’கல்லூரியை தாண்டி படிக்க வேண்டும்’ – கிளவுட்செக் நிறுவனர் ராஹுல் சசி.

சில நாட்களுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பின் தொழில்முனைவோர்களுக்கான மாநாடு நடந்தது. இதில் பலர் பேசினாலும் பெங்களுரூவைச் சேர்ந்த ராஹுல் சசியின் பேச்சு அனைவருக்கும் உத்வேகம் தருவதாக இருந்தது. கிளவுட்செக் (cloudsek) என்னும் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை பெங்களூருவில் நடத்தி வருகிறார். இவர் தொடங்கி இருக்கும் நிறுவனத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரிகளான மோகன்தாஸ் பை, பாலா ஆகியோர் முதலீடு செய்திருக்கின்றனர். இவர்களை தவிர வேறு சிலரும் கிளவுட்செக் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கின்றனர்.

கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும்போதே, படிப்பை விற்றுவிட்டு புனேவில் உள்ள நிறுவனத்தில் பயிற்சிக்கு சென்றுவிட்டார். படிப்பை முடிக்காமல் இருந்த இவர் நிறுவனத்தை தொடங்கி முதலீட்டை பெற்றிருக்கிறார் என்பதால் அவரை சந்திக்க ஆர்வமாகினேன். சிஐஐ நிகழ்ச்சியில் பேசிய அன்று மாலையே சென்னையில் இருக்கும் காபி டேவில் சந்தித்தோம்.

கிளவுட்செக் நிறுவனர் ராஹுல் சசி

கிளவுட்செக் நிறுவனர் ராஹுல் சசி

ஏன் படிப்பை நிறுத்தினேன், எப்படி படித்தேன் நிறுவனத்தை தொடங்கும் ஆர்வம் என பல விஷயங்கள் குறித்து ராஹுல் சசியிடம் உரையாடினேன். அந்த உரையாடலின் தொகுப்பு இதோ!

பொறியியல் கல்லூரிக்கு செல்லும் போது ஆர்வமாக சென்றிருப்போம். ஆனால் என்னுடைய ஆர்வத்துக்கு அங்கே எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கான சிலபஸில் படிக்க வேண்டிய சூழல் எனக்கு உபயோகமாக இல்லை.

”ஆனால் வரும் காலத்துக்கு தேவையான தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் இருந்தது. காரணம் நம்மிடம் உள்ள குண்டு பல்ப் பல பத்தாண்டுகளாக வடிவம் மாறாமல் இருக்கிறது. ஆனால் மொபைலின் வடிவம் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்,” என்று தொடங்கினார்.

வகுப்பு முடிந்த பிறகு நேராக கம்ப்யூட்டர் லேப்புக்கு சென்றுவிடுவேன். இரவு 10 மணி வரை கம்யூட்டர் லேப் திறந்திருக்கும். ஆனால் மற்ற மாணவர்கள் 7.30 மணிக்கு இரவு உணவுக்கு சென்றுவிடுவார்கள். நானும் சென்றுவிட்டால் லேப் பூட்டப்படும் என்பதால் பல நாட்கள் இரவு உணவினை தவிர்த்திருக்கிறேன். எனக்காக லேப் திறந்திருக்கும். எனக்காக அந்த மேனேஜர் சுகுமார் சார் காத்திருப்பார்.

இணையம் மூலம் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுடன் தொடர்பு கிடைத்தது.

மூன்றாம் ஆண்டு முடிக்கும் போது பூனே நிறுவனத்திடம் பயிற்சிக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத்தின் பணியாற்றுவதற்கான தகுதி எனக்கு இருந்தது. அதனால் அவர்கள் என்னுடைய டிகிரி குறித்து கவலைப்படவில்லை. அதனால் நானும் படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிட்டேன். இது ரிஸ்க் என எனக்கு தெரியும். ஆனால் ஆராயாமல் எடுத்த ரிஸ்க் அல்ல.

மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலை செய்வது பெரிதல்ல. ஆனால் சர்வதேச நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றால் டிகிரி வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்கள். ஆனாலும் என்னுடைய திறமை மீது நம்பிக்கை இருந்தது.

புனே நிறுவனதில் 4 ஆண்டுகள் வேலை செய்தேன். அதனை தொடர்ந்து சிட்ரிக்ஸ் (Citrix) நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்து. டெக்னிகலாக என்னை வேலைக்கு எடுப்பதில் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர்களுடைய ஹெச்ஆர் விதிமுறைகள் எனக்கு வேலை வாய்ப்பினை கொடுக்க முடியாத சூழல் இருந்தது. இருந்தாலும் எனக்கான துணைத்தலைவரிடம் பிரத்யேக அனுமதி வாங்கப்பட்டு எனக்கு அந்த வேலை கிடைத்தது.

படிக்காமல் இருந்தாலும் எனக்கு வேலை கிடைத்தது என்பதை மகிமைப்படுத்தவில்லை. அதே போல மற்றவர்களையும் கல்லூரி படிக்க வேண்டாம் என்று ஊக்கப்படுத்தவில்லை.

நான் சொல்ல வருவது கல்லூரியை தாண்டி படிக்க வேண்டும் என்பதுதான். நான் கல்லூரியில் மட்டும் அதிக நேரம் படிக்கவில்லை. வேலைக்கு சென்ற பிறகும், வேலை நேரத்துக்கு பிறகும் நான் தொடர்ந்து படித்துகொண்டே இருந்தேன்.

சைபர் பாதுகாப்பு அதிகம் கவனம் செலுத்தி வந்தேன். அதனால் சிட்ரிக்ஸ் வேலையில் இருந்து விலகி கிளவுட்செக் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறேன். தற்போது 25 நபர் குழுவுடன் பெங்களுருவில் செயல்பட்டு வருகிறோம்.

வங்கிகள்தான் எங்களுடைய வாடிக்கையாளர்கள். அவர்களுடைய பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டிருக்கிறதா என்பதை வங்கிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கிறோம்.

இதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும், வாடிக்கையாளர்களின் தகவல்களை பாதுகாக்கும் நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறது.

சைபர் பாதுகாப்பு (digital risk management ) பிரிவில் இந்தியாவில் எங்களுக்கு போட்டியில்லை. அமெரிக்காவில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனமாக மாற வேண்டும் என்னும் இலக்கில் செயல்பட்டு வருகிறோம் என ராஹுல் சசி கூறினார்.