இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு கடந்த 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் குவிந்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 304 நிறுவனங்கள் முதலீடு செய்ய இருப்பதாக புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருக்கின்றன. இதன் மூலம் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.

முதலாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடுகள்  மதிப்பிலான ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன.

பல துறைகளில் முதலீடுகள் இருந்தாலும் குறிப்பிட்ட சில முதலீடுகளை பற்றி சொல்லியாக வேண்டும் என முதலமைச்சர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, ”நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.27,000 கோடியை முதலீடு செய்ய சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் திட்டமிட்டுள்ளது. கொரியாவைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் ரூ.7,000 கோடியில் விரிவாக்கப் பணிகளை செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த ஆலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன,” என்றார்.

டயர் தயாரிப்பு நிறுவனமான எம்.ஆர்.எப்.ரூ. 3,100 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இந்த முதலீடுகள் பெரம்பலூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அமைய இருக்கிறது. உயர்ரக ஸ்மார்ட் போன்களை தயாரிக்க பாக்ஸ்கான் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ரூ.2,500 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது. Peugeot நிறுவனம் ரூ.1,200 கோடியும், ஐஷர் மோட்டார் ரூ.1,500 கோடியையும் முதலீடு செய்ய இருக்கிறது. அதானி குழுமம்  பல திட்டங்களில் ரூ.12,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது.

தமிழ்நாடு ஏற்கெனவே ஆட்டோமொபைல் துறை மையமாக இருக்கிறது. தற்போது செய்யப்பட உள்ள முதலீடுகள் மேலும் நம்மை வலிமையாக்கும். எலெக்ட்ரிக் வாகன பிரிவிலும் நாம் முன்னோடியாக இருப்போம்.

இந்த மாநாட்டின் மூலம் உள்நாட்டு முதலீடுகள் மட்டுமல்லாமல் பல  வெளிநாடுகளில் இருந்தும் முதலீடுகள் வந்துள்ளன. ஜப்பான், தென் கொரியா, தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் முதலீடுகள் வந்திருக்கின்றன. இந்த மாநாடு பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமானதல்ல. சிறு மற்றும் குறு தொழில் பிரிவிலும் ரூ.32,206 கோடி முதலீடுகள் வர இருக்கின்றன. உணவுப் பதப்படுத்தும் துறையிலும் ரூ.2,000 கோடி அளவுக்கு முதலீடுகள் வந்திருக்கின்றன.

இது தவிர வீட்டு வசதி, ஐடி, சுற்றுலா, கல்வி, விவசாயம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும் முதலீடுகள் வந்திருக்கின்றன என்று முதலமைச்சர் கூறினார்.

முதல் நாள் நிகழ்ச்சியில் விமானம் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த கொள்கையை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மேலும் அடுத்த பத்தாண்டுகளில் தமிழகம் இந்த துறையில் 30 சதவிகித சந்தையை வைத்திருக்கும். இதன் மூலம் ஒரு லட்சம் நபர்களுக்கு வேலை கிடைக்கும் என மத்திய அமைச்சர் கூறினார்.

அப்போது கூறிய முதலமைச்சர் விரைவில் எலெக்ட்ரிக் வாகன கொள்கை வெளியாகும், மாநகரங்களில் மின் பேருந்துகள் செயல்படத்தொடங்கும் என கூறினார்.

2018-ல் ஜூலையில் இணையதளம்

முதலீட்டாளர் மாநாட்டுக்கான பணிகள் கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. கடந்த ஜூலையில் இதற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான தமிழக அரசு ரூ.75 கோடியை ஒதுக்கியது. 12 துறைகளில் அதிக முதலீடுகளை திரட்டுவது இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்தியாவின் முக்கியமான நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து உரையாடியதாக தொழில்துறை அமைச்சர் சம்பத் தெரிவித்தார். மேலும் 2015-ம் ஆண்டு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இதில் 64 திட்டங்கள் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

இரண்டு நாட்களில் 5,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பல முக்கிய நாடுகளில் பிரதிநிதிகள், தூதர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். நிறுவனங்கள் சார்பில் 250-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டன. தொழில்நிறுவனங்கள் தங்களது சேவை மற்றும் பொருட்களை பார்வையாளர்களுக்கு தெரிவிப்பதற்காக இவை அமைக்கப்பட்டன. எப்.எம்.சி.ஜி துறையைச் சேர்ந்த பிரிட்டானியா நிறுவனமும் முதலீடு செய்ய இருக்கிறது.

திறன் மிக்க மாநிலம்

இறுதிநாள் நிகழ்ச்சியில் குடியரது துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது, ”தமிழ்நாடு திறன்மிக்க மாநிலம் ஆகும். சர்வதேச அளவில் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகளை அமைக்க திறமையான பணியாளர்கள் அவசியமாகும். தமிழ்நாட்டில் திறமைமிக்க பணியாளர்களுக்கு பஞ்சம் இல்லை. தமிழ்நாடு அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் வாழ்த்துகள், என்றார்.

சர்வதேச அளவில் மூன்று சதவீத வளர்ச்சி மட்டுமே இருந்துவரும் சூழலில் இந்தியாவில் 7 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சி இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சரக்கு மற்றும் சேவை வரி கொண்டுவரப்பட்டதால் தொழில் புரிவது எளிதாகி இருக்கிறது. இந்தியாவில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் டிஜிட்டல் மயமாகி இருக்கின்றன. 100 விமான நிலையம் மற்றும் அனைவருக்கும் வீடு திட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் இங்கு வாய்ப்புகள் ஏராளம் என கூறினார்.

2021-ல் அடுத்த மாநாடு

இறுதிநாள் நிகழ்ச்சியில் செயின்ட் கோபைன், போர்டு, ஹூண்டாய் உள்ள நிறுவனங்களின் தலைவர் உரையாற்றினர். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு அடுத்து வரும் 2021-ம் ஆண்டு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.