டைகான் விருதுகள்’- வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார் அசோக் ஜுன்ஜுன்வாலா!

தமிழ்நாட்டின் முக்கியமான தொழில்முனைவோர் விருது வழங்கும் விழாவான `TieCon 2018’ கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்தது. பல பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது ஐஐடி (சென்னை) பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன்வாலாவுக்கு வழங்கப்பட்டது. பல தொழில்முனைவோர்கள் உருவாவதற்கு காரணமாக விளங்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது. டிவிஎஸ் கேபிடல் கோபால் ஸ்ரீனிவாசன் இந்த விருதினை வழங்கினார்.

தற்போது நடந்தது 11-வது டைகான் விழாவாகும். இதற்கு முன்பு நல்லி குப்புசாமி செட்டி, ஹாட்பிரட் மகாதேவன், சுகுணா புட்ஸ் நிறுவனர்கள், அர்விந்த் குழுமத்தின் நம்பெருமாள் சாமி உள்ளிட்ட சிலருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன.

விருதினை பெற்றுக்கொண்ட அசோக் ஜுன்ஜுன்வாலா பேசியதாவது, வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக்கொண்டாலும் நான் ஓய்வு பெறபோவதில்லை. என்னால் முடிந்தவரை தொழில்முனைவோர்களுக்கு உதவுவேன், என்றார்.

”தற்போது `ஸ்டார்ட் அப்’ என்னும் வார்த்தை கவர்ச்சிகரமாக மாறிவிட்டது. ஆனால் 20 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை வேறு மாதிரியாக இருந்தது. ஒரு தொழில் தொடங்குவதற்கு பணம் முக்கியம்தான். ஆனால் அதனை விட முக்கியம் சிறந்த ஆலோசர்கள். ஆலோசர்கள் இல்லையெனில் தொழிலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல முடியாது,” என்றார். 

இதனை உணர்ந்து ஐஐடி ரிசர்ச் பார்க் மற்றும் ஐஐடி இன்குபேஷன் மையம் ஆகியவற்றை உருவாக்கி இருக்பதாக தெரிவித்தார். ஆரம்பத்தில் கல்வி மையங்களும், தொழில் நிறுவனங்களும் தனித்தனியே செயல்பட்டுவந்தன. இதனை இணைந்து தொழில் முனைவோர்களை உருவாக்க வேண்டும் என நினைத்தேன்.

சரஸ்வதி இருக்கும் இடத்தில் லஷ்மியை கொண்டுவந்துவிட்டதாக சில சலசலப்புகள் இருந்தன. இரண்டும் இணைந்து இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைபாடு. அறிவினை வர்த்தக பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்ற வேண்டும்.

தொழில்முனைவு என்பதே பிரச்சினையை தீர்ப்பதுதான். இந்தியாவில் தீர்ப்பதற்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. தண்ணீர், எனர்ஜி என ஒவ்வொரு துறையிலும் பிரச்சினைகள் உள்ளன. இதனைத் தீர்க்க தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும்.

வளர்ந்த நாடு என்பதற்கு பல அளவுகோள்கள் இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் தொழில்நுட்பத்திலும், தொழில்முனைவிலும் சிறந்து இருக்கும் பட்சத்திலே வளர்ந்த நாடாக மாற முடியும். தற்போதைய இளைஞர்கள் வெற்றியடையும் வரை தோல்வியடைய தயாராக இருக்கின்றனர். இவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். தற்போதைய தொழில்முனைவுச் சூழல் சிறப்பானதாக இருந்தாலும் நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என ஜுன்ஜுன்வாலா குறிப்பிட்டார்.

இது தவிர மேலும் ஆறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னையில் முக்கியமான தொழில்முனைவோர்கள், நிறுவனங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டர். இது தவிர பல கருத்தரங்குகளும் டைகான் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

சிறந்த ஸ்டார்ட் அப் பிக் யுவர் டிரெய்ல் (Pickyourtrail)

சிறந்த வளரும் நிறுவனம் : கிரெடிட்மந்திரி (CreditMantri)

தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிறுவனம் : ஆஸ்பயர் சிஸ்டம்ஸ் (Aspire Systems)

மறைந்திருக்கும் பொக்கிஷம் : சக்ஸஸ் மென்வியர் (Suxus Menswear)

சிறந்த சமூக நிறுவனம் : தி பான்யன் (The Banyan)

சிறந்த டை உறுப்பினர் : சரவணன் சுந்தரமூர்த்தி ( Edxis BrainLab)