இ-காமர்ஸ் துறை வேகமான வளர்ச்சியடைந்ததை தொடர்ந்து, பிரத்யேகமாக சில பிரிவுகள் இ-காமர்ஸ் துறையில் வளர்ந்து வருகின்றன. கிராமப்புறத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ’ரூரல் ஷாப்’ (https://www.ruralshop.com/) என்னும் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் பழனிராஜன்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. நிறுவனத்தை தொடங்குவதற்கான காரணம், தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டம் ஆகியவற்றை குறித்து அவர் பகிர்ந்தார்.

ரூரல்ஷாப் நிறுவனர் பழனிராஜன்

நெல்லை அருகே கல்லிடைக்குறிச்சி என்னுடைய சொந்த ஊர், கோவில்பட்டியில் படித்தேன். 2012-ம் ஆண்டு இன்ஜினீயரிங் முடித்தேன். முடித்தவுடன் பெங்களூருக்கு சென்றுவிட்டேன். மார்க்கெட்டிங் வேலைதான் கிடைத்தது. ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனத்தில் மார்கெட்டிங் பணியில் இணைந்தேன். அங்கு சுமார் ஒர் ஆண்டு வரை பணியாற்றினேன். அதனை தொடர்ந்து சீமென்ஸ் நிறுவனத்தில் இணைந்தேன். இங்கும் மார்கெட்டிங் பணி. இங்கு சில ஆண்டுகள் பணியாற்றினேன். கர்நாடகாவில் நான் செல்லும் இடத்தில் பலரும் தமிழர்கள் என்பதால் தமிழில் உரையாடுவோம்.

அப்போது எது சொந்த ஊர் என்று பேச்சு செல்லும். அப்போது திருநெல்வேலி என்று சொன்னவுடன் அனைவருக்கும் அல்வா நினைவுக்கு வரும். அதனால் பலர் என்னை வாங்கி வரசொல்லுவார்கள். அதனால் பலருக்கும் வாங்கிக் கொடுப்பேன். என் அம்மா சாம்பார் பொடி சிறப்பாக செய்வார்கள். அதனால் அடுத்த முறை சாம்பார் பொடி வேண்டுமா எனக் கேட்டேன். பலரும் தேவை என்றே கூறினார்கள். அதனால் அல்வா மற்றும் சாம்பார் பொடியை கொண்டு செல்லத் தொடங்கினேன்.

இது ஒரு பக்கம் தொடர, எங்கள் ஊரில் இருக்கும் மகளிர் சுய உதவிக் குழு பற்றி தெரிய வந்தது. அவர்கள் செய்யும் பொருட்களை எங்களுக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். அப்போது அவர்கள் தயாரிக்கும் பல பொருட்களுக்கு  சந்தையில் தேவை இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதனால் இதற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கினால் என்ன என்பதை யோசித்தேன். ஒரு வழியாக 2017-ம் ஆண்டில் வேலையை விட்டுவிட்டு தொழில்முனைவர் ஆகிவிட்டேன், என்றார் ராஜன்.

ஆரம்பத்தில் ’ரங்கோலி டாட் காம்’ என்னும் பெயரில் இணையதளம் தொடங்கிய இவர், நேட்டிவ் லீட் வாயிலாக நிறுவனம் என்றால் என்ன, முதலீட்டை எப்படி பெறுவது, விற்பனை, மார்க்கெட்டிங் என்ன என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கற்றறிந்துள்ளார். இதன் மூலமாக tiliconveli நிறுவனர் பிரபாகரன் உடன் தொடர்பு கிடைத்து, Tiliconveli பூங்காவில் அலுவலகம் அமைக்க வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார் ராஜன்.

நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடங்கி, பல மகளிர் சுய உதவிக் குழுக்களை கண்டறிந்து அவர்கள் தயாரிக்கும் பொருட்களை எங்களுக்கு ஏற்றார் போல மாற்றிக்கொடுக்கச் சொன்னொம். பலருக்கு புதிய பயிற்சிகள் வழங்கினோம். திருநெல்வேலி, தூத்துகுடி உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்கும் பொருகளை எங்களது தளத்தில் இணைத்தோம். இதற்கே சில மாதங்கள் ஆனாது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலையில் ‘ரூரல்ஷாப்’இணையதளம் தொடங்கினோம்.
தற்போது சுமார் 2,000 பொருட்கள் எங்களது தளத்தில் உள்ளது. மேலும் புதிய பொருட்களை இணைக்கத் தொடங்கி இருக்கிறோம். பொருட்களை இணைப்பதில் எங்களுக்கு உள்ள முக்கியமான நிபந்தனை பெரிய இயந்திரங்கள் மூலம் அல்லாமல் கைகளில் தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதே.

Ruralshop.com தளத்தில் பலவகையான இயற்கைப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளன. தேங்காய் ஓட்டில் இருந்து செய்யப்பட்ட டீ கப்கள், பாய் கொண்டு செய்யப்பட்ட ஹேண்ட் பேகுகள், மூங்கில் விளக்குகள், பனைமரச்சிரகு ப்ரஷ்கள், கைவினைப்பொருட்கள் என ஏராள டிசைன் மற்றும் வகைகள் உள்ளது. 50 ரூபாய் முதல் பொருட்கள் இவர்கள் தளத்தில் விற்பனைக்கு உள்ளது.

லாஜிஸ்டிக்ஸ்

இப்போதைக்கு எங்களுக்கு உள்ள முக்கியமான சவால் லாஜிஸ்டிக்ஸ். இதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். எங்களிடத்தில் அதிகம் விற்பனையாகும் பொருட்களை நாங்களே அதிகமாகாக வாங்கி வைத்துக்கொள்கிறோம். ஆனால் பிற பொருட்கள் தயாரிப்பாளர்களிடம் இருக்கிறது. எங்களுக்கு ஆர்டர் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்லிவிடுவோம். அவர்கள் பார்சல் செய்து அனுப்புவார்கள். ஒருவர் ஐந்து வேறுவிதமான பொருட்களை ஆர்டர் செய்தால் ஐந்தும் தனித்தனியாகதான் டெலிவரி செய்யப்படும் சூழல் இருக்கிறது. முடிந்தவரை நாங்கள் வைத்துக்கொள்ளும் இன்வெண்ட்ரி மாடலுக்கு செல்லவேண்டும். அதற்கு இன்னும் சில காலம் ஆகும்.

முதலீடு

கிராமபுர பொருட்கள் என்றாலும் எங்களின் வாடிக்கையாளர் சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெரு நகரங்களில்தான்  இருக்கிறார்கள். ஆனால் தனிநபர்களை மட்டுமே விற்பனைக்காக நம்பி இருந்தால் பெரிய வளர்ச்சி அடைய முடியாது. அதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்ல இருக்கிறோம். அவர்களுக்கு பரிசு மற்றும் கூப்பன் முறையில் அவர்களுக்கு எங்களின் பொருட்களை விற்க திட்டமிட்டிருக்கிறோம். இதனால் வருமானம் உயர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நிதி திரட்டும் திட்டமும் இருக்கிறது. நிதி திரட்டும்போது கார்ப்பரேட் விற்பனை பிரிவும் எங்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும்.

அடுத்தகட்டம்

இப்போதைக்கு திருநெல்வேலியில் இருந்தே நிறுவனத்தை நடத்தி வருகிறோம். சென்னை போன்ற பெரு நகரங்களில் இருந்தால் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சினை இருக்காது. ஆனால் சென்னையில் வாடகை அதிகம். அதனால் இப்போதைக்கு திருநெல்வேலியில் இருந்தே செயல்பட இருக்கிறோம்.

மேலும் திருநெல்வேலி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொருட்களை மட்டுமே இணைந்திருக்கிறோம். இன்னும் பல மாவட்டங்களில் பிரத்யேகமான பொருட்கள் உள்ளன. அவற்றையும் இணைக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களில் சீரான வளர்ச்சி இருந்தாலும் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. மேலும் பல பொருட்களை இணைக்க வேண்டும், விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில் பல குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும், நிதி திரட்ட வேண்டும், குழுவின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன என பழனிராஜன் கூறினார்.

வலைதள முகவரி: Ruralshop