ஸ்டார்ட் அப் உலகின் புதிய நாயகனாக Byjus ரவீந்திரன் உருவாகி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு 54 கோடி டாலர் நிதியை இவரது நிறுவனம் திரட்டியது. தென் ஆப்ரிக்காவின் நாஸ்பர்ஸ் நிறுவனம் மற்றும் கனடா பென்ஷன் பண்ட் (CPPIB) ஆகிய நிறுவனங்கள் இந்த முதலீட்டை செய்திருக்கின்றன. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 360 கோடி டாலர் அளவினை எட்டி இருக்கிறது. தவிர இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஸ்டார்ட் அப் ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் எஜுகேஷன் டெக்னாலஜி துறையில் மிகப்பெரிய சந்தை மதிப்பை வைத்திருக்கும் முதல் நிறுவனம் இதுதான்.

ஃபிளிப்கார்ட் (2,200 கோடி டாலர்), பேடிஎம் (1,600 கோடி டாலர்), ஓயோ (500 கோடி டாலர்), ஓலா (400 கோடி டாலர்) ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து சந்தை மதிப்பில் மிகப்பெரிய நிறுவனமான பைஜூஸ் திகழ்கிறது. சந்தை மதிப்பில் உயர்ந்து வந்தாலும் மற்ற நிறுவனங்களுக்கும் இந்த நிறுவனத்துக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. அதற்கு முன்பு ரவீந்திரன் பற்றிய சிறு குறிப்பு.

image

ரவீந்திரன் யார்?

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தவர். பெற்றோர்கள் ஆசிரியர் என்பதால் கல்விக்கு முக்கியத்துவம் அதிகம் இருந்தது. அதே சமயத்தில் ஆறு விளையாட்டுகளில் பல்கலைகழக அளவில் விளையாடும் திறமை பெற்றவர். இன்ஜினீயரிங் முடித்த பிறகு ஐடி நிறுவனத்தில் இணைந்தார். வெளிநாடுகளில் பல மாதங்கள் தங்கி பணிபுரியும் சூழல். 2003ம் ஆண்டு பெங்களூருக்கு வருகிறார். இவரது நண்பர்களுக்கு கேட் தேர்வு (ஐஐஎம் மற்றும் இதர நிர்வாக கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு) எழுதுவதற்கு உதவுகிறார்.

இவர் வெற்றி பெற்றாலும் ஐஐஎம் செல்லவில்லை. ஆனால் இவரிடம் ஆலோசனை கேட்ட பல நண்பர்கள் வெற்றியடைகிறார்கள். அதனால் கிடைத்த ஊக்கம் மற்றும் இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்பதால் ஐடி வேலையை விட்டு விடுகிறார்.

அதனைத் தொடர்ந்து கேட் தேர்வு பயிற்சி மையத்தை 2007 தொடங்குகிறார். பிஸினஸ் விரிவாகிறது. பல நகரங்களில் மையத்தை தொடங்குகிறார். அதனால் 2009-ம் ஆண்டு முதல் வீடியோ மூலம் பயிற்சியைத் தொடங்குகிறார். பள்ளியில் பாடங்களை மாணவர்கள் உள்வாங்கி படிக்காததால் கல்லூரி பாடங்கள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு கடினமாக இருக்கிறது என்னும் உண்மை பலரிடம் (மாணவர்களிடம்) உரையாடிய பிறகு அவருக்கு புரிகிறது.

2011-ம் ஆண்டு ’திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிலெட்’ என்னும் நிறுவனத்தை பள்ளி மாணவர்களுக்காக உருவாக்குகிறார். 2015-ம் ஆண்டு இதற்கான செயலியை அறிமுகம் செய்கிறார். பைஜூஸ் செயலியை 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவிறக்கம் செய்திருக்கிறார்கள். 1.50 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவரிடம் படிக்க வந்த மாணவர்கள் பலர் தற்போது இவரது நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்கள்.

என்ன வித்தியாசம்?

மற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் இவர்களுக்கு பல வித்தியாசங்கள் உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நிதி திரட்டும் போது நிறுவனர்களின் பங்கு தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கும். பைஜூஸ் நிறுவனம் பல கட்ட நிதி திரட்டல் செய்திருந்தாலும் நிறுவனர்களின் பங்கு 38 சதவீதம் என்னும் அளவில் இருக்கிறது.

உதாரணத்துக்கு ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் முதலீட்டாளர்களிடம் பெரும் அளவிலான பங்கு இருந்தது. வால்மார்ட் முதலீடு செய்வதற்கு முன்பு சச்சின் மற்றும் பின்னி பன்சால் இருவரிடமும் சேர்த்து சுமார் 10 சதவீத பங்குகள் மட்டுமே இருந்தன. பங்குகள் குறைவாக இருந்ததால் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்த முடியாமல் இருவரும் வெளியே செல்லும் சூழல் ஏற்பட்டது. தவிர அதிக பங்குகள் நிறுவனர்கள் வசம் இருப்பதால் இவர்களது சொத்து மதிப்பும் அதிகமாக இருப்பது கவனிக்கத்தக்கது. ஃபிளிப்கார்ட் மட்டுமல்லாமல் பேடிஎம், ஓலா மற்றும் ஓயோ ஆகிய நிறுவனங்களில் கூட நிறுவனர்களின் பங்கு சுமார் 10 சதவீதம் அளவில் சுருங்கி விட்டது.

இயக்குநர் குழு

ஒரு நிறுவனத்தில் முதலீட்டாளர் முதலீடு செய்யும் பட்சத்தில் இயக்குநர் குழுவில் இடம்பெற விரும்புவார். அப்போதுதான் அவரால் நினைத்த விஷயங்களை செய்ய முடியும். குறைந்த பட்சம் அவருக்கு பிடிக்காத விஷயங்களை தடுக்க முடியும். ஸ்டார்ட் அப் உலகில் நிறுவனங்கள் அதிக நிதியை திரட்டுவதால் இயக்குநர் குழுவின் எண்ணிக்கை உயரும். அப்போது முதலீட்டாரின் கை ஓங்கும்.

ஆனால், பைஜூஸ் நிறுவனத்தில் பல முதலீட்டாளர்கள் இருந்தாலும் இயக்குநர் குழு எண்ணிக்கை 5 ஆக மட்டுமே இருக்கிறது. இதில் மூவர் நிறுவனர்கள். முதலீட்டாளர்களின் எண்ணிக்கை இரண்டாக மட்டுமே இருப்பதால், நிறுவனர்களின் எண்ணத்துக்கு ஏற்ப நிறுவனத்தை எடுத்துச் செல்ல முடியும்.

லாபம்?

நிர்வாகத் துறை பேராசிரியர் அடிக்கடி கூறும் வார்த்தை, தொழிலுக்கு லாபம் முக்கியம் என்பதுதான். ஆனால் தொடங்கப்படும் நிறுவனங்கள் அனைத்தும் லாபம் ஈட்டுவதில்லை. குறிப்பாக டெக்னாலஜி நிறுவனங்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அதிகச் சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இதனால் இந்த நிறுவனங்களின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் கடந்த ஜூன் மாதம் பைஜூஸ் நிறுவனம் லாப பாதைக்கு திரும்பி இருக்கிறது. மற்ற நிறுவனங்களின் நஷ்டம் எவ்வளவு என்பது குறித்து பார்த்தால், லாபம் ஈட்டுவது எவ்வளவு முக்கியம் என்பது புரியும். ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.8,771 கோடி (2017-ம் நிதி ஆண்டு), ஓலா நிறுவனத்தின் நஷ்டம் ரூ.4,897 கோடி (2017-ம் நிதி ஆண்டு). தவிர இந்த அனைத்து நிறுவனங்களுக்கும் சர்வதேச அளவிலான போட்டி இருக்கிறது. ஆனால் பைஜூஸ் நிறுவனத்துக்கு பெரிய அளவிலான போட்டி இல்லை.

தவிர பணியாளர்களின் எண்ணிக்கையும் குறைவு. ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் 30,000 பணியாளர்கள் உள்ளனர். பேடிஎம் நிறுவனத்தில் 20,000, ஓயோவில் 20,000 மற்றும் ஒலாவில் 6,000 பணியாளர்கள் உள்ளனர். ஆனால் பைஜூஸ்-ல் 2600 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

குறைவான பணியாளர்கள், லாபப் பாதைக்கு திரும்பி இருப்பது, சர்வதேச போட்டி இல்லாதது, தற்போது கிடைத்திருக்கும் நிதி ஆகியவைக் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் இதைவிட மிகப்பெரும் நிறுவனமாக உயர்வதற்கான சாத்தியங்களை கொண்டிருக்கிறது பைஜூஸுக்கு…