கைசன் மற்றும் இன்சியாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆசியா அளவில் கல்வித்துறையில் புதுமையாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதினை வழங்கியது. இதில் 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பித்தன. இதில் 10 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் இரண்டு நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்தவை. இரண்டும் சென்னையில் செயல்பட்டு வருபவை. ஒரு நிறுவனம் பிளின்டோபாக்ஸ். சில வாரங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தை பற்றி குறிப்பிட்டிருந்தோம். மற்றொரு நிறுவனம் ரிபோர்ட் பீ.

இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஆனந்த் மணியிடம் உரையாடுவதற்கு முன்பு இந்த நிறுவனம் என்ன செய்து வருகிறது என்று பார்ப்போம்.

குழந்தைகள் பரிட்சை எழுதுகிறார்கள். பேப்பர் திருத்தப்பட்டு மார்க் வழங்கப்படுகிறது. அனைத்து பாடங்களுக்குமான மார்க் ரிப்போர்ட் கார்டில் வழங்கப்படுகிறது. பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் இதற்கு பின்னால் பெரிய வேலை இருக்கிறது. முதலில் ஒரு பாடத்தின் மார்க் குறிப்பிடப்பட வேண்டும். இது போல அனைத்து பாடங்களின் மார்க்குகளையும் ஒரு ரிஜிஸ்டரில் குறிப்பிட வேண்டும். அனைத்தையும் ஒருங்கிணைக்கப்பட்ட ரிப்போர்ட் கார்ட் தயாரிக்கப்பட வேண்டும். இந்த பணியினை ரிப்போர்ட் பி நிறுவனம் எளிமையாக்குகிறது. ஒரு பாடத்தின் ஆசிரியர் ஒரு இடத்தில் மார்க்கினை பதிவு செய்தால் போதும், முழுமையான ரிப்போர்ட் கார்ட் தயாராகி விடும்.

இதுமட்டுமல்லாமல் ஒரு மாணவனை பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு ஒரு மாணவன் படிப்பு சீராக இருக்கிறது. எந்த பாடத்தில், எந்த எந்த பகுதியில் கவனம் தேவைப்படுகிறது.

குறிப்பிட்ட பாடத்தில் அனைத்து மாணவர்களும் சரியில்லை என்றால் ஆசிரியரிடம் பிரச்சினையா? எட்டாம் வகுப்பில் சரியாக படிக்கும் மாணவன் 9-ம் வகுப்பில் படிக்கவில்லையா? மாணவர்கள் எப்போது நன்றாக படிக்கிறார்கள். எப்போது தவற விடுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல தகவல்களை இந்த நிறுவனம் வழங்குகிறது. இவற்றை வைத்து எங்கு கவனம் செலுத்த முடியுமோ அங்கு கவனம் செலுத்தலாம்.

2010-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டாலும் முதல் மூன்று ஆண்டுகளில் பெரிய அளவுக்கு அவர்களால் விரிவாக்கம் செய்ய முடியவில்லை. இருந்தாலும் விடாமுயற்சியுடன் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி இருக்கிறார் ஆனந்த் மணி. என்ஐடி நாக்பூரில் இன்ஜினீயரிங் முடித்தார். அதன் பிறகு ஐஐஎம் பெங்களூருவில் நிர்வாகவியல் படித்தவர். மீடியா நிறுவனம் ஒன்றில் சில ஆண்டுகாலம், காக்னிசென்ட் நிறுவனத்தில் சில ஆண்டு காலம் மற்றும் `ஹெமேத்’ என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்தவர். அவருடான உரையாடலில் இருந்து…

தொழில் ஆர்வம் ஏற்கெனவே உங்களுக்கு இருந்ததா?

ஐஐஎம் பெங்களூருக்கு செல்வதற்கு முன்பே `மேட் இன் ஜப்பான்’ மற்றும் லி அயகோகாவின் சுய சரிதை எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. தொழில்மூலம் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் என்ன செய்யலாம் என்பது குறித்த ஐடியா ஏதும் இல்லை. காக்னிசென்ட் பெரிய நிறுவனமாக இருந்ததால் நமக்கு இருக்கும் வேலைகளை செய்தால் மட்டும் போதும். அதனால் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்னும் ஆவல் காரணமாக ஹேமேத் நிறுவனத்தில் சேர்ந்தேன். ஏற்கெனவே எனக்கு டேட்டா மீது ஆர்வம் இருந்தது. ஹேமேத் என்பது பள்ளிக்குழந்தைகளுக்கு கணக்கு சொல்லித்தரும் டெக்னாலஜி நிறுவனம் என்பதால், டேட்டா பிளஸ் குழந்தைகள் சார்பாக ஒரு நிறுவனம் தொடங்க வேண்டும் என்பதுதான் திட்டமாக இருந்தது.

டேட்டா மீது எப்படி ஆர்வம் உருவானது? இதை எப்படி தொழிலாக மாற்றினீர்கள்?

மணி ரத்னத்தின் குரு படம் வெளியான சமயம். அப்போது விக்கிபீடியாவில் அம்பானி பக்கத்தை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு பக்கம் எப்போதெல்லாம் எடிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை பார்க்க முடியும். அதை பார்த்தால் படம் வெளியாகும் முன்பு, வெளியான சில நாட்களுக்கு பிறகும் அதிக முறை எடிட் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அந்த பக்கத்தில் பெரிய மாற்றம் இல்லை. அதாவது தகவல்களை சரியான வகையில் ஒருங்கிணைத்தால் அதில் இருந்து பல விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக இந்த உதாரணத்தை தெரிவித்தேன்.

டேட்டாவில் என்ன செய்யலாம் என்பது குறித்து நண்பர்களுடன் விவாதித்த போது, டெலிகாம், பேங்கிங் உள்ளிட்ட ஐடியாக்கள் எங்களுக்குள் உருவாயின. ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு பல நிறுவனங்கள் இருகின்றன.

ஆனால் கல்வியில் எதாவது செய்யலாமே என்பதற்காகதான் இந்த நிறுவனத்தை உருவாக்கினோம். கல்வித்துறையில் பணம் சம்பாதிக்க நேரம் ஆகும் என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். தெரிந்துதான் இந்த நிறுவனத்தை தொடங்கினோம்.

ஒரு சில விதிவிலக்கான குழந்தைகளை தவிர அனைத்து குழந்தைகளும் சரி சமமான திறமையை கொண்டவர்கள்தான். ஆனால் அவர்களுக்கு தேவையான சமயத்தில் தேவையான அறிவை, வழிகாட்டுதலையும் கொடுக்கும் பட்சத்தில் அனைவரும் வெற்றியடைவார்கள். எது தேவையான சமயம் என்பதை கண்டறிய மாணவர்களை பற்றிய டேட்டாவை ஒருங்கினைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தை தொடங்கினோம்.

பள்ளிகளில் உங்களது புராடக்டை வாங்க வைப்பது எளிதாக இருந்ததா?

நிறுவனம் தொடங்கி மூன்று மாதம் வரை புராடக்டை உருவாக்கினோம். எனக்கு தெரிந்த பள்ளிக்கு சென்று முதல்வரை சந்தித்து விளக்கினேன். அவருக்கு பிடித்திருந்தது. உடனே எங்களுடைய புராடக்டை வாங்கிவிட்டார்.

அட! பிஸினஸ் எவ்வளவு எளிதா என நினைத்தேன். அதன்பிறகு பத்து பள்ளிக்கூட்டங்களுக்கு சென்ற பிறகு எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. பள்ளிகளை சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல. இப்போதும் எங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் 2 பேர்தான். இதை பயன்படுத்தியவர்கள் கொடுத்த சிபாரிசு மூலமாகவே அடுத்தடுத்த பள்ளிகளுக்கு செல்கிறோம்.

உங்களது புராடக்ட் மூலமாக நீங்கள் செய்த மாற்றம் என்ன?

எங்கள் நிறுவனத்தால் மாற்றம் நடந்தது என்று சொல்வது அதிகப்பிரசங்கிதனம்/திமிர் என்றே நினைக்கிறேன். மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி, சமூகம் இங்கு அனைத்து இடங்களிலும் முன்னேற்றம் இருந்தால்தான் மாற்றம் நடக்கும்.

நாங்கள் ஒரு மாணவனின் டேட்டாவை முழுமையாக வழங்குகிறோம். இதனால் ஆசிரியர்களின் நேரம் பெருமளவில் மீதமாகும். டேட்டாவை பயன்படுத்தி ஆசிரியர்கள்தான் மாற்றத்துக்கான தொடக்கப்புள்ளியாக இருப்பார்கள்.