதி ஆடிட்டிங் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்த நிறுவனத்தின் ஜூவல்லரி பிஸினஸ் குறித்த தகவல்களை கேட்டோம், ஆனால் நிறுவனம் தரவில்லை என்பதால் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக அறிவித்திருக்கிறது. கடந்த ஜனவரியில் இந்த நிறுவன பங்கின் விலை ரூ.500-க்கு மேல் இருந்தது. பிப்ரவரியில் பிசி ஜூவல்லர்ஸ் நிறுவனத்துக்கும் இந்த நிறுவனத்துக்கு வர்த்தக ரீதியிலான தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஆனால் பிசி ஜூவல்லர் நிறுவனம் இந்த தகவலை மறுத்தது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் எந்த திட்டமும் இல்லை என அறிவித்தது. இந்த செய்திகள் வெளியான சமயத்தில் இந்த பங்கு சரிந்து 200ரூபாய்க்கு கீழ் வர்த்தகமானது. ஆனால் ஏப்ரல் 28-ம் தேதி ஜூவல்லரி தொழில் குறித்த தகவல்களை நிறுவனம் தரவில்லை என பிரைஸ்வாட்டர் ஹவுஸ் நிறுவனம் விலகியது. அதில் இருந்து தொடர்ந்து 28 நாட்கள் இந்த பங்கு சரிந்தது. தற்போது 34.05 ரூபாயில் இந்த பங்கு வர்த்தமாகிறது.
இதனை தொடர்ந்து மே மாதம் 27-ம் தேதி மன்பசந்த் பிவரேஜஸ் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் (டெலாய்ட் ஹாஸ்கின்ஸ் அண்ட் செல்ஸ்) ராஜினாமா செய்தனர். மே மாதம் 30-ம் தேதி இந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு கூடி நிறுவன முடிவுகளை அறிவிக்க இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முக்கியமான தகவல்களை பலமுறை கேட்டும் நிறுவனம் தரவில்லை, அதனால் வெளியேறுகிறோம் என டெலாய்ட் நிறுவனம் அறிவித்தது.
அதனால் மே 30-ம் தேதி இயக்குநர் குழு கூடவில்லை. மே மாதம் 25-ம் தேதி 431 ரூபாயில் வர்த்தகமான பங்கு கடந்த 10 நாட்களில் 50 சதவீதத்துக்கு மேல் சரிந்திருக்கிறது. தற்போது 164 ரூபாயில் இந்த பங்கின் வர்த்தகம் உள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் அடுத்த ஆடிட்டர்களை நியமனம் செய்திருக்கின்றன. பங்குகளின் விலை கடுமையாக சரிந்த போதிலும், தற்போதைய சிக்கல் தற்காலிகமான ஒன்றுதான் என்னும் ரீதியில் இந்த நிறுவனங்கள் கருத்து தெரிவித்திருப்பது முதலீட்டாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது.
மூன்றாவதாக கட்டுமான நிறுவனமான அட்லாண்டாவின் கணக்குகளை தணிக்கை செய்வதில் இருந்து விலகுவதாக பிரைஸ்வாட்டர்ஹவுஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது. நிறுவனத்தின் கணக்குகளை வருமான வரித்துறை விசாரித்து வருகிறது. இது குறித்த தகவல்களை நிறுவனம் தரவில்லை. அதேபோல இயக்குநர் குழுவில் ஒருவர் விலகி இருக்கிறார். அது குறித்த தகவலும் எங்களுக்கு இல்லை.
அதனால் விலகுகிறோம் என பிரைஸ்வாட்டர்ஹவுஸ் அறிவித்திருக்கிறது. அப்போதில் இருந்து இந்த பங்கு சரிந்து வருகிறது. மேலும் திலீப் பில்ட்கான் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் வெளியேற இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதில் இருந்து இந்த பங்கும் சரிந்து வருகிறது. ஆனால் இது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இந்த ஆண்டில் 32 நிறுவனங்களின் ஆடிட்டர்கள் வெளியேறி இருந்தாலும் அனைத்திலும் மோசடி இருக்கும் என கூற முடியாது. உடல் நல பிரச்சினைகள், ஏற்கெனவே இருக்கும் பணிகள் காரணமாகவும் வெளியேறி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் ஐநாக்ஸ் விண்ட் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் போதுமான அவகாசம் இல்லாததால் வெளியேற இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
என்ன பிரச்சினை?
நிறுவனங்களுடன் இணைந்து அல்லது மோசடிக்கு உதவியாக இருந்த காரணத்தால் சில வழக்குகளில் ஆடிட்டர்கள் சிறையில் இருக்கின்றனர். அதனால் பிரச்சினை இருக்கிறது என தெரியும் பட்சத்தில் ஆடிட்டர்கள் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. பொதுவாக நிறுவனங்களில் எப்படியெல்லாம் மோசடி நடக்க வாய்ப்பு இருக்கிறது என சில ஆடிட்டர்களிடம் கேட்டோம். பெயர் வெளியிட விரும்பாமல் சில தகவல்களை நம்மிடம் கூறினார்கள். பட்டியலிடப்படாத நிறுவனங்கள் என்னும் பட்சத்தில் லாபத்தை குறைத்து காண்பிக்க முயற்சி நடக்கும்.
அதுவே பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்றால் லாபத்தை உயர்த்தும் நடவடிக்கைகள் இருக்கும். தவிர இயக்குநர் குழுவில் இருப்பவர்கள் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிக தொகையை எடுத்துக்கொள்வது, உரிய ரசீது இல்லாமல் துணை நிறுவனங்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வது உள்ளிட்டவை நடக்கும். தவிர ஒரு நிறுவனம் பல நாடுகளில் இயங்கும் போது, அந்த நாட்டின் சட்டங்களை மீறி தொழில் பரிவர்த்தனையில் ஈடுபடும் வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தனர்.
வரவேற்பும் எதிர்ப்பும்
ஆடிட்டர்களின் இந்த முடிவுகளுக்கு வரவேற்பு இருந்தாலும் எதிர்ப்புகளும் இருக்கிறது. இந்த நிறுவனங்கள் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள். இதன் முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல், ஐசிஐசிஐ, எஸ்பிஐ, மோதிலால் ஆஸ்வால் உள்ளிட்ட சில மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களும் முதலீடு செய்திருக்கின்றன. மோதிலால் ஆஸ்வால் நிறுவனத்தின் ராம்தேவ் அக்ரவால் கூறும்போது, ஆடிட்டர்கள் வெளியேறும் முன்பு பங்குதாரர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டியது அவசியமாகும் என கூறியிருக்கிறார்.
மேலும் மன்பசந்த் நிறுவனத்தின் ஆடிட்டரான டெலாய்டு பல ஆண்டுகளாக நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென என்ன தவறு நடந்த்து என்பதை டெலாய்ட் நிறுவனம் விளக்க வேண்டும் என்னும் விமர்சனமும் எழுந்திருக்கிறது.
செபியின் முன்னாள் தலைவர் எம்.தாமோதரன் கூறும்போது, இதுவரை கம்பெனி நிர்வாகம் மற்றும் ஆடிட்டர்களிடையே இணைந்து செயல்படும் போக்கு இருந்தது. ஆனால் அதில் இருந்து விலகி ஆடிட்டர்கள் வெளியேறி இருப்பது ஆடிட்டர்களின் பொறுப்புணர்வை காண்பிக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஆடிட்டர்கள் விலகி வருவதை நிறுவன விவகார அமைச்சகம் கவனிக்கத் தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக 15 புகார்கள் அரசுக்கு சென்றிருக்கிறது. ஆடிட்டர்கள் சொல்லும் காரணம் போதுமானதாக இல்லை என்றும் நிறுவனத்தில் இருந்து விலகிய காரணத்தை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆடிட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அரசு உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சத்யம் நிறுவன கணக்குகளை போலியாக உயர்த்தி காண்பித்த மோசடி நடந்தது. இதில் ஆடிட்டர்களுக்கும் பங்கு இருந்தது என்னும் நிலையில் இருந்து மாறி, சர்ச்சைக்குரிய நிறுவனங்களில் இருந்து வெளியேறும் அளவுக்கு நிலைமை மாறி இருந்தாலும், இது முதல்படிதான். நிறுவனத்தில் என்ன தில்லுமுல்லு நடக்கிறது என்பதை பொதுவெளியில் சொல்லும்பட்சத்தில்தான் அதற்கேற்ப விதிமுறைகளை உருவாக்கி மற்ற நிறுவனங்களில் இவை நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியும்.
மோசடியில் ஆடிட்டர்களுக்கு பங்கு இருந்தாலும், மோசடி நடக்கிறது என்பதை சொன்னாலும் சிறுமுதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாதது சோகம்தான்.
Recent Comments