மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட பணி என்பது மிகவும் சுவாரஸ்யமானது. புதிது புதிதாக பல விஷயங்களை பரிசோதனை செய்ய முடியும். ஆனால் அதில் இருக்கும் சிக்கல், என்ன வேலை செய்தோம் என்பதை மதிப்பிட முடியாது. பொதுவாக மார்க்கெட்டிங் என்பதை `பொருளை விற்க’ என்று தட்டையாக புரிந்துகொள்ளும் போக்கு இங்கு இருக்கிறது. ஆனால் மார்க்கெட்டிங் என்பது அதுமட்டுமல்ல என்கிறார் கோடக் மஹிந்திரா குழுமத்தின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் கார்த்தி மார்ஷன். நிதிச்சேவை துறையில் எந்த வகையில் மார்க்கெட்டிங் உத்திகளை பயன்படுத்துவது, என்ன புதுமைகளை புகுத்த முடியும் என்பது குறித்து அவருடன் விரிவாக உரையாடினோம். அந்த உரையாடலில் இருந்து…
விளம்பர நிறுவனத்தின் காப்பி ரைட்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கியவர். அதனைத் தொடர்ந்து ஐஐஎம் பெங்களூருவில் படித்தவர். ஷேர்கான் என்னும் புரோக்கிங் நிறுவனத்தைத் தொடங்கியவர். அதிலிருந்து விலகி ஐடிபிஐ வங்கியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சொந்தமாக ஆலோசனை நிறுவனம் தொடங்கினார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த சவுத் ஏசியன் டெலிவிஷன் என்னும் நிறுவனத்துக்கு வழங்கிய ஆலோசனை அந்த நிறுவனத்துக்கு பிடித்துபோக, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இரு வருடம் பணிபுரிந்தார். (தற்போதும் அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு தலைவராக இருக்கிறார்). அதனை தொடர்ந்து 2006-ம் ஆண்டு முதல் கோடக் மஹிந்திரா வங்கியில் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக இருக்கிறார்.
கார்த்தி என்னும் பெயரில் இருந்து நீங்கள் தமிழர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதென்ன மார்ஷன்?
என்னுடைய பெயர் கார்த்தி குமார். பள்ளியில் சர்நேம் கேட்டார்கள் அப்பாவின் பெயர் நீளமாக (பத்மநாபன் வெங்கட்ராமன் சதமார்ஷன் – பிவிஎஸ் மார்ஷன்) இருந்ததால் கடைசி பெயரை கொடுத்தேன். கடைசியில் அதுவே என்னுடைய பெயராகிவிட்டது.
விளம்பர நிறுவனத்தில் காப்பி ரைட்டராக இருந்து ஐஐஎம்-க்கு படிக்கச் சென்றது எப்படி ?
தனிப்பட்ட காரணங்களுக்காக ஐஐஎம்-க்கு சென்றேன். அந்த வயதில் கல்யாணத்தை தாண்டி வேறு என்ன காரணம் இருக்க முடியும். என்னுடைய அப்பாவுக்கு ஹெச்யுஎல் நிறுவனத்தில் வேலை. அப்போது (80களின் இறுதியில்) 11,000 ரூபாய் மட்டுமே சம்பளம். ஆனால் என்னுடைய மனைவியின் (அப்போது காதலி) அப்பாவின் சம்பளம் ஒரு லட்சம் டாலருக்கு மேல். அந்தஸ்து, பணம், என அனைத்தும் பிரச்சினையாக இருந்தன. வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் செய்வதில் விருப்பம் இல்லை. ஐஐஎம்-ல் படித்தால் மட்டுமே வாழ்க்கைத்தரம் உயரும் என்பதால் ஐஐஎம்-க்கு சென்றேன்.
பொதுவாக ஐஐஎம்-ல் படிப்பார்கள், அதன் பிறகு வேலைக்கு செல்வார்கள். அதனைத் தொடர்ந்து தனியாக நிறுவனம் தொடங்குவார்கள். ஆனால் நீங்கள் ஷேர்கான் என்னும் நிறுவனம் தொடங்கி நடத்திய பிறகு வேலைக்கு சேர்ந்தீர்களே ஏன்?
எம்பிஏ முடித்த பிறகு விளம்பர நிறுவனத்தில் பனியாற்றினேன். இருந்தாலும் தொழில் தொடங்க வேண்டும், குறிப்பாக டெக்னாலஜியில் தொடங்க வேண்டும் என்னும் எண்ணம் இருந்தது. 90களில் www.fool.com என்னும் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட்டு வந்தது. அதாவது பங்குச்சந்தை மற்றும் முதலீடுகளை எளிமையாக புரிந்துகொள்ள உதவும் இணையதளம். இதேபோல இந்தியாவில் தொடங்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது என்னுடைய நண்பன் எஸ்எஸ்கேஐ என்னும் புரோக்கிங் நிறுவனத்தில் இருந்தான். அவனுக்கும் இந்த ஐடியா பிடித்திருந்தது. அவன் ராஜினாமா கடிதம் கொடுத்த போது எஸ்எஸ்கேஐ நிறுவனம் ஏன் என்று கேட்டது. அவன் இந்த ஐடியாவை சொன்னான். அப்படி என்றால் இங்கிருந்தே தொடங்குங்கள் என எஸ்எஸ்கேஐ நிறுவனர் தெரிவித்திருக்கிறார்.
என்னை நம்பி என்னுடைய நண்பன் ஒருவன் வெளியே காத்திருக்கிறான் என்று அவன் சொல்ல, அதற்கு அவரையும் இணைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார் எஸ்எஸ்கேஐ நிறுவனர். அதனால் நான் அங்கு சென்றேன். புதிய நிறுவனம் தனி துணை நிறுவனமாக தொடங்கப்பட்டது. நிறுவனர் கணிசமான தொகையை முதலீடு செய்தார். நாங்கள் வென்ச்சர் கேபிடல் முதலீட்டை திரட்டினோம். எனக்கு 1.5 சதவீத பங்குகள் வழங்கப்பட்டன. நிறுவனமும் நன்றாக செயல்பட்டது.
ஆனால் 2001-ம் ஆண்டில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவால் தொழில் பாதிக்கப்பட்டது. பலரையும் வேலையில் இருந்து நீக்க வேண்டும் என நிர்வாகம் கூறியது. இருந்ததே 20 பேர்தான். தவிர அவர்கள் தனித்துவம் மிக்கவர்கள். சந்தை மேலே உயரும் போது இவர்களின் பங்கு தேவை என்று கூறினோம். ஆனால் நிர்வாகம் ஏற்கவில்லை. நாங்களும் 1.50 சதவீத பங்குகளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறினோம். கடந்த 2015-ம் ஆண்டு பிஎன்பி பரிபா நிறுவனம் ஷேர்கானை ரூ.2,000 கோடிக்கு வாங்கியது உங்கள் தகவலுக்காக…
வங்கியின் மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கிறீர்கள். விளம்பரம் எடுப்பது, விநியோகம் செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? என்ன செய்திருக்கிறீர்கள்?
பணிக்குச் சேர்ந்த சில ஆண்டுகள் இப்படித்தான் நினைத்தேன். ஆனால் 2010-ம் ஆண்டு மார்க்கெட்டிங்கில் சில புதுமைகள் செய்தோம். எங்களுக்கு வங்கி தொடங்குவதற்கான உரிமம் 2003-ம் ஆண்டு கிடைத்தது. ஆனால் 1985-ம் ஆண்டு நிதி நிறுவனமாக தொடங்கப்பட்டது. வங்கி தொடங்கி 7 ஆண்டுகள்தான் ஆகி இருந்தாலும் நிறுவனம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகள் ஆனது. அதனை தொடர்ந்து 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் குழுமம் என்பதை விளம்பரங்கள் மூலம் எடுத்துரைத்தோம். 25 ஆண்டுகள் முக்கியமான ஆண்டு என்பதால் மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அதேபோல வாடிக்கையாளர்களிடம் போட்டி வைத்தோம். உங்களுடைய 25 வயதில் என்னவாக இருப்பீர்கள், 25 வயதில் என்னவாக இருந்தீர்கள் என்பது உள்ளிட்ட போட்டி வைத்தோம். இவையும் நல்ல வரவேற்பு பெற்றது.
2011-ம் ஆண்டு சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்துக்கான விதிமுறையை மத்திய அரசு தளர்த்தியது. அதனால் எங்களுடைய சேமிப்பு கணக்கு விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தினோம். இதில் 6%>4% என்னும் மார்க்கெட்டிங் உத்தியைக் கையாண்டோம். அதேபோல 50% அதிகம் என்னும் யுத்தியையும் அறிமுகப்படுத்தினோம். அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு ஆண்டு வட்டியாக மற்ற வங்கிகளில் ரூ.4,000 கிடைத்தால், எங்களிடம் ரூ.6,000 கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தினோம். இதனால் எங்களுடைய `காசா விகிதம்’ நன்றாக வளர்ச்சி அடைந்தது.
ஃபேஸ்புக், ட்விட்டரில் என்ன கூறமுடியும். இதனை எப்படி பயன்படுத்துகிறீர்கள்?
லைக் வாங்குவதற்காக நாங்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்தவில்லை. எங்களுடைய சேவைகளை தெரிவிப்பதற்காக பயன்படுத்துகிறோம். எங்களுக்கு இருக்கும் வாடிக்கையாளர்கள் சேவை மையத்தின் நீட்சிதான் சமூக வலைதளங்கள். ட்விட்டரில் தெரிவிக்கப்படும் புகார்களை 15 நிமிடத்துக்குள் தீர்த்துவிடுகிறோம். குஜராத்தில் உள்ள கிளையில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு பெண், உங்கள் வங்கியில் பணியாளர்கள் இல்லையா, நான் வேலைக்கு சேரட்டுமா என்னும் ரீதியில் ட்விட் செய்தார். அந்த பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட்டது. பலரும், பொதுவெளியில் புகார் தெரிவிப்பதால்தான் இவை தீர்க்கப்படுகின்றன என்று கூறுவார்கள். ஆனால் அதைவிட போன், மெயில் மூலமாக அதிக புகார்கள் வருகின்றன. அனைத்தையும் உடனுக்குடன் தீர்க்கிறோம்.
எதிர்காலத்தில் விளம்பரங்களுக்கான தேவை எப்படி இருக்கும்.?
வங்கித்துறையை பொறுத்தவரை விளம்பரங்களுக்கு தேவை இருக்காது என்றே நான் கணிக்கிறேன். உடனடியாக இல்லை என்றாலும் இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேவை குறையும். எங்களுடைய கிளைகள், ஏடிஎம், ட்விட்டர், ஃபேஸ்புக், யுடியூப், மொபைல் போன்றவை இருப்பதால் விளம்பரங்களுக்கான தேவை குறையும்.
Recent Comments