கடந்த வாரம் இரு விமான நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ராஜினாமா செய்தார்கள். ஏர் ஏசியா இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அமர் அப்ரால் மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆதித்யா கோஷ் ஆகிய இருவர் ராஜினாமா செய்தது தற்செயல் நிகழ்வாக இருந்தாலும் ஒரே வாரத்தில் நிகழ்ந்தது. அமர் அப்ராலை பொறுத்தவரை (ஏர் ஏசியா இந்தியா) மலேசியாவில் இருக்கும் தலைமையகத்துக்கு மாற இருக்கிறார். ஆனால் ஆதித்யா கோஷ் விமான போக்குவரத்து துறையில் இருந்து விலகி புதிதாக ஏதாவது தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

நிறுவனத்தின் உயரதிகாரிகள் வெளியேறுவது வழக்கமான நிகழ்வுதான் என்றாலும் ஆதித்யா கோஷ் வெளியேறுவதன் பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஊடகங்களில் வெளியான தகவல்களை நிறுவனம் மறுத்திருந்தாலும் வெளியான தகவல்களுக்கு முகாந்திரம் இருப்பதை மறுக்க முடியாது. என்னென்ன காரணங்கள் என்பதை பார்ப்பதற்கு முன்பு இண்டிகோவை ஆதித்யா கோஷ் வழி நடத்திய விதம் குறித்து பார்ப்போம்.

10 ஆண்டு பயணம்

சிலர் முன்கூட்டியே காலத்தைக் கணிப்பார்கள், சிலர் கால தாமதமாக வருவார்கள். ஆனால் இண்டிகோ சரியான நேரத்தில் தொடங்கப்பட்ட நிறுவனம். 2006-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை 1.8 கோடிதான். ஆனால் தற்போது 12 கோடி விமான பயணிகள் இருக்கிறார்கள். இதில் 5 கோடி பயணிகள் இண்டிகோவில் பயணம் செய்பவர்கள். சரியான நேரத்தில் தொடங்கப்பட்டிருந்தாலும் தலைமைச் செயல் அதிகாரியான ஆதித்யா கோஷ் பங்கு முக்கியமானது.

இந்தியாவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் ஐஐடி மற்றும் ஐஐஎம்களில் படித்தவர்களாக இருப்பார்கள். ஆனால் கோஷ் வழக்கறிஞர் பின்னணியில் இருந்து வந்தவர். இருந்தாலும் நிறுவனத்தை முக்கிய இடத்துக்கு எடுத்துச்சென்றார். 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி இண்டிகோ தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். ஜூலை 31-ம் தேதி பத்தாண்டுகள் முடிவடையும் போது வெளியேறுகிறார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு 20 விமானங்கள் இருந்தன. ஆனால் தற்போது 160 விமானங்கள் இருக்கின்றன. அப்போது 1,100 பணியாளர்கள் இருந்தார்கள், தற்போது 17,000 பணியாளர்கள் இருக்கிறார்கள். இடையே பொது பங்கு வெளியீடு நடந்தது என பல முக்கியமான மைல்கல்களை நிறுவனம் எட்டியது. இருந்தாலும் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தயாராகும் காலத்தில் கோஷ் வெளியேறி இருக்கிறார். சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யும் பணிகளில் நிறுவனம் இருந்து வருகிறது. ஆனால் வெளியேறுவதற்கு இதுதான் சரியான நேரம் என கோஷ் அறிவித்திருக்கிறார்.

பங்குகள் சரிவில் சர்ச்சை

கடந்த மே 2-ம் தேதி இண்டிகோ நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் வெளியானது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய லாபத்தை விட 73 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இதன் காரணமாக வியாழன் (மே 3) வர்த்தகத்தில் 18 சதவீதம் அளவுக்கு இந்தப் பங்குகள் சரிந்து முடிந்தன. ஆனால் ஏப்ரல் 27-ம் தேதி இண்டிகோ பங்கு 6 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இந்த சரிவு குறித்து செபி விசாரித்து வருகிறது.

ஏப்ரல் 26-ம் தேதி ஆதித்யா கோஷ் ராஜினாமா செய்தார். ஆனால் 27-ம் தேதி மாலைதான் பங்குச் சந்தைகளுக்கு நிறுவனம் தகவல் அளித்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் 27-ம் தேதி எப்படி சரிவு ஏற்பட முடிவும். தகவலை ஒரு நாள் தாமதமாக வெளியிட காரணம் என்ன, கோஷ் ராஜினாமா முன்கூட்டியே வெளியில் கசியவிடப்பட்டதா என செபி விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் கோஷ் விலகியதை அடுத்து, நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராகுல் பாட்டியா இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். கோஷ் மீது இருக்கும் சர்ச்சைகள் அவர் விலகுவதற்கான காரணம் இல்லை என விளக்கினார். மேலும் நிறுவனத்தின் ஆலோசகராக கிரேக் டெய்லர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஒழுங்குமுறை ஆணையங்களின் அனுமதிக்கு பிறகு தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவித்திருக்கிறார். கோஷ் வெளியேறுவதற்கு முந்தைய ஆறு மாதங்கள் அவருக்கு சிறப்பானதாக இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

கூறப்படும் காரணங்கள்?

சில மாதங்களுக்கு முன்பு இண்டிகோ நிறுவனத்தின் 8 விமானங்கள் பறப்பதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த விமானங்கள் அனைத்தும் பிராட் அண்ட் விட்னி இன்ஜினை கொண்டவை. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் 15 முதல் 20 சதவீதம் வரை எரிபொருள் மீதமாகும். அதனால் லாபம் அதிகரிக்கும் என்பதால் வாங்கப்பட்டது. ஆனால் இதுவரை 69 முறை இயந்திர கோளாறு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மார்ச் மாதம் இந்த விமானங்கள் பறப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இந்த பிரச்சினைக்கும் கோஷ் ராஜினாமாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. விரைவில் இன்ஜின் பிரச்சினை சீர்செய்யப்படும் என பாட்டியா கூறியிருக்கிறார்.

விமானத்தில் பயணம் செய்பவர்களின் முதல் தேர்வாக இண்டிகோ இருந்தது. ஆனால் கடந்த நவம்பரில் நடந்த சம்பவம் இண்டிகோவின் இமேஜை மாற்றியது. நவம்பர் 7-ம் தேதி இண்டிகோவில் பயணம் செய்த பயணி ஒருவரை பணியாளர் தாக்கிய விவகாரம் இந்தியா முழுவதும் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவியது. பணியாளர் தாக்கியதை விட அதைக் கையாண்ட விதமும் சர்ச்சைக்குள்ளானது. தாக்கியவர் மீது இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், அந்த வீடியோவை எடுத்த இண்டிகோ ஊழியரை நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தவிர டெல்லி விமான நிலையத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தோல்வியடைந்து. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றும் வெற்றி கிடைக்கவில்லை. டெல்லி விமான நிலைய விரிவாக்க பணிகள் நடந்தது வந்ததால் டெர்மினல் 1-ல் இருந்து டெர்மினல் 2-க்கு மாற உத்தரவிடப்பட்டது. ஸ்பைஸ்ஜெட், கோஏர் ஆகிய நிறுவனங்கள் எந்த பிரச்சினையும் செய்யாமல் மாறின. ஆனால் இண்டிகோ வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கில் வெற்றி கிடைக்கவில்லை. மேல் முறையீட்டிலும் வெற்றி கிடைக்கவில்லை. அதிக சந்தையை வைத்திருக்கும் கர்வத்தில் இண்டிகோ வழக்கு தொடுத்ததாக விமர்சனம் எழுந்தது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கான ஏலத்தில் பங்கு பெற போவதாக இண்டிகோ முதன் முதலாக அறிவித்தது. ஆனால் அரசாங்கத்தின் விதிமுறைகளை பார்த்த பிறகு இண்டிகோ அதில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. இப்படி பல சர்ச்சைகளில் இண்டிகோ சிக்கியதை அடுத்து ஆதித்யாகோஷ் வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.

பொதுவாக இந்திய தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு எப்போது நிறுவனத்துக்குள் செல்ல வேண்டும் என்பது தெரியும். ஆனால் எந்த சமயத்தில் வெளியேற வேண்டும் என்பது தெரியாது. ஆனால் ஆதித்யா கோஷுக்கு வெளியேறும் நேரம் தெரியும் என அவரது கோஷ் நண்பர் சாந்தனு மொய்த்ரா கருத்து தெரிவித்திருக்கிறார்.

இண்டிகோ வெளிநாடு போக்குவரத்தில் கவனம் செலுத்தி வரும் இந்த நேரத்தில் இவரது ராஜினாமா நடந்திருக்கிறது. இதற்கேற்ப வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய பலர் இண்டிகோவில் இணைந்திருக்கிறார்கள். சர்ச்சைகள் இருந்தாலும் தவறு நடந்திருந்தாலும் ஆதித்யா கோஷ் விமான போக்குவரத்து துறையில் ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறார். அடுத்து பொறுப்புக்கு வருபவருக்கு பெரும் சவால் காத்திருக்கிறது.