சில பிஸினஸ் ஐடியாக்களை கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கும். ஆனால் ஆச்சரியங்கள் அளிப்பதையே தன்னுடைய பிஸினஸாக மாற்றியிருக்கிறார் சக்திவேல். கோவையைச் சேர்ந்த இவர், சென்னையில் `தி சிக்ஸ்டாட்இன்’ என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் தொழில், மற்றவர்களுக்கு ஆச்சரியங்கள் அளிப்பது மட்டுமே. இதை எப்படித் தொழிலாக மாற்ற முடிந்தது, வாடிக்கையாளர் யார், ஆச்சரியம் அளிக்கப்போய் வெறுப் பாக மாறாதா, மற்றவர்களால் இது தவறாக பயன்படுத்த படாதா என்னும் பல கேள்விகளுடன் சக்திவேலை சந்தித்தோம். அத்தனை கேள்விகளுக்கும் பதில் வழங்கியது மட்டுமல்லாமல் தான் செய்த பல தவறுகளையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்திய உரையாடலின் சுருக்கமான வடிவம் இதோ.

குடும்ப சூழல் காரணமாக படித்து முடித்தவுடன் அடிக்கடி நிறுவனம் மாற வேண்டி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் ஏழு ஆண்டுகள் பணியாற்றினேன். 2009-ம் ஆண்டில் நானும் என்னுடைய நண்பனும் மற்றொரு நண்பனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். தெளிவாக திட்டமிட்டு பணியாற்றினோம். ஒரு திருமணத்தையே நடத்தி வைத்துவிட்டோம். ஏன் தொழில் தொடங்க கூடாது என யோசித்தோம். ஹார்டுவேர் கடை, பெட்ரோல் பங்க் என 60-க்கும் மேற்பட்ட ஐடியாக்களை விவாதித்தோம். இதில் சர்பிரைஸ் பண்ணுவது குறித்து யோசித்தோம். அப்போது இப்படி ஒரு துறையே கிடையாது. டெல்லியில் ஒரு நிறுவனம் இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் கூட பொருட்களை வடிவமைத்து வழங்கும் நிறுவனமாக இருந்தது.

எங்களுக்கென என எந்தவிதமான முன்மாதிரியும் கிடையாது. தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வுதான் தொழில். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்பதையே புரிய வைக்க வேண்டி இருந்தது. அதாவது சந்தையில் ஒரு தேவையை உருவாக்க வேண்டி இருந்தது. இந்த இடத்தில் நாங்கள் பல தவறுகளை செய்தோம்.

ஆரம்பத்தில் நாங்கள் ஒரு இணையதளம் உருவாக்கினோம். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே சொல்லவில்லை. காரணம் இந்த ஐடியா வெளியே சென்றால் பலரும் போட்டியாக வந்துவிடுவார்கள் என நினைத்தோம். எங்களுக்கு ஓரு ஆர்டர் வந்தது. அதற்கு சில கிப்ட் பொருட்களை தயார் செய்ய வேண்டியது. இதனை நாங்ள் வாங்காமல், இதை தயாரிப்பதற்கு ஒரு மெஷின் வாங்கினோம். கடைசியில் அந்த பொருட்களை விற்பதில் மட்டும் கவனம் செலுத்தினோம். அதற்காக ஒரு ஷோரூம் அமைத்தோம். ஆனால் அதில் தோல்வியடைந்து அந்த கடையை மூடினோம்.

2009-ம் ஆண்டில் இருந்து இந்த தொழிலில் இருக்கிறோம். 2010-ம் ஆண்டு முதல் என்னுடைய நண்பர் இந்த தொழிலை பார்த்துக்கொண்டார். நானும் அவ்வப்போது தொழிலை நிர்வகிப்பேன். பெரிய அழுத்தம் இல்லை. பணி செய்த நிறுவனத்தில் நல்ல நிலைமையில் இருந்தேன். நன்றாக இருந்தால் அடுத்து வீடு, கார்தானே இலக்கு. கடனில் வாங்கிவிட்டேன். இஎம்ஐ அதிகமாக இருப்பதால் சேமிப்பும் இல்லை. 2015-ம் ஆண்டு வேலையை விட்டு முழு நேரமாக தொழிலில் இறங்க லாம் என வேலையை விட்டேன். ஆனால் இந்த முடிவையும் யோசிக்காமல் எடுத்துவிட்டேன்.

2009-ம் ஆண்டு தொழிலை ஆரம்பித்தாலும் வேலையை விட வேண்டும் என்னும் முடிவை ஆறு ஆண்டுகளுக்கு பிறகே எடுக்க முடிந்தது. ஆனால் எந்தவிதமான முன் ஏற்பாடுகளும் இல்லாமல் வேலையை விட்டேன். இனி தவறு செய்ய வழியே இல்லை என்னும் நிலை வந்ததற்கு பிறகுதான் அடுத்தகட்ட வளர்ச்சி இருந்தது. அந்த சமயத்தில் நிறுவனத்தை தாண்டிய சிந்தனையே இல்லை.

சிறிய சிறிய ஆச்சரியங்களில் ஆரம்பித்து லட்ச ரூபாய் வரைக்கும் கூட ஆச்சரியங்களை நிகழ்த்தி இருக்கிறோம். மிகச் சில சமயங்களில் எங்களுடைய ஆச்சரியங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பிடிக்காமல் போகும். அவர்களுக்கு அதில் விருப் பம் இருக்காது. ஆனால் பெரும்பாலானவர்கள் ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறார்கள், ரசிக்கிறார்கள். ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு ஒரு நாள் முழுவதும் ஆச்சரியங்களை நிகழ்த்த விரும்பினார். அந்த ஒரு நாள் முழுவதும் அவர் விரும்பிய படி அடுத்தடுத்து ஆச்சரியங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்தோம். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஆச்சரியங்கள் காத்திருந்தது. அந்த நாள் அவருக்கு மறந்திருக்காது.

அதேபோல ஒரு அம்மாவுக்கு 50-வது பிறந்தநாள். அவருடைய மகள்கள் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவருக்கு ஆச்சரியம் அளிக்க மகள்கள் விரும்பினார்கள். அப்போது அந்த அம்மாவை எதோ ஒரு காரணம் சொல்லி அருகில் இருக்கும் டிவி ஷோ ரூமுக்கு வர வைத்துவிட்டோம். அந்த ஷோரூமில் இருக்கும் அனைத்து டிவிகளிலும் அவர்களின் பேரக்குழந்தைகள் பாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார்கள். அந்த நொடி கொடுக்கும் ஆச்சரியம் அந்த அம்மாவுக்கு மீண் டும் கிடைக்குமா என்பது சந்தேகமே.

அதே சமயம் பல வாடிக்கையாளர்கள் எங்களை தவறாக பயன்படுத்த நினைப்பார்கள். அதற்கு நாங் கள் இடம் கொடுப்பதில்லை. இருவரும் ஏற்கெனவே காதலராக இருக்கும்பட்சத்தில் பிரச்சினையில்லை. ஆனால் எங்கள் மூலம் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்யும்பட்சத்தில் அதனை நாங்கள் அனுமதிப்பதில்லை. அவர்களிடம் கேட்கும் சில கேள்விகள் மூலம் எங்களை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

இந்த தொழிலில் சாதகம்/பாதகம் இரண்டுமே நாம் வாடிக்கையாளர்களை நோக்கி செல்ல முடியாது என்பதுதான். வாடிக்கையாளர்களுக்கு தேவை இருப்பின் அவர்கள் நம்மை நோக்கி வருவார்கள். எப்போதோ எங்களை பற்றி கேள்விப்பட்டிருப்பார்கள். சில ஆண்டுகளுக்கு பிறகு நம்மை நோக்கி வருவார்கள். அதுவரை நாம் தொடர்ந்து சந்தையில் நம்முடைய இருப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்றபடி சக்திவேல் நமக்கு விடை கொடுத்தார்.