தொழில் முனைவோர்களுக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்’

வேகமாக வளர்ச்சி அடையும் நிறுவனங்களின் பட்டியலை டெலாய்ட் (deloitte)வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் ஜிபோ ஆர் என் டி சொல்யூஷன்ஸ்(Zifo RND solutions) தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக இடம்பிடித்து வருகிறது. இது மட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பும் (சிஐஐ) விருது வழங்கி கவுரவித்திருக்கிறது.

பணிபுரிவதற்கான சிறந்த இடம் என்னும் விருதினையும் இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. இருந்தாலும் இதுவரை இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் எந்த ஒரு ஊடகத்துக்கும் பிரத்யேகமாக பேட்டியளித்தில்லை. முதல் முறையாக யுவர் ஸ்டோரிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளனர்.

மென் பொருள் துறையில் பணியாற்றிய ராஜ்பிரகாஷ் மற்றும் வாஞ்சிநாதன் தங்களுடைய நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய நிறுவனம் Zifo rnd solutions. பொதுவாக ஐடி நிறுவனம் என வகைப்படுத்தினாலும் ஐடியில் பல துறையைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவார்கள். அதிகமாக வங்கி, நிதித்துறை, காப்பீட்டு துறையை (BFSI) சேர்ந்த நிறுவனங்களுக்கு சேவையை வழங்குவார்கள். ஆனால் ஜியோ நிறுவனம் மருத்துவத்துறை நிறுவனங்களுக்கான சேவையை வழங்கி வருகிறது. சர்வதேச அளவில் முக்கியமான 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்கள் Zifoன் வாடிக்கையாளர்கள் ஆகும்.

இருவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். படிக்கும்போதே தொழில்முனைவு குறித்து யோசித்து வந்திருக்கிறார்கள். சில பல ஐடியாகளை யோசித்தாலும் வளாகத்தேர்வில் இருவருக்கும் வேலை கிடைத்திருக்கிறது. சில ஆண்டுகள் ஐடி துறையில் வேலை செய்திருக்கிறார்கள். மீண்டும் தொழில் முனைவு குறித்து விவாதம் தொடங்கவே Zifo நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.

இருவரும் இணைந்து வழங்கிய பேட்டியின் தொகுப்பு இதோ.

image

ஃபார்மா (ஆர் அண்ட் டி) நிறுவனங்களுக்காக ஐடி சேவை என்னும் ஐடியா எப்படி வந்தது?

டெக்னாலஜியிலே சில ஐடியாக்களை யோசித்தோம். நாங்கள் நிறுவனம் தொடங்கும் சமயத்தில் ஃபார்மா நிறுவனங்கள் அவுட் சோர்ஸ் செய்யத் தொடங்கினார்கள். இப்போது ஃபார்மா ஆர் அண்ட் டி துறையில் கவனம் செலுத்தினால் கணிசமான சந்தையை கைப்பற்ற முடியும் என்பதால் இந்த துறையில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய நண்பர் புவனேஷ்வரன் ஆரம்ப கால முதலீட்டை வழங்கினார்.

ஃபார்மா நிறுவனங்களுடன் எளிதில் இணைய முடிந்ததா?

புதிய சந்தையை உருவாக்க வேண்டும். யாரும் பயணிக்காத திசையில் செல்ல வேண்டும் என்பதால் ஃபார்மாவை கையில் எடுத்தோம். தவிர பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யவில்லை. ஒரு வேளை செய்திருந்தால் நிறுவனத்தையே தொடங்கி இருக்க மாட்டோம். ஃபார்மா ஆராய்ச்சி என்பது பல பில்லியன் டாலர் முதலீடு செய்யக் கூடிய இடம். இந்த இடத்தில் சிறிய நிறுவனமான நாங்கள் நுழைய முடியாது என்பது புரிவதற்குள் நாங்கள் பாதி தூரம் கடந்துவிட்டோம். இனி திரும்பி போக முடியாது என்பதால் தொடரந்து வாடிக்கையாளர்களை தேடத்தொடங்கினோம்.

நிறுவனத்தை தொடங்கும்போதே 30 நபர் குழுவுடன் தொடங்கினோம். இதற்குக் காரணம், நாங்கள் ஃபார்மா துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதை நிறுவனங்களுக்கு உணர்த்துவதற்காக பெரிய குழுவுடன் தொடங்கினோம். ஃபார்மா ஆராய்ச்சி என்பது பல ஆயிரம் கோடி விஷயம். இவர்கள் சிறிய நிறுவனங்களுடன் இணைவது என்பது பாதுகாப்பு இல்லை என நினைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் பெரிய குழுவுடன் தொடங்கினோம்.

முதல் ஆர்டர் கிடைப்பதற்கு 14 மாதம் ஆனது. ஆனால் இந்த ஆர்டர் கிடைப்பதற்கு எங்களுக்கு செலவான தொகையைவிட எங்களுக்கு கிடைத்த வருமானம் ஐந்தில் ஒரு பங்குதான். ஆனால் இரண்டாம் ஆண்டு முதல் செயல்பாட்டு அளவில் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறினோம்.

நீங்கள் செய்யும் சேவை குறித்து சுருக்கமாக கூறுங்கள்?

பல ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு மருந்து கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்படும் அத்தனை மருந்துகளும் சந்தைக்கு வராது. முதலில் விலங்களுக்கு கொடுத்து சோதனை செய்வார்கள். அந்த மருந்து வேலை செய்த பிறகு, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்வார்கள். இந்த மருந்து வேலை செய்கிறது என்பதைவிட பக்க விளைவு இருக்கிறதா, மனிதர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதை சோதனை செய்வார்கள். அதன் பிறகு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு, குறிப்பிட்ட மாகாணம், நாடு, ஆண், பெண், வயது என பல வகையான மனிதர்களுக்கு கொடுத்து சோதனை செய்த பிறகுதான் முழுமையான விற்பனைக்கு வரும்.

ஆரம்பத்தில் இருந்து கடைசி வரையில் பல வகையான டேட்டாகள் உள்ளன. இந்த டேட்டாவை கையாளும் பணியைதான் நாங்கள் செய்கிறோம்.

டேட்டா பாதுகாப்பினை எப்படி உறுதி செய்கிறீர்கள்?

டேட்டா குறித்து ஃபார்மா நிறுவனங்கள் அதிகம் கவனம் எடுத்துக்கொள்கின்றன என்பதால்தான் எங்களுக்கு ஆரம்ப காலங்களில் வாய்ப்புகள் கிடைக்கவிலை. அதனால் டேட்டா பாதுகாப்பில் நாங்கள் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். டாப் 10 ஃபார்மா நிறுவனங்களில் 7 நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறோம். ஆனால் எந்தெந்த நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர் என்பதை கூட நாங்கள் பொதுவெளியில் கூற முடியாது. ஒரு நிறுவனத்துடன் டீல் கிடைப்பதற்கு முன்பு பல ஒப்பந்தங்களில் கையெழுத்து போட வேண்டி இருக்கும். இந்திய நிறுவனங்கள் தகவல் சார்ந்த சொத்துரிமை (intellectual property rights) விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்னும் கருத்து சர்வதேச அளவில் இருக்கிறது. ஆனால் அந்த எண்ணத்தை Zifo மாற்றும்.

பல பில்லியன் டாலர் செலவு செய்யும் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத்துக்கு உங்களை நாட வேண்டும். அவர்களே புதிய பிரிவினை தொடங்க முடியாதா?

ஃபார்மா என்பது அறிவியல் தொடர்புடையது. அவர்களுக்கு அறிவியல் தெரியும். எங்களுக்கு டெக்னாலஜி தெரியும். நாங்கள் அறிவியலை, தொழில்நுட்பத்துடன் இணைத்து கொடுக்கிறோம். எங்களிடத்தில் பணிபுரிபவர்கள் அனைவரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள்.

முதல் ஆர்டர் எப்படி கிடைத்தது?

ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு புராஜக்ட் மிகவும் கடினமாக இருக்கும். அதாவது அந்த நிறுவனத்தில் அந்த புராஜக்டை எடுக்கும் ’வெண்டார்’ மாட்டிக்கொண்டார் என்னும் நிலைமை இருக்கும். பலர் கைமாறி முக்கியமான நிறுவனம் ஒன்றின், செய்ய முடியாத வேலை எங்களுக்கு வந்தது. அந்த வேலையை சிறப்பாக செய்துமுடித்தோம். அந்த வேலை செய்து முடித்து எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அந்த வேலையின் பலன்தான் இப்போதும் எங்களுக்கு கிடைத்து வருகிறது. கஷ்டம் என கருதும் வேலைதான் எப்பவும் முதலில் கிடைக்கும். அதை செய்து முடிக்கும் பட்சத்தில் எளிதான வேலைகள் குவியம்.

பெரும்பாலான ஃபார்மா நிறுவனங்கள் உங்கள் வசம் இருக்கிறது. அடுத்து என்ன?

சில புராடக்ட்களை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறோம். அடுத்தது சர்வதேச நிறுவனமாக மாறுவதுதான் எங்களுடைய திட்டம். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் துணை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவை தலைமையாக கொண்டு செயல்படும் மற்ற நிறுவனங்களின் வெளிநாட்டு அலுவலகங்கள் இந்தியாவில் உள்ளது போன்றே செயல்படும். ஆனால் எங்களுடைய சர்வதேச அலுவலங்கள் சம்பந்தபட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களை போலவே இருக்கும்.

சர்வதேச அளவிலான நிறுவனமாக மாற வேண்டும் என்றால் பிரைவேட் ஈக்விட்டி முதலீடு தேவைப்படும் இல்லையா?

பல நிறுவனங்கள் எங்களுடன் பேச்சு வார்த்தையில் உள்ளன. தற்போதைய விரிவாக்கத்துக்கு வெளியில் இருந்து முதலீடு தேவையில்லை. நாங்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்னும் திட்டத்தை தீட்டி வருகிறோம். அந்த திட்டம் தயாரான பிறகு முதலீடு குறித்து கவனம் செலுத்தலாம். முதலீட்டை வாங்கிய பிறகு திட்டம் தயாரிப்பது நன்றாக இருக்காது.

Zifo பெயருக்கான காரணம்?

பெயர் எளிமையாக, சிறிதாக இருக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் வார்த்தைகள் அல்லாமல் நாங்களே உருவாக்கியதாக இருக்க வேண்டும். ஏற்கெனவே இருக்கும் வார்த்தை என்றால், நிறுவனத்தின் பெயர் மற்றும் இணையதளம் ஆகியவை கிடைப்பதற்கு சிரமமாக இருக்கிறது. தவிர சர்வதேச அளவில் இருக்க வேண்டும் என்றால் பெயர்ச்சொல் இல்லாமல் இருக்க வேண்டும். இவற்றை அடிப்படையாக வைத்து ஜிபோவை உருவாக்கினோம்.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ஸ்டார்ட் என்பது கவர்ச்சிகரமான வார்த்தையாக மாறிவிட்டது. நாங்கள் நிறுவனம் தொடங்கும்போது ஸ்டார்ட் அப் என்னும் வார்த்தையெல்லாம் கிடையாது. தற்போது ஸ்டார்ட் அப் என்னும் பெயர் காரணமாக ஒருவிதமான அழுத்தம் ஏற்படுகிறது.

அனைவரும் நிறுவனம் தொடங்கினாலும் சிலர் மட்டும் ஜெயிக்க முடியும். அதனால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடிந்தால் மட்டுமே தொழில் தொடங்க வேண்டும். இதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தவிர மார்க்கெட் ரிசர்ச் செய்வதில் காலத்தை கடத்த வேண்டும். மார்க்கெட் ரிசர்ச்சில் மக்களுக்கு என்ன தெரியுமோ அவைதான் உங்களுக்கு தெரியும். களத்தில் இறங்கினால் மட்டுமே உண்மையான பிரச்சினை தெரியும்.

நன்றி: யுவர் ஸ்டோரி தமிழ்.