ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எழுதிய `ஐ டூ, வாட் ஐ டூ’ என்னும் புத்தகம் கடந்த வாரம் சென்னையில் வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜன், கவர்னராக இருந்து வெளியேறும் சமயத்தில் புத்தகம் எழுத அழைத்தனர். ஆனால் தான் எழுதும் புத்தகம் தனக்கு அடுத்து கவர்னராக வருபவருக்கு பிரச்சினையாக இருக்கக் கூடாது. ஒரு வருடத்துக்கு பிறகு வெளியிடலாம் என கூறினேன் என்றார். அதே போல சரியாக ஓர் ஆண்டுக்குப் பிறகு அவரது புத்தகம் வெளியானது. இந்த ஓர் ஆண்டு காலத்தில் உர்ஜித் படேல் என்ன செய்தார் என்பதை பார்ப்போம்.

ரிசர்வ் வங்கியின் கவர்னராக சுப்பாராவ் பொறுப்பேற்ற போது லேமேன் பிரதர்ஸ் வங்கி திவாலாகி, சர்வதேச மந்த நிலை உருவானது. இவருக்கு அடுத்து ரகுராம் ராஜன் கவர்னராக பொறுப்பேற்ற சமயத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு சரிவு, இரட்டை இலக்கத்தில் பணவீக்கம் என பல பிரச்சினைகள் இருந்தன. ஆனால் ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக பொறுபேற்ற உர்ஜித் படேல் இவ்வளவு சிக்கல்களுக்கு இடையில் பதவி ஏற்கவில்லை. ஓரளவுக்கு சுமூகமான சூழலில்தான் கடந்த ஆண்டு செப்டம்பரில் பதவி ஏற்றார். ஆனால் அடுத்த இரு மாதங்களில் பண மதிப்பு நீக்கம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி அறிவித்தார்.

நான் 2016 செப்டம்பர் மாதம் பொறுப்பில் இருந்த வரை பணமதிப்பு நீக்கம் குறித்து முடிவெடுக்கப்படவில்லை என ராஜன் கூறினார். அப்படியானால் உர்ஜித் படேல் காலத்தில்தான் இதற்கான முடிவெடுத்திருக்க முடியும். இது இவரிடம் கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவா அல்லது திணிக்கப்பட்ட முடிவா என்பது உர்ஜித் படேல் புத்தகம் எழுதினால்தான் தெரியவரும். ஆனால் பொதுவெளியில் அதிகம் பேசாத உர்ஜித் படேல் இந்த தகவல்களை வெளியிடுவார் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. தவிர உர்ஜித் படேல் மீது வைக்கப்படும் சில விமர்சனங்களில் இவரது அமைதியும் ஒன்று. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் அது தொடர்பாக உர்ஜித் படேல் எந்தவிதமான தகவல்களையும் பொதுமக்களுக்கு அளிக்கவே இல்லை. அனைவரின் சார்பாகவும் அப்போது பொருளாதார விவகார செயலாளராக இருந்த சக்திகாந்த தாஸ் மட்டுமே தேவையான தகவல்களை வெளியிட்டார்.

இவர் பேசாதவராக இருந்தாலும் பணமதிப்பு நீக்கம் மற்றும் சந்தையில் மீண்டும் புதிய பணத்தை வெளியிடுவதில் சிறப்பாக செயல்பட்டதாகவே வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். வட்டி விகித நிர்ணயம் செய்வதில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முன்பு மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்டு ரெபோ விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாக கொண்டு ரெபோ விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

பணமதிப்பு நீக்கத்தை பொறுத்தவரை பழைய ரூபாய் நோட்டுகளை கையாளுவது, புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விடுவது ஆகிய பணிகள் சிறப்பாக இருந்ததாக கூறுகின்றனர். (பணமதிப்பு நீக்கம் வெற்றியா தோல்வியா என்பது வேறு விவாதம்.)

கொள்கை வகுப்பு குழு

உர்ஜித் படேலில் மற்றுமொரு முக்கியமான சாதனையாகக் குறிப்பிடப்படுவது கொள்கை வகுப்பு குழு (எம்பிசி). இவர் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்த சமயத்தில் இதற்கான கொள்கைகளை உருவாக்கினார். வட்டி விகிதம் குறித்த முடிவுகளை ரிசர்வ் வங்கியின் கவர்னர் மட்டுமே எடுப்பார் என்பதை மாற்றி அதற்கான குழுவை அமைத்து அந்த குழுவின் ஒப்புதலோடு வட்டி விகிதம் குறித்த மாற்றம் அறிவிக்கப்பட்டு வருகிறது. துணை கவர்னராக இருந்த போது இதற்கான கொள்கையை உருவாக்கினார். கவர்னாக பொறுப்பேற்ற சமயத்தில் இந்த குழு வட்டி விகிதம் குறித்த முடிவை அறிவித்தது. இந்த குழுவில் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகளும், மத்திய அரசின் பிரதிநிதிகளும் இருப்பார்கள்.

இதன் காரணமாக ரிசர்வ் வங்கியின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடக் கூடும் என்னும் அச்சம் இருப்பது இயல்பே. ஆனால் அந்த அச்சத்தை உர்ஜித் உடைத்திருக்கிறார். ஜூன் மாத நிதிக் கொள்கையை அறிவிப்பதற்கு முன்பு, கொள்கை வகுப்பு குழுவை, நிதி அமைச்சகம் சந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தது. ஆனால் அந்த கோரிக்கையை கொள்கை வகுப்பு குழு நிராகரித்தது. இது அனைவருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.

அதேபோல கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெபோ விகிதம் குறைந்திருக்கிறது. ஆனால் வங்கிகள் வட்டியை குறைக்கவில்லை. கடனுக்கான வட்டியை குறைப்பதற்கு வங்கிகளை வலியுறுத்தி இருக்கிறார் படேல்.

வாராக்கடன்

வங்கிகளின் வாராக்கடன் விஷயத்தை வெளியே கொண்டுவந்தது வேண்டுமானால் ரகுராம் ராஜனாக இருக்கலாம். ஆனால் அதற்கு தீர்வை நோக்கி சென்றது உர்ஜித் படேல்தான். கடனை திருப்பி செலுத்தாத 12 நிறுவனங்கள் மீது நடவடிக்கையை தொடங்கியது. இரண்டாவதாக 26 நிறுவனங்களை அடையாளம் காண்பித்தது ஆகியவை கடந்த ஓர் ஆண்டு காலத்தில் நடந்த முக்கியமான விஷயங்களாகும். கடனை திருப்பி செலுத்துங்கள் அல்லது நிறுவனத்தை ஒப்படையுங்கள் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் உறுதிபடக் கூறியிருக்கிறார். இது போன்ற நடவடிக்கைகள் மூலம் வாராக்கடன் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி எவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம்.

சில எதிர்மறைகள்

உர்ஜித் படேல் பல விஷயங்களை சிறப்பாகக் கையாண்டாலும், சில விஷயங்களில் சரியாகக் கையாளவில்லை என்கிற கருத்தும் இருக்கிறது. பணவீக்கம், வட்டி விகிதம் ஆகியவை குறைவாக இருக்கும் அதே சமயத்தில், உர்ஜித் பொறுப்பேற்றதில் இருந்து நாட்டின் வளர்ச்சி விகிதமும் குறைவாக இருக்கிறது. வளர்ச்சி குறைவதற்கு ரிசர்வ் வங்கியை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியாது. அதே சமயத்தில் வளர்ச்சியை ஊக்குவிக்க நிதி அமைச்சகத்துடன் இணைந்து திட்டமிட வேண்டியது அவசியம்.

மேலும் விவசாய கடன் தள்ளுபடி வழங்கும்பட்சத்தில் ஒட்டு மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும் என உர்ஜித் பேசிய வார்த்தை அறிவுபூர்வ வாதமாக இருந்தாலும், பொதுவெளியில் அவ்வளவாக ரசிக்கப்படவில்லை.

ரூபாய் மதிப்பு உயர்வு

ரகுராம் ராஜன் பொறுப்பேற்ற சமயத்தில் ரூபாய் மதிப்பை ஸ்திரப்படுத்த எப்சிஎன்ஆர் டெபாசிட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 2016 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் இந்த டெபாசிட்டுகளின் (ரூ.2,500 கோடி டாலர் அளவு) முதிர்வு காலம் இருந்தது. ஆனால் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் இந்த பரிமாற்றம் நடந்தது. அதே சமயத்தில் ரூபாய் மதிப்பு சரிவடையாமல் சிறிதளவு உயர்ந்திருக்கிறது. உர்ஜித் பொறுப்பேற்ற சமயத்தில் ஒரு டாலர் 66.50 ரூபாயாக இருந்தது. தற்போது சுமார் 64 ரூபாய் என்னும் நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் பொறுப்பில் இருந்து ராஜன் வெளியேறிய போது உர்ஜித்துக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கினார். அதில் ரூபாய் குறியீட்டுடன் இதை பாதுகாப்பது நம்முடைய பொறுப்பு என்னும் வாசகம் இருந்தது. இதை ஓரளவு உர்ஜித் நிறைவேற்றி இருக்கிறார். அதே சமயத்தில் இன்னும் பல சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன.

நன்றி: தி இந்து