பிப்ரவரி மாத தொடக்கத்தில் டை, ஐஐடி இன்குபேஷன் மையம் உள்ளிட்ட அமைப்பு இணைந்து ’ஸ்டார்ட் அப் டெமோ’ என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன. இதில் 100-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுடைய புராடக்ட்கள் மற்றும் சேவைகளை குறித்து விளக்குவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டன. சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களுடன் உரையாடுவதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சென்று சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பது குறித்து பார்த்தேன்.

அப்போது ஒரு ஸ்டாலில் மட்டும் கூட்டமாக இருந்தது, அதோடு அங்கு சில புராடக்ட்களையும் விற்பனை செய்துவந்தார்கள். அந்த நிறுவனத்தின் பெயர் ’மேஜிக் பாக்ஸ்’ (MagicBox). இதன் நிர்வாக இயக்குநர் சதீஷ் குப்தா. இவர் குழந்தைகளின் ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமான சில புராடக்ட்களை விற்றுக்கொண்டிருந்தார்.

Magicbox நிறுவனர் சதீஷ் குப்தா

சுவரில் எழுதுவது குழந்தைகளின் இயல்பு. சில பெற்றோர் குழந்தைகள் கிறுக்குவதை விரும்ப மாட்டார்கள். சிலர் கிறுக்கினாலும் சரி என்று ஏற்றுக்கொள்வார்களே தவிர ஊக்குவிக்க மாட்டார்கள். அதாவது குழந்தைகளின் முதல் கிரியேட்டிவிட்டி சுவரில்தான் இருக்கிறது. அதனால் சுவரில் ஆறு அடி நீளத்துக்கு நாங்கள் டிசைன் செய்த பேப்பரை ஒட்டி விட்டால் குழந்தைகள் விரும்பும் நேரத்துக்கு சுவரில் வரைவார்கள். இதில் தமிழ் ஆங்கில எழுத்துகள், பழங்கள் என பல வித்தியாசமான டிசைன்களை அறிமுகம் செய்திருக்கிறோம், என்று தொடங்கினார் சதீஷ் குப்தா. மேலும், ”இப்படி வரையும் போது புதியனவற்றை குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். தவிர வரைந்த வண்ணங்களை எளிதாக நீக்கிவிட்டு, மீண்டும் வேறு வண்ணங்களை தீட்ட முடியும். இதன் மூலம் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி மற்றும் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை வளர்க்க முடியும்,” என்கிறார்.

அப்போது புராடக்ட் குறித்து உரையாடுவதற்கு மட்டுமே நேரம் இருந்தது. பின்னொரு நாளில் விரிவாக உரையாடினோம். அப்போது தன்னைப் பற்றி பகிர்ந்து கொண்டார் சதீஷ். அவர் பிறந்தது வளர்ந்தது சேலத்தில். ஆனால் அப்பாவுக்கு தொழில் சென்னையில் என்பதால் இங்கு குடியேறி உள்ளனர்.

’அபிராமி ஆடியோ’ என்னும் நிறுவனத்தை அப்பா நடத்தி வந்தார். படிக்கும்போதே அப்பாவுடன் இணைந்து பணியாற்றினேன். உதாரணத்துக்கு ஐயப்பன் சீசன் என்றால் புதிய பாடல்களை பதிவு செய்து தென் இந்தியா முழுவதும் விற்போம். இதுபோல பல ஆடியோ கேசட்களை விற்பனை செய்துகொண்டிருந்தோம்.”

அப்போது ஆடியோ சிடி, கேசட்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஒவ்வொரு ஊர்களிலும் மியூசிக் ஸ்டோர் இருக்கும். லேண்ட் மார்க் போன்ற பெரிய கடைகளில் இசைக்கு தனி பிரிவு இருக்கும்.

2000-ம் ஆண்டுவாக்கில் நான் தொழிலுக்கு வந்தேன். அப்போது என் குழந்தைகளுக்குத் தேவையான சில சிடி வாங்கலாம் என நினைத்தால் அதுபோன்ற கண்டெண்ட் இல்லை. அதனால் குழந்தைகளுக்காக உள்ளடக்கம் உருவாக்கவேண்டும் என நினைத்தோம்.

’மேஜிக்பாக்ஸ்’ என்று புதிய பிராண்டை உருவாகினோம். அபிராமியில் வழக்கமான இசையும், மேஜிக்பாக்ஸ் பெயரில் குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் உள்ளிட்டவற்றை சிடிக்கள் மூலம் விற்கத் தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்த்தை விட மிகப்பெரிய வெற்றி. அதனால் இதர மொழிகளில் தொடங்கினோம்,” என்றார்.

இதற்கிடையே டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் அதிகரித்தது. யூடியூப் பிரபலமானது. ஆனால் அந்த சமயத்தில் எங்களுக்கு யூடியூப் குறித்து எதுவும் தெரியாது. காரணம் எங்களுடைய வழக்கமான பிஸினஸ் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் குழந்தைகளுக்காக நாங்கள் எடுத்த வீடியோவை வேறு யாரோ யூடியூப்-ல் பதிவேற்றி இருக்கிறார்கள். உங்கள் வீடியோ நன்றாக இருந்தது என்று பலர் எங்களிடம் சொல்லும்போதுதான் இப்படி ஒருவிஷயமே எங்களுக்கு தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து யூடியூப் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, மற்றவர்களுடைய வீடியோக்களை நீக்கிவிட்டு நாங்கள், எங்களுடைய பெயரில் வெளியிட்டோம். இதுவும் மிகப்பெரிய வெற்றி. அதைவிட டிஜிட்டலில் எல்லை கிடையாது என்பதை எங்களுக்கு தெரியவந்தது.

இதற்கு முன்பு வரை டிஸ்ரிபியூட்டர்கள் மூலம் மட்டுமே விற்றுவந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் எங்களால் விற்க முடியாது. ஆனால் 2 மாதங்களில் எங்களுடைய சில வீடியோகளை 5 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். பல நாடுகளில் இருந்தும் எங்களுக்கு பாராட்டுகள் வந்தன.

அதனால் டிஜிட்டலில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினோம். பல மொழிகளில் பிரத்யேக சானல் தொடங்கினோம். 10 லட்சத்துக்கும் மேல் பார்வையாளர்களை கடந்த பல வீடியோகள் எங்களிடம் உள்ளன.

இருந்தாலும் தொழில்நுட்பம் சாதகமாக இருந்தாலும் பல பாதகங்கள் இருப்பதையும் நாங்கள் உணர்ந்தோம்.

முதலில் கேசட் இருந்தது. அதனை தொடர்ந்து விசிடி, அதனை தொடர்ந்து டிவிடி, புளுரே என பல மாற்றங்கள் நடந்தன. இப்போது யூடியூப், அமேசான் போன்ற தளங்கள் வந்துவிட்டன.

”டிஜிட்டல் பல மாற்றங்களை சந்திக்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடியோ மூலம் கிடைக்கும் வருமானமும் குறைந்து வருகிறது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு அதிகமாக வீடியோக்கள் இல்லை. இப்போது அதிகளவில் வந்துவிட்டது. அதனால் குழந்தைகள் பிரிவில் போட்டியில்லாத புராடக்ட் பிரிவில் களம் இறங்க வேண்டும் என முடிவெடுத்தோம். அதற்காக இரு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்த பிறகு ’inkmeo’ என்னும் புதிய புராடக்டை உருவாக்கினோம்.

‘inkmeo’ என்பதே குழந்தைகளின் கிரியேடிவிட்டியை ஊக்கப்படுத்த வரைய உதவும் ப்ராடக்ட். கடந்த ஜனவரி மாதம் சென்னை புத்தகக் கண்காட்சியில்தான் இவற்றை அறிமுகம் செய்தோம். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனால் இவற்றை நாங்கள் எந்த கடையிலும் விற்கவில்லை. நேரடியாக இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்கிறோம். இதுதவிர எங்களிடம் 100-கும் மேற்பட்ட செயலிகள் இருக்கின்றன என சதீஷ் குப்தா கூறினார்.

ஆண்டு வருமானம் என்ன என்று கேட்டதற்கு, இப்போதைக்கு அவற்றை வெளியிட முடியாது எனக் கூறிய சதீஷ் அதற்கான காரணத்தையும் கூறினார். நாங்கள் பிரைவேட் லிமிலெட் நிறுவனமாக நடத்தி வருகிறோம். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிதி திரட்டும் நடவடிக்கையில் இருக்கிறோம். சில முதலீட்டாளர்கள் எங்களிடம் ஏற்கெனவே பேசி இருக்கிறார்கள். அதனால் இப்போது வருமானம் குறித்து பொதுவெளியில் கூற முடியாது, என்றார். எங்களிடம் ஐடியா மட்டுமில்லை. ஐடியாவைக் கடந்து 15 ஆண்டுகளாக பிஸினஸாக அதை மாற்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறோம், என்று எங்களுடைய நிதி நிலைமைக் குறித்து கூறலாம் என்கிறார்.

வீடியோ (Magic Box) முறையிலும் எங்களுடைய பிஸினஸ் இருக்கிறது, புராடக்டாகவும் (Inkmeo) இருக்கிறது. இவற்றுக்கு மொத்தமாக எங்களிடம் 30 நபர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள், இதனை வைத்து எங்களுடைய நிதி நிலைமையை புரிந்துகொள்ளலாம் என்றார்.

குழந்தைகளுக்கான சந்தை மிகப்பெரியது. ஆனால் குழந்தைகளின் உளவியல் மற்றும் தேவையை பூர்த்தி செய்ய சில நிறுவனங்களால் மட்டுமே தாக்குபிடிக்க முடியும். மிகச் சில நிறுவனங்களில் மேஜிக் பாக்ஸும் ஒன்று. தவிர கேசட்டில் தொடங்கி, விசிடி, டிவிடி, யூடியூப் என காலத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொண்டிருப்பதே வெற்றியின் ரகசியம் என்று முடிக்கிறார் சதீஷ் குப்தா.